சுபோத் வெளியேறி வெகுநேரமாகியும் தன் இருக்கையிலேயே யோசனையுடன் அமர்ந்திருந்தார் ஃபிலிப் சுந்தரம்.
சுபோத்துடன் பேசுவதற்கு முன்பு நாடாரிடம் நடத்திய தொலைப்பேசி சம்பாஷனை நினைவுக்கு வர அதை எப்படி செயல்படுத்துவதென மேலும் யோசித்தார்.
***
‘என்னவேய்.. காலையிலருந்து பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.. நீரு செய்யறது ஒன்னும் சரியில்லவேய்.. அம்புட்டுத்தான் சொல்வேன்..’
நாடார் என்ன சொல்ல வருகிறார் என்பது விளங்கியும், ‘என்ன சார் சொல்றீங்க, நான் என்ன செஞ்சேன்?’ என்றார்.
எதிர் முனையில் சிரிப்பொலி கேட்டது.. ‘இங்கன பார்றா.. ஒமக்கு நடிக்கவும் தெரிஞ்சிருக்குவேய்.. சரி.. நேராவே கேக்கேன்.. அதென்ன திடீர்னு எச்.ஆர் தலைவர மாத்தாலாம்னு அந்த டாக்டர் பய சொல்றான்? அதுவும் அந்த ப்ராடுப் பய பாபு சுரேஷ சிபாரிசு பண்றான்? அவன்ய ரெண்டு பேரும் அடிச்ச கூட்டுக் கொள்ள போறாதாமா? புது சேர்மனுக்குத்தான் இந்த எளவு பிடிச்சவனுங்கள பத்தி தெரியாதுன்னா நீரும் சேர்ந்துக்கிட்டில்லய்யா ஆடுறீரு?’
சுந்தரம் எப்படி பதிலளிப்பதென யோசித்தவாறு அமர்ந்திருக்க அதற்கு தயாராயில்லையென்பதுபோல் எதிர்முனையிலிருந்து கோபத்துடன் குரல் வந்தது. ‘என்னய்யா.. எப்படி சமாளிக்கலாம்னு யோசிக்கீறீராக்கும்?’
‘அப்படியெல்லாம் இல்ல சார். டாக்டர் என்கிட்ட காலையில இந்த யோசனையெ சொன்னதும் நான் மறுத்து பேசத்தான் சார் செஞ்சேன்.. ஆனா எதுக்காக இவர வேணாங்கறீங்கன்னு வெளிப்படையா கேட்டதும்.. என்னால பதில் பேச முடியல.. வந்தனா ஹாஸ்ப்பிட்டல்லருந்து வந்ததும் இதப்பத்தி பேசி முடிவெடுக்கலாம்னு சொல்லிப் பார்த்தேன். சரின்னு சொல்லிட்டு போனா மாதிரித்தான் தெரிஞ்சது.. ஆனா திடீர்னு சேர்மன் சேம்பர்ல வச்சி கேட்டதும்..’
எதிர்முனையில் சற்று நேர இடைவெளிக்குப் பிறகு குரல் வந்தது. ‘சரிய்யா.. நீரு சொல்ற வெளக்கமும் சரியாத்தான் இருக்கு.. அது போட்டும்.. இப்ப அந்த பயதான் போர்ட்ல இல்லையே.. நீரு அந்த பாபு சுரேஸ் விஷயத்துல நா மறுபடியும் சொல்றவரைக்கும் எந்த ஆர்டரும் போடப்படாது.. வெளங்குதா?’
அதெப்படி? சேர்மன் கேட்டால்?
அதற்கேற்றார்போல் எதிர்முனையிலிருந்து பதில் வர சுந்தரம் அசந்துப் போனார்.
‘சேர்மன் கேட்டார்.. சீர்மன் கேட்டார்னு ஆர்டர் ஏதாச்சும் போட்டீரு.. சும்மாருக்க மாட்டேன்..’
இதென்னடா புது சோதனை என்று நொந்துப்போனார் சுந்தரம். இருப்பினும் வேறு வழியின்றி, ‘சரி சார்..’ என்றவாறு இணைப்பைத் துண்டிக்க முயன்றார்.
நாடார் விடுவதாயில்லை. ‘இரும்யா.. அப்படியென்ன வெட்டி முறியற வேலை?’
சுந்தரம் ஒலிவாங்கியின் வாயை மூடியவாறு மேசை மீதிருந்த குடிநீரை எடுத்து ஒரு வாய் பருகினார். ‘சொல்லுங்க சார்.’ என்றார்.
‘டாக்டர் எடத்துல யார் வருவான்னு ஏதாச்சும் பேச்சு நடக்குதா?’
