17.1.07

சூரியன் 165

மாதவனின் வாகனம் வங்கி வளாகத்தினின்று வெளியேற தன்னருகில் நின்றிருந்த சுபோத்தைப் பார்த்தார் ஃபிலிப் சுந்தரம்.

‘என்னாச்சி சுபோத். எதுக்காக சேர்மன் திடீர்னு கிளம்பி போறார்? Did he tell you anything?’

‘இல்லையே சார். சாரோட வீட்லருந்து ஃபோன் வந்தது. மேடம்னு நினைக்கேன். நான் உடனே சார்க்கு கனெக்ஷன் குடுத்தேன். கொஞ்ச நேரத்துல சார் இண்டர்காம்ல கூப்ட்டு இன்னைக்கி லாஸ்ட் ஃப்ளைட்ல மும்பைக்கு மூனு டிக்கட்ஸ் புக் பண்ணுங்கன்னு சொன்னார். அதுக்கப்புறம் ஒங்கள கூப்ட சொன்னார். அவ்வளவுதான் சார் தெரியும். மும்பையில ஏதோ சீரியஸ் விஷயம்னு நினைக்கேன். சாரோட சன்னெ அங்க விட்டுட்டு வந்துருக்கார்னு மட்டும் தெரியும். அவருக்குத்தான் ஏதோ ஆயிருக்கணும். அதுக்கும் இன்னைக்கி பகல் நடந்த பாம் ப்ளாஸ்ட்டுக்கும் ஏதாச்சும் கனெக்ஷன் இருக்குமோன்னு தெரியல.’ என்ற சுபோத் ‘சாரி சார்.. நா போய் நம்ம டிராவல் ஏஜன்சிய கூப்பிடணும்.. ..’ என்றவாறு தன்னுடைய இருக்கையை நோக்கி விரைய ஃபிலிப் இன்னும் ஒரு மணி நேரத்தில் துவங்கவிருக்கும் ப்ரெஸ் மீட் நினைவுக்கு வர தன்னுடைய அறையை நோக்கி நடந்தார்.

செல்லும் வழியில் மாதவன் சற்றுமுன் கூறியது நினைவுக்கு வர ஈ.டி இருக்கும்போது நாம் பத்திரிகை நிரூபர்கள் சந்திப்பது சரியில்லையே என்பதும் நினைவுக்கு வந்தது.

தன்னுடைய அறைக்கு செல்வதைவிட முதலில் சுந்தரலிங்கம் அறைக்குச் சென்று மாதவன் புறப்பட்டுச் சென்ற விபரத்தை அவரிடம் தெரிவித்து அவருடைய ஆலோசனையைக் கேட்பதுதான் சரி என்று நினைத்த ஃபிலிப் உடனே அதை செயல்படுத்தும் விதமாக அவருடைய அறையை நோக்கி விரைந்தார்.

நல்லவேளையாக அவருடைய அறையில் வேறு யாரும் இருக்கவில்லை. அவர் பார்த்துக்கொண்டிருந்த கோப்பில் கையெழுத்திட்டு முடிக்கும்வரை காத்திருந்த ஃபிலிப் மாதவன் திடீரென்று புறப்பட்டுச் சென்ற விபரத்தைக் கூறிவிட்டு, ‘சார் சேர்மன் பாட்டுக்கு நீங்க ப்ரெஸ் பீப்பில நீங்க ஹேண்டில் பண்ணிருங்கன்னு சொல்லிட்டுப் போய்ட்டார். சேர்மன் இல்லாத நேரத்துல ஈ.டி இருக்கறப்போ நா எப்படி சார்.. அதான்.. ஒங்கக் கிட்ட டிஸ்கஸ் பண்லாம்னு வந்தேன்.’ என்றார் தயக்கத்துடன்.

