9.10.06

சூரியன் 131

ராசம்மாள் தொலைப்பேசி இணைப்பை துண்டித்து ஒலிவாங்கியை அதனுடைய இடத்தில் வைத்துவிட்டு எதிரிலிருந்த தன்னுடைய தந்தையையும் சுந்தரத்தையும் பார்த்தாள்.

‘என்ன சொல்லுறா செல்வி?’ என்றான் செல்வம்.

‘இதுல சொல்றதுக்கு என்னலே இருக்கு? ராசம்மாதான் க்ளியரா சொல்லிப்போட்டாளில்லே.. எனக்கென்னவோ அந்த புள்ள புத்திசாலி புள்ளயாத்தான் தெரியுது. ராசம்மா சொன்னத கேட்டுக்குவான்னுதான் படுது.. மத்தபடி.. உள்ளாற பூந்து அவ அம்மாக்காரி குட்டைய குளப்பாம இருந்தாச் சரி..’ என்ற சிலுவை மாணிக்கம் நாடார் தன் மகளையும் மருமகனையும் பார்த்தார். ‘சரிலே அது கெடக்கட்டும். நீங்க வக்கீல பாக்க போனீகளே அது என்னாச்சி?’

செல்வம் ராசம்மாளைப் பார்த்தான் நீயே சொல்லேன் என்பதுபோல.
ராசம்மாள் வழக்கம் போலவே தன் இருக்கையிலிருந்து எழுந்து ஜன்னலோரம் சென்று சாலையை பார்த்தாள்.

‘ஏய்.. என்ன இது.. எப்பவும் போல சன்னல பாக்க போய்ட்டே. நா கேக்கேன்ல? எனக்கு வேற சோலி இருக்கு.. சட்டுன்னு சொல்லு.. நா கெளம்பட்டும்?’ என்று நாடார் படபடக்க ராசம்மாள் சன்னலிலிருந்து பார்வையை எடுக்காமலே பதிலளித்தாள்..

‘அப்பா.. அவர்கிட்டருந்து டைவர்ஸ் வாங்கறது அவ்வளவு கஷ்டமில்லன்னு சொன்னார்.. அதுக்கு ரெண்டு வழியிருக்காம். ஒன்னு அவர் நடத்த கெட்டவர்.. இன்னும் சில பொம்பளைங்களோட சகவாசம் வச்சிருக்கறவர்னு நிரூபிக்கணும்..’

‘அடச் சீ.. அதெதுக்கு நமக்கு? அதுல ஒம்பேருமில்ல நாறிப்போயிரும்.. அதென்ன ரெண்டாவது வழி? அதச் சொல்லு..’

‘அவர் என்னெ அடிச்சி துன்புறுத்தினார்னு வழக்கு போடலாமாம்.’

நாடார் கோபத்துடன் இருக்கையிலிருந்து எழுந்து இருவரையும் மாறி, மாறி பார்த்தார். ‘ஏம்லே செல்வம்? இவளுக்குத்தான் புத்தி கெட்டுக் கெடக்குன்னா ஒனக்கு எங்கலே போச்சி புத்தி? எலே எம் பொன்னெ எம் மாப்பிள அடிச்சி தொவச்சி காயப்போட்டான்னு கோர்ட்ல போயி சொல்லவால்லே இவள அவனுக்கு கட்டி வச்சேன். இத எவனாவது பேப்பர்ல போட்டுட்டா என் கவுரவம் என்னாவறது? இத யாராவது யோசிச்சீங்களா? இங்க பாருங்க. ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்லுதேன்.. இந்த விஷயத்த எங்கிட்ட விட்டுருங்க.. ராசேந்திரன்கிட்டருந்து ஒனக்கு விவாகரத்து வேணும்.. அவ்வளவுதான? அதுக்கு நானாச்சி.. வக்கீலாச்சி.. இதத்தான் பகல் முழுசும் பேசிட்டு வந்தீங்களாக்கும்? என்னமோ உருப்படியா செஞ்சிட்டு வந்திருக்கீகன்னு பார்த்தா.. என் வேலைய கெடுத்து..’ என்றவர் சட்டென்று.. ‘சரீஈஈ.. இதுக்கு நம்ம மோகன் வக்கீலும் ஒத்துக்கிட்டாரா என்ன?’ என்றார் செல்வத்தைப் பார்த்து.

செல்வம் சங்கடத்துடன் அவரை பார்த்தான். ‘இல்ல மாமா.. இதெல்லாம் வேணாம். அவர் கம்பெனியிலருந்து கையாடல் செஞ்ச முழுவிவரமும் ஆடிட்டர் கிட்டருக்கு அத வச்சி மெரட்டியே அவர பணிய வச்சி டைவர்ஸ் வாங்கிரலாம்னு சொன்னார்.’

நாடார் அகண்ட புன்னகையுடன், ‘அதான பார்த்தேன்.. அப்படியில்லடா சிந்திக்கணும்.. காதும், காதும் வச்சா மாதிரி அவனெ கூப்ட்டு.. எலேய்.. இதான் நீ செஞ்சிருக்கற அக்குரும்பு.. மரியாதையா எம் பொண்ணு கேக்கறமாதிரி செஞ்சிரு.. இல்ல 420ன்னு சொல்லி செயிலுக்குள்ள தள்ளிருவேன்னு மெரட்றத விட்டுப் போட்டு.. இவள வச்சிருக்கான், அவள வச்சிருக்கான்.. என்னைய போட்டு மிதிச்சான், தொவச்சான்னுக்கிட்டு.. வக்கீல் என்ன சொன்னார்னு கேட்டா இதயல்லல்லே சொல்லியிருக்கணும்..’ என்றவர் முதுகைக் காட்டிக்கொண்டு நின்றிருந்த தன் மகளைப் பார்த்தார். ‘இங்க பார் ராசம்மா.. அப்பா எல்லாம் ஒன் நல்லதுக்குத்தான் செய்வேன்.. அந்த பயலுக்கு மேக்கொண்டு எதயவாது குடுத்து ஒன் விசயத்த முடிச்சிரணும்.. அந்த பய தங்கியிருக்கற வீட்ட வேணும்னாலும் எடுத்துக்கிட்டு போலேன்னு கொடுத்துருவோம்.. ஒன் விசயத்த சுமுகமா முடிச்சாத்தான் அவனயும் அவங்கப்பனையும் என்னால சரியா டீல் பண்ண முடியும்.. பிசினஸ் வேற நம்ம லைஃப் வேற தாயி.. இதயும் அதயும் போட்டு குளப்பிக்கக் கூடாது.. நீ நம்ம கம்பெனியில என்னென்னமோ செய்யப் போறேன்னு சொன்னியே அதுல கவனத்த செலுத்து.. ராசேந்திரனை எங்கிட்ட விட்டுரு.. எலேய் செல்வம்.. ஒன்னெ அவளுக்கு நல்ல புத்தி சொல்லுவேன்னு வரச் சொன்னா.. நீயும் அவளோட சேந்துக்கிட்டு புத்தி பெசகுனா மாதிரி நடந்துக்கிறாத.. சொல்லிட்டன்.. எனக்கு அந்த சேட்டு பயல பாத்து பேச வேண்டியிருக்கு.. அந்த ராசேந்திரன் வித்த பங்கெல்லாம் அவன் வேற எவனுக்காவது விக்கறதுக்குள்ள வளச்சிப் போடணும்.. நா வாரன்..’

அதுவரை சாலையையே பார்த்துக்கொண்டிருந்த ராசம்மாள் சரேலென திரும்பி, ‘அப்பா.. இருங்க..’ என்றாள்.

வாசல் வரை சென்றுவிட்ட நாடார் திரும்பி தன் மகளைப் பார்த்தார். ‘என்னடா.. சொல்லு..’

‘அந்த சேட்டுக்கிட்ட ஷேர நான் வாங்கிக்கறேன்னு மோகன் சார்கிட்ட சொல்லிருக்கேன்.. நீங்க வேற போயி எதயாச்சிம் செஞ்சிராதீங்க..?’

நாடார் வியப்புடன் அவளைப் பார்த்தார். ‘என்னடா சொல்றே.. நீ வாங்கிக்கறியா? அவ்வளவு பணத்துக்கு எங்கலே போவே?’

ராசம்மாள் செல்வத்தைப் பார்த்தாள். ‘என்ன செல்வம் பேசாமருக்கே.. சொல்லேன்?’

செல்வம் தயக்கத்துடன் தன் மாமனைப் பார்த்தான். ‘ராசி ஒங்கக்கிட்டத்தான் அந்த பணத்த கேக்கலாம்னு இருக்கா.. கடனாத்தான்..’

நாடார் வாய் விட்டுச் சிரித்தார். ‘என்னது கடனாவா? என்னலே.. பித்து, கித்து பிடிச்சிருச்சா? என் பேர்லருக்கறது எல்லாமே இவளுதுதானடா.. அதுல தனியா எதுக்கு இவளுக்கு ஷேரு? அதுவும் எங்கிட்டருந்து பணத்த வாங்கி.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. அதுக்கு வேறொரு ஐடியா நா வச்சிருக்கேன்.’

‘நீங்க பணம் தரலேன்னா நா வேற வழியில அதுக்கு ஏற்பாடு செஞ்சிக்கறேன். ஆனா அந்த ஷேர எம்பேர்லதான் வாங்கணும்..’ என்றாள் ராசம்மாள் உறுதியுடன்..

நாடார் அவளுடைய குரலிலிருந்த உறுதியையும் தன்னுடைய மகளுடைய பார்வையிலிருந்த தீர்மானத்தையும் பார்த்தார். எம் மவளாச்சே என்கிற பெருமிதம் ஒருபுறம் இருந்தாலும்.. இவ நம்மளயே தூக்கிச் சாப்ட்ருவா போலருக்கே என்றும் நினைத்தார்.. சாக்கிரதையாத்தான் இருக்கணும் போலருக்கு..

‘சரிம்மா.. அதுக்கு எவ்வளவு தேவையிருக்கும்னாவது ஒனக்கு தெரியுமா? சரி.. எங்கிட்டருந்து வாங்குனத எப்படி திருப்பி தருவே.. கடன்னு வந்துட்டா அப்பா மகன்னு பாக்க மாட்டேம்மா.. சொல்லிட்டேன்.. எலேய் செல்வம்.. இந்த நாடார் குடுத்த பணத்த எப்படி வசூலிப்பார்னு இவ கிட்ட சொல்லியிருகியால்லே..’ என்றார் நாடார் கேலியுடன்.

‘விளையாடாதீங்கப்பா.. ராசேந்திரனோட ஷேர வாங்கறதுக்கு எவ்வளவு பணம் வேணும், அத எப்படி திருப்பி அடைக்கறதுங்கறத எல்லாம் யோசிக்காம ஒன்னும் ஒங்க பொண்ணு இந்த விஷயத்துல எறங்கல.’

நாடார் அப்போதும் புன்னகை மாறாத முகத்துடன் தன் மகளைப் பார்த்தார். ‘சரிம்மா.. என் பணத்த எப்படி திருப்பித் தருவே.. அதச் சொல்லு.. நான் எப்பவுமே செக்யூரிட்டியோ, ஜாமீனோ இல்லாம பணம் தரமாட்டேன்.. என்னடா செல்வம்.. சொல்லேன்?’

செல்வத்திற்கு தன் மாமனின் புன்னகை பூத்த முகமே அவர் தன் மகளை சீண்டிப் பார்க்கிறார் என்பதை உணர்த்த அவன் திரும்பி சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு நின்ற ராசம்மாளைப் பார்த்தான். தானும் தன் மாமனுடன் சேர்ந்துக்கொண்டு இவளை சீண்டிப் பார்த்தாலென்ன என்று தோன்றியது. ‘அதானே..’ என்றான்.

ராசம்மாள் கோபத்துடன் அவனைப் பார்த்தாள். ‘என்ன செல்வம்.. விளையாடறியா? மோகன் அங்கிள்கிட்ட நா சொன்னத இவர்கிட்ட சொல்லு..’

நாடார் சிரித்தார். ‘எலேய் செல்வம்.. தெரிஞ்சிக்கிட்டேதான் விளையாடறியா? என்னடா சொன்னா.. சொல்லேன்.. எப்படி திருப்பி தரப்போறாளாம்?’

செல்வம் சிரிப்புடன், ‘ஒங்கக்கிட்ட மாசம் ஒரு லட்சம் சம்பளம்னு கேட்டா இல்ல? அது இதுக்குத்தான்.. அத வச்சே ஒங்க கடனெ அடச்சிரலாம்னுதான்..’