ஃபிலிப் சுந்தரம் என்ன சொல்வதென யோசித்தார். இதுவரை அதைப் பற்றி நினைக்கக் கூட நேரம் கிடைக்கவில்லையே.. டாக்டர் சோமசுந்தரம் ஓய்வு பெற்றதும் அவருடைய பிரதிநிதி ஒருவரைத்தான் தன்னுடைய இடத்திற்கு நியமிப்பார் என்பது உயர் அதிகாரிகள் அனைவரும் தங்களுக்குள் நினைத்திருந்தனர்.
‘அநேகமா அவரோட ஆடிட்டர் இருக்காரே.. அதான் அந்த வேணு.. அவராத்தான் இருக்கும்.. அவரோட ஹாஸ்ப்பிடல் ஆடிட்டரே அவர்தானே..’ என்று சுந்தரலிங்கம் தன்னிடம் கூறியது நினைவுக்கு வர ‘டாக்டரோட ஆடிட்டராத்தான் இருக்கும்னு எங்களுக்குள்ளே ஊகிச்சிருக்கோம் சார்.’ என்றார் ஃபிலிப்.
எதிர்முனையில் ஏளன சிரிப்பு. ‘அவனுந்தான இந்த கொளப்பத்துல மாட்டிக்கிட்டிருக்கான்? அவனெ எப்படி கொண்டுவர்றது?’
‘என்ன சார் சொல்றீங்க?’
‘என்னவேய் நீரு? டாக்டரு கடன் வாங்கியிருக்கற அந்த கம்பெனி போர்ட்ல இந்த வேணுகோபால்தானய்யா டைரக்டரு? அந்தாளும் அங்கருந்து இந்நேரம் ராஜிநாமா செஞ்சிருப்பானே.. அவனெப் போயி நம்ம போர்ட்ல வப்பானா அந்த டாக்டரு? நிச்சயமா மாட்டான்..’
சரி.. அதுக்கு நா என்ன செய்யணுங்கறீங்க? என்று தனக்குள் முனகினார் ஃபிலிப். அவருக்கு தேவையில்லாத விஷயம் இது என்று நினைத்தார்.
‘தெரியலையாக்கும்.. சரி தொலையட்டும்.. நா மனசுல நினைச்சிக்கிட்டிருக்கறத ஒம்ம காதுல போட்டு வக்கேன். நீர் ஒன்னு செய்யும்.. சமயங் கெடைக்கறப்ப நம்ம சேர்மன் காதுல இத போட்டு வையும்.. என்னய்யா செய்வீறா?’
இதென்னடா புது தலைவலி என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட ஃபிலிப், ‘சொல்லுங்க சார்..’ என்றார்.
அடுத்த சில நொடிகள் எதிர்முனையிலிருந்து வந்த தகவல் அவரை திடுக்கிட வைத்தது. என்ன ஆள் இவர்? குட்டைய கெளறி விட்டு மீன பிடிக்கப் பாக்காரே.. ஞாயித்துக் கிழமையானா கோயிலுக்கு போறவருக்கு எப்படி இப்படியெல்லாம் யோசிக்க தோனுது?
‘என்னய்யா.. நா சொல்றது பிடிக்கலையாக்கும்? சைலண்டாருக்கீரு?’
ஃபிலிப் தயங்கினார்.
‘ஒமக்கு பிடிக்காதுன்னு தெரியும்.. நீருதான் பைபிள் ப்ரீச்சராச்சேய்யா.. பிரசங்கம் பண்றதுக்கு முன்னாடி அதுலருக்கா மாதிரியே நாம நடந்துக்க வேணாமான்னு யோசிக்கறவராச்சே..’
ஃபிலிப் மவுனம் சாதித்தார்.
‘சரிய்யா.. நா சொன்ன வெசயத்த மறந்துரும்.. நானே பாத்துக்கறேன்.. நா ஒம்ம கிட்ட சொன்ன வெசயத்த யார்கிட்டயாவது சொல்லாம இருந்தாப் போறும்.. என்னய்யா.. அதாவது முடியுமா? இல்ல அதயும் போட்டு ஒடச்சிருவீரா?’
ஃபிலிப் இல்லையென்பதுபோல் தலையை அசைத்தார்.
‘என்னய்யா.. இதுக்கும் ஒத்துவர மாட்டீராக்கும்..’ எரிச்சலுடன் எதிர்முனையிலிருந்து குரல் வர ஃபிலிப் அவசர, அவசரமாக மறுத்தார். ‘இல்ல சார்..’
‘இல்லன்னா? சொல்வேங்கறீரா..இல்ல சொல்ல மாட்டேங்கறீரா?’
‘இல்ல சார்.. சொல்ல மாட்டேன்.. என்னெ தப்பா நெனச்சிக்காதீங்க..’
எதிர்முனையில் நாடார் சிரித்தார். ‘ஒம்ம எனக்கு தெரியாதாய்யா.. இருந்தாலும் கேட்டு வைக்கலாமேன்னு பார்த்தேன்.. சரி.. அப்புறம் ஒரு விசயம்.’
ஏதோ இந்த மட்டுக்கு விட்டாரே என்ற திருப்தியுடன், ‘சொல்லுங்க சார்..’ என்றார்.
‘நீரு அந்த சேர்மனோட பி.ஏ. இருக்கானே.. அதான்யா அந்த ஹிந்திக்கார பய.. அவனெ கொஞ்சம் மெரட்டி அந்த நியூசு எங்கருந்து வந்துது, யார் அனுப்புனான்னு கேட்டு சொல்லும்.. அது யாராருந்தாலும் எனக்கு தெரிஞ்சாவணும்.. வெளங்குதா?’
இது வேறயா?
ஆயினும் வேறு வழியில்லை. இதையும் தம்மால் முடியாது என்று அவர் மறுத்தால் அவ்வளவுதான்.. கேட்கவே வேண்டாம்..
‘சரி சார்.. நாளைக்குள்ள நா விசாரிச்சி சொல்றேன்....’
‘அதென்னய்யா நாளைக்கு.. இப்பவே அந்த பயல கூப்ட்டு மெரட்டறத விட்டுட்டு.. இன்னைக்கி சாயந்தரத்துக்குள்ளாற தெரிஞ்சாவணும்.. வெளங்குதா.. ஆறு மணிக்குள்ள.. வச்சிடறேன்..’
அவருக்கு பதிலளிக்க வாய்ப்பில்லாமல் இணைப்பு துண்டிக்கப்படவும் தன்னுடைய அறைக்கதவு தட்டப்படவும் சரியாயிருந்தது..
தயங்கி நின்ற சுபோத் மிஷ்ராவைப் பார்த்ததும்..இவனிடமிருந்து எப்படியாவது விஷயத்தை கறந்துவிடவேண்டும் என்று நினைப்புடன்.. ‘கம் இன்’ என்றார்.
****
ஃபிலிப் சுந்தரம் தன் மேசை மீதிருந்த கடிகாரத்தைப் பார்த்தார்.
மணி ஐந்தரை!
இன்னும் அரை மணிநேரத்தில் நாடார் அழைத்தாலும் அழைப்பார். சுபோத் கூறிய விவரத்தை அவரிடம் தெரிவிப்பதற்கு முன் சேர்மனிடம் இந்த விஷயத்தைக் கூற வேண்டும்.
இண்டர்காமை எடுத்து சேர்மனுடைய காரியதரிசி அலுவலகத்தை அழைத்தார்.
எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், ‘Is Chairman free Subodh?’ என்றார்.
‘No Sir.. A visitor is there..’
விசிட்டரா.. இந்நேரத்திலா? ‘Who is that Subodh?’
எதிர்முனையில் சற்று தயங்குவது தெரிந்தது. ‘Sir.. one Mr.Thanapal.. from Chennai Crime branch.. A police officer Sir..’
போலீஸ் அதிகாரியா? அதுவும் இந்த நேரத்தில்! என்னாவாயிருக்கும்? இதை வெளிப்படையாக அவருடைய காரியதரிசியிடம் கேட்பது நன்றாயிருக்காது என்று நினைத்தார்.
‘ஓக்கே.. அவர் வெளியேறுனதும் என்னெ கூப்டுங்க.. நா சார் போறதுக்குள்ள பாக்கணும்.. It’s urgent..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு எழுந்து தன்னுடைய பிரத்தியேக பாத்ரூமுக்குள் நுழைந்து முகத்தைக் கழுவி துடைத்தார்.
அறையில் தன்னுடைய செல்ஃபோன் சிணுங்கும் ஓசை கேட்க துவாலையை தோளில் இட்டுக்கொண்டு விரைந்து சென்று யாரென பார்த்தார்.
வந்தனா!
இவரை மறந்தே போனேனே.. என்று தன்னைத்தானே கடிந்துக்கொண்டு எடுத்து ‘ஹலோ..’ என்றார்..
தொடரும்..
3 comments:
பாவம்.....பிலிப் சுந்தரம் எல்லாத்துக்கும் எப்டி அவராலெ
ஈடுகொடுக்க முடியும்?
அதான் கார்பொரேட் மெனேஜ்மெண்ட்
என்கிறீர்களா?
வாங்க ஜி!
அதான் கார்பொரேட் மெனேஜ்மெண்ட்
என்கிறீர்களா? //
பின்னே.. எல்லா தரப்பினருக்கும் ஈடுகொடுப்பவர்தான் உண்மையான 'மேனேஜர்..'
Hi, i was waiting eagerly for the next post... I think you were busy with diwali? How was Diwali... How is chennai rain
Post a Comment