சுந்தரலிங்கம் பதில் பேசாமல் யோசனையில் ஆழ்ந்தார். அவருக்கு கடந்த இரு நாட்களாகவே மாதவன் அளவுக்கு மீறி ஃபிலிப் சுந்தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தோன்றியது. மாதவனுக்கும் ஈ.டி சேதுமாதவனுக்கும் இடையிலிருந்த மனக்கசப்பும் ஆகவே அவரை மாதவன் சைட் லைன் செய்ய முயல்வதும் அவருக்கும் லேசாக தெரிந்திருந்துதானிருந்தது. ஆனால் சேதுமாதவனுக்கு அடுத்தபடியாக இருந்த தனக்கு முக்கியத்துவம் அளிக்காமல் மாதவன் ஃபிலிப் சுந்தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைத்தான் அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

முந்தைய சேர்மன் இருந்த காலத்தில் அவர் ஒரு அரை மணி நேரம் அலுவலகத்தைவிட்டு செல்வதானாலும் தன்னிடம் தெரிவிக்காமல் சென்றதில்லை என்பதை நினைத்துப்பார்த்தார். அவருக்கும் சேதுமாதவனை அவ்வளவாக பிடித்திருக்கவில்லை. ஆகவே அவருக்கு அடுத்தபடியாக அதிகார ஏணியில் இருந்த ஈ.டியை பொருட்படுத்தாமல் தான் அலுவலகத்தில் இல்லாத நேரத்தில் சுந்தரலிங்கத்திடமே பொறுப்பை விட்டுச் செல்வது வழக்கம்.

அதில் சேதுமாதவனுக்கு ஒப்புதல் இல்லையென்றாலும் சுந்தரலிங்கம் தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருபவர் என்பதால் அதை அவ்வளவாக பொருட்படுத்தியதில்லை. சேர்மன் பதவியில் அமராமலே தனக்கு வேண்டியவற்றையெல்லாம் நிறைவேற்றிக்கொள்வதில் சமர்த்தராயிற்றே அவர்!

‘என்ன சார்.. நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கேட்டேனே?’

சுந்தரலிங்கம் அப்போதும் பதிலளிக்காமல் தனக்கு முன்னே இருந்த கோப்பையே பார்த்தவாறு அமர்ந்திருக்க என்னாயிற்று இவருக்கு என்று நினைத்தார் ஃபிலிப் சுந்தரம்.

நேற்றிலிருந்தே சுந்தரலிங்கத்தின் போக்கில் ஒரு லேசான மாற்றத்தை உணர்ந்திருந்தார் ஃபிலிப். இதற்கு என்ன காரணமாயிருக்கும்? ஒருவேளை நாம்தான் ஏதோ வகையில் அவரை புன்படுத்திவிட்டோமோ? எல்லாம் அந்த பாபு சுரேஷை எச்.ஆர் ஹெட்டாக நியமிக்க தான் சேர்மனிடம் பரிந்துரைத்ததுதான் காரணமாயிருக்கும்.

சுந்தரலிங்கம், ஃபிலிப் சுந்தரம் இருவருமே சி.ஜி.எம் ராங்கில்தான் இருந்தனர் என்றாலும் சுந்தரலிங்கத்தின் வயதையும் அவருடைய அனுபவத்தையும் கருத்தில்கொண்டு எப்போதுமே அவரை தன்னுடைய உயர் அதிகாரியாகத்தான் ஃபிலிப் சுந்தரம் கருதி வந்திருந்தார்.

அத்துடன் சோமசுந்தரத்துடன் ஒப்பிடுகையில் சுந்தரலிங்கம் நேர்மையானவர், கடவுள் நம்பிக்கையுடையவர், எவ்வித தீய குணங்களோ பழக்கங்களோ இல்லாதவர் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது. ஆகவேதான் முந்தைய சேர்மன் பதவியிலிருந்து விலகியபோது சேர்மன் பொறுப்பை யாருக்கு அளிப்பது என்று இயக்குனர் குழு அவரிடம் கேட்டபோது அதை சுந்தரலிங்கத்திடம் அளிக்குமாறு  பரிந்துரைத்தார்.

ஃபிலிப் சுந்தரம் தன்னைப் பரிந்துரைத்த விபரம் சுந்தரலிங்கத்திற்கும் தெரிந்திருந்தது. ஆகவேதான் புதிய சேர்மன் பதவியேற்கும் வரை வங்கியின் சேர்மன் பொறுப்பிலிருந்து அவர் எடுத்த எல்லா முடிவுகளையும் ஃபிலிப் சுந்தரத்துடன் கலந்தாலோசிக்காமல் அவர் எடுத்ததேயில்லை.

இவ்விருவருடைய கூட்டு செயல்பாடு சேதுமாதவனுக்கு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடுத்தபடியாக ஜி.எம் பதவியிலிருந்த சகல அதிகாரிகளுக்கும் பொறாமையை ஏற்படுத்தியிருந்ததை இருவருமே அறிந்திருந்தனர்.

அத்தகைய நெருக்கத்துடனிருந்த அவர்களுடைய நட்பில் பொறாமைக்கு இடமே இல்லை என்றுதான் ஃபிலிப் சுந்தரம் நினைத்திருந்தார். ஆனால் புதிய சேர்மன் பதவியேற்றதிலிருந்து அவர் பதவியேற்கும் வரை அப்பதவியிலிருந்த தன்னைக் கலந்தாலோசிக்காமல் இருப்பதுடன் இவருக்கு முக்கியத்துவம் அளிக்கிறாரே என்று நினைக்கிறாரோ?

அவருடைய இந்த எண்ணத்தை நிரூபிப்பதுபோலவே மாதவன் மும்பைக்கு செல்வதை அவரிடம் தெரிவிக்காமல் புறப்பட்டுச் சென்றதும் அவருடைய இந்த ஈடுபாடில்லா நடத்தைக்குக் காரணமாயிருக்கலாம் என்று நினைத்தார் ஃபிலிப்.

இருப்பினும் அதை நாம் பொருட்படுத்தாமல் இருப்பதுதான் நல்லது என்று நினைத்தவர் ‘சார் நீங்க ஏதோ அப்செட்டாருக்காப்பல இருக்கு. நா வேணும்னா ஒரு பத்து நிமிசம் கழிச்சி வரட்டுமா சார்?’ என்றார்.

சுந்தரலிங்கம் சரி என்பதுபோல் தலையை அசைக்க வேறு வழியில்லாமல் மெள்ள எழுந்து அறையை விட்டு வெளியேறினார் ஃபிலிப் சுந்தரம்.

சே! எத்தனை வருஷ பழக்கம்? இந்த பாழாப்பான ஈகோ இவரையுமா பீடிக்கவேண்டும். மாதவன் ஒருவேளை என்னைத் தவிர்த்திருந்தாலும் நானும் இப்படித்தான் மருகுவேனோ? யார் கண்டது?

இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? இதை இப்படியே விட்டுவிட்டால் அன்றாட அலுவல்களைக் கூட சரிவர செய்து முடிக்க முடியாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்னதான் சுந்தரலிங்கமும் அவரும் வங்கியின் இருவேறு பிரிவிற்கு தலைவர்களாயிருந்தாலும் இருவருடைய தினசரி அலுவல்களில் ஒருவரையொருவர் கலந்தாலோசிக்காமல் இருக்கவே முடியாது.

அத்துடன் வங்கியின் பல உயர்மட்டக் குழுக்களில் இவர்கள் இருவருமே அங்கத்தினர்களாக இருந்த நிலையில் சுந்தரலிங்கத்தின் இத்தகைய விட்டேத்தியான போக்கும் அக்குழுக்களின் இயக்கத்தையே முடக்கிப் போட்டுவிடக்கூடும். மாதவன் மும்பையிலிருந்து திரும்பியது இதை அவருக்கு உணர்த்த வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார் ஃபிலிப்.

******

காலையிலிருந்து தான் நினைத்தது எதுவும் நடக்கவில்லையென்ற எரிச்சலுடன் மூட் அவுட்டாகி தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார் சேது மாதவன்.

