'அந்தம்மா கோமாவுலருந்து திரும்பாமயே இறந்துட்டாங்க சார்..'
சபரி பதற்றத்துடன் துணை ஆய்வாளரைப் பார்த்தார். 'என்ன சார் சொல்றீங்க? நீங்க அவங்க வாக்குமூலத்த வாங்கனீங்களா இல்லையா?'
துணை ஆய்வாளர் எரிச்சலுடன் அவரைப் பார்த்தார். 'ஆமா சார்.. அதுக்கென்ன இப்போ?'
சபரிக்கு லேசாக புரிந்தது. மாணிக்கவேலின் மனைவி முன்பு தான் கூறிய குற்றச்சாட்டை மறுத்திருப்பார். இவர் வேறு வழியில்லாமல் மாணிக்கவேலை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு வந்திருப்பார். அதனால்தான் இந்த எரிச்சல், கோபம் எல்லாம். உள்ளுக்குள் இருந்த மகிழ்ச்சியை வெளியில் காட்டிக்கொள்ளாமல், 'சார் கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.. ப்ளீஸ்.' என்றார் பணிவுடன். ஆடற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற பாடி கறக்கணும்னு சும்மாவா சொன்னாங்க?
'இன்னும் என்னத்த சார் சொல்றது? இன்னைக்கி காலைலருந்து இந்த கேசுக்கு ஓடுனது எல்லாமே வேஸ்ட்டுங்கறா மாதிரி அந்த பொம்பள செஞ்சிருச்சி.. சாவப் போற நேரத்துல புருசன புடிக்காமத்தான் நான் அந்த பழிய அவர் மேல போட்டேன். அந்த கொலைய நாந்தான் செஞ்சேன்னு ஒத்துக்கிருச்சி.. பிறகென்ன ஒங்க ஆள அங்கனயே விட்டுப்போட்டு வந்துட்டேன்.. போங்க சார்.. காலைல யார் மொகத்துல முளிச்சனோ தெரியல இன்னைக்கின்னு பார்த்து மும்பைல பாம்ப் ப்ளாஸ்ட் வேற.. இருக்கற வேல போறாதுன்னு இந்த கர்மம் புடிச்ச கேஸ் வேற..'
தான் வந்த வேலை இத்தனை எளிதில் முடிந்துவிடும் என்று நினைத்திராத சபரி, 'சாரி சார்.' என்றவாறு ஜோ நின்றிருந்த இடத்திற்கு விரைந்தார்.
********
மோகன் தன்னெதிரில் அமர்ந்திருந்த ராசேந்திரனையும் அவனுடைய தந்தை ரத்தினவேலுவையும் பார்த்தார்.
'சொல்லுங்க.. ஒங்களுக்கு இப்ப என்ன வேணும்?'
பதில் பேச முனைந்த ராசேந்தரனை சைகைக் காட்டி அமர்த்தினார் ரத்தினவேலு. 'என்ன தம்பி இப்படி சாவகாசமா கேக்கீக. எங்களுக்கு ச்சேரவேண்டிய தொகைய எவ்வளவுன்னு தெரிஞ்சிக்க எங்களுக்கு உரிமை இருக்கா இல்லையாய்யா? அது அந்த பயலுக்குத்தான் தெரியல. யாரால முன்னுக்கு வந்தோங்கறதையே மறந்துட்டு ஆடிட்டிருக்கான். ஒங்களுக்குத்தான் தெரியுமில்ல தம்பி.. கரண்டி புடிச்ச கைய அவன் மறந்துட்டாலும் உண்மை உண்மைதானுங்களே.. ஆரம்பத்துல என் கைமணம்தான தம்பி அவனெ தூக்கிவிட்டுருச்சி.. பிற்பாடி என் பையன்.. அவன் படிச்சிருக்கற படிப்ப வச்சிக்கிட்டுத்தானே போன ரெண்டு வருசமா வளந்தது கம்பெனி.. இப்ப அவனுக்கு நாங்க வேண்டாதவங்களா போய்ட்டமாக்கும்? சரி அது கெடக்குது களுத.. கிளிஞ்சிப் போனத ஒட்டவா முடியும்.. கிளிஞ்சது கிளிஞ்சதுதான்.. அப்படியே இருந்துட்டு போட்டும்.. எங்களுக்கு ச்சேர வேண்டியத வம்பு பண்ணாம கொடுத்துட்டா நல்லது.. இல்லன்னா...'
மோகன் பதில் பேசாமல் புன்னகைத்தார். பிறகு தனக்கருகில் அமர்ந்திருந்த தன் நண்பரும் நாடாரின் தணிக்கையாளருமான பாலசுந்தரத்தைப் பார்த்தார். 'என்ன சார் இவங்களுக்கு சேர வேண்டியதுன்னு ஏதாச்சும் இருக்கா. பார்த்து சொல்லிருங்களேன்.'
அவருடைய குரலிலிருந்த கேலி ரத்தினவேலுவை உசுப்பிவிட்டது. 'என்ன தம்பி ஒங்க கொரல்ல கேலி இருக்காப்ல இருக்கு?' என்றார் கோபத்துடன்.
மோகன் பதற்றமடையாமல் அவரைப் பார்த்தார். 'கேலி இல்லாம என்னய்யா ச்செய்யும்? நியாயமா பாக்கப் போனா நீங்கதான் நாடாருக்கு குடுக்க வேண்டியிருக்குன்னு சொல்லணும்.'
ரத்தினவேலு தன்னுடைய இருக்கையை பின்னால் தள்ளிவிட்டு எழுந்து நின்றார். 'எலேய் ராசேந்திரா நா ஒனக்கு அப்பவே சொன்னேன். இந்த பயலுவள பாத்து பேசி ஒன்னும் ஆகப்போறதில்லேன்னு.. எளுந்து வாலே.. எங்க பேசிக்கணுமோ அங்கன பேசிக்கிறுவம்.. யார எங்க அடிச்சா யார் எங்க அளுவாங்கறது இவனுங்களுக்கு வேணும்னா தெரியாம இருக்கும்.. ஆனா எனக்கு அப்படியில்லலே..'
ராசேந்திரனுக்கு மோகன் என்ன சொல்ல வருகிறார் என்பது லேசாக விளங்கியதால் எழுந்து தன் தந்தையின் கரத்தைப் பற்றி இருக்கையில் அமர்த்தினான். 'அப்பா பதறாம ஒக்காருங்க. இவங்க ரெண்டு பேரும் என்ன சொல்ல வராங்கன்னுதான் கேப்பமே..'
மோகன் பாலசுந்தரத்தை பார்த்தார். அவர் தன் முன் மேசை மீது விரித்து வைத்திருந்த கோப்பைப் பார்த்தவாறு அதிலிருந்து ராசேந்திரன் கடந்த ஒன்றரையாண்டு காலமாக நிறுவன வங்கி கணக்கிலிருந்து எடுத்த தொகையை தேதி வாரியாக வாசிக்க ரத்தினவேலு பதில் பேச முடியாமல் சிலையென அமர்ந்திருந்தார்.
நிதானமாக வாசித்து முடித்த பாலசுந்தரம் நிமிர்ந்து ரத்தினவேலுவைப் பார்த்தார். 'இப்ப சொல்லுங்கய்யா. என்ன செய்யலாம்?'
ரத்தினவேலு திரும்பி தன் மகனை எரித்துவிடுவதுபோல் பார்த்தார். 'என்னலே ராசேந்திரா.. என்ன பேசாம ஒக்காந்துருக்கே..'
ராசேந்திரன் அலட்சியத்துடன் தன் தந்தையைப் பார்த்தான். 'எல்லாம் பிசினசுக்காக எடுத்ததுதான்..'
பாலசுந்தரம் இடைமறித்தார். 'சரி தம்பி.. பிசினசுக்காகன்னே வச்சிக்குவம். பேங்க்லருந்து நீங்க எடுத்த பணத்த கம்பெனி கணக்குல எந்த தலைப்புலயாவது எழுதியிருக்கணுமில்ல.. அத காணங்கறதாலத்தான கணக்குல வராத தொகைன்னு பேங்க் ரிகன்சிலியேஷன் ஸ்டேண்ட்மெண்ட்ல எங்க அசிஸ்டெண்ட்ஸ் எழுதி வச்சிருக்காங்க?'
'சார் அது ஒங்க அசிஸ்டெண்ட்ஸ் வேணும்னே செஞ்சது. ஒருவேளை மாமாவே இத அவங்கக்கிட்ட இப்படி எளுதுங்கன்னு சொல்லியிருக்கலாம். அவரெ போய் கேளுங்க இந்த கேள்விய.'
ரத்தினவேலுவுக்கு லேசாக புரிந்தது. பாம்பின் கால் பாம்பறியும்கறது சும்மாவா? எலேய் ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி இப்ப என் மடியிலயே கைவச்சிட்டியேடா படுபாவிப் பயலே.. இந்த எளவ எங்கிட்ட நேத்தே சொல்லியிருந்தேன்னா இங்கன வந்து இந்த வேலக்கார பயக முன்னால மூக்கறு பட்டிருக்கவேண்டாம்லலே.. இப்ப என்ன ச்செய்யலாம்.. என்ன இருந்தாலும் இவன் எம்புள்ளயா போய் தொலச்சுட்டானே.. இவனயும் இவனுங்க முன்னால விட்டுக்குடுத்துர முடியாதே.. அதே சமயத்துல ஒரேயடியா அடாவடித்தனமா பேசினாலும் அந்த பயல உசுப்பி விட்டா மாதிரி ஆயிரும்.. தப்ப நம்ம மேல வச்சிக்கிட்டு அவன் மேல மோதறது நமக்கே வெனையா போயிருமே.. சரீ.. இம்புட்டு பணத்தையும் இந்த பய என்ன செஞ்சிருப்பான்? ஒன்னு சூது.. இல்ல அந்த குட்டிங்க ஷோக்கு..
மோகனும் பாலசுந்தரமும் அமைதியுடன் ஆலோசனையில் அமர்ந்திருந்த ரத்தினவேலுவைப் பார்த்தனர். 'நீங்க என்னய்யா சொல்றீங்க?' என்றார் மோகன்.
ரத்தினவேலு அவர்கள் இருவரையும் எரித்துவிடுவதுபோல் பார்த்தார். 'என்னெ எதுக்குய்யா கேக்கீக. அதான் எம்புள்ள சொல்லிட்டான்லே.. அவன் ச்சொல்றா மாதிரி ஒங்க மொதலாளி ஏன்யா செஞ்சிருக்கக் கூடாது. அவந்தான் எமகாதகப் பயலாச்சே.. பெத்த பொண்ணையே கட்டுன புருசனுக்கும் மாமனாருக்கும் எதிரா தூண்டிவிட்டவந்தானய்யா.. பணத்துக்கு வேண்டி என்ன வேணும்னாலும் செய்ய துணிஞ்சவனாச்சே.. இதுவும் ச்செய்வான் இதுக்கு மேலயும் ச்செய்வான்.. ஒங்கக் கிட்ட பேசி ஒன்னும் பேறாதுன்னு இவன் அப்பவே ச்சொன்னான். நாந்தான் கேக்காம சரீ.. சமாதானமா போயிருவமேன்னு இளுத்துக்கிட்டு வந்தேன்.. இனி ஒங்கக்கிட்ட பேசி பயனில்லைங்கறதுதான் தெரிஞ்சிப் போச்சே.. கோர்ட்ல பாத்துக்குவம்யா..'
பாலசுந்தரம் மோகனைப் பார்க்க அவர் புன்னகையுடன் எழுந்து நின்றார். 'அது ஒங்க இஷ்டம்யா.. ஆனா ஒன்னு.. அது ஒங்களுக்கும் ஒங்க மகனுக்குமே ஆபத்தா முடியாம இருந்தா சரி..'
ரத்தினவேலு கண்கள் சிவக்க அவரைப் பார்த்தார். 'வேணாம் தம்பி.. அதிகமா பேசாதீங்க.. வாங்கற சம்பளத்துக்கு என்ன ச்செய்யணுமோ அத ச்செஞ்சீட்டீங்கல்லே.. அத்தோட நிறுத்திக்குங்க.. சொல்லிட்டன்.. எலேய் எதுக்குலே இன்னமும் ஒக்காந்துருக்கே? எளும்பி வாலே..' என்றாவாறு ஆவேசத்துடன் வெளியேற ராசேந்திரன் வேறு வழியில்லாமல் அவரைப் பிந்தொடர்ந்தான்.
அவன் வாசலை நெருங்குவதற்குள் எழுந்து அவன் பின்னால் சென்றார் மோகன். 'தம்பி ஒரு நிமிஷம்.'
'என்ன?'
'நீங்க செஞ்சிருக்கற சித்து விளையாட்டுகள்ல ஒரு சின்ன பகுதியத்தான் நாங்க இப்ப சொன்னோங்கறது ஒங்களுக்கே தெரியும்.. நீங்க ராசம்மாவோட நகை அத்தனையையும் எடுத்து அந்த பொண்ணுக்கு போட்டுருக்கறது ராசம்மாவுக்கே தெரியாது.. பேங்க் லாக்கர்லதான் இருக்குன்னு நினைச்சிக்கிட்டிருக்கா. நாடாருக்கும் இதுவரைக்கும் தெரியாது. அத மட்டும் நா அவர்கிட்ட சொன்னேன்னு வச்சிக்குங்க..'
ராசேந்திரன் பதில் பேசாமல் வெளியேற மோகன் பாலசுந்தரத்தைப் பார்த்து கண்ணடித்தார். 'பாத்தீங்களா பாலு நாடார் கூட சேர்ந்து நமக்கு இந்த மிரட்டற வேலையெல்லாம் லேசா வர ஆரம்பிருச்சி..'
பாலசுந்தரம் உரக்க சிரித்தார். பிறகு..'வேணாம் மோகன்.. இத்தோட நிறுத்திக்குங்க.. இவனுங்க ரெண்டு பேரும் விஷப் பாம்புங்க.. இவங்கள ஹேண்டில் பண்ற திறமை நாடாருக்கு மட்டுந்தான்.. நம்ம ரெண்டு பேருக்கும் சுத்தமா கெடையாது.. பரமசிவன் கழுத்துல பாம்புங்களே அதுமாதிரிதான் நம்ம நிலமையும்.. நாடார் இருக்கற தைரியத்துல நாமளும்ம் இப்படியெல்லாம் நடிக்கலாம். அவ்வளவுதான்..' என்றார் சீரியசாக.
மோகன் உண்மைதான் என்பதுபோல் தலையை அசைத்தார். 'உண்மைதான் பாலு.. எதுக்கும் நாடாருக்கு போன் செஞ்சி சொல்லிருவோம். அதுக்கப்புறம் அவர் பாடு இவங்க பாடு.'
****
8 comments:
இன்றைக்கு வந்த இரு பகுதிகளுமே மனதுக்கு நிறைவாக இருந்தன. ஆனால் சில ஆதங்கங்கள்.
1. மாணிக்கவேலு முதல்லேயே அந்த அடங்காப்பிடாரி மனைவியை செவுள்ளே ஒண்ணு போட்டு தட்டி உக்கார வச்சிருக்கணும்.
2. அனுப்பியதுதான் அனுப்பினாரே அப்புறம் எதற்கு அவர் தந்தையும் மகனும் தேவையற்ற இரக்க உணர்ச்சிக்கு ஆளாகணும்?
3. அப்படியே ஆனாலும் உடனேயே அந்தம்மாவை ஏன் உள்ளே சேத்திருக்கணும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அப்பா, கடைசி நிமிஷத்துலையாவது உண்மையைச் சொன்னாங்களே!
வாங்க ராகவன் சார்,
நீங்க கேட்ட எல்லா கேள்விகளுமே நியாயமானதுதான்..
ஆனா இந்த அடங்கப்பிடாரி மனைவியை செவுள்ள அறையறது..
மனைவியை அடித்து அடக்குவது ஒரு ஆண்மகனின் அழகா எனக்கு படலை.. அது எல்லாராலயும்.. அதுவும் தன் தந்தையை மிகவும் நேசிக்கும் மாணிக்கவேலுவைப் போன்றவர்களால் நிச்சயம் முடியாது.
வாங்க இ.கொத்தனார்,
கடைசி நிமிஷத்துலையாவது உண்மையைச் சொன்னாங்களே! //
சாகறப்பத்தான் மனுஷனா மாறுவோம் போலருக்கு.. இது நமக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன்.
என்ன சார்,
திரும்பி பார்பதற்கு முன்பே சூரியன் உதித்துவிட்டான். மாணிக்கவேலுக்கு இனியாவது நிம்மதி கிடைக்குமா?
வாங்க அருண்மொழி,
திரும்பி பார்பதற்கு முன்பே சூரியன் உதித்துவிட்டான்.//
தி.பா. தொடருக்கு நம் நண்பர்களின் ஈடுபாடு குறைந்துவருவதாக நான் கடந்த சில வாரங்களாகவே உணர்ந்திருந்தேன். ஆகவே தற்போதைக்கு நிறுத்திவைப்போம் என்று முடிவெடுத்திருக்கிறேன்..
மாணிக்கவேலுக்கு இனியாவது நிம்மதி கிடைக்குமா? //
சந்தோஷின் உடல் நலம் சரியாகணுமே.. எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிற்பவருக்கு அவனை விட்டால் இனி யார்..
ஆக, கொஞ்ச நாளுக்கு உங்கள திரும்பிப்பார்க்க முடியாது....சரி, சூரியன கறை(தை)யேத்திட்டுத்தான் திரும்பிப் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டீங்களோ??
வாங்க கிருஷ்ணா,
சரி, சூரியன கரை(தை)யேத்திட்டுத்தான் திரும்பிப் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டீங்களோ?? //
அப்படியும் வச்சிக்கலாம்:)
Post a Comment