4.10.06

சூரியன் 129

நாள் முழுக்க ஷாப்பிங் செய்த களைப்பில் சரோஜாவும் வத்ஸலாவும் சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்பென்சர் காம்ப்ளக்சிலிருந்து வெளியேறி தங்களுடைய வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தளத்தை நோக்கி மெள்ள நகர்ந்தனர்.

வத்ஸலாவின் செல் ஃபோன் சிணுங்க கையிலிருந்த ஃபோனின் திரையைப் பார்த்தாள். அப்பா!

‘அம்மா அப்பாவுக்கு இப்பத்தான் நம்ப ஞாபகம் வந்திருக்கு போல.. என்ன சொல்ல?’ என்றாள் தன் தாயிடம்.

சரோஜா எரிச்சலுடன்.. ‘என்னத்த சொல்றது? எல்லாத்தையும் வாங்கி முடிச்சாச்சின்னு சொல்லு.. ஒங்கப்பாவுக்கு வேல.. வேலன்னுதான் நெனப்பு.. நம்மள பத்தி ஞாபகம் வந்ததே ஆச்சரியம்.. என்னத்தையாவது சொல்லி சமாளி.. எங்கிட்ட குடுத்துராத..’ என்றவாறு மகளை விட்டு நாலு எட்டு தள்ளியே நடந்தாள் எச்சரிக்கையுடன்..

அவளுக்கோ கவலை முழுவதும் சீனியின் மீதுதான்.. ஃபோனே பண்ணலையே.. இந்த மாமிக்காவது என் டென்ஷன் தெரிய வேணாம்.. வீட்டுக்கு போயி வச்சிக்கறேன்..

‘ஹை டாட்.. இப்பத்தான் ஃப்ரீயானீங்களா?’ என்றாள் வத்ஸலா.

‘ஆமாடா.. என்னெ என்ன பண்ண சொல்றே.. இங்க முதல் நாளே ஏகப்பட்ட டென்ஷன்.. பிரச்சினை.. சரி.. அதிருக்கட்டும் அம்மாவோட மூட் எப்படியிருக்கு.. அவகிட்ட பேசலாமா?’ என்ற தன் தந்தையின் தயக்கத்தைப் பார்த்து வாய் விட்டு சிரித்தாள்.

‘என்ன டாட்.. ஷேம் ஆன் யூ.. நீங்க ஒரு பேங்கோட சேர்மன்.. ஒங்க மூடுக்கு எத்தன பேர் கவலப்படுவாங்க.. நீங்க போய் அம்மா மூட் எப்படியிருக்குன்னு கேக்கீங்களே.. ஷேம்.. ஷேம்..’

‘என்னம்மா பண்றது.. ஊருக்கு ராஜான்னாலும் வீட்டுக்கு புருஷந்தானே.. சரி.. எப்படியிருந்தது ஒங்க ஷாப்பிங்.. ஏதாவது உருப்படியா வாங்குனீங்களா, இல்ல வெறும் விண்டோ ஷாப்பிங்தானா? இப்ப எங்கருக்கீங்க?’

‘என்ன டாட் அப்படி கேட்டுட்டீங்க? நமக்கு வேண்டிய எல்லாத்தையும் வாங்கியாச்சு.. அதுவும் ஒங்க பட்ஜெட்டுக்குள்ளவே.. மெட்றாஸ்னா மெட்றாஸ்தான் டாட்.. மும்பைய கம்பேர் பண்ணா இங்க எல்லாமே டெட் ச்சீப்.. அதுவும் கடையிலருக்கற ஆளுங்க என்ன மரியாதையா பேசறாங்க? எல்லாருக்குமே இங்க்லீஷ் தெரிஞ்சிருக்குப்பா.. அதான் ஆச்சரியமாருக்கு.. Even the junior most staff speaks English.. I was amazed..’

எதிர் முனையில் மாதவன் உரக்க சிரித்தார்.

வத்ஸலா கோபத்துடன், ‘எதுக்கு டாட் இப்ப சிரிச்சீங்க.. என்ன நான் சொன்னது ச்சும்மா கிண்டல்னு நினைச்சீங்களா?’ என்றாள்..

மாதவனின் குரல் உடனே இறங்கி வந்தது. ‘ச்சீ.. ச்சீ.. அப்படியில்லடா.. மும்பைய நினைச்சிப் பார்த்தேன்.. அவனுங்க இங்லீஷ¤ம் அவனுங்க ப்ரனன்ஷியேஷனும்.. அத நினைச்சித்தான் சிரிச்சேன்.. நீ சொல்லு... இப்ப எங்கருக்கீங்க?’

‘டாட்.. நாங்க இப்ப ஸ்பென்சர்ல இருக்கோம்.. எல்லாத்துக்கும் ஆர்டர் குடுத்துட்டு இப்பத்தான் காருக்கு போறோம்.. அப்புறம் இன்னொன்னு டாட்.. நீங்க அனுப்பிச்ச டிரைவர் சூப்பர்.. என்ன அழகா டிராஃபிக்ல ஒட்னார்னு நினைக்கீங்க.. ரொம்ப நல்லா மரியாதையாவும் நடந்துக்கிட்டார்.. அங்க மாதிரி இல்ல.. all in all I have started to enjoy Madras dad.. I never thought it would be so nice..’

மீண்டும் மாதவன் சிரிக்க.. ‘என்ன டாட்.. இப்ப எதுக்கு சிரிச்சீங்க?’ என்றாள் வத்ஸ்லா..

‘இல்ல.. ஒங்கம்மாவுக்கும் இதே ஒப்பீனியந்தானான்னு நினைச்சேன்.. இல்லே நீ இப்ப சொன்னதுக்கும் மூஞ்ச சுளிச்சிக்கிட்டு நிக்காளா?’

வத்ஸ்லா ஓரக்கண்ணால் சற்று தள்ளி நின்றுக்கொண்டிருந்த தன் தாயைப் பார்த்தாள். சந்தோஷம் துளியும் இல்லாத அந்த முகத்தில் லேசான கவலையின் ரேகையும் தென்படவே.. ‘அம்மாவுக்கு சீனியோட நினைப்புத்தான்.. அவன் இதுவரைக்கும் ஒரு ஃபோன் கூட பண்ணல டாட்.. அம்மா is naturally very upset. ரூமுக்கு போனதும் ஃபோன் போடலாம்னு இருக்கோம்.. நீங்க வர லேட்டாவுமா டாட்?’

எதிர்முனையில் பதில்வர சற்று தாமதமாகவே, ‘என்னம்மா அப்பாக்கிட்ட பேசறீங்களா?’ என்றாள் தன் தாயைப் பார்த்து.. அவள் உடனே வேண்டாம் என்று சாடை காட்ட.. ‘என்ன டாட்.. are you there?’ என்றாள் ஃபோனில்..

‘Yes.. Yes.. I am here.. Somebody, a Police man is waiting to see me.. I do not know what he wants.. after that I am free.. நீங்க ரூமுக்கு போனதும் கூப்டுங்க.. உடனே புறப்பட்டு வந்துடறேன்.. நா வந்ததும் சீனிக்கு ஃபோன் செஞ்சா போறும்னு சொல்லு அம்மாட்ட.. இல்லன்னா எதையாச்சும் பேசி அவனெ கன்ஃப்யூஸ் பண்ணிருவா, என்ன நான் சொல்றது வெளங்குதா?’

வத்ஸாலவுக்கு மாதவனின் கடைசி வாக்கியம் பிடிக்கவில்லை.. ‘என்ன டாட்.. சின்ன பசங்கக்கிட்ட பேசறா மாதிரி வெளங்குச்சா கிளங்குச்சான்னு.. நல்லாவே வெளங்கிருச்சி.. போறுமா.. வைக்கறேன்.. பை..’

தனக்கு பதில் பேச வாய்ப்பளிக்காமல் இணைப்பைத் துண்டித்த மகளை நினைத்து புன்னகை செய்தார் மாதவன்.

பிறகு தன் மேசை மீதிருந்த சந்திப்பு அட்டையை (visiting card) மீண்டும் ஒரு முறை பார்த்தார். ‘எஸ். தனபால்.. எஸ்.பி. க்ரைம் ப்ராஞ்ச்’

எஸ்.பியா? என்கிட்ட என்ன வேணும் இவருக்கு? என்று புருவங்கள் முடிச்சிட தன்னுடைய காரியதரிசியை இண்டர்காமில் அழைத்து ‘அவரை உள்ளே அனுப்புங்க சுபோத்’ என்றார்.

***

தன் எதிரில் அமர்ந்திருந்த சீனிவாசனையும் மைதிலியையும் மாறி, மாறி பார்த்தாள் சிவகாமி மாமி.

சீனியின் முகத்தில் சங்கடமும் மைதிலியின் முகத்தில் ஒருவித சலிப்பும் தென்பட்டதை கவனித்தாள்.

அவள் தொலைப் பேசியில் கேட்டுக் கொண்டபோது முதலில், ‘நா அங்க வந்து என்னாவப் போவுது மாமி. அதான் காலையில மூஞ்சிலடிச்சா மாதிரி சீனி சொல்லிட்டானே..’ என்று மறுத்தாலும் இறுதியில், ‘சரி மாமி.. ஒங்களுக்காக வரேன்..’ என்ற மைதிலி வந்து பத்து நிமிடத்திற்கும் மேலாகிறது..

அவள் வந்து வெகு நேரமாகியும் சீனி தன்னுடைய அறைக்குள்ளிருந்து வராததால் சிவகாமி அவளை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவனுடைய அறைக்குள் அமர்த்திவிட்டு தானும் அவர்களெதிரில் அமர்ந்தாள்.

சீனி அப்போதும் படுக்கை தலைமாட்டில் சாய்ந்து எங்கோ பார்த்தவாறு அமர்ந்திருந்தானே தவிர மைதிலி இருந்த திசையில் பார்க்கவே இல்லை..

‘டேய்.. என்ன இது சின்ன குழந்தையாட்டம்.. மைதிலி வந்து எம்புட்டு நேரமாச்சிடா.. நீ மனசுல நினைச்சிக்கிட்டிருத சொல்லேன்..’ என்றாள் மாமி.

மைதிலி சிடுசிடுத்தாள். ‘எதுக்கு மாமி அவனெ கம்பெல் பண்றேள்.. பேசறதுக்கு அவனுக்கு இஷ்டமில்லன்னா நா இங்கருந்து என்ன பிரயோசனம்? அதான் நீங்க கூப்ட்டப்பவே சொன்னேன்னே மாமி.. நீங்கதான் எனக்காக வாயேன்னேள்.. தோ.. நானும் வந்து செலையாட்டம் ஒக்காந்திருக்கேன்.. அரை மணி நேரமாயும் இன்னும் அவனுக்கு என்னெ தெரியலையே..’

‘Don’t exaggerate Mythili.. You are here only for the past ten minutes..not half hour..’ என்ற சீனிவாசனை இருவரும் வியப்புடன் பார்த்தனர்.

‘அட! நீ இங்கதான் இருக்கியா?’ என்றாள் மைதிலி கேலியுடன். ‘சொல்லு என்ன சொல்லணும்னு நினைக்கியோ க்ளியரா சொல்லிரு.. நேக்கும் சிலது சொல்லணும்னு இருக்கு.. அத நீ சொன்னதுக்கப்புறம் சொல்றேன்.. சொல்லு.. என்ன சொல்றதுக்காக என்னெ வரச் சொன்னே? சொல்ல வந்தத நேரா என் முகத்த பார்த்து சொல்லணும்.. மோட்டு வளைய பாத்து இல்ல.. என்ன மாமி?’

மாமி புன்னகையுடன், ‘பேஷ்.. சரியா சொன்னேடிம்மா..’ அவளைப் பார்த்து தலையை அசைத்துவிட்டு சீனிவாசனைப் பார்த்தாள்.. ‘என்னடா நா இங்கருக்கறது நோக்கு சங்கடமாருந்தா சொல்லு.. நா போய் ஒரு வா காப்பிய குடிச்சிட்டு ஒங்களுக்கும் கொண்டாரன்..’

சமையல்கட்டுக்கு செல்ல எழுந்து நின்ற மாமியை அவசரத்துடன் தடுத்து நிறுத்தினான் சீனிவாசன். ‘வேணாம் மாமி.. நீங்களும் இருங்கோ.. நான் சொல்லப் போறது என்னன்னுதான் ஒங்களுக்கு தெரியுமே.. ஒக்காருங்கோ..’

மைதிலி ஒன்றும் விளங்காமல் இருவரையும் மாறி, மாறி பார்த்தாள்.. ஆக.. இவா ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டுத்தான் என்னெ கூப்ட்ருக்காளா? இந்த விஷயத்துல இந்த மாமி யார் பக்கம்? இந்த பந்தம் வேணுங்கறாளா இல்ல வேணாங்கறாளா?

மைதிலியின் பார்வையிலிருந்ததைப் புரிந்துக்கொண்டதுபோல் அவளைப் பார்த்து பாசத்துடன் புன்னகை செய்தாள் மாமி.. நான் உன் பக்கம்தான் என்பதுபோல..

மைதிலி சந்தோஷத்துடன் தாங்ஸ் மாமி என்பதுபோல் பதிலுக்கு புன்னகைத்தாள்..

சீனிவாசன் கட்டிலிலிருந்து எழுந்து அருகிலிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து தன் எதிரில் மிக அருகில் அமர்ந்திருந்த மைதிலியைப் பார்த்தான்..

அவன் பார்வையில் இருந்தது பரிவா, பாசமா இல்லை கையாலாகாத்தனமா என விளங்காமல் அவனையே பார்த்தாள் மைதிலி..

‘எதுக்கு சீனி இப்படி கிடந்து ஒன் எமோசஷ்ன் கூட போராடறே.. ஒனக்கு என்னெ மறந்துட்டு இருக்க முடியாதுங்கறது எனக்கு நன்னாவே தெரியும்.. இப்போ என் நிலமையும் அதே மாதிரிதான்.. ஒன்னெ விட்டுட்டு என்னாலயும் இனிமே இருக்க முடியாதுன்னு தோனறது.. அப்பா, அம்மாவ விடு.. அவாள எப்படி சமாளிக்கறதுன்னு நேக்கு தெரியும்.. அத நா பாத்துக்கறேன்.. நீ மட்டும் தெளிவா, உறுதியா சொன்னாப் போறும்.. ஒங்கூட நானும் மெட்றாசுக்கு வரத் தயார்.. நீ சரின்னு சொன்னாப் போறும்.. ஆனா நா கம்பெல் பண்ண மாட்டேன்.. ஒனக்கு சரின்னு தோனணும்.. அதுக்குத்தான் நா காத்துக்கிட்டிருக்கேன்.. சொல்லு..’

சீனிவாசனின் கண்கள் நிறைந்து பேச முடியாமல் தடுமாறுவதைப் பார்த்த சிவகாமி மாமி எழுந்து சென்று அவனருகில் அமர்ந்து அவன¨ அணைத்துக்கொண்டாள்.. ‘என்னடா சீனி இது கொழந்த மாதிரி.. அவதான் அவ மனசுலருக்கறத வெளிப்படையா சொல்லிட்டாளேடா.. நீ எதுக்கு இன்னும் மருகி, மருகி நிக்கறே.. எங்கூட வந்துருன்னு சொல்லேன்.. சரோஜாவும் சரி ஒங்கப்பாவும் சரி.. என்ன சொன்னாலும் நா பாத்துக்கறேண்டா.. ஒனக்கு மைதிலி வேணுமா வேணாமா அத சொல்லு.. மத்தத நா பாத்துக்கறேன்..’

சற்று நேரத்தில் சுதாரித்துக்கொண்டு கண்களை துடைத்துக்கொண்டு மைதிலியைப் பார்த்த சீனிவாசன், ‘அப்போ ஒன்னெ வந்து பார்த்த மாப்பிள்ளை ஒன்னெ வேணாம்னு சொல்லிட்டாரா?’ என்றான் தயக்கத்துடன்..

‘அதெதுக்குடா இப்போ..’ என்ற சிவகாமியை தடுத்து நிறுத்தி, ‘ஆமா சீனி.. நம்ம ரெண்டு பேரையும் பார்த்துட்டு அவா தப்பா நெனச்சிட்டாளாம்.. டாக்டர் மாமாதான் சொன்னார்..’ என்றாள் மைதிலி.

சீனிவாசன் பதிலேதும் பேசாமல் தன் கைகளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் சற்று நேரம்.. பிறகு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். ‘What do you want me to say My.. I have already told you that I love you and want to marry you.. What else you want me to say.. இதுக்கும் மேல நா சொல்ல ஒன்னுமில்லை.. ஒன் அப்பா அன்னைக்கி ஃபோன்ல கெஞ்சினத என்னால இப்பவும் மறக்க முடியல மை.. I am just not able to forget that.. அதனாலதான் எதுக்கு இன்னமும் ஒன்னெ கம்பெல் பண்ணி.. I am sorry My.. இப்பவும் சொல்றேன்.. நீ எங்கூட வாழ முடிஞ்சா... I repeat.. if it is possible.. I mean.. if you could marry me.. I would be the happiest man in this world.. என்கூட நீ சென்னைக்கு வரணும்னு கூட இல்ல.. நா இங்கயே இருந்துடறேன்.. அம்மா என்ன சொன்னாலும் பரவால்லை.. I can manager her.. Dad won’t bother.. whether I am with them or not..’

மேலே பேச முடியாமல் சீனிவாசன் தடுமாற மைதிலி எழுந்து சென்று அவனருகில் அமர்ந்து அவனுடைய கரங்களைப் பற்றிக் கொண்டாள்.. ‘எனக்கு இது போறும் சீனி.. நானும் ஒங்கூடவே மெட்றாசுக்கு வரேன்.. அங்கிள் சம்மதிச்சா ரெண்டு பேரும் முதல்ல ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிக்கலாம்.. அப்புறமா என் அம்மா, அப்பாவ ஃபேஸ் பண்ணலாம்.. அவாளுக்கு மட்டும் இங்க யார் இருக்கா? என்ன மாமி?’

சிவகாமி கலங்கி நின்ற தன் கண்களை துடைத்தவாறே எழுந்து நின்றாள்.. ‘நீங்க ரெண்டு பேரும் பேசிண்டிருங்கோ.. நா காப்பி கலந்து கொண்டாரேன்..’ என்றவாறு சமையல்கட்டை நோக்கி நகரவும் ஹாலிலிருந்த தொலைப்பேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

சென்னையிலிருந்து சரோஜா..

சிவகாமி எடுத்ததுமே எதிர்முனையிலிருந்து சரோஜாவின் குரல் கோபத்துடன் ஒலிக்க, ‘இல்லேடிம்மா.. அப்படியெல்லாம் இல்லை.. இரு சீனிய கூப்பிடறேன்..’ என்றவாறு, ‘சீனி ஒங்கம்மா.. சீக்கிரம் வா..’ உரத்த குரலெழுப்பினாள்..

மைதிலி உடனே எழுந்து கைத்தாங்கலாக சீனிவாசனை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றாள்..

தொடரும்..




4 comments:

அருண்மொழி said...

காணாமல் போன SP மீண்டும் ஆஜர். கதை சூடு பிடிக்கும் போல் இருக்கின்றது.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அருண்மொழி,

காணாமல் போன SP மீண்டும் ஆஜர். //

இந்த தொடர்ல எந்த காரக்டரும் காணாம போமாட்டாங்க.. அப்பப்போ வருவாங்க.. அதாவது சில்லறை கதாபாத்திரங்களைத் தவிர..

சூடு பிடிக்குமா பிடிக்காதான்ன நீங்கதான் சொல்லனும்:)

siva gnanamji(#18100882083107547329) said...

அருண்மொழி,
ஜோஸப் சொல்றார்
//இந்தத்தொடரில் எந்த காரக்டரும்
காணாமப் போகமாட்டாங்க..அப்பப்போ....//

எழுதறவர் மட்டும்தான் காணாமப் போய்டுவார்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

எழுதறவர் மட்டும்தான் காணாமப் போய்டுவார்/

ரொம்ப கரெக்ட்:))