4.1.07

சூரியன் 161

காவல் நிலைய மர பெஞ்சில் அமர்ந்திருந்த ஜோ சற்று முன் ஜீப்பிலிருந்து இறங்கி அவனையும் அவனுடன் அமர்ந்திருந்த வழக்கறிஞர் சபரியையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய இருக்கைக்கு சென்று அமர்ந்த துணை ஆய்வாளரை வெறுப்புடன் பார்த்தான்.

இந்த காவல்துறை அதிகாரிகளுடைய அகம்பாவத்துக்கு அளவே இல்லை. என்னவோ அவர்களால் மட்டுமே இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற நினைப்பு. காவல் நிலையத்திற்கு வருபவர்களை ஏதோ குற்றவாளிகள் போன்று நடத்துவதில் அவர்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி இருக்கிறதே அதை வக்கிரபுத்தி என்றுதான் கூறவேண்டும்.

அவனையும் சபரியையும் தவிர வேறு எவரும் அங்கு காத்திருக்கவில்லை. ஆயினும் நிலையத்திற்குள் வந்து ஐந்து நிமிடத்திற்கு மேலாகியும் அவர்களைக் கண்டுக்கொள்ளாமல் தொப்பியைக் கழற்றி வைத்துவிட்டு முகத்தைத் துடைப்பதிலேயே குறியாயிருந்தவரைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவன் அவர் மீதிருந்த பார்வையை அகற்றாமல், ‘சார் நீங்க போய் பேசுங்களேன்.’ என்றான் சபரியிடம்.

‘அவராவே கூப்பிடுவார் பாருங்க. ஹாஸ்ப்பிடல்ல என்னமோ சீரியசா நடந்திருக்கு. அதான் இவ்வளவு டென்ஷனாருக்கார். அவர் எதிர்ல நிக்கற லேடி கான்ஸ்டபிள்ச பாருங்க. அவங்கள டீல் பண்ணிட்டுத்தான் நம்ம கிட்ட வருவார். பொறுமையா இருங்க. இல்லன்னா காரியம் கெட்டுரும்.’ என்றார் சபரி பற்களுக்கிடையில்.

அவர் நினைத்ததுபோலவே நடந்தது.

‘சொல்லுங்க, ஒங்க ரெண்டு பேரையும் என்ன பண்ணலாம்?’ என்று அவர் தன் எதிரில் நின்ற பெண் காவலர்களைக் கேட்பது ஜோவின் காதில் விழுந்தது. காதைத் தீட்டிக்கொண்டு கேட்பதில் குறியானான்.

‘நாங்க அந்த லேடி அப்படி செய்வாங்கன்னு எதிர்பார்க்கல சார்.’

‘எதிர்பார்க்கணும்மா, எதிர்பார்க்கணும்.. போலீசுக்கு எப்பவுமே அஜாக்கிரதை கூடாது. அவங்க அக்யூஸ்டு இல்லதான். ஆனா ஒரு முக்கியமான ஐ விட்னஸ். நடந்துருக்கற கொலைக்கு அவங்கதான் ஒரே சாட்சி. அப்புறம் அந்த பையன். அவனுக்கு இந்த ஆளே ஊசி போட்டுருக்கார். அது வெறும் தூக்க மருந்தோ இல்ல போதை ஊசியோ. அவன்கிட்டருந்து ஸ்டேட்மெண்ட் வாங்கறது எந்த அளவுக்கு சரிவருமோ தெரியல. அப்படி இருக்கறப்போ இந்த லேடிகிட்டருந்து ஸ்டேட்மெண்ட் வாங்கறவரைக்குமாவது அவங்கள பாத்துக்கறது முக்கியம்னு ஒங்களுக்கு தெரிய வேணாம்?’

‘தெரியும் சார். வண்டி சிக்னல்லதான நிக்கிதுன்னுட்டு கொஞ்சம் அசந்துட்டோம் சார். அந்தம்மா வண்டி பொறப்படறவரைக்கும் காத்திருந்துட்டு சட்டுன்னு குதிச்சி ஓடுவாங்கன்னு எதிர்பார்க்கல சார். அதான்..’

