நந்தக்குமார் வியப்புடன் முரளியைப் பார்த்தான். ‘என்ன சொல்றே முரளி உன்னெ எதுக்காக ஆள் வச்சி அடிக்க நம்ம ஈ.டி முயற்சி பண்றார்னு நினைக்கறே? உங்கிட்ட அப்படின்னு யார் சொன்னா?’
முரளி கேலியுடன் சிரித்தான். ‘போன ஒரு வாரமாவே நம்ம ஈ.டி. சார் ரொம்பவும் டென்ஷனா இருக்கார் நந்து. முதல் காரணம் நம்ம புது சேர்மன் மாதவன் சார். அவங்க ரெண்டு பேருக்கும் முன்னாலருந்தே பெர்சனலா ஒத்துக்காதன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதுக்காகவே மாதவன் சார் வெறுத்துப்போய் ரிசைன் பண்ணிட்டு போனார்னு நம்ம சுந்தரலிங்கம் சார் சொல்லி கேட்டுருக்கேன். அப்ப ரெண்டு பேரும் ஒரே பொசிஷன்ல இருந்திருக்காங்க. அத மனசுல வச்சிக்கிட்டு மாதவன் சார் சேர்மனா திரும்பியும் வராம இருக்கறதுக்கு இவர் படாத பாடு பட்டிருக்கார். ஆனா நம்ம டைரக்டர் ஒரு நாடார் இருக்காரில்ல.. அவருக்கும் இவர புடிக்காது. சோமசுந்தரத்துக்கும் இவர் சேர்மனானா என்னென்ன ஃப்ராடு பண்ணுவாரோன்னு நினைச்சிருப்பார் போல.. இவர் சொல்றத பெரிசு படுத்தாம மாதவன் சாரையே சேர்மனாக்கிட்டாங்க.’
‘சரி.. அதுக்கும் ஈ.டி ஒன்னெ அடிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?’
முரளி சிரித்தான். ‘இருக்கு நந்து. பொறுமையா கேளு. மாதவன் சார் சேர்மனா சார்ஜ் எடுக்கற அன்னைக்கி ஏதாச்சும் லேபர் பிரச்சினை வந்தா நல்லாருக்கும்னு நினைச்சிருக்கார். இவருக்கேத்தா மாதிரி கல்கத்தாவுல நடந்த விஷயம்தான் ஒனக்கு தெரியுமே. அத சுமுகமா முடிக்கறதுக்கு அப்போ சார்ஜ்ல இருந்த சுந்தரலிங்கம் சார் என்னெ கூப்ட்டு ஏதாச்சும் செய்யேன் முரளின்னார். ஆனா ஈ.டி இடையில புகுந்து முரளி நீ கல்கத்தா போ ஆனா விஷயம் சுமுகமா முடியக்கூடாது. அதுக்கு என்ன செலவானாலும் நா தரேன்னார். ஆனா நானும் என் குடும்பமும் இந்த நிலைக்கு வந்திருக்கோம்னா அதுக்கு சுந்தரலிங்கம் சார் தான் காரணம். அவர் மட்டும் அன்னைக்கி எனக்கு வேலைய போட்டு குடுக்கலன்னா என் நிலைமை என்னாயிருக்கும்? அந்த நன்றி விசுவாசத்துக்கு மட்டுமில்ல நந்து எனக்கு இந்த ஈ.டிய எப்பவுமே புடிக்காது. வேலை ஆவற வரைக்கும் கால புடிப்பான். முடிஞ்சதும் கறிவேப்பிலை மாதிரி தூக்கி போட்டுருவான். மூர்த்தி சார் சேர்மனா இருந்தப்போ இவனெ வைக்க வேண்டிய இடத்துல வச்சிருந்தார். அந்த இடத்துல சுந்தரலிங்கம் சார் வந்தப்போ இவன் என்னெல்லாம் ஆட்டம் போட்டான்? நமக்கு ரெகுலரா கிடைச்சிக்கிட்டிருந்த ஓவர் டைம் கோட்டா எல்லாத்தையும் கெடுத்தவனாச்சே இவன். அதுமட்டுமா அஞ்சி வருசத்துக்குமேல ஒரே ஊர்ல வேலை செஞ்ச கிளார்க், பியூன் எல்லாரையும் 150 கிலோ மீட்டர் துரத்துக்கு அப்பால ஒரு அஞ்சி வருசம் வேலை செய்யணும்னு சொல்லி தூக்கியடிச்சவனாச்சே.. அந்த கடுப்பு எனக்கு. கல்கத்தாவுக்கு போயிவந்த விஷயம்தான் ஒனக்கு தெரியுமே. அது சுமுகமா முடிஞ்ச விஷயத்தக்கூட நா இவர்கிட்ட ஃபோன் பண்ணி சொல்லாம இருந்துட்டேன். அப்புறம் மாதவன் சார் சார்ஜ் எடுக்க வர்ற அன்னைக்கி காலைல நம்ம எச்.ஓ முன்னால ஒரு டெமோ பண்ண சொன்னார். ஆனா வாசகன் உட்பட இப்ப அது வேணுமா சார்னு சொன்னதால அதயும் இவர்கிட்ட சொல்லாமயே ட்ராப் பண்ணிட்டேன். அந்த கடுப்பு வேற. அத்தோட அன்னைக்கி சாயந்தரம் மாதவன் சாருக்கு ரிசெப்ஷன் குடுத்தப்போ நம்ம வாசகன் ஈ.டி. முன்னாலயே சுந்தரலிங்கத்த பாராட்டி பேசியிருக்கார். எல்லாமா சேர்ந்து... இதுல என்ன தமாஷ் தெரியுமா? அவருக்கு அடியாளாருக்கற ரெண்டு பேருமே நம்ம ஊர் ஆளுங்க. அது அவருக்கு தெரியாது போலருக்கு.’
நந்தக்குமார் தன் காதுகளையே நம்பமுடியாமல் அமர்ந்திருந்தான். இத்தகைய சித்து விளையாட்டுகளெல்லாம் கேரள மார்க்சிஸ்ட் பார்ட்டியோட ட்ரேட் மார்க் என்றுதான் இதுவரை நினைத்திருந்தான். இப்போது இது தமிழ்நாட்டிலும் பரவ ஆரம்பித்துவிட்டதுபோலிருக்கிறது. என்ன இருந்தாலும் ஈ.டியும் சரி, முரளியும் சரி அவனைப் போன்றே மார்க்சிஸ்ட் கட்சியின் சித்தாந்தத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் கேரளத்தைச் சார்ந்தவர்களாயிற்றே? பிறவிக் குணம் எப்படி மாறும்?
‘சரி முரளி. இப்ப அந்த நியூஸ் ஐட்டத்த நீ ஃபேக்ஸ் பண்ண விஷயம் யாருக்கும் தெரியாதில்ல. அத கேட்டுட்டுப் போகலாம்னுதான் வந்தேன்.அத்தோட உன் கிட்ட டிஸ்கஷன் பண்றதுக்கு இன்னொரு விஷயமும் இருக்கு. அதப்பத்தி பேசிட்டு போகலாம்னு வந்தா நீ என்னென்னவோ சொல்லி.. வந்த விஷயமே மறந்துபோச்சி.’
முரளி உரக்கச் சிரித்தான். ‘அந்த ஃபேக்ஸ் விஷயத்த நம்ம சுபோத் போட்டு உடைச்சிட்டான். பாவம் அவனெ குத்தம் சொல்லி பிரயோஜனம் இல்லை. நம்ம ஃபிலிப் சார் ரொம்ப சாமர்த்தியமா அவன்கிட்டருந்து விஷயத்த வரவழைச்சிருக்கார். அது கெட்டக்கடும் நீ ஏதோ சொல்ல வந்தியே என்ன அது?’
‘எனக்கும் நளினிக்கும் கல்யாணம் ஆகி பத்து வருசத்துக்கு மேல ஆகியும் எங்களுக்கு இதுவரைக்கும் இஷ்யூ இல்லேன்னு ஒனக்கு தெரியுமில்ல?’
‘ஆமா அதுக்கென்ன இப்போ?’
நம்ம வந்தனா மேடத்துக்கிட்ட நளினி இதப்பத்தி சொல்லியிருப்பாபோலருக்கு. மேடம் ஒடனே இங்க எனக்கு தெரிஞ்ச ஜைனக்காலஜி டாக்டர் ஒருத்தர் இருக்கார். அவர்கிட்ட போனா கண்டிப்பா குழந்தை பிறக்கும். தேவைப்பட்டா டெஸ்ட் ட்யூப் பேபிம்பாங்களே அந்த மாதிரி கூட ட்ரை பண்ணலாம்னு சொன்னாங்களாம். அதுக்கு நான் எர்ணாகுளத்துல இருக்கேனேன்னு நளினி சொல்லியிருக்கா. அதுக்கென்ன நா இங்கயே ஏதாவது ஒரு பிராஞ்சில ஒன்னெ போடச் சொல்றேன்னு சொல்லி நம்ம பல்லாவரம் சி.எம் மாணிக்கவேல் சார்கிட்ட பேசி சம்மதிக்க வச்சிட்டாங்க. நேத்து நம்ம ஃபிலிப் சார்கிட்டயும் பேசிட்டாங்க. அதத்தான் ஒங்கிட்ட சொல்லிட்டு அப்படி செய்யறதுனால நம்ம அசோசியேஷன் ஆக்ட்டிவிட்டீசுக்கு ஏதாச்சும் பிரச்சினை வந்துருமான்னு டிஸ்கஸ் பண்ணிட்டுப் போலாம்னு வந்தேன்.’
முரளி கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தான் சிறிது நேரம். தன்னுடைய யோசனையில் அவனுக்கு உடன்பாடில்லை என்பது அவனுடைய மவுனத்திலிருந்து தெளிவாக விளங்கியது நந்துவுக்கு.
‘நீ மேனேஜ்மெண்ட் கிட்ட ஒரு ரிக்வெஸ்ட்டுன்னு போய்ட்டேன்னு வச்சிக்கோ. நீ சரண்டரான மாதிரிதான். ஆனா நளினிய நினைச்சாலும் பாவமாத்தான் இருக்கு. ஆனா ஒன்னு..’
நந்தக்குமார் ஆவலுடன், ‘என்ன முரளி சொல்லு.. ஏன் நிறுத்திட்டே?’ என்றான்.
‘நா சொல்றத தப்பா எடுத்துக்குவியோன்னு பயமா இருந்தது.. அதான் நிறுத்திட்டேன்.’
‘சேச்சே.. உன்னையா.. நிச்சயமா இல்லை. நீ சொல்ல வந்தத சொல்லிரு.. ப்ளீஸ்.’
முரளி தயக்கத்துடன் தன் நண்பனைப் பார்த்தான். ‘நளினி வேணும்னா டிரான்ஸ்ஃபர் கேக்கட்டும்.. ஆனா நீ போய் யாரையும் இதுக்காக பாக்கக் கூடாது. அது மட்டுமில்ல.. ஒனக்கும் டிரான்ஸ்ஃபர் வேணும்னும் யாரையும் போய் கேக்கக் கூடாது. என்ன சொல்றே?’
நந்தக்குமாருக்கும் தன்னுடைய மாற்றத்திற்காக வங்கியின் எந்தவொரு அதிகாரியுடைய தயவையும் நாடுவதில் விருப்பமில்லைதான். ஆனால் நளினி இதற்கு என்ன கூறுவாளோ என்ற யோசனையில் தன் நண்பனையே சில விநாடிகள் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
‘என்ன யோசிக்கறே நந்து? நான் உன்னோட நண்மைக்காகத்தான் சொல்றேன். நீ சென்னைக்கு வர்றது எனக்கும் ஒத்தாசையாத்தான் இருக்கும். இல்லேங்கல. ஆனா வந்தனா மேடம் மாதிரி இல்லை எல்லாரும். முக்கியமா நம்ம ஈ.டி. நீ இங்க வந்து ஜெனூயினா எதுக்காகவாவது நம்ம ரெண்டு யூனியன்சும் சேர்ந்து டெமோ பண்ணா இதுக்குத்தான் இவன் இங்க டிரான்ஸ்ஃபர் ஆயி வந்தான்னு சொன்னாலும் சொல்வான். சேர்மனும் புதுசு. ரெண்டு யூனியன் லீடர்சும் ஒரே இடத்துல இருந்தாத் தானேன்னு ஒன்னெ மறுபடியும் நார்த்துக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டா.. இப்பவாவது ஓவர் நைட் ஜர்னி போதும் சென்னைக்கு வர்றதுக்கு. அதனாலத்தான் சொல்றேன். நல்லா யோசிச்சி ஒரு முடிவுக்கு வா..’
நந்தக்குமாருக்கும் அவன் சொல்வது நியாயமாகத்தான் தெரிந்தது. அனாவசியமாக இங்கு மாற்றலாகி வந்து முரளியை மட்டும் சார்ந்திருப்பதை விட தனக்கு மிகவும் பழக்கமான மார்க்சிஸ்ட் தோழர்களின் நிழலில் நிற்பதே உசிதம் என தோன்றியது அவனுக்கு.
என்னதான் நண்பன் என்றாலும் முரளியின் தொழிற்சங்கத்திற்கும் அவனுடைய அதிகாரிகளின் சங்கத்திற்கும் நோக்கங்கள் வெவ்வேறானவை. தொழிலாளர்களின் சங்கம் போராட்டத்தில் இறங்கும் சமயங்களிலெல்லாம் அதிகாரிகளின் சங்கம் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதில்லையே. ஆனால் அவனும் சென்னையிலேயே இருக்கும்பட்சத்தில் முரளியின் கோரிக்கையைத் தட்ட முடியாமல் போய்விடக்கூடும்.
‘நீ சொல்றதும் சரிதான் முரளி. நளினிக்கிட்ட சொல்லி இத எப்படி புரிய வைக்கறதுன்னுதான் யோசிக்கறேன். உடனே இது ஒங்க ஃப்ரெண்ட் சொல்லிக்குடுத்த ஐடியாவான்னு கேட்டாலும் கேப்பா. இதுக்குத்தான் அவர பாக்க போனீங்களான்னும் கேட்பா..’
முரளி வாய்விட்டுச் சிரித்தான். ‘அதென்னவோ உண்மைதான்.. அதுக்குத்தாம்பா நான் தங்கச்சி, தம்பிங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சதோட நிறுத்திக்கிட்டேன்.. இந்த மனைவி, குடும்பங்கறதெல்லாம் நம்மள மாதிரி ஆளுங்களுக்கு சரிவராது.’
நந்தக்குமாரும் சிரித்தான். ‘சரி முரளி.. நா கெளம்பறேன்.. உன் அட்வைசுக்கு தாங்ஸ்.. வந்தனா மேடம் வீட்ல இப்ப இருக்கறதுனால நளினி பெருசா பிரச்சினை பண்ண மாட்டான்னு நினைக்கறேன்.. பாக்கலாம்.. பை..’
******
ராஜகோபலன் மைதிலி பேசி முடிக்கும்வரை பொறுமையுடன் அமர்ந்திருந்தார்.
‘நா சொல்றனேன்னு தப்பா நினைக்காத மைதிலி. நீயும் நானும் கமிஷனர் ஆஃபீசுக்கு போயி சீனிவாசனப் பத்தி என்ன சொன்னாலும் யாரும் நம்பப் போறதில்லை. நீயும் அனாவசியமா இந்த சிக்கல்ல மாட்டிக்கறதுக்கு சான்ஸ் இருக்கு. உனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்னு துருவி, துருவி கேக்கறதோட உன்னையே சந்தேகப்படவும் சான்ஸ் இருக்கு.. அதனால..’
மைதிலி சட்டென்று பொங்கிவந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவரைப் பார்த்தாள். ‘நீங்க கூட இப்படி பேசுவீங்கன்னு நா எதிர்பார்க்கல அங்கிள். ஐ ம் சாரி.. ஒங்களுக்கு என் கூட வர விருப்பமில்லன்னா சொல்லிருங்க.. I will manage to bring him out on my own.. Thanks for your advice...’ என்றவாறு எழுந்து வாசலை நோக்கி நகர்ந்தாள்.
ராஜகோபாலன் பதறியவாறு எழுந்து அவள் பின்னால் ஓடினார். ‘மைதிலி நில்லு.. அவசரப்படாதே.. நான் ஒன் ஃப்யூச்சர மனசுல வச்சிக்கிட்டுத்தான் அப்படி சொன்னேன்..’
மைதிலி ஒரு நொடி நின்று அவரைத் திரும்பி பார்த்தாள். ‘சீனியில்லாம எனக்கு எந்த ஃப்யூச்சரும் இல்ல அங்கிள்.. Whether you are going to come with me or not I am going to go ahead..’
‘அதுக்கில்லம்மா.. நா சொல்றத கொஞ்சம் கேளு.. ப்ளீஸ்.. நீ கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு.. போலீசப் பத்தி ஒனக்கு தெரியாது மைதிலி.. ஒன்னையும் அந்த பையனையும் சேர்த்து பேப்பர்லல்லாம் வர்ற மாதிரி செஞ்சிருவாங்க.. அப்புறம் ஒன்னையே நம்பிக்கிட்டிருக்கற ஒன் பேரண்ட்ஸ்.. அவங்கள கொஞ்சம் நினைச்சிப் பாரேன்..’
மைதிலி கோபத்துடன் மறுமொழி பேச முனைந்தவள் தன்னுடைய செல்ஃபோன் சினுங்க யாரென பார்த்தாள். அறிமுகமில்லாத எண்.. ‘Yes?’ என்றாள் தயக்கத்துடன்.
‘Hey.. Srini here.. where are you?’
மைதிலி திகைத்துப் போய், ‘ஏய்.. நீ எங்க இருக்கே..? நா ஒனக்கு என்ன ஆச்சிதோ ஏதாச்சிதோன்னு..’ அவளையுமறியாமல் குரல் உடைந்து விசும்ப எதிர் முனையில் சீனி எவ்வித பாதிப்பும் இல்லாமல் சிரிப்பதைக் கேட்டாள்..
தொடரும்..
4 comments:
மார்க்ஸிஸ்டுகளப் பத்தி....!!!
சீனி விஷயத்தில கொஞ்சம் கருணை காட்டறீங்க போலிருக்கு...
அப்ப ஜெயில்ல இருக்குறது நம்ம சீனி இல்லையா... இல்ல மாதவனோட பழைய சேர்மன் அதுக்குள்ள step எடுத்துட்டாரா
வாங்க கிருஷ்ணா,
மார்க்ஸிஸ்டுகளப் பத்தி....!!!//
இன்றைக்கி கேரளமும் வங்காளமும் இந்த கதிக்கு ஆளாகியிருப்பதற்கு இவர்கள்தானே காரணம்? இவர்களைப் பற்றி இரு மாநிலங்களிலும் உள்ள படித்தவர்களுக்கு நான் எழுதியுள்ள அதே எண்ணம்தான்.
சீனி விஷயத்தில கொஞ்சம் கருணை காட்டறீங்க போலிருக்கு... //
பொறுமை.. பொறுமை:)
வாங்க மீனாப்ரியா,
அப்ப ஜெயில்ல இருக்குறது நம்ம சீனி இல்லையா... இல்ல மாதவனோட பழைய சேர்மன் அதுக்குள்ள step எடுத்துட்டாரா //
பொறுமை.. பொறுமை:)
Post a Comment