வாசலில் நின்றவாறே பேசிக்கொண்டிருந்த நாடார் உரக்க சிரித்தவாறு சற்று முன் வரை ராசம்மாள் அமர்ந்திருந்த இருக்கையில் சென்றமர்ந்தார். ‘எது.. மாசா மாசம் வாங்கப் போற சம்பளத்துலருந்தா..? இந்த கூத்த நா எங்க போய் சொல்றது..’ என்றவாறே அவர் மேலும் சிரிக்க ராசம்மாள் கோபத்துடன் வாசலை நோக்கி நடந்தாள்..

‘ஏய்.. ஏய்.. நில்லு.. எங்க போறே?’ என்றவாறு எழுந்து வாசலை நோக்கி விரைந்துச் சென்று ராசம்மாளின் தோள்களைப் பிடித்து நிறுத்தினார்.

‘கோச்சிக்கிட்டியாக்கும்? அப்பா சும்மா தமாஸ்தானப் புள்ள செஞ்சேன்.. இப்படி பொசுக்குன்னு கோச்சிக்கிட்டு போனா எப்படி?’

‘விடுங்கப்பா..’ என்று வீம்பு செய்த மகளை அழைத்துச் சென்று தன்னுடைய இருக்கையில் அமர்த்திவிட்டு தானும் செல்வம் அமர்ந்திருந்த இருக்கையினருகில் கிடந்த இருக்கையில் அமர்ந்தார்.

‘இங்க பாரு ராசம்மா.. இது நீ நெனக்கறாமாதிரியான காரியமில்ல. அப்பா இந்த மாதிரி எத்தனெ பிரச்சினைகளையும், சோதனைகளையும் சந்திச்சிருக்கேன்னு ஒனக்கு தெரியுமா புள்ள? இந்த செல்வம் ஒன்னையெ விட அஞ்சி வருசம்தான் மூத்தவன்.. ஆனா நா பட்ட எல்லா கஸ்டத்தயும் பாத்துருக்கான். ஒன்னைய அந்த ராசேந்திரனுக்கு கட்டி வச்சதுலருந்து அவன் அடிச்ச அத்தனெ கூத்தையும், அவன் நம்ம கம்பெனியிலருந்து செல்வத்த தொரத்துனது, இந்த கம்பெனி கணக்குலருந்து ஒம் பேரச் சொல்லி லட்ச, லட்சமா எடுத்தது.. குடி, கூத்தின்னு சுத்துனது.. எல்லாத்துக்கும் எங்கிட்ட ஆதாரம் இருக்கு புள்ளே.. நா நெனச்சிருந்தா அவனெ எப்பவே முடிய புடிச்சி நாலு அறை விட்டு வெளிய தொரத்தியிருக்க முடியும்.. ஆனா செய்யல? ஏன்.. நீ கண் கலங்கிட்டு வந்து நிக்கறத பாக்க முடியாதுங்கற ஒரே காரணத்துக்காக.. அவனும் அவன் அப்பனும் அவங்க ஷேர விக்கப் போறாங்கற வெசயத்த மட்டுந்தான் நா கண்டுக்காம கோட்ட விட்டுட்டேன்.. நம்ம ஆடிட்டர் சார் சூசகமா சொல்லத்தான் செஞ்சாரு.. நாந்தான் சட்டெ பண்ணாம இருந்துட்டேன்.. இப்பவும் ஒன்னு குடிமுழுகிப் போகல.. அது எனக்கு தெரியவந்த அடுத்த நாளே நம்ம வக்கீல் தம்பிய வச்சி அந்த சேட்டுக்கிட்ட பேசி அத முழுசும் ஒம் பேருக்கு மாத்தறதுக்கு வெல பேசி அட்வான்சும் குடுத்தாச்சி.. நாந்தான் வக்கீல் தம்பிக்கிட்ட ஒங்கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லி வச்சேன்.. நீ என்னடான்னா.. எங்கிட்ட கடன் கேட்டு வந்து நிக்கே.. எலே ராசம்மா அதனோட வெல தெரியுமால்லே ஒனக்கு? நீ மாசா மாசம் வாங்கற சம்பளத்துலருந்து அடைக்கக் கூடிய தொகையால்லே அது.. பைத்தியக்கார புள்ள..’

அவர் பேசப் பேச வாயடைத்து போயிருந்த ராசம்மாள் மேசையின் குறுக்கே கிடந்த தன் தந்தையின் கரத்தின் மீது பாசத்துடன் தன் கரங்களை வைத்து, ‘மன்னிச்சிருங்கப்பா.. நா முன்னெ பின்னெ யோசிக்காம..’ எனக்கு குரல் நடுங்க கூற.. நாடார் தன் மகளின் கரங்களை பற்றி ஒரு முறை அழுத்தினாள்..

‘ச்சீ.. நீ எதுக்குல்லே அப்பாக்கிட்ட..’ என்றவர், ‘சரி அத விடு.. டேய் செல்வம்.. நீ ஒடனே பொறப்பட்டு ஊருக்கு போ.. அந்த செல்விய சமாதானப்படுத்தி அளைச்சிக்கிட்டு வா.. நம்ம வளசரவாக்க வீட்டுல அவள குடி வை.. அவ அம்மாவ என்ன பண்ணணுமோ பண்ணு.. ஆனா சென்னைக்கி மட்டும் அவள கூட்டியாந்துராத.. அது ஒரு பணத்தாச புடிச்ச பொம்பள.. செல்விக்காகவும் ஒனக்காகவும்தான் அந்த பொம்பளைய பொறுத்துக்கிட்டிருக்கேன்.. செல்வி வாயாடியானாலும் புத்திசாலிப் பொண்ணு.. ராசம்மா அவ கிட்ட சொன்னதுல எனக்கு அவ்வளவா இஷ்டமில்லன்னாலும்.. செஞ்சிருவோம்.. இல்லன்னா அந்த பொண்ணு நீ கூப்ட்டா வராது.. ஒன் கடைக்கு நீ என்ன கேட்டாலும் குடுக்கலாம்டா.. நீ எனக்கு பொறக்காத இன்னொரு புள்ள மாதிரி..’ என்றவாறு செல்வத்தின் தோள்களைத் தொட அவன் பதறியாவாறு எழுந்து நின்றான்.

‘என்ன மாமா.. நீங்க சொல்லணுமா? நீங்க வச்சிக் குடுத்த கடைக்கு நா வெல பேசறதா? செல்விய எப்படி வழிக்கி கொண்டு வரதுன்னு எனக்கு தெரியும். அத நா பாத்துக்கறேன்.. நீங்க ஒரு வெலயும் குடுக்க வேணாம். அது நம்ம கம்பெனி பிராஞ்சாதான இருக்கப் போவுது..’

ராசம்மாளும் நாடாரும் ஒரே சமயத்தில் இல்லை என்று தலையை அசைக்க இருவரையும் வியப்புடன் பார்த்தான். ‘அதெப்படி ரெண்டு பேரும் ஒரே சமயத்துல, ஒரே மாதிரியான முடிவெடுக்கீங்க? எதுக்கு இப்ப இல்லேங்கறா மாதிரி தலைய அசைச்சீங்க?’

நாடார் உரக்க சிரித்தார்.. ‘எலேய் என்னதாருந்தாலும் நீ எனக்கு தங்கச்சி பையன்.. அவ என் ரத்தம்லே.. என்னெ மாதிரிதான அவளும் யோசிப்பா.. நீ என்ன சொன்னாலும் உன் பெஞ்சாதி பேர்லருக்கற கடைக்கு ஒரு வெல நா தரத்தான் வேணும்.. சரி.. அத நாம மூனு பேரும் பேச வேணாம். நம்ம ஆடிட்டர்கிட்ட விட்டுருவோம்.. அவர் திருநெல்வேலிக்கு போயி கணக்கு பொஸ்தகத்த எல்லாம் பாத்து ஒரு வெல சொல்லட்டும்.. அப்புறம் பாப்போம்.. எனக்கு முக்கியமான சோலி இருக்கு.. நீ ராசம்மா கொண்டு போயி வீட்ல விட்டுப் போட்டு ஊர் போய் சேர்ற வழிய பாரு.. இந்த வாரக் கடைசிக்குள்ள வந்துருலே..’ என்றவாறு அவர் வெளியேற சற்று நேரம் வரை அவரவர் எண்ணங்களில் மூழ்கிப்போன செல்வமும் ராசம்மாளும் மெள்ள எழுந்து அறைக்கதவை பூட்டிக்கொண்டு படியிறங்கினர்..

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

"தாய் எட்டடி பாய்ந்தால்
குட்டி பதினாறடி பாயும்"

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

தாய் எட்டடி பாய்ந்தால்
குட்டி பதினாறடி பாயும்//

இதுல தாய்க்கு பதில் தகப்பன்னு போட்டுக்கணும்:)