மைதிலி சயான் சதுக்கத்தை அடைந்தபோது போக்குவரத்து சீரடைந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. அவள் விட்டுச்சென்றிருந்த இரு சக்கர வாகனத்தை அவள் நிறுத்திவைத்திருந்த இடத்தில் காணவில்லை.
பதற்றமடையாமல் அருகிலிருந்து பெட்டிக்கடையை நெருங்கினாள். அவள் விவரிப்பதற்கு முன்பே அவளைப் பார்த்து புன்னகைத்த கடைப்பையன், 'காடியேன்னா மேம்சாப்.. போலீஸ் வாலோன் லேக்கே கயாலே (வேன்ல தூக்கிப் போட்டுக்கிட்டு போய்ட்டாங்க)' என்றான்.
அவள் அதை எதிர்பார்த்ததுதான். சாதாரண நாட்களிலேயே சாலையோரத்தில் நிறுத்திவைத்திருந்தாலே அள்ளிக்கொண்டு போய்விடும் மும்பை பெருநகர காவல்துறை இன்று கேட்கவா வேண்டும். எப்படியும் சயான் போக்குவரத்து காவல்துறை அலுவலகம்வரை சென்றால்தான் வண்டியை மீட்க முடியும். அதற்கு எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். வாகனம் நல்ல இடத்தில் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. அதை விட முக்கியம் சீனியை சென்று சந்திப்பது. இரவு திரும்பி வரும் வழியில் சயானில் இறங்கி வாகனத்தை மீட்டுக்கொள்ளலாம் என்ற நினைப்புடன் சற்றுத் தொலைவில் நின்றிருந்த ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தாள்.
*******
மருத்துவர் ராஜகோபாலன் தன்னுடைய மருத்துவ மனையில் அவுட் பேஷண்ட் வார்டில் மும்முரமாக இருந்த சமயத்தில், 'சார் ஒங்கள பாக்க ரெண்டு போலீஸ் ஆஃபீசர்ஸ் வந்திருக்காங்க. ஒங்க ரூமுக்கு வெளிய ஒக்கார வச்சிருக்கேன்.' என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார். எதிரில் நின்றிருந்த தன்னுடைய ரிசிப்ஷனிஸ்டைப் பார்த்தார். 'என்னையா.. எதுக்குன்னு கேட்டீங்களா?'
அவர் பதிலுக்கு இல்லையென்று பதிலளிக்க, 'சரி.. இப்ப வர்றேன்னு போய் சொல்லுங்க.' என்று கூறிவிட்டு தான் பார்த்துக்கொண்டிருந்த நோயாளிக்கு தேவையான மருந்துகளை எழுதிக்கொடுத்துவிட்டு, 'ஒரு நிமிஷத்துல வந்திடறேன்.. சாரி' என்றவாறு எழுந்து தன்னுடைய அறையை நோக்கி நடந்தார்.
அவர் இதற்கு முன்பு சந்தித்திராத இரு அதிகாரிகள் தன்னுடைய அறை வாசலில் காத்திருப்பதைக் கண்டு, 'இவங்களுக்கு என்ன வேணும்?' என்று சிந்தித்தவாறு அவர்களருகில் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
'Doctor we would like to ask you a few questions about one of your patients.' என்ற அதிகாரி தன்னுடைய சகாவைப் பார்த்தார். 'He is one Mr.Sreenivasan, a Madrasi'
ராஜகோபாலனுக்கு புரிந்தது. அந்த பையன் இங்க சிகிச்சை எடுத்துக்கொண்டது உண்மைதானா என்பதை விசாரிக்க வந்திருக்கிறார்கள்.'ஓகே.. ப்ளீஸ் கம் இன்' என்று அவர்களை தன்னுடன் அழைத்துச் சென்று அமர்த்திவிட்டு தன்னுடைய வரவேற்பாளரை அழைத்து அடுத்த பத்து நிமிடங்களுக்கு யாரையும் தன் அறைக்குள் அனுப்பவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
அடுத்த சில நிமிடங்கள் சீனிவாசன் தன்னுடைய மருத்துவமனைக்கு வந்த நேரம், அவனுக்கு ஏற்பட்டிருந்த எலும்பு முறிவின் தீவிரம், அவன் எவ்வளவு நேரம் மருத்துவமனையில் தங்கியிருந்தான், எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான் என்பதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளித்தார் ராஜோகோபாலன்.
அவர் கூறியவற்றையெல்லாம் குறிப்பெடுத்துக்கொண்ட அதிகாரிகளுள் ஒருவர் சட்டென்று, 'டாக்டர் மிஸ்டர் சீனிவாசன் அடிபட்டது சயான்ல.. இங்கருந்து சுமார் அஞ்சி கிலோ மீட்டருக்கு அப்புறம். அங்க பக்கத்துல நிறைய க்ளினிக் இருக்கறப்ப அவர் ஏன் ஒங்க க்ளினிக்க தேடி வரணும்? ஒங்கள அவருக்கு ஏற்கனவே தெரியுமா?'
ராஜகோபாலன் தான் இக்கட்டில் சிக்கிக்கொள்ள இருப்பதை உணர்ந்தார். அவருக்கு மைதிலியின் பெயரை இதில் இழுத்துவிடுவதில் விருப்பமில்லை. ஆனால் காவலர்களின் இந்த கேள்விக்கு உண்மையாக பதில் சொல்ல வேண்டுமென்றால் மைதிலியின் பெயரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அப்படியே வேறொருவருடைய பெயரைக் குறிப்பிட்டாலும் அடுத்த வினா அவருடைய முழுவிவரத்தையும் பற்றியதாகவே இருக்கும். என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தார்.
'என்ன டாக்டர் இவ்வளவு யோசிக்கிறீங்க. Do you know him personally or not?'
'அந்த பையன எனக்கு தெரியாது. ஆனா யாரோ ஒருத்தர் அவர என்னோட க்ளினிக் வரைக்கும் கூட்டிக்கிட்டு வந்துட்டு உள்ள வராமயோ போய்ட்டார்னு மட்டும் சீனிவாசன் சொன்னது நினைவுக்கு வருது. அப்போ அது பெரிய விஷயமா படலை.. அதனால நானும் கேட்டுக்கலை.'
அவருடைய பதிலில் நம்பிக்கையில்லாமல் தங்களுக்குள் பார்த்துக்கொள்வதைக் கண்ட ராஜகோபாலன் தன்னுடைய முட்டாள்தனத்தை நினைத்து நொந்துப்போனார். அதெப்படி நம்மளையுமறியாம இப்படியொரு பொய் வந்துது.. இது சிக்கல பெருசாக்குமோ தெரியலையே.. இவங்க நம்ம க்ளினிக் ஸ்டாஃபுங்கள விசாரிக்காம போமாட்டாங்களே..
அதிகாரிகளுள் ஒருவர் புன்னகையுடன். 'டாக்டர் நீங்க நிலைமை புரியாம பேசறீங்கன்னு நினைக்கிறேன். நடந்துருக்கறது ஒரு சீரியசான க்ரைம். It is not targeted at any particular individual but whole of Mumbai.. அதனால அந்த கல்ப்ரிட்ட கண்டுபிடிக்க உதவி செய்ய வேண்டியது நம்ம எல்லாருடைய கடமை. அதுவும் ஒங்களப்போல ரெஸ்பான்சிபிள் சிட்டிஜன்சோட ட்யூட்டியும் கூட. நீங்க சொல்ற பதில் உண்மையாருக்கணும். இல்லேங்கற பட்சத்துல ஒங்க மேலயே சந்தேகம் திரும்ப சான்ஸ் இருக்கு. From your facial expression we are sure that you know the person who brought Mr.Sreenivasan to your clinic. நீங்க அவர் ஷீல்ட் பண்றதுக்கு காரணம் இருக்கலாம்.. ஆனா அத எங்களால ரொம்ப ஈசியா கண்டுபிடிச்சிர முடியும்.. ஆனா அத ஒங்க வாய்லருந்து வரணும்னுதான் நாங்க விரும்பறோம்.. So please cooperate.. We are in a hurry to find out the culprit and those who are with him' கூற ராஜகோபாலன் வேறு வழியில்லாமல் மைதிலியைப் பற்றி கூறினார்.
'I see.. We understand your concern for the girl Doctor.. ஆனா அந்த சீனிவாசன பத்தி வேற ஏதாவது விஷயம் தெரியுமா. தெரிஞ்சிருந்தா தயங்காம சொல்லுங்க. It might help in our investigation.'
சற்று தயங்கிய ராஜகோபாலன் சீனிவாசனைப் பற்றி தன்னிடம் மைதிலி கூறியிருந்த தகவல்களை சுருக்கமாகக் கூறி முடித்தார்.
அவருடைய பதிலில் திருப்தியடைந்த அதிகாரிகள் எழுந்து நின்றனர். 'One last question Doctor..'
'Yes?'
'In your opinion do you think that boy could have been part of the conspiracy?'
ஆமாம் என்று கூறிவிட்டால் என்ன என்று ஒரு நொடி நினைத்தார் ராஜகோபாலன். அத்தோடு மைதிலியையும் அவளுடைய குடும்பத்தையும் பிடித்துள்ள இந்த தொல்லை ஒரேயடியாக நீங்கிவிடுமே. ஆனால் அடுத்த நொடியே தன்னுடைய தொழில் தர்மத்திற்கு அது நேர் எதிரானது என்பதை உணர்ந்தார். 'I don't think so officer.'
'Ok.. Thank you for your cooperation.'
அவர்கள் இருவரையும் வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்த ராஜகோபாலன் தன் அறைக்கு திரும்பியதும் மைதிலியின் வீட்டுக்கு டயல் செய்தார். எதிர்முனையில் பட்டாபி எடுத்ததும், 'சார் நீங்க ஒடனே பொறப்பட்டு என் க்ளினிக்குக்கு வாங்க. ஒரு முக்கியமான விஷயம். என்னால இப்ப அங்க வர முடியல அதான் ஒங்கள கூப்பிடறேன். என்ன வேலையிருந்தாலும் அப்படியே போட்டுட்டு வாங்க..'
