நாடார் அலுவலகம் சென்றடைந்ததும் செய்த முதல் வேலை ஃபிலிப் சுந்தரத்தை அழைத்துதான்.
எதிர் முனையில் மணி அடித்துக்கொண்டே இருந்தது.
‘எங்க போய்த் தொலைந்தார் இவர்?’ என்ற முனுமுனுப்புடன் செல் ஃபோனை துண்டித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்.
ஒருவேளை நம்ம செல்ஃபோன் நம்பர பாத்துட்டு மனுசன் எடுக்காம இருக்காரோ. இருக்கும்..
அவருடைய அலுவலக தொலைப்பேசியிலிருந்து ஃபிலிப் சுந்தரத்தின் பிரத்தியேக அலுவலக தொலைப்பேசி எண்ணுக்கு டயல் செய்தார்.
அடித்துக்கொண்டே இருந்தது. இல்ல போலருக்கு என்றவாறு துண்டிக்கப்போனவர் எதிர்முனையிலிருந்து ஒரு பெண் குரல் வர, ‘யார்ம்மா பி.ஏ.வா? சி.ஜி.எம் இல்லையாம்மா?.. நா நாடார் பேசறேன்.’ என்றார்.
எதிரிலிருந்து பணிவுடன் குரல் வந்தது. ‘சார் சேர்மன் ரூம்ல இருக்கார் சார். வந்ததும் சொல்லட்டுமா சார்.. இல்ல இப்பவே ஒங்கள கூப்பிட சொல்லணுமா?’
நாடார் சிரித்தார். ‘வேணாம்மா அவர் வந்ததும் சொன்னாப் போறும். வச்சிடறேன்.’
‘பயங்கரமான குட்டிங்க.. என்ன ச்சாலக்கா பேசுதுக பாருங்க. ஒருவேளை மனுசன் ரூம்லயே இருந்தாலும் இருப்பார். யார் கண்டா.. இந்த படிச்ச ஆளுங்கள நம்பக்கூடாதுன்னு சும்மாவா சொல்லியிருக்காக.. என்ன நா சொல்றது?’என்றார் நாடார் தன் எதிரில் நின்ற அலுவலக மேலாளரிடம்.
அவர் என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழிக்க, ‘எதுக்கெடுத்தாலும் இப்படி பேபேன்னு முளி, முளிக்கறதே ஒமக்கு பொளப்பா போச்சிய்யா.. சரி கையிலருக்கற ஃபைல வச்சிட்டு போயி ஒம்ம வேலையப் பாரும்.’ என்றார் எரிச்சலுடன்.
ஆனாலும் அவர் தயங்கி நிற்க, ‘என்னவே.. ஏதாச்சும் சொல்லணுமாக்கும்.. சொன்னாத்தான தெரியும்?’ என்றார் கேலியுடன்.
‘நம்ம மருமகப்பிள்ள செத்த நேரம் முன்னாடி கூப்ட்டுருந்தார் சார்.’
நாடார் நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘யாருய்யா.. யாருன்னு சொன்னீர்?’
மேலாளர் என்ன கேட்க வருகிறார் என்று தெரியாமல் விழித்தார். ‘நம்ம ராசேந்திரன் சார்.. கூப்ட்டார்னு சொல்ல வந்தேன்.’
நாடார் எரிச்சலுடன் பார்த்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தன்னையுமறியாமல் இரண்டடி எட்டி நின்றார் மேலாளர்.
‘யாருய்யா அந்த ராசேந்திரனா? என்னவாம்?’
‘அவருக்கு நம்ம கம்பெனி கணக்கு புஸ்தகங்கள பாக்கணுமாம். பகல் ஒரு மணி வாக்குல வரேன்னு சொன்னார். எல்லாத்தையும் எடுத்து வைக்கணுமாம்.. அதான் ஒங்கள கேக்காம...’
நாடார் இடைமறித்தார். ‘நல்ல வேளையா கேட்டு தொலைச்சீர். சரி நீர் போம்.. நான் யோசிச்சி சொல்றேன்..’
மனிதர் விட்டால் போதும் என்று நகர, ‘அவர் பழுவடியும் கூப்ட்டார்னா ஆடிட்டர கேட்டுட்டுத்தான் சொல்ல முடியும்.. வேணும்னா நீங்களே அவர்கிட்ட பேசிக்கிருங்கன்னு சொல்லி வையும்.. எங்கிட்ட சொன்னதா தெரியப்படாது.. என்ன நா சொல்றது?’ என்றார் பற்களைக் கடித்தவாறு.
சரி என்று தலையை அசைத்தவாறு ஓட்டமும் நடையுமாய் வெளியேறிய மேலாளரை கவனியாமல் தன் செல் ஃபோனை எடுத்து அவருடைய ஆடிட்டர் எண்ணை டயல் செய்தார்.
எதிர் முனையில் எடுக்கப்பட்டதும், ‘அய்யா நாந்தான்யா.. செத்த முன்னாலதான் நம்ம ராசிம்மா மாப்பிள்ள கூப்ட்டு நம்ம கம்பெனி கணக்கு பொஸ்தகங்கள பாக்கணும்னு சொன்னானாம்.. என்ன, ஏதுன்னு சொல்லலையாம்.. நா நம்ம மேனேசர்கிட்ட மறுபடியும் அவர் கூப்ட்டார்னா நம்ம ஆடிட்டர் கிட்ட பேசிக்குங்கன்னு சொல்ல சொல்லியிருக்கேன்.. நீங்க பாத்து என்ன செய்யணுமோ செஞ்சிக்குங்க.. அந்த பயலுக்கு நாம எதையும் காமிக்கணும்னு இல்லைய்யா. அவ்வளவுதான் நாஞ் சொல்லுவேன்.. மத்தபடி ஒங்க இஷ்டம். எல்லாம் அவங்கப்பன் செய்யற வேலையாத்தான் இருக்கும்னு நினைக்கேன்.’ என்றார்.
‘.....’
‘சரிய்யா அப்படியே செஞ்சிருங்க.. ஒங்களுக்கு தெரியாததாய்யா.. அப்புறம் நம்ம ராசி பேர்ல வாங்கியிருக்கற ஷேர் விஷயமாவும் ஏதாச்சும் கேப்பான்.. அந்த சேட்ட அப்பனும் புள்ளையுமா நேத்து ராத்திரியே போய் பாத்ததாக கேள்விய்யா. என்ன பதில் சொல்லணுமோ சொல்லிக்கிருங்க.. ஷேர்ங்கள நம்ம பொண்ணு பேர்ல மாத்தற நேரத்துல எந்த சிக்கலும் வராம பாத்துக்கிருங்க..அவ்வளவுதான்.. வச்சிடறேன்யா..’
இணைப்பைத் துண்டித்துவிட்டு அமர்ந்து ஏன் இன்னும் ஃபிலிப் சுந்தரம் தன்னை அழைக்கவில்லை என்று சிந்திக்கலானார்.
******
‘என்னலே ராசா.. என்ன சொல்றான் அந்த மேனேசர் பய?’
இவர் வேற நை, நைன்னு என்று மனதுக்குள் தன் தந்தையை திட்டினான் ராசேந்திரன். நிம்மதியா யோசிக்க விடாம கேள்வி மேல, கேள்வியா கேட்டுக்கிட்டு..
‘எலேய் ஒன்னையத்தானே கேக்கேன்.. இவன் என்ன கேக்கறது நாம என்ன பதில் சொல்றதுன்னு நினைக்கியோ?’
ராசேந்திரன் எரிச்சலுடன் திரும்பி அவரைப் பார்த்தான். ‘என்னத்த சொல்வார்? அய்யாகிட்ட கேட்டுட்டுத்தான்யா சொல்ல முடியும்கறார். மாமா இன்னும் வரலையாம்.’
ரத்தினவேல் உரக்கச் சிரித்தார். ‘யார்லே மாமாவா? எலேய் யாருக்கு யார் மாமா? இன்னும் அப்படித்தான் நெனச்சிக்கிட்டிருக்கியாக்கும்? ஒம் பொஞ்சாதிதான் ஒன்னெ டைவோர்ஸ் பண்ற வரைக்கி போய்ட்டாளடா? பெறவென்ன? மாமாவாம் மாமா.. அந்த நெனப்ப தூக்கியெறிஞ்சிட்டு அவனையும் அவங் குடும்பத்தையும் நம்ம குடும்பத்துக்கே பரம வைரியா மனசுல வரிச்சிக்கல்லே.. அப்பத்தான் பளி வாங்கணுங்கற வெறி வரும்.. அந்த வெறி மட்டும் ஒம் மனசுல இல்லேன்னு வை.. நாம நெனச்சிக்கிட்டிருக்கறது ஒன்னும் நடக்காது.. சொல்லிப் போட்டேன்.. கரண்டி பிடிச்சி, பிடிச்சி இந்த கை மட்டுமில்லடா காய்ச்சி போயிருக்கி.. இந்த மனசுந்தான்.. வீடு வரைக்கும் வந்து என்ன பேச்சு பேசிட்டு போனான்.. மறக்க முடியுமால்லே.. திங்கறது உப்புப் போட்ட சோறுன்னா.. நாம யாருங்கறத அவனுக்கு காம்பிக்கணும்லே.. காம்பிக்கணும்...’
ராசேந்திரன் தன்னையே சபித்துக்கொண்டான். வாய்த் தவறி வந்த வார்த்தைக்கு இவ்வளவு பெரிய லெக்சரா என்று நினைத்தான்.
‘சரி.. அவர் சொன்னத அப்படியே சொல்லிட்டேன்.. அதுக்கென்ன இப்ப.. சொல்ல வந்தத சொல்ல விடாம..’
ரத்தினவேலு எரிச்சலுடன் தன் மகனைப் பார்த்தார். ‘சரி தொலையுது விடு.. இப்ப என்ன செய்யறதா உத்தேசம்.. கம்பெனி ஷேர் கைமாறப் போறது உறுதியாயிருச்சி.. யார் பேருக்கு மாறப்போகுதுன்னாவது தெரிஞ்சிக்கணுமில்லடா? அத எப்படி தெரிஞ்சிக்கப் போற?’
‘அது தெரிஞ்சி நமக்கென்ன ஆகப்போகுது? பிரைவேட் லிமிடெட் கம்பெனியில குடும்பத்துலருக்கறவங்கள தவிர வேற யாருக்கும் அவ்வளவு ஈசியா மாத்த முடியாதுங்கறது தெரியாமத்தான இப்படியொரு முட்டாத்தனத்த செஞ்சிட்டு நிக்கறோம்?’
‘யார்ல முட்டாத்தனம் பண்ணது? நீயா, நானா? முட்டாப்பய.. என்ன செய்யிறோம்.. ஏது செய்யிறோம்னு யோசிக்கறது கிடையாது.. எடுத்தோம் கவுத்தோம்னு செஞ்சிட்டு பிற்பாடு முளிக்கறதே ஒனக்கு பொளப்பா போச்சிலே.. கண்ட, கண்ட களுதைங்களோட சுத்தாதல்லே.. அந்த பொண்ணுன்னா அவனுக்கு உசுரு.. ஒனக்கு குடுக்கறதுக்கே அவன் பலதரம் யோசிச்சிருக்கான்னு எத்தன தடவெ சொல்லியிருப்பேன்.. அப்பல்லாம் கேட்டுருந்தா இப்படி நடு ரோட்டுல வந்து நின்னுருப்பியா? உள்ளுக்குள்ளயே இருந்து கவுக்கறத விட்டுப்போட்டு வெளியிலருந்துக்கிட்டு என்னத்தலே செய்யப் போற? முட்டாப்பய, முட்டாப்பய.. இப்ப முளிச்சி என்ன பண்றது.. அப்பன் பேச்ச கேக்கக் கூடாதுன்னு ஒரு வக்கிர புத்தி.. என்ன படிச்சியோ எளவோ.. போ..’
ராசேந்திரன் பொங்கி வந்த கோபத்தை அடக்க முடியாமல் கீழுதட்டை அழுத்தி கடித்தான் ரத்தம் வரும்வரை.. இந்த ஆள் மட்டும் பேச்சை நிறுத்தலே.. போய்யான்னுட்டு போயிரவேண்டியதுதான்..
‘என்னலே கோவம் பொத்துக்கிட்டு வருமே.. வரணும்லே.. கோவம் வரணும்.. நம்மள அடிச்சவனுங்கள திருப்பி அடிக்கணும்னா இந்த கோவம் ஒனக்கு கண்டிப்பா வேணும்.. அத மட்டும் விட்டுறாத.. அது ஒன்னுதான் ஒன்னெ உந்திக்கிட்டே இருக்கும்..’
தெரியாமய்யா கெடக்கு.. பெரிசா சொல்ல வந்துட்டீக? இப்ப என்ன செய்யிறது? அதச் சொல்லுவீகளா? சொன்னதையே சொல்லிக்கிட்டு..
‘இப்ப என்ன செய்யறதா உத்தேசம்லே.. அதயாவது சொல்லு.. நடக்குமா இல்லையான்னு நா சொல்லுதேன்..’
உதடுகளில் வழிந்த ரத்தத்தை உள்ளுக்குள் உறிஞ்சியவாறு தன் தந்தையைப் பார்த்தான். ‘ஏன் நீங்கதான் சொல்லுங்களேன்?’
ரத்தினவேல் அவனுடைய உதடுகளிலிருந்த வழிந்த ரத்தத்தை பொருட்படுத்தாமல் பேசினார். ‘அந்த பய.. அதான்லே ஒம் மாமன்.. நீ நெனக்கறாப்பல இல்ல.. ஒன்னெ பழுவடியும் ஆஃபீசுக்குள்ள விடுவான்னு எனக்கு தோனல.. நீ அந்த கணக்கு பொஸ்தகத்த எதுக்கு பாக்க கேக்கேன்னு அவனுக்கு தெரியும்.. அதனால அநேகமா ஒன்னெ அவனோட டிட்டர கேட்டுக்கன்னு சொல்லிருவான்..’
அது தெரியாமயா கெடக்கு? என்னெ என்ன அந்த அளவுக்கு முட்டாளுன்னு நினைச்சீங்களாக்கும்.. அது தெரிஞ்சிதான எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு நூல விட்டுப்பார்த்தேன். நாளைக்கு பின்னால கோர்ட் வரைக்கும் போய்த்தான் இந்த கணக்கு வழக்குகள செட்டில் பண்ணணும்னா நம்ம கேட்டப்போ கணக்க காட்ட மாட்டேன்னு சொன்னத சொல்லலாமில்ல? இவருக்கெங்க அந்த சூட்சுமம்லாம் தெரியப்போவுது.. தற்குறி.. தற்குறி.. நாலாங்களாஸ் கூட தாண்டாதவர்கிட்டல்லாம் பேச்சு வாங்கி கட்டிக்க வேண்டியிருக்கு.. தலையெழுத்துடா..
‘என்னலே ஒனக்குள்ளயே பேசிக்கறாப்பல இருக்கு? இந்த அப்பன மனசுக்குள்ளயே வையிறயாக்கும்? என்னமும் செஞ்சிக்க.. அவன் ஆடிட்டர பாருன்னு சொல்லிப்போட்டான்னு வச்சிக்குவம்.. மேக்கொண்டு என்ன செய்யிறதா உத்தேசம்? இல்ல அதையும் நாந்தான் சொல்லணுமா?’
ராசேந்திரன் அடக்கமாட்டாத எரிச்சலுடன் அவரைப் பார்த்தான். ‘இதென்ன கேள்விப்பா? அந்த ஆடிட்டர போய் பாக்க வேண்டியதுதான்.’
ரத்தினவேல் உரக்கச் சிரித்தார். ‘அட முட்டாப் பயலே.. சொன்னா மட்டும் கோவப்படறியே? அதயா கேக்கேன்? இவனே முடியாதுன்னு நேரடியா சொல்லாம.. ஆடிட்டர பாருங்கான்.. அவனெ மட்டும் ஒங்கிட்ட காட்ட விட்டுருவானாக்கும்?’
‘அது எனக்கு தெரியாமயா கெடக்கு?’
‘அட! பரவாயில்லையே.. சரி.. மேக்கொண்டு என்ன செய்யப் போற?’
‘கோர்ட்டுக்கு போவேண்டியதுதான்.. கம்பெனியிலருந்து எங்கள எந்த காரணமும் இல்லாம வெலக்கிட்டதால எங்களுக்கு சேர வேண்டியத என்னன்னு பாக்க கணக்கு வழக்க சப்மிட் பண்ண சொல்லுன்னு நோட்டீஸ் விடவேண்டியதுதான்.. என்ன சொல்றீங்க?’
‘சபாஷ்.. இப்பத்தான் எம் பையன்.. இதத்தான்லே ஒன் வாய்லருந்து வரணும்னு காத்துக்கிட்டிருந்தேன்.. நீ இப்பவே நம்ம ஆடிட்டர் பயலுக்கு ஃபோன் போட்டு வக்கீலையும் கூட்டிக்கிட்டு இங்கன வரச்சொல்லு. அவனுங்கள விட்டே பேசச் சொல்வோம்..’
ராசேந்திரன் மறு பதில் கூறாமல் தன்னுடைய தந்தையையே பார்த்தான். நாம சொல்ல வேண்டியது.. இவர் அதத்தான்லே நினைச்சேன்னு சொல்லிரவேண்டியது.. சரீ.. இப்ப அந்த ஆடிட்டரையும் வக்கீலையும் எதுக்கு வரச்சொல்றார்.. குட்டைய கொளப்பவா? சரி வந்து தொலையட்டும்.. என்னதான் நடக்குதுன்னு பாப்போம்..
செல்ஃபோனை எடுத்து டயல் செய்ய முனைந்தான்.
‘எலேய்.. ராசேந்திரா.. செல்ஃபோன்லருந்து பண்ணாத.. இருந்துக்கிட்டே எடுக்காம இருப்பானுவோ.. வீட்டு லைன்லருந்து பண்ணு..’
பரவால்லை.. ஒங்க மூள நல்லாவே வேலை செய்யிது.. எத்தனுக்கு எத்தன் ஜித்தனாச்சே நீங்க என்று நினைத்தவாறு ஹாலிலிருந்த தொலைப்பேசியை நெருங்கினான் ராசேந்திரன்..
தொடரும்..
6 comments:
//எத்தனுக்கு எத்தன் ஜித்தனாச்சே..//
ஜித்தன் எத்தனை ஜித்தனடி....னு
பாடலாம் போலிருக்கு!
இப்படியும் சில மனிதர்கள்... நாடாரும் நல்லவர் இல்லை தான் ஆனா ராசேந்திரன் compare பண்ணும் போது நாடார் பரவாயில்லை
வாங்க மீனாப்ரியா,
இப்படியும் சில மனிதர்கள்... //
இவங்களாவது தேவலை. அதிகம் படிக்காதவர்கள். போட்டியும் பொறாமையும் அடுத்துக் கெடுப்பதும் தவறல்ல என்று நினைப்பவர்கள்.
ஆனால் மெத்தப் படித்த அதிகாரிகளே இப்படி நடந்துக்கொள்வதைப் பார்த்திருப்பீர்களே? எந்த அலுவலகத்தில்தான் இல்லை இந்த போராட்டம்?
வாங்க ஜி!
ஜித்தன் எத்தனை ஜித்தனடி....னு
பாடலாம் போலிருக்கு! //
இன்னைக்கி என்ன ஒரே பாடற மூடுல இருக்கீங்க?:)
என்ன தலிவரே!
இன்னைக்கு நம்ம சாதிய வாரிட்டிருக்கீங்களா?
இருங்க சரத்குமார் அண்ணாச்சிட்ட சொல்றேன்.
வாங்க கார்மேக ராஜா,
இன்னைக்கு நம்ம சாதிய வாரிட்டிருக்கீங்களா?
இருங்க சரத்குமார் அண்ணாச்சிட்ட சொல்றேன். //
ஒரு சாதிய ஒட்டுமொத்தமா வார்றதுக்கு எனக்கென்ன பைத்தியமா அண்ணாச்சி? அதுவும் நீங்க சொல்ற சாதிய? நிச்சயமா எனக்கு அதுக்கு தைரியம் இல்லை..
இன்னைக்கி சென்னையை ஆக்கிரமிச்சிக்கிட்டிருக்கீங்களே.. ஒங்கள போயி.. வேணாம் விட்டுருங்க.. நான் சொல்ல வந்தது ரெண்டு தனி மனுசங்கள பத்தி.. அந்த மாதிரியான ஆளுங்க எல்லா சாதியிலயும் இருக்காங்க.. ஒங்களுக்கு தெரியாததா:)
Post a Comment