ஆய்வாளர் கேலியுடன் அவர்களைப் பார்த்தார். ‘ஏம்மா இதெல்லாம் ஒரு எக்ஸ்க்யூசா? வண்டி நிக்கறப்போ இறங்கி ஓடுனா நீங்களும் அவங்க பின்னால ஓடிவருவீங்கன்னு அந்தம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு. ஒங்களுக்கு தெரியல.. சரி அதெல்லாம் இருக்கட்டும். அந்தம்மா எறங்குனவுடனே நீங்க என்ன பண்ணீங்க? அவங்க பின்னாலயே எறங்கி ஓடவேண்டியதுதானம்மா?’

காவலர்கள் ஒருவரையொருவார் பார்த்துக்கொண்டனர் ‘நீ ஓடியிருக்கலாமில்ல?’ என்பதுபோல். ‘ஓடுனோம் சார். அதுக்குள்ளதான் அந்தம்மா பஸ்ல அடிபட்டு.. சாரி சார்.’

‘ஏம்மா சாரின்னா முடிஞ்சிருச்சா? நம்ம டிப்பார்ட்மெண்ட் ரூல்ஸ் தெரியுமில்ல? ஒரு மர்டர் கேஸ்ல சம்பந்தப்பட்டிருக்கற முக்கியமான விட்னெச தப்பிக்கவிட்டா சஸ்பென்ஷந்தான்னு தெரியாது? போங்க.. போயி ஏன் ஒங்கள சஸ்பெண்ட் பண்ணக்கூடாதுன்னு விளக்கம் எழுதி கொண்டாங்க.. அந்தம்மா மட்டும் முழிக்காம அப்படியே போய் சேந்துட்டாங்கன்னு வச்சிக்கங்க.. ஒங்க வேலையும் கோவிந்தாதான்..’

ஆய்வாளருடைய இறுதி வார்த்தைகளில் ஜோ கொதித்துப்போனது போலவே ஹாலில் மற்றொரு மூலையில் அமர்ந்திர்ந்த மாணிக்கவேலும் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார்.

காவலர்கள் இருவரும்கூட பதறிப்போனார்கள்.. தங்களுடைய வேலைக்கு பத்து வந்துவிடுமோ என்று நினைத்து.. ‘சார், என்ன சார் குண்ட தூக்கி போடறீங்க? நாங்க தப்பிக்க விட்டோம்னு சொல்றதுக்கு அவங்க ஒன்னும் கைதியில்லையே சார்..’

ஆய்வாளர் எரிச்சலுடன் பார்த்தார். ‘அட! ரூல் பேசறீங்களா? எரிச்சல் மூட்டாம போயி எழுதி கொண்டாங்க.. போங்க..’

அவர்கள் இருவரும் அங்கிருந்த நகர ஜோ தனக்கருகில் அமர்ந்திருந்த சபரியைப் பார்த்தான். ‘சார்.. இப்பவாவது அவர்கிட்ட போய் பேசலாமா?’

சபரி எழுந்து நின்றார். ‘வாங்க.. ஆனா அவர் ஏதாச்சும் கிண்டலா சொன்னா கோபப்படாதீங்க.. தேவைப்பட்டாலொழிய நீங்க பேசக்கூடாது.’

ஜோ தலையை அசைத்தவாறு அவர் பின்னே சென்றான். அவர்களிருவரும் உதவி ஆய்வாளரின் மேசைக்கு முன் சென்று நின்ற ஒரு சில விநாடிகள் அவர்களைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய செல்ஃபோனையே அவர் பார்த்துக்கொண்டிருக்க ஜோ எரிச்சலுடன், ‘சார்.. ஒங்கள பாக்கத்தான் வந்திருக்கோம்.’ என்றான். சபரி அவனுடைய கரத்தை இறுக்கப் பற்றியவாறு அவனைப் பார்க்க அவன் மவுனமானான்.

