ஜோவும் மாணிக்கவேலுவுடன் அன்று வீடு திரும்பியபோது இரவு பத்து மணியைக் கடந்திருந்தது.
ராணியின் உடலைப் பெற்றுக்கொண்டு முதலில் வீடு திரும்பிய ஜோ வீட்டு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் 'சார் கொஞ்சம் காத்திருக்கணுமே.' என்றான் சோர்வுடன். 'ஒங்க கஷ்டம் புரியுது சார்.. ஒரெ நேரத்துல ஒரே வீட்டுல ரெண்டு சாவுங்கறது.. என்னதான் தினம் தினம் இதையே நாங்க பாத்துக்கிட்டிருந்தாலும் ஒரு உயிர்ங்கறது உயிருதான சார்.. நீங்க கவலைப்படாதீங்க.. அவர் வரும்போது வரட்டும்.. காத்திருக்கேன்.' என்ற ஒட்டுனரைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்தான் ஜோ. பொருளாதாரத்தில் நலிந்தவன் இன்னும் மனிதனாகவேதான் இருக்கிறான். நம்மளப் போல நடுத்தர வர்க்கந்தான் நாளுக்கொரு வேஷத்த போட்டுக்கிட்டு.. சொந்தங்களையே நம்பாம..
மாணிக்கவேல் அவருடைய தந்தையின் உடலுடன் சென்னை பொது மருத்துவமனையிலிருந்து வரும்வரை ஆம்புலன்சிலேயே அமர்ந்திருக்கவிரும்பாமல் வெளியில் இறங்கி நின்றான்.
அன்று மாலை நான்கு ஐந்து மணியிலிருந்து துவங்கிய போராட்டம்.. மாணிக்கவேலின் தந்தை மற்றும் அவருடைய மனைவியின் உடல்களைப் பெற்றுக்கொள்ளத்தான் என்ன பாடுபடவேண்டியிருந்தது.
விபத்தில் சிக்குண்டு மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரானி மரணமடைந்த செய்தி ஒருபுறம் வேதனையை அளித்தாலும் அவர் தன்னுடைய மரண வாக்குமூலத்தில் மாணிக்கவேலுவை விடுவித்துவிட்டு சென்றார் என்பதைக் கேட்டதும் ஜோவுக்கு நிம்மதியாய் இருந்தது. காவல்நிலையத்திலிருந்து ராணி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு விரைந்தான் வழக்கறிஞர் சபரியுடன். செல்லும் வழியில், 'சார் நீங்க மட்டும் இன்னைக்கி வரலைன்னா நா என்ன செஞ்சிருப்பேன்னே தெரியல. எனக்கு வந்த ஆத்திரத்துல நான் எதையாவது முட்டாத்தனமா செஞ்சி மாட்டிக்கிட்டிருப்பேன். நீங்க நாள் முழுசும் இதுக்காகவே அலைஞ்சிருக்கீங்க. ரொம்ப தாங்ஸ் சார்.' என்றான்.
'சேச்சே. என்ன ஜோ நீங்க..இது எங்க தினசரி வேலை.. எல்லா கேசும் இந்த மாதிரி ஈசியா முடிஞ்சிராது.. சில நேரங்கள்ல வாரக் கணக்குல இழுத்தடிக்கும்.. எப்படியோ செய்யாத தப்புக்கு ஒரு நா முழுக்க ஸ்டேஷன்ல இருக்க வேண்டி வந்துதே அவருக்கு எப்படி இருந்திருக்கும்.. God is greatன்னு சும்மாவா சொன்னாங்க? மேற்கொண்டு எங்க ஹெல்ப் எப்ப வேணும்னாலும் ஆஃபீசுக்கு வாங்க ஜோ.'
'தாங்யூ சார்..' என்ற ஜோ. 'சார் என்னெ ஹாஸ்ப்ட்ல இறக்கி விட்டுட்டு நீங்க இந்த கார்லயே ஒங்க ஆஃபீசுக்கு போயிருங்க. எப்படியிருந்தாலும் எனக்கு ஒடனே கார் தேவைப்படாது. சாரோட அப்பாவும் இறந்து ரெண்டு நாள்தான் ஆகுது.. ஜி.எச். மார்ச்சுவரியிலதான் இருக்காம். எங்க சார் போனாத்தான் ரிலீஸ் பண்ண முடியும். இங்கயும் ராணி மேடத்தோட பாடிய எல்லா ஃபார்மாலிட்டிசும் முடிஞ்சி ரிலீஸ் பண்றதுக்கு எப்படியும் ராத்திரியாயிடும்னு நினைக்கேன். அதனால நீங்க ஆஃபீசுக்கு போய்ட்டு திருப்பியனுப்புனா போறும்.' என்றான் தொடர்ந்து.
சபரியும் சரியென்று தலையை அசைத்தார். 'இங்க ஏதாச்சும் எங்க ஹெல்ப் வேண்டியிருக்குமா ஜோ?'
'தெரியல சார். நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் சார பார்த்து பேசிட்டு போயிருங்களேன். சாருக்கு எதுவும் ஒங்கக்கிட்ட சொல்ல இருக்குமோ என்னவோ?'
'அதுவும் சரிதான்...' என்ற சபரி வாகனம் மருத்துவமனையை அடைந்ததும் ஜோவுடன் இறங்கி வரவேற்பறையில் சோர்வுடன் அமர்ந்திருந்த மாணிக்கவேலுடன் சிறிது நேரம் பேசினார்.
'ஒங்களுக்கு நேர்ந்த இந்த சிக்கலுக்கு ரொம்ப வருந்தறேன் மிஸ்டர் மாணிக்கவேல்.. ஒங்கள மாதிர் ஆளுங்களயும் இந்த போலீஸ் ஒரு கன்விக்ட் மாதிரி ட்ரீட் பண்ணது ரொம்ப கஷ்டமாருந்தது. ஆனா என்ன பண்றது சட்டத்துக்குத்தான் கண்ணே இல்லையே.. எங்களுக்கு இது சகஜமா போயிருச்சி.. ஆனா நீங்கதான் பாவம்.. I am really sorry for what happened.'
மாணிக்கவேல் ஒரு வறட்டு புன்னகையுடன் சபரியைப் பார்த்தார். 'அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க சார். எங்களால ஒங்களுக்குத்தான் ஒரு நா முழுக்க வேஸ்ட். ஒங்க ஹெல்புக்கு ரொம்ப தாங்ஸ் மிஸ்டர் சபரி.. இங்க எல்லாம் ஃபார்மாலிட்டியும் முடிஞ்சதுக்கப்புறந்தான் பாடிய தருவேன்னு சொல்லிட்டாங்க.. நான் கையெழுத்து போட்டு குடுத்துட்டேன்.. இனி ஜோ இங்கருந்து பாத்துக்குவார். ராணியோட கார்ட் ஃபாதர் பொறுப்பிலருக்கற மதருக்கும், சர்ச் ஃபாதருக்கும் இன்ஃபர்மேஷன் குடுக்கணும். நான் நேர்ல போறதுதான் நல்லது. அதனால நானும் ஒங்களோடயே வந்து ஒங்கள ஆஃபீஸ்ல ட்ராப் பண்ணிட்டு அங்க போய்ட்டு அப்படியே ஜி.எச். சுக்கு போறேன்.' தனக்கு நேர்ந்த பெரும் இழப்புகளை மிக எளிதாக தாங்கிக்கொண்டு பேசியவரை வியப்புடனும் மரியாதையுடனும் பார்த்தார் சபரி..
'இல்ல சார்.. நா வேணும்னா ஒரு ஆட்டோவுல போய்க்கறேன்.. You carry on..' என்றார்.
'நோ.. நோ.. That's not fair.. இன்னைக்கி நாள் முழுசும் எங்களுக்காக போராடியிருக்கீங்க.. நீங்க வாங்க.. Don't worry about me.. I've already accepted what God has destined for me.. þôÀ நா செய்ய வேண்டியதெல்லாம் வெறும் ஃபார்மாலிட்டீஸ் மட்டுந்தான்.. ஒரு பக்கம் அப்பா.. ஒரு பக்கம் மனைவி.. சம்பிரதாயமா ஒருத்தர எரிக்கணும். ஒருத்தர அடக்கம் பண்ணணும்.. இனி என்ன கவலைப்பட்டாலும் போனவங்க திரும்பி வரப்போறதில்லையே.. இப்ப என் கவலையெல்லாம் ஹாஸ்பிட்டல்லருக்கற என் மகன்.. எனக்குன்னு உலகத்துலருக்கற ஒரே பந்தம், அவன பத்தித்தான்.. Before that I've got to discharge my duties as a son, as a husband.. That's all. Come.. I'll drop you at your office.. வரேன் ஜோ.. ஆம்புலன்சுக்கும் நா பணம் கட்டிட்டேன்... நீங்க ராணியோட பாடியோட வீட்டுக்குப் போயிருங்க. நா ஜி.எச்ல வேல முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்துடறேன். வீட்டு சாவி என் கிட்ட இல்ல.. போலீஸ் ஸ்டேஷன்லயே இருக்கு போலருக்கு.. ஒடச்சித்தான் தொறக்கணும்.. நீங்க மொதல்ல போனீங்கன்னா.. பக்கத்துல யாரையாவது வச்சி தொறக்கப் பாருங்க..இல்லன்னா நா வந்ததும் பாத்துக்கலாம்..'
உயிருக்குயிராய் அவர் நேசித்த தந்தையின் இழப்பை இத்தனை சாதாரணமாக ஒரு மகனால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற வியப்பில் மலைத்துப்போய் சபரியின் தோள்களைச் சுற்றி கையிட்டவாறு வாகனத்தை நோக்கி நடந்தவரைப் பார்த்தவாறு நின்றிருந்தான் ஜோ..
***
மாணிக்கவேல் பூட்டு என்ற சொன்னது நினைவுக்கு வர ஜோ வாசற்கதவைப் பார்த்தான். பிறகு அருகில் சென்று இழுத்துப் பார்த்தான். நல்லவேளையாக கோத்ரெஜ் பூட்டு இல்லை. ஒரே கல்லில் திறந்துவிடலாம் என்று நினைத்தவன் அருகில் ஏதாவது கல் கிடக்கிறதா என்று பார்த்தான். 'சார்.. நீங்க தள்ளுங்க.. என் வண்டியிலருக்கற ஸ்பானரால ஒரு போடு போட்டா தொறந்துக்கும்.' என்றவாறு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அடுத்த சில நொடிகளில் பூட்டை உடைக்க ஜோ ஹாலுக்குள் நுழைந்து வாசல் விளக்கு மற்றும் ஹால் விளக்கு சுவிட்ச்களை போட்டான்.
ஹாலில் நடுநாயகமாக கமலியை கிடத்தி வைத்திருந்த மேசை மெழுகு திரிகளுடன் வெள்ளைத் துணியை போர்த்திக்கொண்டு கிடந்ததைப் பார்த்தான். அவனையுமறியாமல் கண்கள் கலங்கின.. நாற்பத்தெட்டு மணி நேரத்தில் சாருடைய வாழ்க்கையே தலைகீழாய் போய்விட்டதே என்ன கொடுமை இது. இந்து மதத்தை தழுவியவரானாலும் ஒரு கிறிஸ்த்துவ குடும்பத்தில் வளர்ந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டால் தன்னுடைய வாழ்வில் வசந்தம் வரும், தன்னுடைய பெற்றோர்களை தன்னுடைய சகோதரர்களின் மனைவியரைப் போலல்லாமல் பாசத்துடன் பார்த்துக்கொள்வாள் என்று எத்தனை நம்பிக்கையுடன் அவர் ராணி மேடத்தை திருமணம் புரிந்திருப்பார்.
ஒரு உண்மையான கிறிஸ்த்துவ குடும்பத்தலைவரைப் போலவே தன் மனைவி மற்றும் மக்களுடன் ஞாயிறு தவறாமல் கோவிலுக்கு வருவாரே.. அவரையா இந்த கடவுள் இத்தனை இன்னல்களுக்கு ஆளாக்கினார். என்ன கடவுளோ.. என்ன விசுவாசமோ..
இறைவன் யாரை மிகவும் அதிகமாக நேசிக்கிறாரோ அவரைத்தான் பெருந்துன்பங்களுக்கு ஆளாக்குவார் என்ற மறைநூல் வாசகத்தை நினைவுகூர்ந்தான்.. அதற்காக இப்படியா.. ஒரே வாரத்தில் அவர் மிகவும் நேசித்த இருவருடைய உயிரை எடுத்துக்கொள்வது? எந்த ஊர் நியாயம் இது? சரி.. அது போறாதென்று கொலைக் குற்றம்.. அதுவும் யாரால்? சொந்த மனைவியால்.. அதுவும் போறாததற்கு சாருக்கு மிச்சமிருந்த ஒரே மகனை அரைகுறை பைத்தியமாக்கி.. ச்சே.. நம்ம எதிரிக்கும் வரக் கூடாது இந்த கொடுமை.. இத்தனை துன்பங்களையும் தாங்கிக்கொண்டு எப்படி அவரால் இவ்வளவு தெளிவாக சிந்திக்க முடிகிறது? ஒரு நாள் முழுக்க ஒரு கொலை காரனைப் போல் கேவலப்படுத்த பட்டாரே.. எந்த ஒரு கோபமோ.. விரக்தியோ.. எத்தனை அற்புதமான மனிதர் அவர்!
நம்மால் அந்த வயதில் அப்படியிருக்க முடியுமா? சட்டென்று நினைவுக்கு வர செல் ஃபோனை எடுத்து தன் மனைவியை அழைத்தான். எதிர்முனையில் மனைவியின் குரல், 'என்னங்க.. காலையில போனீங்க.. ஒரு ஃபோனாவது பண்ணக் கூடாது? என்னன்னு நினைக்கிறது? இப்ப எங்க இருக்கீங்க?'
'சாரிம்மா.. காலையிலருந்து ஒரே அலைச்சல்.. ஒங்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு நடந்து போச்சி..' என்று துவங்கி அன்று நாள் முழுவதும் நடந்தவற்றையெல்லாம் கடகடவென சொல்லி முடித்தான். 'ஐயையோ.. பாவங்க சாரி.. நல்லவேளை நீங்க கூடவே இருந்தீங்க.. சரி.. இன்னைக்கி வருவீங்களா இல்ல காலையிலதானா?'
'சார் வந்தப்புறம்தான் சொல்ல முடியும்.. அவர தனியா விட்டுப்போட்டு எப்படிப்பா வர்றது? சென்னையிலருக்கற தம்பிங்களுக்கே இந்த விஷயம் தெரியாது போலருக்கு.. அப்புறம் ஊர்லருக்கறவங்க வேற.. ஏற்கனவே கமலியோட சாவுக்கு வந்துட்டு இப்பத்தான் ஊர் போய் சேர்ந்திருப்பாங்க. ஹும் என்ன பண்றது.. சாருக்கு நடந்தா மாதிரி யாருக்கு நடந்திருக்கு..; என்றவன் வாசலில் நுழைந்த ஆம்புலன்சைப் பார்த்ததும், 'சரிம்மா. சார் வந்துட்டார். நா அப்புறம் கூப்பிடறேன்.' என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு வாகனத்தை நோக்கி ஓடினான்.
தொடரும்..
6 comments:
இப்படியும் சோகம் வருமா ஒருத்தருக்கு... படிக்கும் போதே மனசு கனத்து போகுது சார்...
வாங்க மீனா,
இப்படியும் சோகம் வருமா ஒருத்தருக்கு... //
பிரமிப்பாத்தான் இருக்கும். ஆனா இது உண்மையாகவே எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் நடந்தது என்பதையும் நினைத்துப்பார்க்கிறேன்..
மாணிக்கவேலுவைப் போன்றே அத்தனை துயரங்களையும் வெகு எளிதாக சந்தித்த அந்த மனிதர்.. உண்மையிலேயே அற்புதமான மனிதர்தான்.
இது கற்பணை அல்ல; உண்மை
நிகழ்ச்சி என்று அறிந்தது முதல் ராணி மீது எனக்கு இருந்த கோபம்...
சாகும் போதாவது உண்மை பேசினாரே!
சிவஞானம்ஜி
வாங்க ஜி!
சாகும் போதாவது உண்மை பேசினாரே!//
மரணத்தறுவாயில்தான் நம்மில் பலரும் மீண்டும் மனிதர்களாகிறோம்..
இதைத்தான் மரணபயம் என்கிறார்களோ?
கண்களைக் குளமாக்கிய பகுதி.
மா சிவகுமார்
கண்களைக் குளமாக்கிய பகுதி.
மா சிவகுமார்//
மிக்க நன்றி சிவகுமார்.
Post a Comment