31.7.06

சூரியன் 133

‘என்ன சார்.. இன்றைய அஜெண்டா?’ என்ற கேள்வியுடன் மாதவன் அன்றைய கூட்டத்தை துவக்கி வைக்க கார சாரமான அஜெண்டாக்களுடன் வங்கியின் தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரமும் பணபலமும் கொண்ட இயக்குனர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மேனேஜ்மெண்ட் கமிட்டி கூட்டம் துவங்கியது...

அதே நேரத்தில் சென்னையின் மறு கோடியில்...

இடம்: சென்னை நிரூபர் சங்க அலுவலகம். சென்னையில் பிரபலமாயிருந்த எல்லா பத்திரிகையின் நிருபர்களும் குழுமியிருந்தனர்.

‘என்ன சார் திடீர்னு ஃபோன்ல கூப்ட்டு இன்னைக்கி முக்கியமான ஒருத்தர மீட் பண்ணப்போறோம்னு சொன்னீங்க? இங்க வந்தா யாரையும் காணோம்?’ என்ற ஹிந்து பத்திரிகையின் நிரூபரைப் பார்த்தார் சங்கத் தலைவர்.

‘ஆமாம். யார் சார் வற்ரா?’ என்றார் தினமலர் நிரூபர்.

‘சொல்றேன்.’ என்றார் தலைவர். ‘மெட்றாஸ் க்ரெடிட் கார்ப்பரேஷன்னு ஒரு NBFC இருக்குல்லே.. அதான் சார் கொஞ்ச நாளா நியூஸ்ல அடிபட்டுருக்குதே அந்த கம்பெனி.’

குழுமியிருந்த நிரூபர்களுக்கு விளங்கியது. அந்த நிறுவனத்தில் வைப்பு நிதி செய்திருந்த பல வாடிக்கையாளர்களும் தங்களுடைய பணம் திருப்பி கிடைக்கவில்லையென்பதை கடந்த சில மாதங்களாக ஏறத்தாழ எல்லா பத்திரிகைகளுக்கும் புகாராக எழுதிக்கொண்டிருந்தனர் என்பதால் அந்த நிறுவனத்தின் பெயர் இந்த எதிர்மறையான காரணத்துக்காக சென்னையிலிருந்த பலருக்கும் தெரிந்திருந்தது.

‘அந்த கம்பெனியில டைரக்டரா இருந்து நேத்து ரிசைன் செஞ்ச ஒருத்தரத்தான் நாம இன்னைக்கி மீட் பண்ணப் போறோம். I think it will create a storm tomorrow.’ என்ற தலைவர் எழுந்து நின்று தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ‘Come.. I think he has come.’

அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய அரசு அதிகாரியாகவிருந்து ஓய்வுபெற்று பிறகு கடந்த இரண்டாண்டுகளாக மதறாஸ் க்ரெடிட் கார்ப்பரேஷனில் இயக்குனராக இருந்து விலகிய மகாலிங்கம் என்பவரை தலைவர் வரவேற்று அழைத்துவர கூட்டம் துவங்கியது.

முந்தைய நாள் நடந்த இயக்குனர் கூட்டத்தில் நடந்த விவாதங்களையும் நிறுவனத்தின் பொது மேலாளர் சமர்பித்த அறிக்கையின் சாராம்சத்தையும் எடுத்துரைத்த மகாலிங்கம் தான் அடுத்து செயல்படுத்தவிருந்த திட்டத்தை விளக்கலானார்.

‘அந்த கம்பெனியோட சேர்மனோட பேச்சை நம்பித்தான் நானும் போர்ட்ல சேர்ந்தேன். ஆனா நேத்துதான் அந்த கம்பெனியோட ஃபண்ட்ஸ் பொசிஷன் சரியில்லங்கறது எனக்கு தெரிஞ்சிது. அத்தோட கம்பெனியோட போர்ட் மெம்பர்சே கம்பெனியிலருந்து கடனா வாங்குன தொகைய திருப்பி கட்டாம இருக்காங்கங்கறதும் சேர்மனோட மகனும் மருமகனுமே சேந்துக்கிட்டு கம்பெனி ஃபண்ட்ஸ போர்ட் மெம்பர்சுக்கே தெரியாம க்ரூப் கம்பெனிங்களுக்கு டைவர்ட் செஞ்சிருக்கறதும் தெரிஞ்சிது. கம்பெனியோட டெப்பாசிட்டர்சுக்கு ஆறு மாசத்துக்கு மேல வட்டியக்கூட சரிவர குடுக்க முடியாம இருக்கறதுக்கு இதுதான் காரணம்னும் இனியும் ஆறு மாசத்துக்கு குடுக்க முடியாத நிலையில கம்பெனி இருக்கும்னும் கூட தெரிஞ்சிக்கிட்டேன். நாற்பது வருசத்துக்கும் மேல கவர்ன்மெண்ட்ல சின்சியரா ஒர்க் பண்ணிட்டு இந்த மாதிரி கம்பெனியில டைரக்டரா இருந்து கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பேர கெடுத்துக்க வேணாமேன்னுதான் ரிசைன் செய்யணும்னு டிசைட் பண்ணேன்.’