அன்றைய தினம் அவருடைய பார்வைக்கும், ஒப்புதல்களுக்கும் வந்திருந்த அனைத்து கோப்புகளும் பரிசீலிக்கப்படாமல் அப்படியே அவருடைய மேசையில் குவிந்திருந்தும் அவற்றைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் அமர்ந்திருந்தார்.

அன்று மாலையில் புதிய வங்கி முதல்வர் முதல் முறையாக பத்திரிகை நிரூபர்களை சந்திக்கவிருப்பதாகவும் வங்கியின் ஈ.டி என்ற முறையில் அவரிடமிருந்து முதல்வருக்கும் ஏதாவது குறிப்புகள் உள்ளனவா என்று முதல்வரின் காரியதரிசி சுபோத் அவரை தயக்கத்துடன் இண்டர்காமில் தொடர்புகொண்டபோது ‘ask him to go to hell’ என்ற உறுமலுடன் இணைப்பைத் துண்டித்தார்.

இவன் ப்ரெஸ் ரிப்போர்ட்டர்ஸ் கிட்ட பேசினா என்ன பேசாட்டி எனக்கென்ன என்ற ரீதியில் சென்றது அவருடைய சிந்தனை. அன்று காலையில் சுந்தரலிங்கத்திடமும் ஃபிலிப் சுந்தரத்திடமும் அவர்டைய பாச்சா பலிக்காமல் நேரே மாதவனின் அறைக்குச் சென்று ரிசர்வ் வங்கியிலிருந்து வந்த கடிதத்தைப் பற்றி கேட்டு வரிடம் அவமானப்பட்டு திரும்பியதை நினைத்துப் பார்த்தார். அவரையுமறியாமல் கோபம் உச்சிக்கு ஏறி ஏற்கனவே மருந்து மாத்திரைக்கு மசியாமலிருந்த அவருடைய ரத்த அழுத்தம் மேலும் அதிகரித்ததை அவரால் உணர முடிந்தது.

அவருடைய சிந்தனையைக் கலைப்பதுபோல் இண்டர்காம் சினுங்க அதை எரிச்சலுடன் பார்த்தார். யார்றா இது நேரங்காலம் தெரியாம.. ஆயினும் அது தொடர்ந்து சினுங்கவே எடுத்து, ‘யார் மேன் இது? What do you want?’ என்று கடித்து குதறினார்.

எதிரில் பணிவுடன் சுந்தரலிங்கம். ‘Can I come down to your cabin.. It’s urgent.’என்ன வேணும் இவனுக்கு? ஒரு வேள மாதவன் லெட்டர இவன் வழியா குடுக்கலாம்னு நினைக்கறானோ?

‘Come’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தார். அந்த விஷயம் மட்டும் இல்லாம வேற ஏதாச்சும் பேசட்டும்.. கெளவன் களுத்த நெரிச்சிப்போடறேன்..

சுந்தரலிங்கம் அறைக்குள் நுழைந்ததும் நேரே விஷயத்துக்கு வந்தார்.

‘Mr.Sethu, do you know that Chairman left the office without meeting the press people?’

சேதுமாதவன் வியப்புடன் தன் எதிரில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தார். ‘Is it? He didn’t inform me.. Did he inform you?’

சுந்தரலிங்கம் இல்லை என்று தலையை அசைத்தார். ‘No.. He didn’t tell me either. மிஸ்டர் ஃபிலிப் சொல்லித்தான் எனக்கே தெரியும்.’

சேதுமாதவன் அவரை அடிக்கண்ணால் பார்த்தார். இந்த ஆளோட வாய்ஸ்லருக்கற ஆதங்கத்தப்பார்த்தா... அட! இந்த ஆளுக்கும் ஈகோவா.. பரவாயில்லையே.. இதான் டைம்.. நம்ம வழிக்கு இந்த ஆள கொண்டு வர்றதுக்கு இதான் நல்ல சந்தர்ப்பம்.. இந்தாளோட ஈகோவ கொஞ்சம் தூண்டி விட்டுருவோம்.. எப்படி ரியாக்ட் பண்றான்னு பாக்கலாம்.

