வங்கியின் பயிற்சிக் கல்லூரி தலைவர் சேவியர் ஃபெர்னாண்டோ சாதாரணமாக சீனியர் மேலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கும் தினங்களில் மட்டுமே ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் வகுப்புகளை எடுப்பார்.
குமாஸ்தா மற்றும் கடைநிலை, இடைநிலை அதிகாரிகளுக்கான பயிற்சிகள் நடக்கும் நேரங்களில் வரவேற்பு மற்றும் பரிசளிப்பு விழாக்களக்களில் மட்டுமே கலந்துக்கொள்வார். மற்ற வகுப்புகளை அவரிடம் பணியாற்றிய மற்ற அதிகாரிகளிடம் விட்டுவிடுவார்.
வங்கியின் புதிய தலைவர் மாதவன் பங்குகொண்டு துவக்கி வைத்த பயிற்சி சீனியர் மேலாளர்களுக்கான பயிற்சி என்பதால் முதல் நாள் வகுப்புகளில் தன்னுடைய வகுப்பை எடுத்து முடித்துவிட்டு தன் அறைக்கு சென்று அமர்ந்து வங்கி முதல்வர் மாதவன் அன்று ஆற்றிய உரையை அம்மாத இறுதியில் வெளியாகவிருந்த கல்லூரியின் மாத இதழில் வெளியிடும் நோக்கத்துடன் சுருக்கமாக தன்னுடைய கணினியில் பதிந்து வைத்தார்.
வங்கியின் புதிய முதல்வர் மாதவன் ஆந்திராவிலுள்ள ஒரு கிளையில் மேலாளராக இருந்தபோது சேவியரும் அவருடன் பணிபுரிந்திருந்ததால் அவருடைய புத்திக் கூர்மை, அபாரமான நினைவாற்றல், எதிலும் சட்டென்று சாதக ,பாதங்களை கணக்கிட்டு முடிவெடுக்கும் திறன் சேவியருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
ஆகவே, அவர் தலைவராக இருக்கும் வரும் மூன்றாண்டுகளில் தன்னுடைய பொற்காலமாகவும் இருக்கும் என்று நினைத்தார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் மும்பையில் தனியாக வசித்து வந்த காலத்தில் விளையாட்டாக ஒரு கணினியை வாங்கி அதனுடன் இரவும் பகலும் போராடி, டிபேஸ், ஃபாக்ஸ்ப்ரோ, வேர்ட் ஸ்டார் போன்ற மென்பொருள் சம்பந்தப்பட்ட புத்தகங்களை தேடிப்பிடித்து படித்து தன்னுடைய நேரத்தைப் போக்கியது இப்போது வங்கியில் தன்னுடைய நிலையிலிருந்த அதிகாரிகளுக்கிடையில் தனக்கு மட்டுமே கணினியைப் பற்றிய ஓரளவு ஞானம் இருந்தது என்பதை அவரும் அறிந்துதான் இருந்தார்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவர் மும்பையிலிருந்து மாற்றம் பெற்று துணைப் பொது மேலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டபோது இவரை எந்த பதவியில் அமர்த்துவது என்ற பிரச்சினை எழுந்தது.
இவருக்கு பதவியுர்வு கிடைத்ததே வங்கியின் இயக்குனர் சிலுவை மாணிக்கம் நாடாருடைய தயவால்தான் என்பது அவரும் தெரிந்தே வைத்திருந்தார். அதற்கு காரணம் ஃபிலிப் சுந்தரம்தான் என்பதும் அவருக்கு தெரியும். அவருடைய பதவி உயர்வை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தவர் ஈ.டி. சேது மாதவன் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது.
பதவி உயர்வு நேர்காணல் முடிந்த அன்றே பதவி உயர்வு பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு அவருடன் பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் அவரவர்களுடைய அடுத்த பதவி (Posting) அறிவிக்கப்பட்டது அவரைத் தவிர.
‘என்ன ஃபெர்னாண்டோ.. ப்ரொமோஷன் குடுத்ததே ஜாஸ்தி.. கொஞ்ச நாளைக்கு போர்ட்ஃபோலியா இல்லாத மினிஸ்டரா இருக்கட்டும் நினைச்சிட்டாங்களா என்ன?’ என்று கேலியுடன் அவருடன் பதவி உயர்வு கிடைக்காத நண்பர்கள் அவரைக் கேட்க வெறுப்புடன் சென்னைக்கு திரும்பினார் சேவியர்.