நிரூபர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

‘சரி சார். அத எதுக்கு எங்கள கூப்ட்டு சொல்றீங்க?’ என்றார் தினத்தந்தி நிரூபர்.

மகாலிங்கத்தின் முகத்தில் சட்டென்று ஏற்பட்ட மாற்றம் குழுமியிருந்தவர்களுடைய கவனத்தை ஈர்த்தது. எல்லோரும் அவரையே பார்த்தனர்.

‘நான் ரிசைன் செஞ்சது பெரிய நியூஸ் இல்லைதான். ஆனா இப்ப நான் சொல்லப்போறதுக்கு நிச்சயம் நியூஸ் வேல்யூ இருக்கு.’

‘நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க. அதுக்கு நியூஸ் வேல்யூ இருக்கா இல்லையாங்கறத நாங்க முடிவு பண்றோம்.’ என்றார் நக்கீரன் பத்திரிகை நிரூபர். அரசு பதவியிலிருந்த காலத்தில் தங்களுடைய பத்திரிகையை சற்றும் மதிக்காமலிருந்த அவர் மீது ஏற்கனவே கோபம் இருந்தது அந்த பத்திரிகை நிரூபருக்கு.

‘சொல்றேன்.’ என்றவர் தான் திட்டமிட்டிருந்ததை விளக்கினார். ‘நேத்து மீட்டிங்லருந்து வெளிநடப்பு செஞ்சதுமே சென்னையிலருந்த எல்லா ப்ராஞ்சுக்கும் நேரடியா போயி டெப்பாசிட் அமவுண்ட்டுக்காக காத்துக்கிட்டிருந்தவங்களையெல்லாம் மீட் பண்ணேன். இந்த மாதிரி தமிழ்நாட்ல இந்த கம்பெனியோட பிராஞ்சுகள்ல டெப்பாசிட் செஞ்சி போன ஆறு மாசமா பணம் திருப்பி கிடைக்காம இருக்கற எல்லாரையும் ஒன்னா சேர்த்து கம்பெனிக்கு எதிரா ஆக்ஷன் எடுக்கச் சொல்லி ஒரு மூவ்மெண்ட நடத்துனா என்னன்னு தோனிச்சி.. முதலமைச்சரயும் வர்த்தக மற்றும் தொழிலமைச்சர்கள சந்திக்கவும் டிசைட் செஞ்சிருக்கோம். இன்னும் ஒரு வாரத்துல தமிழ்நாட்டுல இந்த கம்பெனியில முதலீடு செஞ்சி ஏமாற்றப்பட்டிருக்கற எல்லா டெப்பாசிட்டர்சோட டீட்டெய்லயும் கலெக்ட் பண்றதுக்கு ஒங்களாலதான் ஹெல்ப் பண்ணமுடியும். அதுக்குத்தான் ஒங்க கூட்டத்த கூட்டச் சொல்லி ஒங்க தலைவர்கிட்ட கேட்டுக்கிட்டேன். அவரும் உடனே ஒத்துக்கிட்டு ஷார்ட் நோட்டீஸ்ல இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்கார். The ball is in your court now. My mission will succeed only if you give a decent covering in your papers.’

அவர் இதுவரை குறிப்பிட்டதிலிருந்தே அந்த செய்திக்கு எத்தகைய வரவேற்பு இருக்கக்கூடும் என்பதை கணித்திருந்த நிரூபர்கள் பரபரவென குறிப்பெடுப்பதில் முனைந்தனர்.

அதனைத் தொடர்ந்து கேள்விகள் அறையின் எல்லா திசையிலிருந்தும் கிளம்பின.