உதவி ஆய்வாளர் மெள்ள தலையைத் திருப்பி அவர்களை அப்போதுதான் பார்ப்பதுபோல் பார்த்தார். அவர் ஜோவைப் பார்த்த பார்வை அவனை ஏற்கனவே வீட்டில் சந்தித்திருந்ததையே மறந்துவிட்டதுபோலிருந்தது. உள்ளுக்குள் பொங்கி வந்த கோபத்தை அடக்கியவாறு நிற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவனுக்கு.

‘சார்.. I am Sabari.. Advocate..’ என்றவாறு சபரி தன்னை அறிமுகப்படுத்தினார்.

உதவி ஆய்வாளர் அவரை மேலும் கீழும் பார்த்த பார்வை.. ஜோவுக்கு அவருடைய கழுத்தைப் பிடித்து நெரித்தாலென்ன என்று தோன்றியது. அடக்கிக்கொண்டு அவரை அமைதியாகப் பார்த்தான்.

‘ஒக்காரலாங்களா சார்.’ என்றான் நக்கலாக.

சபரி அவனை இது தேவைதானா என்பதுபோல் பார்த்தார். பிறகு அவராகவே மேசையின் முன்னிருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்துக்கொண்டு அவனையும் அமருமாறு கண்ணால் சைகை செய்தார். ஆனால் ஜோ அமராமல் நின்றுக்கொண்டிருந்தான்.

‘என்ன சார் சொன்னாத்தான் ஒக்காருவீங்களோ? ஒக்காருங்க சார்.. நாங்களே இங்க தல எரிஞ்சிபோற பரபரப்புல இருக்கோம்.. நீங்க வேற..’ அவருடைய குரலில் இருந்த எகத்தாளம், ஆணவம்.. ஜோ பற்களைக் கடித்துக்கொண்டு அமர்ந்தான்.

‘சார்.. நான் மிஸ்டர் மாணிக்கவேல் விஷயமா வந்திருக்கேன்.’ என்றார் சபரி மிருதுவாக.

‘அதான் தெரியுதே.. இவர்தான ஒங்கள கூட்டிக்கிட்டு வந்திருக்கார்?’ தன்னை நோக்கி கண்ணால் சைகைக் காட்டிய அந்த ஆய்வாளரை முறைத்தான்.

‘அவர எதுக்காக இங்க கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்கன்னு நா தெரிஞ்சிக்கிட்டா மேற்கொண்டு ஸ்டெப்ஸ் எடுக்க வசதியாருக்கும்..’

‘எதுக்கா?’

ஆய்வாளரின் ஏளன சிரிப்பைப் பொருட்படுத்தாமல் சபரி தொடர்ந்தார், ‘இல்ல சார். வெறும் என்க்வயரிக்காகவா இல்ல..’

‘அரெஸ்ட் பண்ணியிருக்கீங்களான்னு கேக்கீங்களா?’

சபரி பதில் கூறாமல் அவரையே பார்த்தார்.

‘அரெஸ்ட் பண்ணிருக்கோம்னுதான் வச்சிக்குங்களேன்.. இப்ப என்ன பண்ணணுங்கறீங்க? இதுக்கு வாரண்டெல்லாம் தேவையில்லைன்னு ஒங்களுக்கு தெரியுமில்லே..’

சபரி பணிவுடன், ‘தெரியும் சார். அப்படி அரெஸ்ட் பண்ணிருந்தா பெய்ல் மூவ் பண்லாமேன்னுதான் கேக்கேன்.. அவர எப்ப மாஜிஸ்ட்ரேட்  கிட்ட ப்ரொட்யூஸ் பண்ணப் போறீங்கன்னு சொன்னா நல்லாருக்கும்..’ என்றார் தன்னுடைய குறிப்பேட்டை எடுத்தவாறு.

உதவி ஆய்வாளர் தன்னுடைய இருக்கையை பின் தள்ளிவிட்டு எழுந்து நின்றார். ‘சார் அதெல்லாம் இப்ப அவ்வளவு உறுதியா சொல்ல முடியாது. போலீஸ் கஸ்டடியில வச்சி இவர என்க்வயரி பண்ண வேண்டியிருக்கு.. இவர் மேலருக்கறது கொலைப் பழி.. அதுவும் அவரோட ஒய்ஃபே கம்ப்ளெய்ண்ட் பண்ணியிருக்காங்க..  இவரா அத ஒத்துக்கிட்டு ஸ்டேட்மெண்ட் குடுத்துட்டா நல்லது.. இல்லன்னா..’

ஜோ பொறுமையிழந்து, ‘என்ன சார் இது அக்கிரமம்? நீங்க தீர்மானிச்சா போறுமா? இவர் யார்னு தெரியுமா சார் ஒங்களுக்கு? போலீஸ்னா என்ன வேணும்னாலும் பேசலாம்னு நினைக்காதீங்க!’ என்றான்.

உதவி ஆய்வாளர் அவனை எரித்துவிடுவதுபோல் பார்த்தார். சபரி உடனே குறுக்கிட்டு, ‘சாரி சார். அவர் ஏதோ கோபத்துல..’ என்று சமாளிக்க ஜோ மேலும் அங்கிருக்க விரும்பாமல் எழுந்து வாசலை நோக்கி நடந்தான்.

உதவி ஆய்வாளர் திரும்பி மாணிக்கவேலைப் பார்த்தார். ‘யார் சார் நீங்க? கலெக்டரா இல்ல கடவுளா? இங்க  வந்துட்டா எல்லாரும் எங்களுக்கு ஒன்னுதான் சார். ஒங்க ஒய்ஃபே ஒங்க மேல புகார் குடுத்துருக்காங்கன்னா அதுல எப்படி சார் உண்மையில்லாம இருக்கும்? ஒழுங்கா ஒத்துக்கிட்டீங்கன்னா ஒங்களுக்குத்தான் நல்லது. இல்லன்னா ஒங்கக்கிட்டருந்து உண்மைய வரவைக்கறதுக்கு எங்களுக்கு ரொம்ப நேரமாகாது.. சொல்லிட்டேன்.’

சபரி அமைதியாக அமர்ந்திருந்தார். காவல்துறை அதிகாரிகளின் கோபம் அவர்களை மிருகமாக மாற்றிவிடக்கூடியது என்பது அவர் அறியாததா?

அடுத்த சில நிமிடங்களில் கோபம் தணிந்த உதவி ஆய்வாளர் சபரியைப் பார்த்தார். ‘நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் சார். இனி இவர் கோவாப்பரேட் பண்றதப்பத்தித்தான் இருக்கு..’

சபரி அமைதியாக, ‘சார் நீங்க தப்பா நினைக்கலன்னா நா ஒன்னு கேக்கலாமா?’

அதிகாரி கேலியுடன் அவரைப் பார்த்தார். ‘வக்கீல் மாதிரி கேக்காம இருந்தா சரி.. கேளுங்க.’

சபரி ஒருமுறை தன் குறிப்பேட்டைப் பார்த்தார். ‘நீங்க அந்த லேடி கான்ஸ்டபிள்ஸ் கிட்ட பேசிக்கிட்டிருந்ததுலருந்து கேக்கேன். சாரோட ஒய்ஃப் ஒங்க ஜீப்லருந்து குதிச்சி தப்பிக்க ட்ரை பண்ணதுல அடிபட்டு ஹாஸ்ப்பிடல்ல இருக்காங்க. சரிதான சார்?’

‘ஆமா, அதுக்கென்ன இப்ப?’

‘அவங்க இப்ப எப்படி இருக்காங்க? சுயநினைவிருக்கா?’

‘அத நீங்க ஹாஸ்ப்பிடல்ல போய்தான் கேக்கணும்.’

‘இல்ல சார்.. கோபப்படாதீங்க.. நான் சொல்ல வந்தது என்னன்னா?’