அடுத்த சில நாட்களில் அவரை வங்கியின் பயிற்சி கல்லூரி தலைவர் பதவிக்கு நியமித்திருப்பதாக செய்தி வெளியானதும் அவர் அப்போது பணி புரிந்திருந்த சென்னை வட்டார அலுவலகத்தில் இருந்த சிலர், ‘இவர் வேறெந்த போஸ்ட்டுக்கும் லாயக்கில்லன்னா எதுக்குய்யா ப்ரொமோட் பண்ணணும்? அந்த நாடார போயி ஜால்ரா அடிச்சி கிடைச்ச ப்ரொமோஷனாச்சே.. அதான் நம்ம ஈ.டி. யோட விரோதம் இவர் மேல பாய்ஞ்சிருக்கு.. போய் காலேஜ்ல ஈயோட்டிக்கிட்டு இருன்னு அனுப்பிட்டாரு.. பாப்போம்.. அங்க போயி என்னத்தெ கிழிக்காருன்னு..’ என்று அவர் காதுபடவே பேசுவதைக் கேட்டு துவண்டுப் போனார்.
ஆனால் அப்போது அவருடைய உயர் அதிகாரியாக இருந்த சென்னை வட்டார மேலாளர், ‘சேவியர்.. கவலைப் படாதீங்க. ஒங்கள எனக்கு அசிஸ்டெண்ட்டா இவ்வளவு பெரிய ஜோனல் ஆஃபீஸ்ல போட்டப்போ கூடத்தான் ஒங்களால என்ன முடியும்னு கேலி பண்ணாங்க.. நீங்க நெனச்சா இப்ப தூங்கிக் கிடக்கற காலேஜ மறுபடியும் செயல்பட வைக்க முடியும்.. ஒங்க டைரக்ட் பாஸ் ஃபிலிப் சார்தான.. அப்புறம் என்ன.. அந்த ஈ.டி கெடக்காரு..’ என்று ஆறுதலாய் பேசியது அவருக்கு இப்போதும் நினைவிருந்தது.
அவர் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றதும் அவர் செய்த முதல் காரியம் கல்லூரியில் வகுப்பு நடத்தும் பாணியை மாற்றியதுதான். தன் மீது மதிப்பு வைத்திருந்த ஃபிலிப் சுந்தரத்தின் உதவியுடன் ஐம்பது வயதைக் கடந்திருந்த பயிற்சி அதிகாரிகளை அனைவரையும் மாற்றி நாற்பது வயதுக்குள்ளிருந்த இடைநிலை அதிகாரிகளை அவரே நேர்காணல் செய்து ஆங்கிலத்தில் நன்றாக பேசக்கூடியவர்களை தேர்ந்தெடுத்தார்.
அத்துடன் சென்னையில் அப்போது கணினி பயிற்சியில் பிரபலமாயிருந்த NIIT நிறுவனம் நடத்திவந்த மாலை வகுப்புகளில் தன்னுடைய கல்லூரியின் பயிற்சி அதிகாரிகள் அனைவரையும் சேர்த்து அடிப்படை கணினி பயிற்சி கிடைக்கச் செய்தார். ‘முக்கியமா PP பிரசண்டேஷன் செய்ய கத்துக்குடுங்க சார்..’ என்று கேட்டுக்கொண்டு கல்லூரியில் வகுப்பு நடத்தும் முறையையே அடியோடு மாற்றினார்.
அவருடைய நோக்கம் நல்லதாக தெரியவே எச்.ஆர் இலாக்காவிற்கு தலைவராயிருந்த வந்தனாவும், பொது மேலாளர் ஃபிலிப் சுந்தரமும் முழு ஒத்துழைப்பு கொடுக்க கல்லூரியிலிருத கரும்பலகை, சாக் பீஸ் முறை மாறி ஒவ்வொரு வகுப்பறையிலும் எல்சிடி ப்ரொஜக்டரும்.. வெள்ளைத் திரையும் அலங்கரித்தன.
சுமார் ஐம்பது கணினிகளைக் கொண்ட கணினி வகுப்பறை ஒன்றும் அவருடைய முயற்சியால் அமைக்கப்பட்டு ஆரம்பத்தில் NIIT பயிற்சியாளர்களே ஒப்பந்த அடிப்படையில் வகுப்புகளை நடத்தி வந்தனர். நாளடைவில் கல்லூரியின் பயிற்சியாளர்களே அவ்வகுப்புகளை நடத்த ஆரம்பிக்க ஆரம்பத்தில் அக்கறை காட்டாத பயிற்சிக்கு வரும் அதிகாரிகளும் விருப்பம் காட்ட துவங்கினார்.. வேலை பளுவிலிருந்து ஓய்வு கிடைக்கும் நோக்கத்துடனேயே கல்லூரிக்கு வந்து சென்ற வங்கி ஊழியர்கள் சேவியர் பொறுப்பேற்ற பிறகு ஒரு வார பயிற்சிக்கு வருவதில் அதிகம் ஆர்வம் காட்ட துவங்க.. அவர் பதவியேற்று ஒரே வருடத்தில் கல்லூரியின் போக்கே மாறிப்போனது..
மாலை ஆறுமணியானால் அடைக்கப்படும் கல்லூரி கதவுகள் இரவு எட்டுமணி வரை திறந்து கிடக்க ஆர்வத்துடன் பயிற்சியாளர்கள் கணினி பயிற்சி பெற கல்லூரியின் பெயர் வங்கி கிளையெங்கும் பேசப்பட்டது. சேவியர் அவருடைய சர்வீசில் முதல்முறையாக அப்போதிருந்த வங்கி முதல்வரின் பரிந்துரைப்படி வங்கி இயக்குனர்களின் கூட்டம் ஒன்றிற்கு அழைக்கப்பட்டு பாராட்டப் பட்டார். ஆனால் அதுவரை அவர் மீது அதிகம் ஆர்வம் காட்டாதிருந்த எக்ஸ்யூட்டிவ் இயக்குனர் சேதுமாதவனின் வெறுப்பும் அவர்மீது விழ ஆரம்பித்தது.
அதன் ஒரு வெளிப்பாடுதான் இன்று காலையில் கல்லூரிக்கு பயிற்சிக்கு வந்திருந்த எல்லா மாணவர்களுக்கும் முன்னர் தன்னை அவர் அவமானப்படுத்தியது என்று நினைத்தார் சேவியர்..
‘சார்.. May I come in’ என்ற குரல் கேட்டு தன் நினைவுகளிலிருந்து மீண்ட சேவியர் தன் முன் நின்றிருந்த இளம் அதிகாரியைப் பார்த்து மகிழ்ச்சியுடன், ‘என்ன ப்ரதர்.. எங்க இங்க?’ என்றார்.
சிவராமகிருஷ்ணனை முதன் முதலில் தலைமையகத்தில் வைத்து சந்தித்த போதே சேவியருக்கு மிகவும் பிடித்துபோனது. தன்னுடைய கல்லூரிக்கு தேவைப்பட்ட கணினி, மற்றும் ப்ரொஜக்டர், உபகரணங்கள்.. என எது தேவைப்பட்டாலும் சந்தையில் இருந்ததில் நல்ல பொருட்களை நியாயமான விலைக்கு வாங்கி கொடுத்திருந்தது சிவாதான்.. அவருடைய செயல்பாட்டில் எந்தவித தில்லுமுல்லும் இல்லாதிருக்க அப்போது EDP இலாக்கா தலைவராயிருந்த அதிகாரி ஓய்வு பெற்றதும் வந்தனா மற்றும் ஃபிலிப் சுந்தரத்துடனான தன்னுடைய நெருக்கத்தைப் பயன்படுத்தி அவரையே அந்த இலாக்காவிற்கு தலைவராக்கினார்.
அதிலிருந்து சிவாவுக்கும் அவர் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. பயிற்சிக் கல்லூரியின் தலைவர் என்ற முறையில் சேவியர் அங்கத்தினராகவிருந்த வங்கியின் எச்.ஆர் கமிட்டியில் EDP தலைவர் என்ற முறையில் சிவாவையும் அங்கத்தினராக்கினார்.
நாற்பது வயதைக்கூட கடக்காத தனக்கு கிடைத்த அந்தஸ்த்து தன் வயதையொத்த பல இளம் அதிகாரிகளுக்கும் பொறாமையாக இருந்ததை சிவராமகிருஷ்ணன் உணர்ந்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தனக்கு மிகவும் பிடித்தமான வேலையில் தன்னுடைய திற்மையைக் காட்ட வங்கியில் அவருடைய மதிப்பு பன்மடங்காக்கியது.
இதற்கு முக்கிய காரணகர்த்தாவாயிருந்த சேவியரே ஒருமுறை ‘இந்த மாதிரி க்ரிட்டிடிசத்துக்கு இந்த மாதிரிதான் பதிலடி குடுக்கணும்.. இப்ப பாருங்க.. ஒங்க ஒத்துழைப்பு இல்லாம பேங்க்ல எந்த டிப்பார்ட்டுமெண்டுமே சரியா ஒர்க் பண்ணாதுங்கற நிலமைய கொண்டுவந்திட்டீங்கல்லே.. இனிமே கம்ப்யூட்டர் இல்லாம யாரும் ஒன்னும் பண்ண முடியாது சிவா.. ஒங்க வயசுக்கு இதே மாதிரி டெடிக்கேட்டடா இருந்தீங்கன்னா.. Sky is the limit.. You can reach the top most position in our Bank.. Keep that in mind..’ என்று பாராட்டியபோது சிவா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை..
அப்படிப்பட்ட ஒருவரோடு இணைந்து தன்னுடைய வங்கியின் மிகப்பெரிய கணினி இணைப்பை (Network) தலைமையகத்தில் ஏற்படுத்தப் போகிறோம் என்ற நினைப்பே அவருக்கு மகிழ்ச்சியையும் மிகுந்த எதிர்பார்ப்பையும் கொடுத்தது. அதுவும் புது சேர்மனுடைய ஒத்தாசையுடன்.. !
‘அப்படியா.. குட்.. சேர்மன் சாரப்பத்தி நா நெனச்சிருந்தது சரியா போயிருச்சி சிவா. ஆனா ஒன்னு..’ என்ற சேவியரைப் பார்த்தார் சிவா.. ‘சொல்லுங்க சார்.. என்ன ப்ராப்ளம்னாலும் சமாளிச்சிரலாம்..’
சேவியர் லேசாக சிரித்தார். ‘சிவா.. ஒங்க வயசு இவ்வளவு உற்சாகத்த குடுத்திருக்கு.. ஆனா இந்த விசயத்துல நாம ரெண்டு பேருமே ரொம்ப கவனமாருக்கணும்.. இந்த நெட்வொர்க் எஸ்டாப்ளிஷ் பண்றதுக்கு நமக்கு வேண்டிய கம்ப்யூட்டர் எல்லாத்தையுமே வாங்கித்தான் ஆகணும்.. இப்பருக்கற மெஷின்ஸ் எதுவுமே லான்ல கொண்டுவர லாயக்கில்லாதது.. நம்ம காலேஜ்ல வச்சிருக்கறா மாதிரி பெண்டியம் மெஷின்ஸ்தான் சரி.. அப்புறம் லான் ஸ்விட்ச்சஸ்.. கேப்ளிங் வர்க்.. இதெல்லாம் நமக்கு முன்ன பின்ன பரிச்சியமில்லாத விஷயங்கள்.. அதனால இத எல்லாத்தையும் டர்ன் கீ பேசிஸ்ல செஞ்சி குடுக்கற கம்பெனி ஒன்னெ புடிக்கணும்.. முதல் கோட்ஸ் (quotes) நீங்க ஒரு RFP ப்ரிப்பேர் பண்ணணும்.. அதுக்கு நான் ஒரு ஏற்பாடு பண்றேன்.. இங்க கம்ப்யூட்டர் லாப்ல நெட்வொர்க் செஞ்சி குடுத்த கன்சல்டண்ட் கம்பெனியோட பேர குடுக்கேன்.. நீங்க இன்னைக்கி சாயந்தரமே அங்க போயி நா சொல்ற ஆள பார்த்து ஒங்களுக்கு என்ன வேணுங்கறத சொல்லி ஒரு டிராஃப்ட் RFP டாக்குமெண்ட் ப்ரிப்பேர் செஞ்சி குடுக்க சொல்லுங்க.. அப்புறமா நாம ரெண்டு பேரும் ஒக்காந்து டிஸ்கஸ் பண்ணி ஃபைனலைஸ் பண்லாம்..என்ன சொல்றீங்க?’
அவர் பேசி முடிக்கும் வரை அவரையே வாய் மூடாமல் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் சிவா. ஐம்பது வயதைக் கடந்தும் இவரால்மட்டும் எப்படி இதைக் கற்றுக்கொள்ள முடிந்தது என்ற வியப்பு குரலில் தொனிக்க, ‘எப்படி சார் இப்படி க்ளியரா திங்க் பண்ணி டைரக்ஷன் குடுக்க முடியுது? சாயந்திரம் என்ன சார்.. இப்பவே போறேன்..’ என்று எழுந்தான் சிவா..
‘பிரயோசனமிருக்காது சிவா.. நா சொன்ன ஆள் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலதான் இருப்பார்.. நீங்க ஆஃபீசுக்கு போய் அவரோட செல்ஃபோனுக்கு ஒரு கால் போட்டு நீங்க வரப்போற விஷயத்த சொல்லுங்க.. அப்புறமா போய் பாருங்க.. ரெண்டு மூனு நாள்ல வேணுங்கறா மாதிரி பேசுங்க.. குடுத்ததும் கொண்டு வாங்க.. ஆல் தி பெஸ்ட்..’ என்றவாறு சேவியர் விடைகொடுக்க வந்த வேலை முடிந்தது என்ற திருப்தியுடன் வெளியேறினான் சிவா..
தொடரும்..
2 comments:
வேர்கள் வேர்கள்
வெளியே தெரிவதில்லை; வருவதுமில்லை
வாங்க ஜி!
வேர்கள்
வெளியே தெரிவதில்லை; வருவதுமில்லை //
உண்மைதான். இத்தகைய வேர்கள் பலவற்றை நான் நண்பர்களாகக் கொண்டிருக்கிறேன்.
Post a Comment