‘Is it.. How dare he.. என்ன நினைச்சிக்கிட்டிருக்கார்? அவருக்கு அடுத்தது நான்.. சரி என்கூட காலையிலயே தகராறு.. அதனால சொல்லாம இருக்கலாம். அவர் இருக்கற சீட்ல இருந்தவர் நீங்க.. ஒங்கக்கிட்ட  சொல்லாம.. ஒங்கள விட ஜூனியர் அவர்.. அவர்கிட்ட மட்டும் சொல்லிட்டுப் போனா என்ன அர்த்தம்? இத இப்படியே விடக்கூடாது லிங்கம் சார்.. இப்படியே விடக் கூடாது..’ என்ற சேது சட்டென்று நினைவுக்கு வந்தவராய், ‘சரி.. அப்போ அந்த ப்ரெஸ் மீட்?’ என்றார்.

சுந்தரலிங்கம் தங்கத்துடன், ‘அந்த ரெஸ்பான்சிபிளிட்டியையும் ஃபிலிப் கிட்டவே விட்டுட்டு போயிருக்காராம். ஃபிலிப் வந்து சொல்றார். நம்ம பி.ஆர்.வோ. ப்ரிப்பேர் பண்ண ப்ரீஃபையும் அவர்கிட்ட குடுத்து நீங்களே ஹேண்டில் பண்ணிருங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாராம்.’ என்றார்.

சேது கோபத்துடன், ‘அதெப்படி சார்.. எப்பவும் இல்லாம..? சேர்மன் இல்லாத நேரத்துல நாந்தானே சாதாரணமா ப்ரெஸ் பியூப்பில மீட் பண்றது வழக்கம்? சரி.. எனக்கு முக்கியத்துவம் குடுக்கறதுக்கு அவருக்கு விருப்பமில்லேன்னு வச்சிக்குவம்.. சீனியாரிட்டி பிரகாரம் எனக்கப்புறம் நீங்க தானே?’ என்றார் சுந்தரலிங்கத்தை ஆழம் பார்க்கும் நோக்குடன்.

சுந்தரலிங்கமும் அவரை ஆமோதிப்பதுபோல் தலையை மெள்ள அசைக்க சேதுமாதவன் தொடர்ந்து, ‘சார்.. நா சொல்றாப்பல செய்ங்க. நீங்க சுபோத்த உடனே கூப்ட்டு சேர்மனுக்கு ப்ரிப்பேர் பண்ண ப்ரீஃபை இங்க அனுப்பச் சொல்லுங்க.. நானும் நீங்களுமா ஒக்காந்து அதப்பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்... Let both of us teach Philip a lesson.. We will completely ignore him.. Don’t invite him to the press meet.. Both of us will handle the press.. என்ன சொல்றீங்க?’ என்றார்..

பிறகு அவருக்கு மறுத்துப்பேச சந்தர்ப்பமளிக்காமல் இண்டர்காமில் தன்னுடைய காரியதரிசியை அழைத்து சுபோத்துக்கு இணைப்பு கொடுக்குமாறு பணித்து ஒலிவாங்கியை சுந்தரலிங்கத்திடம் கொடுக்க அவர் பலிகடா போல் அதை வாங்கி சற்று முன் சேதுமாதவன் அவரிடம் கூறியதை உடனடியாக கொண்டுவரும்படி முதல்வரின் காரியதரிசியைப் பணித்துவிட்டு அவரைப் பார்த்தார்.

சேதுமாதவனின் உதடுகளில் தவழ்ந்த புன்னகையின் பொருள் அவருக்கு விளங்கவில்லையோ அல்லது அதைப்பற்றி கவலைப்படும் மனநிலையில் அவர் இல்லையோ..

தொடரும்..

2 comments:

Anonymous said...

என்னுடைய comments எல்லாம் எங்கேயோ காணாமல் போகுது..

டிபிஆர்.ஜோசப் said...

என்னுடைய comments எல்லாம் எங்கேயோ காணாமல் போகுது.. //

அப்படியா? மாடரேஷன் பக்கத்துல ஒன்னுமே பாக்கி இல்லையே:(