******
மருத்துவ மனையிலிருந்து வெளியேறி வாகனத்தில் ஏறி அமர்ந்ததுமே 'தூ க்யாச் சோச் ரஹா ஹை?' என்ற தன்னுடைய சகாவை திரும்பிப் பார்த்தார் அந்த காவல்துறை அதிகாரி ராம்காந்த் காவ்டே.. அவருக்கு டிஜிபி ஒரு கிறிஸ்துவர் என்பதால் அவர் ஒரு வீக் ஆசாமி என்ற கணிப்பு. ஒரு டிஜிபிக்கு வேண்டிய துணிவு அவரிடம் இல்லை என்று நினைத்திருந்தார்.. 'எனக்கென்னவோ அந்த மதறாஸிக்கு இதுல என்னமோ தொடர்பு இருக்குன்னு தோனுது. இல்லன்னா இந்த பொண்ண பத்தி அவன் ஏன் நம்மக்கிட்ட மறைக்கணும்? சார் அவனெ அவ்வளவு சீக்கிரம் விட்டிருக்கக் கூடாதுன்னுதான் நினைக்கேன். சரி.. நாம ஒன்னு பண்ணுவோமா?'
'என்ன?' என்றார் அவருடைய சக அதிகாரி விஜய் டால்வி. அவருக்கு காவ்டேயைப் பற்றி அவ்வளவாக நல்ல எண்ணம் இல்லை. ஊழல் பேர்வழி என்பதுடன் காவல்துறையின் ரகசியங்களை பத்திரிகைகளுக்கு காசுக்கு விற்பவர் என்ற எண்ணமும் இருந்தது. வேறு வழியில்லாமல் சகித்துக்கொண்டிருந்தார்.
'நாம பேசாம நம்ம இ.எ. ரிப்போர்ட்டர கூப்ட்டு இந்த பையன பத்தியும் அந்த பொண்ண பத்தியும் சொல்லிருவமா?'
அதான பார்த்தேன். இதுலயும் முடிஞ்ச வரைக்கும் காசு பண்ணிருவியே. 'எதுக்கு? அதால நமக்கு என்ன பிரயோசனம்? அத்தோட அந்த பொண்ண பத்தி நம்ம ரெண்டு பேரையும் தவிர வேற யாருக்கும் தெரியாதுன்னு நம்ம டிஜிபிக்கு கண்டுபிடிக்க முடியாதாக்கும்? வேணாம்..'
'சரி.. அந்த பொண்ணோட பேர விட்டுருவோம்.. இந்த பையன பத்தி மட்டும் சொல்லிருவோம்.. அவங்க அவனெ துருவி துருவி கேக்கறதுல ஏதாவது வெளிய வரும் இல்லே? என்ன சொல்றே?'
டால்வி இது தேவையா என்பதுபோல் பார்த்தார். 'Is it necessary?' என்றார் எரிச்சலுடன்.
'நிச்சயமா இது தேவை.. அந்த பயல அவ்வளவு ஈசியா விட்டுருக்கக் கூடாதுன்னுதான் நா இப்பவும் நினைக்கிறேன். நாம எவ்வளவு கஷ்டப்பட்டு அவனெ ட்ரேஸ் பண்ணோம்.. இப்படி சட்டுன்னு ஒரு மணி நேரத்துக்குள்ள அவனெ ரிலீஸ் பண்ணியிருக்கக் கூடாது.. டிஜிபிக்கு வயசாயிருச்சின்னு நினைக்கிறேன். முன்னே மாதிரி இல்ல அவர். ரொம்பவும் சாஃப்டாயிட்டார்.'
இனி நீ என்ன சொன்னாலும் கேக்கப்போறதில்லை. எப்படியோ போ என்று மனதுக்குள் நினைத்த டால்வி, 'உங்க இஷ்டம்.. ஆனா இப்பவே சொல்லிட்டேன். இதுல எனக்கு பங்கில்லை. அதனால ஏதாவது ஏடாகூடமா நடந்து நம்ம இன்வெஸ்டிகேஷன்ல பாதிப்பு ஏற்பட்டுதுன்னா அதுக்கு நா பொறுப்பில்லை.' என்றவாறு விலகிக்கொள்ள 'போடா தொடநடுங்கி' என்று மனதிற்குள் அவரை சபித்தவாறு தன்னுடைய பத்திரிகை நிரூபரை அழைக்கலானார் காவ்டே அதனால் தனக்கு ஏற்படப்போகும் பின்விளைவுகளை மறந்தவராய்.
2 comments:
great sir... ஒரு வருஷம் 1 மாசம் ஆகுது நாளையோட சூரியன் ஆரம்பிச்சு... பெரிய சாதனை சார் இது...
வாங்க மீனாப்ரியா,
great sir... ஒரு வருஷம் 1 மாசம் ஆகுது நாளையோட சூரியன் ஆரம்பிச்சு... //
அப்படியா? நான் கணக்கு வச்சிக்கலை.. நீங்க வச்சிருக்கீங்க.. ரொம்ப நன்றி..
Post a Comment