11.1.07

சூரியன் 163

காவல்நிலையத்திலிருந்து அவர்களிருவரும் புறப்பட்ட வாகனம் வழக்கறிஞர் சபரியின் அலுவலகம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

இருவரும் அவரவர் சிந்தனையில் ழ்ந்திருக்க பகல் நேர நெரிசலில் ஊர்ந்துக்கொண்டிருந்த வாகனம் ஒரேயடியாக நின்றுவிட தன்னுடைய சிந்தனையிலிருந்து மீண்ட ஜோ எரிச்சலுடன் ஓட்டுனரைப் பார்த்தான். ‘என்னங்க என்னாச்சி?’

அவர்களுடைய வாகனத்திற்கு முன்னால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதைப் பார்க்க முடிந்தது. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலை முழுவதும் எங்கு பார்த்தாலும் வாகனங்கள் சாலையை அடைத்துக்கொண்டு..

வாகன ஓட்டி தன்னுடைய ஜன்னல் கண்ணாடியைக் கீழே இறக்கி அருகிலிருந்த வாகனத்தைப் பார்த்தார். அதே நேரத்தில் அதிலிருந்த ஓட்டுனரும் திரும்பி அவரைப் பார்க்க, ‘என்ன சார்.. என்னவாம்? டிராஃபிக் பயங்கரமா இருக்கு?’

அவரும் சலிப்புடன், ‘தெரியல சார்.. பாம்பேய்ல ட்ரெய்ன்ல குண்டு வச்சிட்டாங்களாம்.. அஞ்சாறு எடத்துல குண்டு வெடிச்சி.. நிறைய பேர் போய்ட்டாங்களாம்.. போலீஸ் இங்கயும் வந்துருமோன்னு செண்ட்ரல் பக்கம் போற வண்டிங்களையெல்லாம் இங்கன திருப்பி விட்டுட்டாங்ய. அதான்.. இப்பத்தைக்கி நகர முடியாது போலருக்கு..’ என ஜோ அதிர்ச்சியுடன் திரும்பி சபரியைப் பார்த்தான்.

சபரி ஓட்டுனரைப் பார்த்தார். ‘டிரைவர் ரேடியோவ ஆன் பண்ணுங்க.. ஏதாச்சும் நியூஸ் சொல்றாங்களான்னு பாப்போம்.’

அடுத்த சில நிமிடங்களில் சென்னை வானொலியிலிருந்து வந்த செய்திக் குறிப்புகள் அவர்களிருவரும் சற்று முன் கேள்விப்பட்டதை உறுதிப்படுத்த, ‘இப்ப என்ன பண்ணலாம் சார்?’ என்றான் ஜோ..

சபரி தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ‘இன்னைக்கி கோர்ட்ல எனக்கு ஒன்னும் முக்கியமான வாய்தா இல்லை.. ஆனா இந்த களேபரத்துல ஒங்க சாரோட பிரச்சினைதான் சிக்கலாயிரும்னு நினைக்கேன். பந்தோபஸ்த்து அது இதுன்னு போலீஸ்க்கு ஏகப்பட்ட வேலையிருக்கும். இதுல வெறும் என்க்வயரிக்குன்னு கூட்டிக்கிட்டு வந்தவர அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷன் செல்லுலயே வச்சிட்டாலும் வச்சிருவார் அந்த எஸ்.ஐ.. எமர்ஜென்சி சிச்சுவேஷன்னு காரணம் காட்டி மஜிஸ்திரேட்டுக்கு முன்னால ஆஜர் பண்றதையும் தள்ளிப் போட வாய்ப்பிருக்கு.. எல்லாம் அவர் நேரம்..’

ஜோவுக்கு ஆத்திரம் வந்தது. ‘இதென்ன சார் அக்கிரமம்.. இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? அதெப்படி அவர் தள்ளிப்போடலாம்.. சட்டம்னு ஒன்னு இருக்குல்லே?’

சபரி அவனைப் பார்த்து ஆறுதலுடன் புன்னகைத்தார். ‘சட்டம் இருக்கு மிஸ்டர் ஜோ.. ஆனா அத எப்படி வேணும்னாலும் வளைக்கறதுல இந்த போலிஸ் டிப்பார்ட்மெண்ட் கில்லாடிங்களாச்சே.. மேல யாரையாவது பெர்சனலா தெரிஞ்சிருந்தா ஏதாச்சும் பண்ணலாம்.. பாஸ்கிட்டத்தான் கேக்கணும்.. இல்லன்னா ஒங்க பேங்க்ல யாருக்காவது தெரியுமான்னு விசாரிங்க.. எஸ்.பி, டி.எஸ்.பி லெவல்லருந்து யாராச்சும் இந்த எஸ்.ஐகிட்ட பேசினா நடக்க சான்ஸ் இருக்கு.’

ஜோ திகைப்புடன் அவரையே பார்த்தான். என்ன அநியாயம்? எங்கோ குண்டு வெடித்ததற்கு இங்கு என்ன? சரியான ஆட்டுமந்தைக் கூட்டம்.. ஒரு இடத்துல ஏதாச்சும் விபரீதம் நடந்தாப் போறும் நாடு முழுசும் அது நடக்கும்னு இவங்களாவே கற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கறங்களையெல்லாம் தொல்லைப் பண்றதே வேலையா போச்சு.

இப்ப என்ன பண்ணலாம்? ஃபிலிப் சார் கிட்டதான் கேக்கணும்.. ஆனா இந்த டிராஃபிக் எப்ப சரியாகி எப்ப போயி.. சட்டென்று நினைவுக்கு வந்தவனாய் தன்னுடைய செல்ஃபோனை எடுத்து அவருக்கு ஃபோன் செஞ்சா என்ன என்று சிந்தித்தான்.. அடுத்த நொடியே அதுதான் சரி என்று நினைத்தவாறு அவருடைய எண்ணை டயல் செய்தான்.. ஹ¥ஹ¤ம்.. எங்கேஜ்ட்.. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் முயற்சித்தான்.. யாருடனோ பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது..

அவருடைய லேண்ட் லைன்ல கூப்பிடலாமா? என்று நினைத்தான். ஆனா அடுத்த நொடியே அது தன்னிடம் இல்லையென்பதை உணர்ந்தான். நம்ம ஆஃபீசுக்கு கூப்ட்டு கேட்டா என்ன? என்று அடுத்த நொடியே நினைத்து அவனுடைய கிளை அதிகாரிகளுள் ஒருவரை அழைத்தான். அங்கிருந்து கிடைத்த எண்ணைக் குறித்துக்கொண்டு  அதற்கு டயல் செய்தான்.. சில நொடிகள் தாமதத்திற்குப் பிறகு ஃபிலிப் சுந்தரத்தின் குரல் ஒலிக்க மளமளவென்று தன் மனதில் இருந்ததைக் கொட்டித் தீர்த்தான்.

அவன் பேசி முடித்தப் பிறகும் எதிர்முனையிலிருந்து பதில் வராமலிருக்கவே, ‘சார்.. Are you in a meeting or something.. Shall I call you later Sir?’ என்றான் பதற்றத்துடன்..

‘இல்ல மிஸ்டர். ஜோ.. I am not in a meeting.. ஆனா நீங்க சொன்னதுல அப்செட் ஆயி என்ன சொல்றதுன்னே தெரியல.. அந்த பாம்பே ப்ளாஸ்ட் விஷயமே நீங்க சொல்லித்தான் தெரிஞ்சிக்கிட்டேன்.. அந்த பதற்றத்தோட இங்க மிஸ்டர் மாணிக்கவேல் பிரச்சினை.. எனக்கு தெரிஞ்சி இதுல ஹெல்ப் பண்ணக்கூடிய போலீஸ் ஆஃபீசர்ஸ் யாரும் இல்லை..’ என்ற ஃபிலிப் சட்டென்று நினைவுக்கு வந்தவராய்.. ‘நேத்து நம்ம சேர்மன ஒருத்தர் வந்து பார்த்துட்டு போனார்னு.. அவர் கொஞ்சம் ஹை அஃபிஷியல்னு நினைக்கேன்.. I will talk to Subodh and find out.. வேணும்னா நம்ம சேர்மன் கிட்டயும் கேட்டுப் பாக்கேன்.. Can you call me after ten or fifteen minutes?’  

‘Yes Sir..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்த ஜோ தன்னருகில் அமர்ந்திருந்த சபரியைப் பார்த்தான். ‘எங்க சிஜிஎம்முக்கு யாரையோ தெரியுமாம் சார்.. கேட்டுட்டு சொல்றேன்னு சொல்றார்.’

‘அப்படியா.. யார்னு தெரிஞ்சா போறும்.. அவ்வளவா பழக்கமில்லைன்னாலும் நாமளே நேர்ல போயி பார்த்து ஒங்க சார பத்தி சொல்லி உதவி கேக்கலாம். ஆனா இந்த எஸ்.ஐ அதுக்குள்ள கேஸ் புக் பண்ணாம இருக்கணும்.. பார்ப்போம்.. கவலைப்படாதீங்க.. முதல்ல நம்ம ஆஃபீஸ் போய் சேர்ற வழிய பாக்கணும்.. எங்க சீனியருக்கும் யாரையாச்சும் தெரிஞ்சிருக்கலாம்..’

அவர் பேசி முடிக்கவும் வாகனங்கள் மெள்ள நகர துவங்கவும் சரியாக இருந்தது.. சென்னை வானொலியின் செய்திக் குறிப்புகள் அவ்வப்போது மும்பை குண்டு வெடிப்பின் இறுதி விவரங்களை தெரிவித்துக்கொண்டே இருக்க.. அடுத்த ஒரு மணி நேரத்தில் சபரியின் அலுவலகத்தை சென்றடைந்தனர்.

சபரி இறங்கும் வரை காத்திருந்த ஜோ.. ‘சார் நா இப்படியே எங்க எச்.ஓ வரைக்கும் போய் எங்க சிஜிஎம்ம பார்த்துட்டு வரேன்.. ஒருவேளை அவர் சொன்ன ஆள நேர்ல போய் பாக்கணும்னா ஒங்களுக்கு ஃபோன் பண்ணிட்டு வந்து அழைச்சிக்கிட்டு போறேன்.. ஃபோன்ல கூப்ட்டுட்டு வரேன் சார்.. தாங்ஸ்..’ என்றவாறு வாகன ஓட்டியைப் பார்த்தான். ‘எங்க எச்.ஓ. தெரியுமில்ல ஒங்களுக்கு?’

அவர் தெரியும் என்று தலையை அசைத்தவாறு வாகனத்தைத் திருப்ப கவலையுடன் பின் சீட்டில் தலையை சாய்த்து கண்களை மூடினான் ஜோ.

****     

‘என்ன மேடம்? சிஜிஎம் என்ன சொன்னாங்க?’ என்றவாறு வந்தனாவைப் பார்த்தாள் நளினி.

வந்தனா சிரித்தார். ‘எல்லாம் நா சொன்ன மாதிரிதான். மாணிக்கவேல ஒன் பிராஞ்சிலயும் ஒன்னெ இங்கயும் போடறதுக்கு சார் ஒத்துக்கிட்டார். மாணிக்கவேலுவுக்கும் இது ரிலீஃபா இருக்குமேன்னுதான் நேத்து அவர் வந்திருந்தப்போ கேட்டேன். அவர் சரின்னு சொன்னதுமே இத நடத்திரலாம்னு நினைச்சேன். இருந்தாலும் ஃபிலிப் சார்கிட்ட சொல்லாம செய்யக்கூடாதில்லையா? அதான்.. ஆனா அவர் நேத்து எங்கிட்ட சரின்னு சொன்னத மறந்தே போய்ட்டார் போலருக்கு.. நல்லவேளை இன்னைக்கி அவரே கூப்ட்டதால சரியா போச்சி.. இல்லன்னா நா எங்க சொன்னேன்னு கேட்டாலும் கேட்டிருப்பார்..’

நளினிக்கு இரண்டு நாட்கள்  மருத்துவமனையில் கிடந்த வந்தனா மேடமா இது என்று வியப்பாக இருந்தது. அத்தனை தெளிவுடன் கலகலவென சிரித்த அவரையே பார்த்தாள். ‘ஆச்சரியமா இருக்கு மேடம்.. ஒங்க transformation.. நேத்தைக்கி நானும் நந்துவும் ஒங்கள பார்த்தப்ப பயந்தே போய்ட்டோம்..’

‘அதான் நீங்க சரியான நேரத்துல வந்து என்னெ அங்கருந்து rescue பண்ணிட்டீங்களே..’என்று மீண்டும் சிரித்த வந்தனா சட்டென்று கலங்கிய கண்களுடன் நளினியைப் பார்த்தார். ‘I am so grateful to you and Mr.Nandakumar.. நீங்க ரெண்டு பேர் மட்டும் சரியான நேரத்துல வரலைன்னா அந்த டாக்டர் என்னெ அந்த இருட்டுக்குள்ளருந்து விட்டிருக்கவே மாட்டார்.. என்னெ வீட்டுக்கு கொண்டு வந்ததே எனக்கு பெரிய ரிலீஃப்னு நினைக்கேன்.. அத்தோட மாணிக்கவேல் வந்து போனதும் எனக்கு ரொம்பவும் ஆறுதலா இருந்தது நளினி.. அதுக்கும் ஒங்க ரெண்டு பேருக்குந்தான் நா தாங்ஸ் சொல்லணும்.’

வந்தனா குரல் உடைந்து விசும்ப நளினி பதறிப்போனாள். ‘என்ன மேடம் நீங்க.. நடந்தத ஒரு கெட்ட கனவா நெனச்சி மறந்துருங்க.. இப்ப நீங்க சிரிச்ச சிரிப்பு எனக்கும் எவ்வளவு ரிலீஃபா இருந்தது தெரியுமா? அந்த நிலமையிலும் நீங்க என்னெப் பத்தி நினைச்சி கவலைப்பட்டு மாணிக்கவேல் சார் கிட்ட பேசி.. அவர சம்மதிக்க வச்சி.. கையோட சிஜிஎம் சார்கிட்டயும் பேசி.. நாந்தான் ஒங்களுக்கு ரொம்பவும் கடமைப் பட்டிருக்கேன் மேடம்.. அதுமட்டுமில்ல மேடம் இந்த மாற்றம் எனக்கு ஒரு குழந்தை பிறக்கறதுக்கு உதவும்னு நம்பறேன் மேடம்.. நந்துவுக்கும் எனக்கும் இடையிலருக்கற விரிசலை தீக்கறதுக்கும் இந்த மெட்றாஸ் ஜேர்னி ஹெல்ப் பண்ணியிருக்கே.. இத பாசிபிளாக்குனது மாணிக்கம் சாரோட மோளோட மரணமும் அதனால ஒங்களுக்கு ஏற்பட்ட இந்த சிக்னெசும்.. ப்ளஸ்சிங் இன் டிஸ்கைஸ்னு சொல்ல நாக்கு வர மாட்டேங்குது மேடம்.. ஆனா அதுவும் உண்மைதானேன்னு தோனுது.. தப்பா நினைச்சிக்காதீங்க.’

வந்தனா தன்னுடைய சாய்வு இருக்கையிலிருந்து நிமிர்ந்து தன் அருகில் நின்றிருந்த நளினியின் கரங்களைப் பற்றி தன்னருகில் அமர்த்தினாள். ‘சேச்சே.. நா எதுக்கு தப்பா நினைக்கப் போறேன்.. நீ சொன்னதுலயும் தப்பில்லையே.. சில பேராலத்தான் தங்களோட சாவுலயும் மத்தவங்களுக்கு நல்லது செய்ய முடியும்.. அது என் கமலியால முடிஞ்சிருக்கு.. What a wonderful child she was.. அவளோட இழப்ப என்னாலயே தாங்கிக்க முடியலையே.. இந்த இழப்புலயும் மாணிக்கவேலுக்கு மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்னு தோனியிருக்கே நளினி.. What a wonderful person he is? அவனுக்கு மகளா பொறக்கறதுக்கே கமலி எவ்வளவு குடுத்து வச்சிருக்கணும்.. ஆனா ஒனக்கு பயன்படப்போற இந்த டிரான்ஸ்ஃபர் சந்தோஷ¤க்கு வருத்தத்த குடுக்குமோன்னு நினைக்கறேன்.. இருந்தாலும் பரவாயில்லை.. சின்ன பையந்தானே.. சமாளிச்சிக்குவான்.. அப்பாவ மிஸ் பண்ணுவான்னாலும்.. அம்மா இருக்காளே.. He may not miss his dad that much.. பாக்கலாம்..’

நளினி வந்தனாவின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தவளாய் பதில் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்ட வந்தனா, ‘நளினி நந்தக்குமார் எங்க போயிருக்கார்?’ என்றாள்.

நளினிக்கு நினைத்தாலே கோபமாக வந்தது. அவள் எத்தனை தடுத்தும் அந்த முரளியைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று காலையில் கிளம்பிச் சென்றவர் மூன்று மணி நேரத்துக்கு மேலாகியும் இன்னும் திரும்பவில்லையே என்ற கோபம் அவளுக்கு.

ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், ‘அவர் ஒரு ஃப்ரெண்ட பாத்துட்டு வரேன்னு போயிருக்கார் மேடம். லஞ்சுக்கு வந்துருவேன்னு சொல்லிட்டுத்தான் போயிருக்கார். ஏன் மேடம்?’ என்றாள்.

‘அவர் வந்ததும் நீங்க ரெண்டு பேரும் போய் நம்ம ஃபிலிப் சார பாத்துட்டு வந்துருங்க.. நந்தக்குமாருக்கும் இங்கேயே டிரான்ஸ்ஃபர் கிடைச்சா நல்லதுதானே.. நான் ஒனக்கு மட்டுந்தானே சொல்லியிருக்கேன்.. நீங்க ரெண்டு பேரும் அவர நேர்ல பாத்து கேட்டா இப்பவே முடியலேன்னாலும் அஞ்சாறு மாசத்துக்குள்ள செய்யலாமே.. என்ன சொல்றே?’

நளினி நன்றியுடன் வந்தனாவைப் பார்த்தாள். ‘ரொம்ப தாங்ஸ் மேடம்.. கண்டிப்பா போறோம்.. இதோ இப்பவே கூப்ட்டு வரச் சொல்றேன்..’ என்றவாறு தன்னுடைய செல்ஃபோனை தேடிப் போனாள்.

தொடரும்..

No comments: