16.10.06

சூரியன் 134

எதிர்முனையில் வந்தனா மேடம் என்று அறிந்தபோது ஒரு நொடி எப்படி பதிலளிப்பதென தெரியாமல் தடுமாறிப்போனார் மாணிக்கவேல்.

‘என்ன மாணிக்கம் எப்படியிருக்கே?’

‘மேடம் நீங்க எப்படி இருக்கீங்க? அதச் சொல்லுங்க.’

எதிர் முனையிலிருந்து வந்தனாவின் பலஹீனமான சிரிப்பொலி கேட்டது. மாணிக்கம் ஒரு நொடி அவருக்காகப் பரிதாபப்பட்டார்.

மேடமும் கமலியும் எத்தனை நெருக்கமாக இருந்தார்கள் என்பது எனக்குத்தானே தெரியும்? வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாத நேரத்தில் கமலியின் அன்பும், பாசமும் அவருக்குக் கிடைத்தபோது எத்தனை மகிழ்ந்துப்போனாங்க மேடம்!

‘எனக்கென்னா நா நல்லாத்தான் இருக்கேன். நம்ம கொச்சி ப்ராஞ்சில சீஃப் மேனேஜரா இருக்காங்களே நளினி, அவங்களும் அவங்க ஹஸ்பெண்ட் நந்தக்குமாருந்தான் சரியான நேரத்துல ஹாஸ்ப்பிடலுக்கு வந்து என்னெ டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டாங்க மாணிக்கம். இல்லன்னா நா இப்பவும் அந்த இருட்டுப்பிடிச்ச வார்ட்லயே இருந்திருப்பேன்.. Thanks to both of them I am at home now.. சொல்லு நீ எப்படி இருக்கே, சந்தோஷ் எப்படியிருக்கான்.. அப்புறம் ராணி.. இன்னமும் கோபமாத்தான் இருக்காளா என் பேர்ல?’

ராணி இன்னமும் கோபமாத்தான் இருக்காளா? என்னவென்று சொல்வேன்? அவள் எப்படியிருக்கிறாள் என்று எனக்கே தெரியவில்லையே? அவளை எந்த அளவுக்கு இப்போது நம்பலாம் என்று தெரியவில்லையே? சந்தோஷ¤க்கு தன் தாயின் மீது இருக்கும் நம்பிக்கை எனக்கு என் மனைவியின் மீது இல்லையே?

என்றைக்கு அவள் என்னுடைய மனைவியாக இருந்திருக்கிறாள் அவளை நான் நம்புவதற்கு? திருமணம் முடிந்து வந்த நாள் முதலே என் தாயையும் தந்தையையும் ஏதோ வேண்டாதவர்களைப்போல் பார்த்தவளாயிற்றே? எப்போது இவர்கள் இருவரும் மண்டையைப் போடுவார்கள் என்று நினைத்தவளாயிற்றே?

கூட இருந்தே குழி தோண்டுவான் பங்காளி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் கூட இருந்தே என் தந்தைக்கு குழி தோண்ட காத்திருப்பவளாயிற்றே என் மனைவி?

‘என்ன மாணிக்கம் சத்தத்தையே காணோம்.. யாராச்சும் பக்கத்துல இருக்காங்களா? அப்புறமா பண்ணவா?’

மாணிக்கம் ஒரு நொடி யோசித்தார். மேடம் சொன்னா மாதிரிதான்னு சொல்லிட்டு லைன கட் பண்ணிருவோமா? இந்த சூழ்நிலையில இவங்களோட நா பேசறத கேட்டுட்டு வந்து ராணி ஏதாச்சும் பேசிட்டா பிரச்சினையாயிருமே?

ஆனால் அவரையுமறியாமல், ‘இல்ல மேடம்.. யாரும் இல்லை.. நீங்க பேசுங்க..’ என்றார்.