‘சொன்னாத்தான சார் தெரியும்?’

‘அவங்க ஒங்கக்கிட்ட ஃபோன்ல சொன்னது இல்லாம ரைட்டிங்ல இவர் மேல ஏதும் குடுத்துருக்காங்களான்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன்..’

உதவி ஆய்வாளர் எரிச்சலுடன் தன்னைப் பார்த்ததிலிருந்தே அப்படி ஏதும் அவர் பெறவில்லையென்பது தெளிவானது சபரிக்கு.

‘இன்னும் இல்லை.. அதனால் என்ன? அந்தம்மா வீட்ல வச்சி எங்கக்கிட்ட நேர்ல சொன்னதுக்கு சாட்சி இருக்கே? அதுபோறும்.. இவர சார்ஜ் ஷீட் பண்றதுக்கு.’

‘ஒத்துக்கறேன்.. அப்புறம் எதுக்கு சார் இவர ஒத்துக்கிட்டு ஸ்டேட்மெண்ட் குடுக்க சொல்றீங்க? அந்தம்மாவோட ஓரல் கம்ப்ளெய்ண்ட் வச்சி அரெஸ்ட் பண்ணி மாஜிஸ்ட்ரேட் முன்னால ப்ரொட்யூஸ் பண்ணுங்க..  நாங்க அவர கன்வின்ஸ் பண்ணிக்கறோம்..’

‘என்ன சார்.. ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா?’

அவருடைய குரலிலிருந்த கேலி சபரியை எரிச்சலைடைய செய்தாலும் அந்த பொறியில் அவர் விழத்தயாராயில்லை. ‘தப்பா நினைச்சிக்காதீங்க சார்.. ஒங்களுக்கு தெரியாதத ஒன்னும் நான் சொல்லலை.. சட்டப்படி நீங்க என்ன செய்யணுமோ அதத்தான் செய்ங்கன்னு சொல்றேன்.. இருபத்தி நாலு மணி நேரத்துக்குள்ள அரெஸ்ட் பண்ண ஒரு அக்யூஸ்ட மஜிஸ்ட்ரேட் முன்னால ப்ரொட்யூஸ் பண்ணணும்னு இருக்குங்கறத நா ஒங்களுக்கு சொல்ல தேவையில்லை.. அத தயவு செய்து செய்யணும்னு மட்டுந்தான் நா கேக்கேன். இவர் சமுதாயத்துல நல்ல அந்தஸ்த்துல இருக்கற ஒரு பேங்க் மேனேஜர். இவர நாளைக்குள்ள பெய்ல விட்டாத்தான் இவரோட ஃபாதரோட லாஸ்ட் ரைட்ச ஒரு மகனா இருந்து செய்ய இவரால முடியும்.. இவரோட ஒய்ஃபும் ஏன் மகனும்கூட ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க.. இவரோட ஒரே டாட்டர் திடீர்னு இறந்துபோய் முழுசா ரெண்டு நாள் கூட ஆகல.. இதயெல்லாம் எடுத்து வைச்சா நிச்சயம் இவருக்கு பெய்ல் கிடைக்குங்கற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.. நீங்க கொஞ்சம் கோவாப்பரேட் பண்ணா போறும்.. அவ்வளவுதான்.’

உதவி ஆய்வாளர் மறுப்பேதும் கூறாமல் வாசலைப் பார்த்தவாறு அமர்ந்திருக்க சபரி எழுந்து மாணிக்கவேலை நெருங்கி குரலை இறக்கி, ‘சார் தைரியமா இருங்க.. நா எங்க சீனியர் கிட்ட பேசிட்டு ஒங்கள மறுபடியும் சாயந்தரமா வந்து பாக்கேன். இவர் ஏதாச்சும் கேள்வி கேட்டா ஒங்களுக்கு தெரிஞ்சத மட்டும் சொல்லுங்க.. எதுவும் எழுதி கையெழுத்துப் போட்டு குடுக்காதீங்க..’ என்று கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தார்.

தொடரும்..

No comments: