சீனியை வைத்திருந்த இடத்திற்குச் சென்றடைந்த ரெபேரோ அவனைக் கண்டதுமே சலிப்புடன் உதட்டைச் சுழித்தார். அவன் அவரை நேரடியாக பார்த்த பார்வையிலேயே ‘இவன் ஒரு அப்பாவி’ என்பதை உணர்ந்தார். இவன் எப்படி? அடுத்ததாக அவனுடைய காலிருந்த மாவு கட்டைப் பார்த்தார்.
அவருடைய நேரம் வீணாவதை உணர்ந்த ரெபேரோ எரிச்சலுடன் தன்னுடைய அதிகாரிகளைப் பார்த்தார். ‘இதர் க்யா ஹோ ரஹா ஹை? Who is he? Why did you bring him here? He is not the guy yar.. What a waste of time..?’
அதிகாரிகள் என்ன செய்வதென தெரியாமல் அவரையே குழப்பத்துடன் பார்த்தனர். தங்களுடைய கண்களுக்கு குற்றவாளியாக தெரியும் இந்த மதராஸி இவருக்கு மட்டும் எப்படி குற்றமற்றவனாகத் தெரிகிறார்?
‘சார்.. I think he is clever in presenting an innocent face.. He did not resist our arrest at all Sir.. He acted as if he was expecting us..’
ரெபேரோ தன்னுடன் பேசிய அதிகாரியை ஏளனத்துடன் பார்த்தார். ‘Did you retrieve the mobile phone from him?’
அதிகாரி அடிபட்டவர்போல் அவரையும் தன்னுடன் நின்றிருந்த மற்ற சக அதிகாரிகளையும் பார்த்தார். ச்சை.. நமக்கு ஏன் இது தோனாமல் போனது என்பதுபோலிருந்தது அவருடைய பார்வை.. அதே கோபத்துடன் சீனியை நெருங்கி அவனை கன்னத்தில் ஒரு அறை விட்டார். ‘நிக்காலோ..’ என்று உறுமினார்.
சீனிவாசன் அறை வாங்கிய வேதனையில் கண்களில் கண்ணீருடன் அவரைப் பார்த்தான். பதில் பேச முடியாமல் திணறினான்.
ரெபேரோ உறுமினார். ‘Don’t ask him.. I will tell you.. He does not have it with him.. He has lost it.. Am I right boy?’
சீனிவாசனுக்கு உயிர் வந்தது. நன்றியுடன் அவரைப் பார்த்தான். ஆமாம் என்று தலையை அசைத்தான்.
‘When did you lose it?’ என்றார் ரெபேரோ நேரடியாக அவனைப் பார்த்து. அவருடைய குரலிலிருந்த கனிவு குழுமியிருந்த விசாரனை அதிகாரிகளை சங்கடப்படுத்தியது. குற்றவாளியிடமிருந்து தகவலை வரவழைக்க அவர் செய்யும் தந்திரமோ இது என்ற நினைப்பில் ஒருவரையொருவர் பார்த்தனர்.
‘Two days back Sir..’ என்ற சீனிவாசன் கடந்த ஞாயிறன்று சயான் சந்திப்பில் மயக்கமுற்று விழுந்ததையும் அப்போது தன்னுடைய செல் ஃபோன் தொலைந்துபோனதையும் விளக்கிவிட்டு அதற்கு சாட்சி தன்னுடைய தோழி என்று கூறலாமா என்று ஒரு நொடி சிந்தித்துவிட்டு அடுத்த நொடியே வேண்டாம்.. மைதிலியின் பெயரை இதில் இழுத்துவிடுவது நல்லதல்ல என்று தீர்மானித்தான்.
‘See..’ என்றார் ரெபேரோ தன் அதிகாரிகளைப் பார்த்து. ‘Get the contact number of the doctor who had treated him on that day and take his statement..’ பிறகு சடாரென்று திரும்பி சீனிவாசனைப் பார்த்தார். ‘Have you lodged any complaint with the police?’
இல்லை என்று தலையை அசைத்த சீனியைப் பார்த்து அனுதாபத்துடன் புன்னகைத்தார் ரெபேரோ.. ‘You appear to be an educated person.. You should have known that.. Had you reported the loss of your cell phone to the police my people would not have picked you up.. Anyway.. Please put it in writing and give it to my men..’ என்றார். ‘Do you have by any chance that MIME number of your cell phone at home or at least do you know what it is?’
சீனிவாசன் உற்சாகத்துடன் தலையை அசைத்தான். ‘Yes Sir.. I’ve it in my laptop.. I would have lodged a complaint on the same day but for this mishap.. I had to stay in the clinic for most part of the day yesterday..’
ரெபேரோ புன்னகையுடன் அவனைப் பார்த்தார். ‘Never mind.. These people would take a statement from you and drop you at your house.. Get the MIME number of your cell phone and hand it over to them.. You should be available anytime in case they need your assistance.. Is that clear?’
‘Yes Sir..’ என்றான் சீனிவாசன் உடனே.
‘You can go now..’ என்றவாறு ரெபேரோ வாசலை நோக்கி கண்சாடைக் காட்ட சீனிவாசன் தட்டுத் தடுமாறி எழுந்து நின்றான்.
இத்தனை எளிதில் இந்த மதராசியை விடவேண்டுமா என்பதுபோல் அவரைப் பார்த்த தன்னுடைய அதிகாரிகளை கேலியுடன் பார்த்தார் ரெபேரோ.
‘You must have thought that you have solved the case.. Is it not?’ என்றார் ஒரு கேலிப் புன்னகையுடன். ‘Do you honestly think those guys would have used a Madrasi Brahmin for this? Stupid.. Take him to his house. Pass on the MIME number of his phone to the service provider and find out from which area the call came to our control room.. Quick.. I should get the details in the next half hour..’ என்றவாறு தன்னுடைய வாகனத்தை நோக்கி மிடுக்குடன் நடந்த ரெபேரோவையே பார்த்தான் சீனிவாசன் அவனுடைய கவனக்குறைவால் அவனுடைய குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பத்தை உணராமல்..
******
எதிர்முனையிலிருந்த வந்த கவலையற்ற சிரிப்பு மைதிலியைக் கவலைக்கொள்ள வைத்தது.
கைதுசெய்யப்பட்ட அதிர்ச்சியில் சீனியின் மனநிலை ஒருவேளை பாதிக்கப்பட்டிருக்குமோ என்றும் நினைக்கத் தோன்றியது.
தன் எதிரில் நின்ற ராஜகோபாலன் தன்னையே கேள்விக்குறியுடன் பார்ப்பதை பொருட்படுத்தாமல். ‘ஏய் சீனி.. விளையாடாதே.. நீ இப்போ எங்கருக்கே? யாரோட ஃபோன் இது?’ என்றாள் பதற்றத்துடன்.
‘வீட்லதான்.’
‘வீட்லயா? ஒன்னெ விட்டுட்டாளா, எப்படி?’
ராஜகோபாலன் ஒருவித நிம்மதி புன்னகையுடன் திரும்பிச் செல்வதைக் கவனித்த மைதிலி ‘என்னாச்சி சீனி, ஒன்னெ எதுக்காக போலீஸ் பிக்கப் பண்ணா? தெளிவா மொதல்லருந்து சொல்லு..’ என்றாள் வலுடன்.
‘சரி.. அதிருக்கட்டும். நான் சொல்லப் போறத கேளு முதல்ல. நா பாக்கறதுக்கு பிராமின் மாதிரி இருக்கேன் போலருக்கு.. ஒரு டாலண்டெட் போலீஸ் டிஜிபியே சொன்னார்னா பாத்துக்கயேன்.. So, after all you are going to marry only a Madrasi Brahmin..’ சமயசந்தர்ப்பம் தெரியாமல் சிரிக்கும் அவனுடைய கழுத்தைப் பிடித்து நெரித்தாலென்ன என்று நினைத்தாள் மைதிலி.
அவளுடைய பதற்றத்தைக் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்த சீனியின் குரலைக் கேட்டவாறே அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தாள் மைதிலி. சயான் சதுக்கத்துக்கருகே வாகனங்களின் மத்தியில் அவள் விட்டுவைத்திருந்த இரு சக்கர வாகனத்தை உடனே சென்று மீட்காவிட்டால் அதுவே தனக்கு ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளதென்பதை உணர்ந்தவளாய். முடிந்தால் அதிலேயே சீனியைச் சென்று சந்தித்துவிட்டு வரவேண்டும் என்றும் நினைத்தாள்.
******
ஜோவும் சபரியும் சென்னைப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை சென்றடைந்தபோது மாலை நான்கு மணியாகியிருந்தது.
ஃபிலிப் சுந்தரம் தன்னிடம் அளித்திருந்த அட்டையை வாயிலில் நின்றிருந்த காவலரிடம் காட்டி அவரை சந்திக்க விரும்புவதாக கூறினான்.
‘இப்படியே போயி ரைட் சைட்லருக்கற வராந்தாவுல போங்க. ஒரு நாலஞ்சி ரூம் தாண்டி ஒரு பெரிய ஹால் வரும். அங்கதான் மீட்டிங் நடந்துக்கிட்டிருக்கு. வாசல்லருக்கற செண்ட்ரிகிட்ட இத குடுங்க. தனபால் சார் ஃப்ரீயாருந்தா பாக்கலாம். இல்லன்னா மீட்டிங் முடிஞ்சித்தான் பாக்க முடியும்.’
ஜோ தயக்கத்துடன் தன்னருகில் நின்றிருந்த சபரியைப் பார்த்தான். அவர் சரியென்று தலையை அசைக்க இருவரும் காவலர் கூறிய ஹாலையடைந்து வாசலில் நின்றிருந்தவரிடம் அட்டையைக் காட்டி தங்களுடைய வருகையின் நோக்கத்தை தெரிவித்தனர்.
அவர் யோசனையுடன் அட்டையையும் தன்னெதிரில் நின்றிருந்த இருவரையும் மாறி, மாறி பார்த்தார். ‘சார்.. மும்பையில நடந்த வெடிகுண்டுக சம்பந்தமா சிட்டி போலீஸ் ஆஃபீசர்ஸ் எல்லாரையும் கூட்டி வச்சி கமிஷனர் மேடம் முக்கியமான இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குடுத்துக்கிட்டு இருக்காங்க. அதனால தனபால் சாரால ஒங்கள பாக்க முடியுமான்னு சந்தேகம்தான். கேட்டுச் சொல்றேன். நீங்க அந்த சேர்ல ஒக்காருங்க.’
சரியென்று தலையசைத்தவாறு சற்று தள்ளி அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அவர்கள் இருவரும் அமர்ந்து காத்திருந்தனர்.
உள்ளே சென்ற காவலர் திரும்பிவரவே கால் மணி நேரத்துக்கு மேலானது.
‘என்ன ஜோ, ஒன்னும் முடியாது போலருக்கே. நேரா போயி அந்த எஸ்.ஐ கிட்டயே பேசி பாக்கலாமா? இல்லன்னா நம்ம சீனியருக்கு யாரையாச்சும் தெரியுமான்னு கேக்கலாம். இங்க வெய்ட் பண்ணி ஆறு மணிக்கு மேல ஆயிருச்சின்னா அப்புறம் அந்த எஸ்.ஐய பார்த்தாலும் இன்னைக்கி ஒன்னும் முடியாமப் போயிரும். அதனாலத்தான் சொல்றேன்.’ என்றார் சபரி.
ஜோவுக்கும் அதுதான் சரியென்று தோன்றவே இருவரும் எழுந்து நிற்கவும் வாசலில் நின்றிருந்த காவலர் திரும்பிவரவும் சரியாக இருந்தது.
அவரைப் பார்த்ததுமே ஜோ ஆவலுடன் அவரை நெருங்கி, ‘என்ன சார் பார்க்க முடியுமா?’ என்றான்.
அவர் உதட்டைப் பிதுக்கியதும் சோர்ந்துப் போனான். ‘சாரிங்க.. சார் இன்னைக்கி பாக்க முடியாதுன்னு சொல்லிட்டார். வேணும்னா ராத்திரி எட்டு மணிக்கு மேல இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணச் சொன்னார்.’ என்றவாறு அட்டையிலிருந்த ஒரு எண்ணைச் சுட்டிக்காட்டிய காவலரிடம் தலையை அசைத்துவிட்டு சபரியைப் பார்த்தான். ‘நம்ம ஸ்டேஷனுக்கே போய் பாக்கலாம் சார்.’
‘என்ன சார் எதுவும் கேஸ் விஷயமா?’ என்ற காவலரைப் பார்த்தனர் இருவரும்.
இவரிடமே வந்த விஷயத்தைக் கூறியிருக்கலாமோ என்று நினைத்த ஜோ, ‘ஆமாங்க.. எங்க பேங்க் மேனேஜர தேவையில்லாம அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அந்த விஷயமாத்தான் சார பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தோம்.’ என்றான்.
காவலர் சலிப்புடன் அவனைப் பார்த்தார். ‘என்ன சார் முதல்லயே எதுக்கு வந்திருக்கீங்கன்னு சொல்ல வேண்டாமா? என்ன விஷயம்னு சொல்லியிருந்தா ஒருவேள எஸ்.பி சார் ஒங்கள பார்த்திருப்பாரோ என்னமோ. இப்ப மறுபடியும் உள்ள போனா மேடம் திட்டுவாங்களோன்னு பயமாருக்கு சார். மத்த கமிஷனர்ங்க மாதிரியில்ல மேடம்.. மீட்டிங் நடந்துட்டுருக்கற நேரத்துல நாம உள்ள போனாலே திட்டுவாங்க. அதுல எஸ்.பி சார் வேற மேடத்துக்கு கைக்கு எட்டுற தூரத்துலயே ஒக்காந்திருக்காங்க. என்னயை என்னப் பண்ண சொல்றீங்க? எட்டு மணிக்கு மேல ஃபோன் போட்டு சொல்றதத் தவிர இப்போதைக்கு வேற வழியில்ல.. எல்லாம் ஒங்க நேரம். போங்க..’
ஜோ சபரியைப் பார்க்க, ‘சரி வாங்க.. பார்ப்போம்.’ என்றவாறு அவர் வாசலை நோக்கி நடக்க அவன் வேறு வழியில்லாமல் தன்னுடயை நேரத்தை நொந்துக்கொண்டு அவர் பின்னே நடந்தான்.
தொடரும்..
2 comments:
எதுக்குடா செல்போனை தொலைத்தது பற்றி சொல்றார்னு நினச்சேன். அங்க பிட்டப் போட்டு, இங்க வாங்கியிருக்கார் கதாசிரியர்...அருமை.
குடும்பத்தில மட்டுமா குழப்பம்.அவனது அஜாக்கிரதையினால, வங்கியிலுமில்ல ஒரு புது பிரச்சினை உருவாயிருக்கு...
வாங்க கிருஷ்ணா,
குடும்பத்தில மட்டுமா குழப்பம்.அவனது அஜாக்கிரதையினால, வங்கியிலுமில்ல ஒரு புது பிரச்சினை உருவாயிருக்கு... //
அதானே.. இந்த களேபரத்துல அத மறந்துட்டேன் பாருங்க:)
Post a Comment