‘நான் என்னத்த பேசறது.. பேசத் தொடங்கினா அழுகையாத்தான் வருது மாணிக்கம். ஏதோ நளினி இருக்கறதுனால கொஞ்சம் ஆறுதலாருக்கு.. வீட்டுக்கு வந்திருந்தவங்கள்லாம் போயாச்சா.. அப்பா எப்படி இருக்கார். ஒடம்புக்கும் ஏதும் இல்லையே? கமலி, கமலின்னு அடிச்சிக்கிட்டே இருப்பாரே மாணிக்கம்?’

மாணிக்கவேல் தன் தந்தையின் அறையை திரும்பிப் பார்த்தார். அவர் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. திரும்பி சமையலறையைப் பார்த்தார். ராணி நிற்பது தெரிந்தது. ஒருவேளை நான் பேசுவதை அங்கிருந்தே ஒட்டுக் கேட்கிறாளோ? இருக்கும்..

‘ஆமாம் மேடம்.. டாக்டர் அட்வைஸ்படி ரெண்டு தடவ செடேட்டிவ் இஞ்ஜெக்ட் பண்ணிருக்கேன்.. ரெண்டு மூனு நாளைக்கு அவர் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தா நல்லதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்.. கடவுள்தான் அவருக்கு இந்த துயரத்த தாங்கற சக்தி குடுக்கணும்.. Take care of yourself madam.. நளினி ஒங்கள பாக்க வர்றதுக்கு முன்னால நந்தக்குமாரோட இங்க வந்திருந்தாங்க. நான் எதிரிப்பார்க்கல..’

‘சரி மாணிக்கம்.. அப்புறம் கூப்பிடறேன்.. சந்தோஷையும், ராணியையும் விசாரிச்சதா சொல்லு. கமலிய நினைச்சி மனச போட்டு அலட்டிக்காதே.. அப்புறம் ஒரு விஷயம்..’

‘என்ன மேடம்?’

‘உன்னால முடிஞ்சா இங்க கொஞ்சம் வந்து போ.. ஒன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்..’

மாணிக்கம் யோசித்தார். இந்த நேரத்தில் மேடத்தைப் பார்க்கப் போகிறேன் என்று கிளம்பிச் சென்றால் ராணி என்ன நினைப்பாள்? யாரை யாருடன் சேர்த்து பேசுவதென்ற வரைமுறையில்லாமல் சிந்திப்பவளாயிற்றே..
இருப்பினும் தன்னிடம் ஏதோ கேட்கவேண்டுமென்று மேடம் கூறும்போது எப்படி போகாமல் இருப்பது? சந்தோஷிடம் மட்டும் கூறிவிட்டு போவோம். ராணி கேட்டால் ஏதாவது சொல்லி சமாளிக்கச் சொல்வோம்.

‘என்ன மேடம்.. ஏதாச்சும் முக்கியமானதா? அஃபிஷியலா?’ என்றார்.

எதிர்முனையிலிருந்து சிறிது நேரத்திற்கு பதில் இல்லை.. அங்கு யாருடனோ மேடம் பேசுவது கேட்டது. பொறுமையுடன் காத்திருந்தார். சமையலறையிலிருந்து ராணி ஒட்டுக்கேட்பதுபோல் உணர்ந்தார்.

‘மேடம்?’

‘பரவால்ல மாணிக்கம்.. நீ வரவேணாம். அப்புறம் பாத்துக்கலாம்.. வச்சிடறேன்.’

அவருக்கு பதிலளிக்க வாய்ப்பளிக்காமல் இணைப்பு துண்டிக்கப்பட, துண்டிக்கப்பட்ட செல் ஃபோனையே சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்ற மாணிக்கவேல் சட்டென்று திரும்பி சமையலறையைப் பார்த்தார். ராணி தன்னையே பார்த்துக்கொண்டு வாசலில் நிற்பது தெரிந்தது. அடுத்த நிமிடமே அவள் திரும்பி சமையலறைக்குள் திரும்பிச் சென்றுவிட மாணிக்கம் தன் அறைக்கு திரும்பினார்.

சமையலறையில் இருந்தவாறே அவர் பேசுவதை வைத்தே எதிர்முனையில் யார் என்பதை ஊகித்த ராணி தனக்குள் பற்களைக் கடித்தாள்.

சண்டாளி.. குடி கெடுக்க வந்தவ.. எம் பொண்ணெ எங்கிட்டருந்து நிரந்தரமா பிரிச்சிடியேடி பாவி.. இரு.. மொதல்ல இந்த கிழம்.. அப்புறம் நீ..

செய்யறதையும் செஞ்சிட்டு துக்கமா விசாரிக்கற துக்கம்.. இரு வச்சிக்கறேன்..

எரிந்துக்கொண்டிருந்த ஸ்டவ்வின் மீதிருந்த பாத்திரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பதையும் உணராமல் வெறித்துப் பார்த்தவாறு ராணி நின்றுக்கொண்டிருக்க சமையலறைக்குள் நுழைந்த சந்தோஷ், ‘அம்மா என்ன பண்றீங்க.. கை சுடல?’ என்றவாறு தன் தாயின் கைகளை விலக்கியவாறு நேர் குத்திய பார்வையுடன் நின்ற தன் தாயை அதிர்ச்சியுடன் பார்த்தான். ‘அம்மா, என்னாச்சி.. are you alright..’

ஒரு நொடியில் சுதாரித்துக்கொண்ட ராணி சந்தோஷின் கைகளை விலக்கிவிட்டாள். ‘எனக்கு ஒன்னுமில்ல சந்தோஷ்.. கமலிய நினைச்சிக்கிட்டேன்.. என்னெ கொஞ்சம் தனியா விடு.. போ..’ என்றவாறு அவனை தள்ளிவிட்டாள்.

தன் தாயையே பார்த்தவாறு சற்று நேரம் நின்ற சந்தோஷ் மெள்ள வாசலை நோக்கி நடந்தான் சிந்தனையுடன். டாட் சொன்னது சரிதான்.. அம்மா இன்னமும் திருந்தல போலருக்கு.. திருந்துனா மாதிரி ஆக்ட் பண்றாங்கன்னு அப்பா சொன்னது சரியாருக்குமோ.. She has got something in her mind.. என்னவாருக்கும்.. கண்டுபிடிக்கணும்.. அப்பாகிட்ட சொல்லாம நாமளா கண்டுபிடிக்கணும்.. I will have to watch her carefully.. அப்பா சொன்னா மாதிரி ஒரு ப்ரொஃபஷனல் நர்ஸ் அப்பாய்ண்ட் பண்றது சரிதான்ன்னு நினைக்கேன்.. அப்பாக்கிட்ட கோ அஹெட்னு சொல்லணும்.. Yes. அம்மாவ நம்பி தாத்தாவ விட முடியாது..

தனக்குத்தானே பேசியவாறு தன் தந்தையின் அறைக்குள் நுழைந்த சந்தோஷ் வாசலில் நின்றிருந்த தன் தந்தையின் மீது மோதிக்கொள்ள அவனைப் பிடித்து நிறுத்திய மாணிக்கவேல் வெளிறிப் போயிருந்த அவனுடைய முகத்தைப் பார்த்து அதிர்ந்துப் போனார். ‘ஏய்.. சந்தோஷ்.. என்னாச்சி.. ஏன் இப்படி பேயப் பார்த்தா மாதிரி.. என்ன நடந்தது?’

சந்தோஷ் சுதாரித்துக்கொண்டு, ‘ஒன்னுமில்ல டாட்.. I am tired.. that’s all..’ என்றவாறு அறைக் கதவை மூடி தாளிட்டான்.

மாணிக்கவேல் வியப்புடன், ‘இப்ப எதுக்கு கதவ மூட்றே? அப்பா வந்தனா மேடம் வீடு வரைக்கும் போய்ட்டு வரலாம்னு பாக்கேன். அவங்க ஹாஸ்ப்பிடல்லருந்து டிஸ்சார்ஜ் ஆயி வந்துட்டாங்களாம். ஃபோன் பண்ணாங்க..’ என்றார்.

சந்தோஷ் தன் தந்தையைப் பார்த்தான். ‘டாட்.. அந்த நர்ஸ் விஷயம்.. டாக்டர் கிட்ட பேசினீங்களா?’

மாணிக்கவேல் என்னாயிற்று இவனுக்கு என்பதுபோல் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த சந்தோஷ், ‘இல்ல டாட்.. எனக்கும் நீங்க சொன்ன ஐடியா நல்லதுன்னு தோனிச்சி. அதான்.. ஃபோன் பண்ணீங்களா டாட்?’ என்றான்.

மாணிக்கவேல் யோசனையுடன் தன் மகனையே பார்த்தார். என்னமோ நடந்திருக்கு.. இல்லன்னா அறைக்குள்ள நுழைஞ்சதும் கதவ சாத்தியிருக்க மாட்டான். ஒரு நர்ச ஏற்பாடு பண்ணப்போறேன்னு சொன்னப்போ எதிர்த்தவன் இப்ப உள்ள வந்ததும் வராததுமா ஏற்பாடு செஞ்சிட்டீங்களான்னு ஏன் கேட்டான்? ராணிய பத்திய சந்தேகம் இவனுக்கும் வந்திருச்சோ?
‘டாக்டர் க்ளினிக்லயும் இல்ல, வீட்லயும் இல்ல சந்தோஷ்.. நான் மேடத்த பார்த்துட்டு வர்ற வழியில க்ளினிக்ல போய் பார்த்துட்டு வரேன்.. நீயும் வரயா? தாத்தா எழுந்திருக்கறதுக்குள்ள வந்துரலாம்..’

சந்தோஷ் திடுக்கிட்டு தன் தந்தையைப் பார்த்தான். ‘இல்ல டாட் நா வரல.. நா தாத்தாவ பாத்துக்கிட்டு இங்கயே இருக்கேன்.. நீங்க போய்ட்டு வாங்க..’ என்றான் படபடப்புடன்.

அவனுடைய குரலில் இருந்த படபடப்பைக் கவனிக்க தவறாத மாணிக்கவேல் அவனையே சற்று நேரம் பார்த்தார். ‘ஏன் அம்மாதான் வீட்ல இருக்காள்லே.. நீ ஏன் இவ்வளவு டென்ஷனாவுற?’

தன் தவறையுணர்ந்த சந்தோஷ், ‘ஒன்னுமில்ல டாட்.. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்னு பாக்கேன்.. I am really tired dad.. Don’t mistake me.. எனக்கும் மேடத்த பாக்கணுந்தான்.. ஆனா இப்ப இங்க யாராச்சும் இருக்கணும்.. அம்மாவ நம்பமுடியாது..’ என்றவன் தான் மீண்டும் செய்த தவறை உணர்ந்தவனாய் நாக்கைக் கடித்துக்கொண்டு தன் தந்தையைப் பார்த்தான்.

‘என்ன சொல்றே.. அம்மாவ நம்ப முடியாதா? அப்படீன்னா?’

சந்தோஷ் சிரித்தான். ‘நம்ப முடியாதுன்னா.. டாட்.. அவங்க சமையல்கட்டுலருக்கற வேலையில தாத்தா எழுந்து பசிக்குதுன்னு எதையாச்சும் கேட்டா தெரியாதுல்லே.. அவங்கதான் ஒரு வேலையில இருந்தா வீடே இடிஞ்சி விழுந்தாலும் கண்டுக்க மாட்டாங்களே.. அதச் சொன்னேன்.’

‘நீ சொல்றதும் சரிதான்.. அவ அப்படித்தான்.. நீ உன் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு.. இருந்தாலும் தாத்தா¨ மேலயும் ஒரு பார்வை இருக்கட்டும்.. நான் அரை மணி நேரத்துல வந்துருவேன்.. ஜோ கூப்ட்டார்னா என்னெ மொபைல்ல காண்ட்டாக்ட் பண்ணச் சொல்லு..’ என்றவாறு புறப்பட்ட மாணிக்கவேல் தன் வாகனத்தை எடுத்துக்கொண்டு சாலையில் தீவிரமாயிருந்த போக்குவரத்துடன் கலந்தாலும் சற்று முன் சந்தோஷ் சொன்னதையே நினைத்துக்கொண்டிருந்தார்.


தொடரும்..

No comments: