கமிட்டி கூட்டம் இடையிலேயே தடைபட்டுப் போக கூட்ட அறையிலிருந்து வெளியேறிய ஃபிலிப் சுந்தரம் விடுவிடுவென தன்னுடைய அறையை நோக்கி நடந்தார்.
அறைக்கு வெளியில் காத்திருந்த பாபு சுரேஷ் அறையிலிருந்து வெளியேறிய சோமசுந்தரம் தன்னைக் கண்டுக்கொள்ளாமல் சென்றதிலிருந்தே ஏதோ விபரீதம் நடந்திருக்கிறதென்பதை உணர்ந்தார்.
அவரையடுத்து வெளியே வந்த சேர்மன் மாதவனும் அவரை பாராததுபோல் நாடாருடன் தன்னுடைய அறைக்கு திரும்பவே பாபு சுரேஷ் எழுந்து அறை வாயிலையே நோக்கியவாறு நின்றிருந்தார்.
சேர்மனையடுத்து வெளியேறிய சேதுமாதவன் அவரைப் பார்த்து, ‘என்ன சுரேஷ் நீங்க வந்ததுமே பிரச்சினையோட வந்திருக்கீங்க போலருக்கு.. நேத்தைக்கி காலங் கார்த்தால ஃபோன் செஞ்சி என்னோட நாள வேஸ்ட் செஞ்சீங்க. இன்னைக்கி ஒங்க மெண்டரோட டே போலருக்கு.. நல்ல ராசி சார் ஒங்களுக்கு..’ என்று ஏளனத்துடன் கூறியவாறு சென்றதும் அவருடைய சஞ்சலத்தை பல மடங்கு கூட்ட அறையிலிருந்து ஃபிலிப் சுந்தரம் வெளிவர காத்திருந்தார்.
ஆனால் சேதுமாதவனை தொடர்ந்து வெளியே வந்த ஃபிலிப் சுந்தரம் அவரைக் கண்டுகொள்ளாமல் செல்ல பதறிப்போய் அவரை தொடர்ந்து சென்றார் ஓட்டமும் நடையுமாக.
ஃபிலிப் சுந்தரம் நேரே தன்னுடைய அறைக்குள் நுழைந்து தன்னுடைய காரியதரிசியை இண்டர்காமில் அழைத்து, ‘மிஸ் ராஜி, மிஸ்டர் பாபு சுரேஷ் எங்கருந்தாலும் நேரா என் கேபினுக்கு வரச்சொல்லுங்க.’ என்றார்.
அவருடைய குரலிலிருந்த கண்டிப்பை உணர்ந்த ராஜி ஏதோ பிரச்சினை போலருக்கே என்று நினைத்தவாறு தன்னுடைய இண்டர்காமில் கீழ்தளத்திலிருந்த வரவேற்பறை அதிகாரியை அழைத்து ‘பாபு சுரேஷ் சார் எங்கருக்காருன்னு பாருங்க. Philip Sir wants him in his cabin immediately.’ என்று கூறிவிட்டு நிமிர ஃபிலிப் சுந்தரத்தைத் தொடர்ந்து வந்த பாபு சுரேஷ், ‘Miss Raji I want to meet to Philip Sir..’ என்றவாறு நிற்பதைப் பார்த்து நிம்மதி பெருமூச்சுடன், ‘Please go in Sir, He is waiting for you only’ என்றாள்.
அவர் ஃபிலிப் சுந்தரத்தின் அறையை நோக்கி நடக்க ராஜி சேர்மனுடைய பிரத்தியேக சுருக்கெழுத்தாளரும் தன்னுடைய தோழியுமான மல்லிகாவை அழைத்து, ‘ஏய் மல்லி.. ஏதாச்சும் பிரச்சினையா? சுபோத்த கேட்டு சொல்லேன்.’ என்று கிசுகிசுத்தாள்.
எந்த ஒரு நிறுவனத்திலும் இத்தகைய கிசுகிசுக்கள் காரியதரிசி அல்லது சுருக்கெழுத்தாளர்களால்தான் துவங்கும்.. இவர்களிடமிருந்து எந்த ஒரு காரியத்தையும் மறைத்து வைக்க முடியவே முடியாது.