‘சார் உங்களத்தவிர அந்த போர்ட்ல எல்லா மெம்பர்சும் கடன் வாங்கிட்டு திருப்பி கட்டாம இருக்காங்கன்னு சொன்னீங்க. அதுல சில டைரக்டர்சோட பேரையாவது சொல்ல முடியுமா?’

‘அதென்ன சில பேர்? எல்லார் பேரையும் சொல்றேன். அந்த கம்பெனியில எனக்கு விசுவாசமானவங்க சொன்னதுலருந்து கிடைச்சத கொண்டு வந்திருக்கேன். எல்லாரோட பேரும் பேப்பர்ல வரணுங்கறதுதான் என்னோட வேண்டுகோள். மார்கெட்ல பெரிய மனுசங்க மாதிரி நடக்கற இவங்களோட சுயரூபம் எல்லாருக்கும் தெரியட்டும்.’ என்றவாறு அவர் பட்டியலிட்ட ஒவ்வொரு பெயரும் குழுமியிருந்த நிரூபர்களின் முகத்தில் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்த கூட்டம் சூடுபிடித்தது.

****

‘தெரியாமத்தான் கேக்கேன். ஒடம்பு சரியில்லாம அந்தம்மா ஆஸ்பத்திரியிலருக்கறப்போ அவங்கள எதுக்கு மாத்தறீங்க? என்னய்யா ஃபிலிப், என்ன பேசாம இருக்கீரு? சொல்லும்.. இப்ப இதுக்கு என்ன அவசரம்?’

ஃபிலிப் சுந்தரத்திற்கும் ஏன் இந்த அவசரம் என்று விளங்காததால் இதை பரிந்துரைத்த சோமசுந்தரத்தைப் பார்த்தார்.

சோமசுந்தரம் சேர்மனைப் பார்த்தார்.

அன்றுதான் பொறுப்பேற்றிருந்த மாதவனோ தன்னுடைய தர்மசங்கடமான நிலையை உணர்ந்தார். முதல் நாளே பிரச்சினையில் சிக்கிக்கொண்டோமே. இந்த டாக்டருக்கும் நாடாருக்கும் இடையில இருக்கற ஈகோ க்ளாஷ்ல நம்மளையும் அறியாம மாட்டிக்கிட்டோம்னு நினைக்கேன். We will have to handle this situation carefully. இப்ப நாடாருக்கு பயந்து விசயத்த reconsider செய்ய முடிவெடுத்தா அனாவசியமா டாக்டர பகைச்சிக்கறா மாதிரி ஆயிரும். முடிவெடுக்கும்போது தீர யோசிக்காம முடிவெடுத்துட்டு எடுத்த முடிவ நாமளே சட்டுன்னு மாத்திக்கறதுங்கறதும் ஒரு நல்ல ஆரம்பமா இருக்க முடியாது...ஆனா அதே சமயம் நாடாரோட கேள்வியிலயும் நியாயம் இருக்கு..

அத்தோட இங்கருக்கற சீனியர் எக்ஸ்க்யூட்டிவ்ஸ்ல யாருக்குமே இந்த முடிவுல இஷ்டம் இல்லாத மாதிரியும் இருக்கு. நம்ம ரூம்ல இருந்தப்போ ஒத்துக்கிட்ட ஃபிலிப் சுந்தரத்தோட முகத்துலயும் இந்த டிசிஷனுக்கு ஃபேவரபிளான ஒப்பீனியன் தெரியல..

How am I going to handle this decision?

தனக்கு அருகில் வலதுபுறத்தில் அமர்ந்திருந்த சேதுமாதவனை ஓரக்கண்ணால் பார்த்தார். அவர் உதடுகளில் ஒரு கேலிப் புன்னகை. தனக்கு இடப்புறத்தில் அமர்ந்திருந்த சுந்தரலிங்கத்தின் முகத்திலும் ஒரு கலவரம் தெரிந்ததை உணர்ந்த மாதவன் இடது ஓரத்தில் அமர்ந்திருந்த ஃபிலிப் சுந்தரத்தை பார்த்து, ‘என்ன மிஸ்டர் ஃபிலிப் ஒங்க ஒப்பீனியன் என்ன? கொஞ்ச நேரத்துக்கு முன்னால என் கேபின்ல இத டாக்டர் ப்ரொப்போஸ் செஞ்சப்போ ஒங்களுக்கும் இதுல சம்மதம் இருக்குன்னுல்ல நினைச்சேன்?’ என்றார். இப்படியொரு கேள்வியை கேட்டு அவரை தர்மசங்கடப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று அவருக்கு தோன்றினாலும் இதனால் இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர தனக்கு இன்னும் சற்று நேரம் கிடைக்குமே என்று நினைத்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்திருந்ததுக்கும் மேலாக இதைக் கையாண்ட ஃபிலிப் சுந்தரத்தின் நேர்த்தி அவரை கவர்ந்தது.

‘சார் நீங்க கேக்கறது நியாயந்தான். மிஸ். வந்தனா இப்ப இருக்கற சூழ்நிலையில இந்த டிசிஷன் கொஞ்சம் ஹார்ஷாத்தான் தெரியும். அதனாலதான் நாடார் சாரும் இது தேவைதானா நினைக்கறாங்க. ஆனா எனக்கென்னவோ இந்த மாற்றம் தேவைதான்னு படுது. நம்ம பேங்க்ல எப்பவும் நடக்கற ஆன்யுவல் ப்ரொமோஷன் டிரான்ஸ்ஃபர் சீசன் இன்னும் ரெண்டு மாசத்துல ஆரம்பமாகப்போகுது. அதுக்குள்ள எல்லா ஆஃபீசர்சோட பெரஃபார்மன்ஸ் ரிவ்யூ ரிச்சுவல முடிக்கணும். நேரம் காலம் பாக்காம நம்ம எச்.ஆர் டிவிஷன் ஒர்க் பண்ண வேண்டிய நேரம் இது. அத்தோட இந்தியா முழுசும் ஏறக்குறைய பத்து செண்டர்ஸ்ல ப்ரொமோஷன் டெஸ்ட் நடத்தி, இண்டர்வ்யூ செஞ்சி முடிக்க வேண்டிய பொறுப்பு எச்.ஆர் ஹெட்டுக்குத்தான். இப்ப மிஸ் வந்தனா இருக்கற நிலமையில அவங்களால இந்த பொறுப்ப ஏத்து நடத்தமுடியுமான்னு சந்தேகம்தான். அப்படி பாக்கறப்போ அதுக்கு தேவையான தகுதி முழுசும் மிஸ்டர் பாபு சுரேஷ¤க்கு இருக்குன்னு நான் நினைக்கிறேன். அத்தோட அவர் ஏற்கனவே ஹெட் ஆஃபீஸ்ல ஒர்க் செஞ்சவர். I think he is the most suitable replacement for Ms. Vandana.’

மாதவனை மட்டுமல்லாமல் சோமசுந்தரம் ஏன் நாடாரையும் கூட அவருடைய வாதம் கட்டிப்போட்டது. ‘வேய் நீரு லேசுபட்ட ஆள் இல்லைங்காணும்.. ஒம்ம பத்தி நான் எஸ்டிமேட் போட்டு வச்சது சரியாத்தான் இருக்கு.. ஹ¥ம் பொளச்சிப்பீரு.’என்று மனதுக்குள் நினைத்த நாடார் தனக்கும் சேர்மனுக்கும் இடையில் அமர்ந்திருந்த சோமசுந்தரத்தை சந்தேகத்துடன் பார்த்தார்.

‘என்னய்யா டாக்டர் இத மனசுல வச்சித்தான் நீரு அந்த பாபுவ சிபாரிசு செஞ்சீரா இல்ல வேற ஏதாச்சும் அஜெண்டா இருக்கா?’ என்றார் நக்கலாக.

டேய்.. நாடார் என்ன நக்கலா? என்று மனதுக்குள் கறுவிய சோமசுந்தரம், ‘என்ன நாடார் எதுக்கு உங்களுக்கு வீண் சந்தேகம்? இவர் சொன்னத மனசுல வச்சித்தான் இந்த முடிவுக்கு வந்தேன். சொல்லப்போனா மிஸ்டர் ஃபிலிப் சுந்தரம் என்கிட்ட வந்து இந்த விஷயத்த ப்ரொபோஸ் செஞ்சப்போ எனக்கும் இந்த நேரத்துல இது தேவைதானான்னு கூட தோனிச்சி. என்ன மிஸ்டர் ஃபிலிப்?’ என்றார் தன்னுடைய கேள்வி நாடாரின் மனத்தில் மட்டுமல்லாமல் அறையிலிருந்த அனைவருடைய மனத்திலும் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை உணர்ந்தவராய்.

‘என்னய்யா டாக்டர் சொல்றீரு? ஃபிலிப் சுந்தரந்தான் இத ஒம்ம கிட்ட வந்து சொன்னாரா?’ என்றார் நாடார் அதிர்ந்துபோய்.

அவர் மட்டுமல்ல அறையிலிருந்த அனைவருமே அவரை அப்படித்தான் பார்த்தனர். மாதவனைத் தவிர. இது சோமசுந்தரத்தின் அபாண்டம் என்பது அவருக்கு உடனே புரிந்தது. இந்த ஃபிலிப் சுந்தரம் நாடாரின் நம்பிக்கைக்குரிய ஆளாக இருக்க வேண்டும். ஆகவே தனக்கும் முன்னால் அவரை சிக்கலுக்குள்ளாக்க வேண்டும் என்ற நோக்கத்துடந்தான் டாக்டர் இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க வேண்டும் என்று நினைத்தார்.

தனக்கு அருகிலிருந்த இரு மூத்த அதிகாரிகளையும் பார்த்தார் மாதவன். சேது மாதவனுக்கு சுந்தரலிங்கத்தையும் ஃபிலிப் சுந்தரத்தையும் அரவே பிடிக்காது என்பதை அவர் ஏற்கனவே நேரில் கண்டிருந்ததால் அவருடைய முகத்தில் தெரிந்த ஒருவகை வக்கிரமமான சந்தோஷம் அவரை வியப்படையச் செய்யவில்லை. ஆனால் சுந்தரலிங்கத்தின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை புரிந்துக்கொள்ள முடியாமல் சற்று தடுமாறித்தான் போனார். இவரிடம்தான் நாம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். சேதுமாதவன் தனக்கு நேரிடையான எதிரி என்றால் இந்த ஃபிலிப் சுந்தரம் தனக்கு வலதுகரமாக திகழ வேண்டியவர் என்பதை முடிவு செய்தார்.

ஆகவே அவரை காப்பாற்றும் எண்ணத்தில் நாடாரைப் பார்த்தார். ‘மிஸ்டர் நாடார். இந்த விஷயத்த எங்கிட்ட விட்டுருங்க. நான் பாத்துக்கறேன். நாம அடுத்த அஜெண்டாவுக்கு போலாம்.’ என்று விஷயத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

அந்த நேரத்தில் பரபரப்புடன் அறைக்குள் நுழைந்த அவருடைய காரியதரிசி அவருடைய பெயருக்கு வந்திருந்த அறிக்கையொன்றை கொடுத்துவிட்டு நகர மாதவன் தன் முன் வைக்கப்பட்ட Fax செய்தியை வேகமாக தனக்குள் வாசித்தார்.

பிறகு தனக்கு எதிரே அமர்ந்திருந்த டாக்டர் சோமசுந்தரத்தை நோக்கி அதை நகர்த்தினார்.

அதை எடுத்து வாசித்த சோமசுந்தரத்தின் முகம் போன போக்கைக் கண்டு அறையிலிருந்த அனைவருமே திகைக்க  அவர் எழுந்து வேகமாக அறையிலிருந்து வெளியேறினார்.

‘என்ன சார் என்ன இருக்கு அந்த பேப்பர்ல.. எதுக்கு டாக்டர் எழுந்து போறார்?’ என்ற நாடாரைப் பார்த்தார் மாதவன்.

‘அவர் ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டிருக்கார் மிஸ்டர் நாடார். அதான்..’ என்ற மாதவன் தன் அதிகாரிகளைப் பார்த்தார். ‘I think we may have to suspend the meeting.. நாடார் என் கேபினுக்கு வாங்க விவரமா சொல்றேன்.’ என்றவாறு எழுந்து தன்னுடைய காரியதரிசியை மேசையில் கிடந்த Fax அறிக்கையை எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு வரும்படி பணித்தவாறு வெளியேற நாடார் அவரை தொடர்ந்தார்.

அவர் சென்றதும் மேசையில் கிடந்த அறிக்கையை எடுத்து வேகமாக ஒரு முறை வாசித்த சேதுமாதவன் மற்ற இருவருக்கும் காட்டாமல் சேர்மனின் காரியதரிசியிடம் நீட்ட சுபோத் அதைப் பெற்றுக்கொண்டு வேகமாக வெளியேறினான்.

சேதுமாதவன் கலவரமான முகத்துடன் வெளியேற சுந்தரலிங்கமும் ஃபிலிப் சுந்தரமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்..

தொடரும்..





1 comment:

siva gnanamji(#18100882083107547329) said...

ஒருவார சஸ்பென்ஸும் ஒரே நேரத்தில்.........தாங்க முடியல்லே