12.1.07

சூரியன் 164

சற்று நேரத்திற்கு முன் புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கார், மாகிம், பாந்த்ரா, பையாந்தர், ஜோகேஸ்வரி, போரிவெலி, மாதுங்கா உள்ளிட்ட பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்தன. இன்று நண்பகல் சில ஓடும் ரயில்களில் குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு கார் ரயில் நிலையம் அருகே  வெடித்தது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ரயில்களில் குண்டுகள் வெடித்தன. குண்டுவெடிப்பு நடந்த ரயில்களையும் ரயில் நிலையங்களையும் ரயில்வே போலீஸாரும், மும்பை நகர போலீஸாரும் முற்றுகையிட்டு சீல் வைத்துள்ளனர். மீட்புப் பணிகள் துரித கதியில் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேற்கு ரயில்வேயின் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த இடங்களுக்கு அதிக அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ரயில்களில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு பேருந்துகளில் ஏற்றி அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்க் அறிவித்துள்ளார்.
மும்பை குண்டுவெடிப்புச் சம்பங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத்தை பரப்பும் இதுபோன்ற கோழைத்தனமான செயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. தீவிரவாதிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார் சிங்.

மும்பை நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் மன்மோகன் சிங் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மும்பைக்கு விரைகிறார்.
மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட அனைத்து முக்கிய பெருநகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பங்களுக்கும், மும்பை குண்டுவெடிப்புச் சம்பங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று மகாராஷ்டிர மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குண்டு வெடிப்பு சம்பந்தமான தகவல் தொலைபேசி வழியாக கிடைக்கப்பெற்றும் அதை காவல்துறை அலட்சியப்படுத்திவிட்டதாக தெரியவந்துள்ளது.

ஆனால் முதல் குண்டு வெடிப்பைப்பற்றிய செய்தி கிடைக்கப்பெற்றவுடன்  தொலைபேசி செய்த நபரின் விவரத்தை சம்பந்தப்பட்ட செல்ஃபோன் சேவையாளரின் உதவியுடன் சேகரித்த காவல்துறையினர் மும்பை புறநகர் ஒன்றில் வசித்துவரும் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களிலும் அதிகபட்ச உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

‘என்ன அக்கிரமம் பார்த்தியாடி? இதுக்கு ஒரு முடிவே இல்ல போலருக்கு.’  வானொலி பெட்டியை அணைத்த பட்டாபி தன் மனைவியைப் பார்த்தார். ‘பக்கத்துலருக்கற க்ளினிக்குக்கு போய்ட்டு வரேன்னு காலையில போனவள எங்கடி இன்னும் காணம்? ஊர் கெடக்குற நிலமையில இவ அந்த பையனெ பாக்கறேன்னு அப்படியே போய்ட்டாளான்னு தெரியலையே.. அவ செல்லுக்கு கூப்ட்டு எங்கருக்கான்னு கேளுடி?’

‘ஏன் நீங்க கேளுங்களேன்?’ என குரல் வந்தது சமையலறையிலிருந்து.. ‘இப்பவும் அவகிட்ட பேசறதில்லேன்னு அடம் புடிக்காதேள். கூப்பிடுங்கோ.. நா செத்த வேலையாருக்கேன்.’

‘நேரம் பாத்து குத்திக் காட்டறதுல ஒனக்கு நிகர் நீயேதாண்டி.’ என  முனகியவாறே மைதிலியின் செல்ஃபோன் எண்ணை சுழற்றினார் பட்டாபி.

****

இன்னும் பத்து நிமிடங்களில் துவங்கவிருந்த பத்திரிகை நிரூபர்களின் கூட்டத்திற்கென தன்னுடைய காரியதரிசி தயாரித்தளித்திருந்த அறிக்கையையும் வங்கியின் மக்கள் தொடர்பு அதிகாரி தயாரித்தளித்திருந்த நிரூபர்கள் அவரிடம் கேட்கக் கூடிய கேள்விகளையும் அதற்கான பதில்களையும்  அடங்கிய குறிப்பையும் வாசிப்பதில் ஆழ்ந்துப்போயிருந்த மாதவன் தன்னுடைய செல்ஃபோன் சிணுங்குவதைப் பார்த்தார்.

அவருடைய மனைவி சரோஜா!

இந்த நேரத்துல இவளுக்கு என்ன வேணும்? என்னத்தையாவது கேட்டு மூட் அவுட் பண்ணுவாளோன்னு தெரியலையே? எடுக்காம இருந்துட்டா என்ன? என்று எண்ணியவர் அது விடாமல் தொடர்ந்து அலறவே எடுத்து, ‘இப்ப ஒனக்கு என்ன வேணும்? இன்னும் பத்து நிமிசத்துல ப்ரெஸ் மீட்டிங்க் இருக்கு எனக்கு?’ என்றார் எரிச்சலுடன்.

எதிர்முனையில் தன்னுடைய மனைவியின் அழுகுரல் அவரை திடுக்கிட வைத்தது. ‘ஏய் என்னாச்சி... Bomb blast விஷயமா? சீனிக்கு ஒன்னும் ஆயிருக்காது..’

எதிர் முனையில் அவருடைய மகள் பேசுவது கேட்டது.

‘என்ன வத்ஸ் சொல்றே? நம்ம சீனியையா? ஏன்?’

‘.....’

‘என்னடா சொல்றே? அவனா? ஃபோன்லயா? ஒங்கிட்ட யார் சொன்னா? மாமியா?’

‘....’

‘என்னடி இது.. சரியா கேட்டியா? சரி, சரி.. தோ புறப்பட்டு வரேன். ஒங்கம்மாவ தைரியமா இருக்கச் சொல்லு..’என்றவர் நினைவுக்கு வந்தவராய். ‘ஏய் வத்ஸ், அந்த ஐயர் பொண்ணோட நம்பர் ஒங்கிட்ட இருக்கா.. இல்லன்னா அம்மாக்கிட்ட இருக்கும்.. அவள கூப்ட்டு என்னன்னு விசாரிக்கச் சொல்லு.. நானும் என் பழைய சேர்மன கூப்ட்டு விசாரிக்கச் சொல்றேன்.. ஒன்னும் ஆயிருக்காது.. சும்மா என்க்வயரிக்கு கூப்ட்டுருப்பாங்க..’

பரபரப்புடன் தன் இருக்கையிலிருந்து எழுந்த மாதவன் தன்னுடைய இண்டர்காம் வழியாக தன்னுடைய காரியதரிசியை அழைத்தார்.

எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், ‘சுபோத் please book three flight tickets to Mumbai.. I should get it in today’s flight. It’s urgent. Ask Philip to come to my cabin, fast.’ என்று கடகடவென உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

சரோஜா கூறியதுபோல அவளையும் சீனியுடன் விட்டுவிட்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது அவருக்கு. சீனியின் போதைப் பழக்க விவரங்கள் இதன் மூலம் வெளியில் வந்துவிடுமோ என்ற அச்சமும் அவரை ஆட்கொண்டது.

சேச்சே.. அப்படியாகாது.. I should not allow that to happen.. I should do something.. சட்டென்று நினைவுக்கு வந்தவராய் தன்னுடைய முந்தைய வங்கி தலைவருடைய செல்ஃபோனை எண்ணுக்கு டயல் செய்தார்.

‘Yes.. It’s Madhavan.. Sir I need your help.. My son has just now been arrested by the Mumbai Police.. It must be something to do with today’s bomb blast.. I am coming by the evening flight.. Could you please find out what actually prompted the Police to pick up my Son..’

‘.....’

‘Yes.. Sir.. He was alone there in the Bank’s flat.. If you could interfere and speak to your friends in the department..’

‘.....’

‘Thank you Sir.. I’ll get in touch as soon as I land in Mumabi.. Bye..’

அவர் இணைப்பைத் துண்டிக்கவும் ஃபிலிப் சுந்தரம் அறைக்குள் நுழயைவும் சரியாக இருந்தது.

‘I am sorry Philip.. I’ve got a bad news from Mumbai.. I am leaving.. You will have to take care of the Press people.. I’ll post you of the developments..’

மாதவன் தன்னுடைய கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி விரைய அதிர்ச்சியுடன் ஒட்டமும் நடையுமாய் அவரைப் பிந்தொடர்ந்து சென்றார் ஃபிலிப் சுந்தரம்.


தொடரும்..

6 comments:

krishjapan said...

கட்டாயம் சீரியல் எழுதறதுக்கு முயற்சி பண்ணலாம் சார். இப்ப வர்ற தொடர்களைவிட ரொம்பவே நல்லாயிருக்கும். அதுவும் அந்த வெள்ளிக்கிழம சஸ்பென்ஸ போடறீங்க பாருங்க, பிரமாதம் போங்க....

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா,

அதுவும் அந்த வெள்ளிக்கிழம சஸ்பென்ஸ போடறீங்க பாருங்க, பிரமாதம் போங்க.... //

இது வேணும்னு பண்றதில்லை.. அப்படி அமைஞ்சி போயிருது..

இப்படி சொன்னா நம்பவா போறீங்க?

ரவி said...

நல்லாருக்கு, விடுபட்ட பாகங்களையும் படிக்கனும்....

நேரந்தான் கிடைக்கறதில்லை...

:)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ரவி,

விடுபட்ட பாகங்களையும் படிக்கனும்....//

தாராளமா படிங்க:)

நேரந்தான் கிடைக்கறதில்லை...//

என்னுடைய நேரத்தில் கொஞ்சம் தரவா.. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1/- சீப்தான்..:)

siva gnanamji(#18100882083107547329) said...

ஒரு குடும்பத்தலைவரின் பிரச்சினைகள்...எந்த நேரத்தில் என்ன நிகழுமோ எனும் அச்சம்...
காத்திருந்து பார்ப்போம், என்ன ஆகின்றது என்பதை.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ஒரு குடும்பத்தலைவரின் பிரச்சினைகள்...எந்த நேரத்தில் என்ன நிகழுமோ எனும் அச்சம்...//

ஆமாங்க. சமுதாயத்தின் உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சினை இருக்காதென நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால் அவர்களுக்குத்தான் அன்றாடம் பிரச்சினையில் உழலும் நம்மைவிட அதிகம் பிரச்சினைகள். முக்கியமாக பிள்ளைகளால்.. வேலை, வேலை என்று அலையும் அவர்கள் குடும்பத்தைக் கவனிக்க மறந்துவிடுவதால் வரும் பிரச்சினைகள்..