****
ஃபிலிப் சுந்தரத்தின் அறைக்குள் நுழைந்த பாபு சுரேஷ் அவரை நன்கு தெரிந்து வைத்திருந்ததால் அவர் இருக்கையில் அமர்ந்திருந்த விதமே அவர் பதட்டத்துடன் இருந்ததை குறிப்பாலுணர்த்த தான் மிகவும் கவனத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டு, ‘Sir, Raji told me that you wanted to meet me.’ என்றார் தயக்கத்துடன்.
ஏதோ சிந்தனையில் இருந்த ஃபிலிப் சுந்தரம் சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தார். இவரை எச்.ஓவுக்கு கொண்டு வர சோமசுந்தரம் விரும்பியதற்கு ஏதோ காரணம் இருக்கிறது. அது என்னவென்று இவருக்கு தெரியுமா? அப்படி ஒன்றும் இல்லையென்றால் இவரை நான் தான் பரிந்துரைத்தேன் என்று சோமசுந்தரம் உண்மைக்கு புறம்பாக கூற என்ன காரணம்?
‘வாங்க மிஸ்டர் பாபு.. உக்காருங்க.’ என்றார்
உடனே மேசைக்கு எதிரே இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தார் பாபு சுரேஷ். ஃபிலிப் சுந்தரம் எந்த ஒரு முக்கிய முடிவுக்கு முன்பும் தனக்குக் கீழே இருந்த சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரிகளை அனைவரையும் அவர்களுடைய வயது, அனுபவத்தை பெரிதாக பொருட்படுத்தாமல் அழைத்து தான் எடுக்கவிருக்கும் முடிவைப் பற்றி தெரிவித்து அதன் சாதக பாதகத்தை முடிந்தவரை தெளிவுபடுத்திவிட்டுத்தான் முடிவெடுப்பது வழக்கம். ஆகவே அவருடைய மேடைக்கெதிரே குறைந்தது பத்து இருக்கைகள் எப்போதும் இடப்பட்டிருக்கும்.
பாபு சுரேஷ் அவற்றுள் ஒன்றில் அமர்ந்ததும் அவரையே பார்த்துக்கொண்டு சற்று நேரம் அமர்ந்திருந்த ஃபிலிப் சுந்தரம் சட்டென்று, ‘நான் கேக்காமயே நீங்க சொல்வீங்கன்னு நான் எதிர்பார்த்தேன் மிஸ்டர் பாபு.’ என்றார்.
அவர் குரலில் தெரிந்தது கோபமா அல்லது சலிப்பா என்பதை புரிந்துக்கொள்ளாமல் சற்று நேரம் குழம்பிய பாபு சோமசுந்தரத்தைக் கலந்தாலோசிக்காமல் இவரிடம் உண்மையை கூறுவது எந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நினைத்து சிறிது நேரம் தடுமாறினார். இருப்பினும் வங்கியின் உயர் அதிகாரிகளில் தன்னுடன் மிகவும் கரிசனையுடன் நடந்துக்கொண்டிருந்த இவரிடம் மேலும் உண்மையை மறைப்பது சரியல்ல என்று நினைத்து, ‘Sorry Sir, I had no other alternative.’ என்றார்.
‘So, there is something behind this move..’ என்று தனக்குள் நினைத்தார் ஃபிலிப் சுந்தரம். அவர் குத்துமதிப்பாகத்தான் அந்த கேள்வியை வீசினார்.
‘It’s ok. Tell me. What’s the reason?’
பாபு மேலும் தயங்கவே, ‘Is it that secret Mr.Babu? Is Mr.Somasundaram involved in your decision?’ என்றார்.
ஆமாம் என்பதுபோல் பாபு சுரேஷ் தலையை அசைத்தார்.
ஃபிலிப் சுந்தரம் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தார். சுமார் முப்பதாண்டு காலம் இந்த வங்கியில் பணிபுரிந்திருந்த இவரே இந்த அளவுக்கு தயங்கும் அளவுக்கு அப்படியென்ன காரணம் இருக்க முடியும் என்று நினைத்தார். அப்படியொரு விஷயத்தை இவரை வற்புறுத்தி தெரிந்துக்கொள்வது எந்த அளவுக்கு உசிதம் எனவும் தோன்றவே, ‘If you don’t want to reveal the reason it’s ok Mr.Babu. I just thought that it’d would be in your own interest that you reveal it to someone in the senior hierarchy.. that’s all..’ என்றார்.
அவருடைய குரலில் தொனித்த சலிப்பை உணர்ந்த பாபு சுரேஷ் தன்னுடைய மனதிலிருந்த ரகசியத்தை யாரிடமாவது இறக்கி வைக்க வேண்டும் என்றால் அதற்கு இவரைத் தவிர வேறு யார் இருக்க முடியும் என்று முடிவெடுத்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சோமசுந்தரத்தை சந்திக்க சென்ற அன்று நடந்த சம்பாஷனையை மிகைப்படுத்தாமல் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
அவர் பேசி முடிக்கும்வரை பொறுமையுடன் இருந்த ஃபிலிப் சுந்தரம் இதை தான் தெரிந்துக்கொள்ளாமலே இருந்திருக்கலாம் என்று நினைத்தார். ஆனால் அதே சமயம் வந்தனா மட்டும் இதைக் கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்றும் நினைத்துப் பார்த்தார். அவரை மருத்துவமனையில் சேர்க்க நேர்ந்தது சோமசுந்தரத்திற்கு எந்த அளவுக்கு உதவி செய்திருக்கிறது!
அதெப்படி வந்தனாவுக்கு இப்படி நேரும் என்று ஒரு நாள் முன்பே சோமசுந்தரத்திற்கு தெரிந்திருக்க முடியும் என்றும் தோன்றியது. கெட்டவர்களுக்கு நினைத்த காரியம் நடக்க நல்லவர்களுக்கு இப்படி ஏதாவது நடக்க வேண்டும் போலிருக்கிறது..
‘சார் இத நான் ஒங்கக்கிட்ட சொன்னது சாருக்கு தெரிஞ்சா...’ என்ற பாபு சுரேஷை அனுதாபத்துடன் பார்த்தார்.
‘Don’t worry. I understand your predicament.’ என்றவாறு ஃபிலிப் சுந்தரம் நீங்க போகலாம் என்று குறிப்பால் உணர்த்த பாபு எழுந்து நின்றார்.
‘Sir should I wait here or shall I go home?’
‘Go home?’
பாபு லேசான புன்னகையுடன், ‘நான் இன்னியிலருந்து ஒரு பத்து நாள் லீவ் போட்டுருக்கேன் சார். என் டாட்டருக்கு மேரேஜ் ஃபிக்ஸ் செஞ்சிருக்கேன்னு ஒங்களுக்கு தெரியும்லே? அதுக்காகத்தான். கொஞ்சம் வேலை இருந்திச்சி. இன்னைக்கி காலைல வந்துருங்க. சேர்மன் சார் கிட்ட ஒங்க விஷயமா பேச சரியாருக்கும்னு சோமசுந்தரம் சார் சொன்னதுனாலத்தான் வந்தேன்’ என்றார்.
‘ஓ.. அப்படியா?’ என்ற ஃபிலிப் அடுத்த அரை மணியில் நடக்கவிருந்த இயக்குனர் குழு கூட்டத்திற்கு தேவையான கோப்புகளை கையில் எடுத்துக்கொண்டு எழுந்து நின்றார். ‘You carry on.. I’ll call you in case your presence required, Bye..’
அவர் அறைக்கதவுகளை மூடிக்கொண்டு செல்ல இண்டர்காமை எடுத்து சுந்தரலிங்கத்தின் காரியதரிசியை அழைத்தார். ‘சார் ஃப்ரீயா இருக்காரா? I’d like to meet him for a few minutes before the Board meeting.’
‘Yes Sir, he is in his cabin.’ என்று பதில் வரவே புறப்பட்டு அதே தளத்தில் அமைந்திருந்த அவருடைய அறையை நோக்கி புறப்பட்டார்.
அவருடைய அறைக்கு செல்லும் வழியிலேயே செல் ஃபோன் சிணுங்க எடுத்து யாரென பார்த்தார். சேர்மனின் அந்தரங்க காரியதரிசி சுபோத்!
என்ன இந்த நேரத்தில் என்று சலிப்படைந்த ஃபிலிப் எடுத்து, ‘என்ன சுபோத்? நான் சுந்தரலிங்கம் சார மீட் பண்ண அவர் கேபினுக்கு போய்ட்டு இருக்கேன். எதாருந்தாலும் சுருக்கமா சொல்லுங்க.’ என்றார் வேகமாக.
‘Chairman wants you in his cabin Sir. It’s urgent.’
என்னடா இது ரோதனை. ஏற்கனவே சுந்தரலிங்கம் மேனேஜ்மெண்ட் கமிட்டி கூட்டத்தில் தன்னிடம் பாராமுகமாய் நடந்துக்கொண்டதற்கு பாபு சுரேஷ் விஷயத்தில் புது சேர்மன் அவரைக் கலந்தாலோசிக்காமல் இருந்ததற்கு நான் தான் காரணம் என்று நினைத்திருப்பாரோ என்று குழம்பிப் போயிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும த்ன்னை சேர்மன் தனது அறைக்கு அழைத்தது தெரியவந்தால் என்ன நினைப்பாரோ என்று அவர் தயங்க, ‘Sir could you please come here straight away.. He is waiting to talk to you before the Board Meeting.. Please Sir.’ என்று வற்புறுத்த வேறு வழியில்லாமல் சேர்மன் இருந்த உச்சி தளத்துக்கு செல்லும் லிஃப்டை நோக்கி நடந்தார்.
போகும் வழியில் சுந்தரலிங்கத்தை பிறகு வந்து சந்திப்பதாக தெரிவித்தாலென்ன என்று தோன்றவே அவருடைய காரியதரிசியை அழைத்து, ‘Have you informed CGM that I was coming to meet him?’ என்றார்.
அவரோ, ‘Sorry Sir.. I thought you were coming straight away.’ என்று சுந்தரலிங்கத்திடன் தெரிவிக்காத தன்னுடைய தவறுக்கு வருந்த நிம்மதியடைந்த ஃபிலிப் சுந்தரம், ‘Don’t worry. I’ve some urgent work to do. I’ll meet him later.’ என்று இணைப்பைத் துண்டித்தவாறு சேர்மனின் சாம்பரில் நுழைந்து தனக்காக வாயிலிலேயே பதற்றத்துடன் காத்திருந்த சுபோத்தை பார்த்ததும், Is there anybody else in the room?’ என்றார்.
சுபோத் ஆமாம் என்று தலையை அசைக்க ‘who are all there?’ என்று சப்தம் வெளியில் வராமல் உதடுகளை மட்டும் அசைத்தார்.
‘Only Mr.Nadar Sir. Both of them are waiting for you. Please go.’
ஒருவேளை பாபு சுரேஷ் விஷயத்தில் நாடார் ஏதாவது புதிதாக முட்டுக்கட்டை இடப் போகிறாரோ என்ற நினைப்பில் கையிலிருந்த கோப்புகளுடன் அவர் விரைய பின்னாலிருந்து சுபோத்தின் குரல் வந்தது. ‘Sir If you don't mind, I’ll keep those files..’
அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்த ஃபிலிப் சுந்தரம் தன் கையிலிருந்த கோப்புகளை அவரிடம் கொடுத்துவிட்டு சேர்மனின் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு நுழைந்தார்.
தொடரும்..
3 comments:
வாங்க அரவிந்தன்,
சூரியனை மேகம் மறைத்துவிட்டதா? சிறிது நாட்களாக காணவில்லையே?//
ஆமாங்க அலுவல்கள் என்ற மேகம்..
அத்துடன் யாருமே பின்னூட்டம் இட்டு விமர்சிப்பதில்லை.. இதை யாரும் படிக்கிறார்களா என்றே தெரியாத நிலையில் சரி சிறிது நாட்கள் நிறுத்தித்தான் பார்ப்போமே என்று நினைத்தேன்..
திங்கள் முதல் தொடரும்..
ஏன் சார் பின்னூட்டம் இடவில்லை என்றால் படிக்கவில்லை என்று அர்த்தமா?. தினசரி வந்து பார்க்கிறேன். முதலில் எல்லாம் சரியாக பதிவு வந்துவிடும். இப்போதெல்லாம் ....
அங்க பம்பாய் வேற அம்போன்னு நிக்குது!!
ஏன் சார் பின்னூட்டம் இடவில்லை என்றால் படிக்கவில்லை என்று அர்த்தமா?. //
அதானே.. ஆனா அதே சமயம் பின்னூட்டம் என்பது ஒரு டானிக் மாதிரி இல்லையா?
அங்க பம்பாய் வேற அம்போன்னு நிக்குது!! //
பம்பாய்தான் இப்ப மழையில மாட்டிக்கிட்டு முழிக்கிதே:)
மழை கொஞ்சம் நிக்கட்டும் தொடரலாம்:)
Post a Comment