17.8.06

சூரியன் 119

போர்ட் மீட்டிங் முடிந்ததும் தன்னுடைய இலாக்கா சம்பந்தப்பட்ட கோப்புகளை கையிலெடுத்துக்கொண்டு புறப்பட்ட ஃபிலிப் சுந்தரம் தனக்கருகில் அமர்ந்திருந்த சுந்தரலிங்கத்தைப் பார்த்தார்.

அவருடைய முகத்தில் தெரிந்த ஒருவித சோகம் ஃபிலிப்பை சங்கடத்திற்குள்ளாக்கியது.

தன்னுடைய இருக்கையில் மீண்டும் அமர்ந்து அறையிலிருந்த மற்ற இளைய அதிகாரிகளை நீங்க போலாம் என்று கண்சாடை காட்டினார். அவர்கள் அதை புரிந்துக்கொண்டு தங்களுடைய கோப்புகளை எடுத்துக்கொண்டு வெளியேற, ‘சார்.. என்ன யோசிக்கிறீங்க?’ என்றார் மிருதுவாக.

ஒன்றுமில்லை என்று தலையை மட்டும் அசைத்துவிட்டு எழுந்து நின்றார் சுந்தரலிங்கம்.

ஃபிலிப் சுந்தரமும் எழுந்து நின்று, ‘சார் என் ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு. அத முடிச்சிட்டு ஒங்க ரூமுக்கு வரேன். எனக்கும் ஒங்கக் கிட்ட கொஞ்சம் பேசணும்.’ என்றார்.

சுந்தரலிங்கம் நின்று திரும்பி அவரைப் பார்த்தார். பிறகு சரி என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு அறையை விட்டு வெளியேற ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன்னுடைய அறையை நோக்கி விரைந்தார் ஃபிலிப்.

அவர் அறையை நெருங்கியதும் அவருடைய காரியதரிசி, ‘பாபு சுரேஷ் சார் ரெண்டு மூனுதரம் கூப்ட்டுட்டார் சார்.’ என, ‘I’ll call him later. Tell him if he calls again. I need to be alone for a few minutes. Don’t route any calls to me till I tell you.’ என்றவாறு தன் அறைக்குள் நுழைந்து தன்னுடைய பிரத்தியேக தொலைப்பேசியை எடுத்து சுழற்றினார்.

எதிர்முனையில் எடுத்ததும் கடகடவென ஆணைகளைப் பிறப்பித்தார். இறுதியில் ‘I would like to know how the news leaked out. Find out.. Fast.’ என்ற ஆணையுடன் இ¨ணைப்பைத் துண்டித்துவிட்டு அன்றைய இயக்குனர் கூட்டத்தில் தன் இலாக்கா சார்பாக சமர்ப்பித்திருந்த கோப்புகளில் எடுக்கப்பட்ட முடிவு சம்பந்தப்பட்ட ஆணைகளை தன்னுடைய portable dictator இயந்திரத்தில் பதிவுசெய்து முடித்தார்.

பிறகு காரியதரிசியை அழைத்து இயந்திரத்தை அவரிடம் ஒப்படைத்து, ‘இதுல இன்னைக்கி போர்ட்ல வச்ச நம்ம டிப்பார்ட்மெண்ட்சோட ப்ரொப்போசல்ஸ் சம்பந்தப்பட்ட எல்லா instructionsஐயும் ரெக்கார்ட் பண்ணிருக்கேன். எல்லாத்தையும் ஒங்க பி.சியில ஏத்திட்டு என் லேப் டாப்லருக்கற ஷேர்ட் ஃபோல்டர்ல காப்பி பண்ணிருங்க. அத்தோட ஒரு டிராஃப்ட் காப்பி எடுத்து எச்.ஆர், இன்ஸ்பெக்ஷன் அப்புறம் அக்கவுண்ட்ஸ் செக்ஷன் ஹெட்ஸ் கிட்ட அவங்கவங்க போர்ஷன குடுத்து என்ன செய்யணுமோ அத உடனே செய்ய சொல்லுங்க. நான் சி.ஜி.எம் சார பார்த்துட்டு வர்றதுக்குள்ள செஞ்சி முடிச்சிருக்கணும். புரிஞ்சிதா?’ என்றார்.

அவரை ஐந்து வருடத்துக்கு மேல் பெர்சனலாக அறிந்திருந்த அவருடைய காரியதரிசி ராஜி எப்போதுமில்லாத ஒரு கண்டிப்பு அவருடைய குரலில் இருந்ததை கவனித்தாள். ‘இன்னைக்கி போர்ட்ல என்னவோ நடந்திருக்கு. இல்லன்னா சார் இந்த அளவுக்கு டென்ஷனா இருக்க மாட்டார்.’ என்று நினைத்தாள்.

இருப்பினும், ‘ஓக்கே சார்.’ என்றவாறு இயந்திரத்தையும் கோப்புகளையும் பெற்றுக்கொண்டு ராஜி வெளியேற ஃபிலிப் சுந்தரம் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடியவாறு சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்.

இது தன்னுடைய அலுவலக வாழ்க்கையில் ஒரு கஷ்டமான காலக்கட்டம் என்பதை உணர்ந்தார். முந்தைய முதல்வர் இயக்குனர் குழுவிடம் ஒத்துப்போக முடியாமல் பதவி விலகியதிலிருந்தே இயக்குனர் குழுவில் மூத்தவர்களான சோமசுந்தரம் மற்றும் சிலுவை மாணிக்க நாடார் இருவருக்கும் இடையில் நடந்த பனிப்போரில் தானும் ஒரு பகடைக் காயாய் உபயோகிக்கப்பட்டதை நினைத்து அவ்வப்போது சோர்ந்துபோயிருந்தார்.

புது தலைவர் வந்து பதவியேற்றதும் தனக்கு நிம்மதி கிடைக்கும் என்று நினைத்தவருக்கு அவர் பதவியேற்ற முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகள் மேலும் கவலையையே அளித்தது.

அன்று காலையில் முதல்வரின் அறையில் சோமசுந்தரம் அவரை ஒருவிதத்தில் நிர்பந்தித்து பாபு சுரேஷை எச்.ஆர் இலாக்காவிற்கு தலைவராக நியமித்தது, அதன் பிறகு ஆடிட் கமிட்டியில் பாபு சுரேஷை பரிந்துரைத்ததே நாந்தான் என்பதுபோல் அவரே உண்மைக்கு புறம்பாக கூறி நாடாரை வெறுப்பேற்றியது, அதன் பிறகு பாபு சுரேஷ் தன்னை சோமசுந்தரம் எச்.ஆர். தலைவராக நிர்பந்தித்ததன் பின்புலம் இதுதான் என்று கூறிய ரகசியத் திட்டம், பிறகு சேர்மன் அவரை தன்னுடைய அறைக்கு அழைத்து நாடார் முன்னிலையில் தன்னிடமிருந்து அந்த ரகசிய திட்டத்தை வரவழைத்தது, அத்துடன் நில்லாமல் சோமசுந்தரம் பற்றிய செய்தி எப்படி பத்திரிகைகளில் வெளிவருவதற்கு முன் தனக்கு ஃபேக்ஸ் மூலம் வந்தது என்பதை கண்டுப்பிடிக்கும் பொறுப்பைத் தன் மேல் சுமத்தியது..

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக சோமசுந்தரமே ஒரு சிக்கலில் சிக்கிக்கொண்டு இயக்குனர் குழுவிலிருந்து ராஜிநாமா செய்தது...

ஒரே நாளில் இத்தனைக் குழப்பங்களா என்று மாய்ந்துப்போனார் ஃபிலிப்.. It’s quite natural that Sundaralingam Sir feels aggrieved that he has not been privy to these things..

அவரை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று நினைத்தார். Sooner the better என்று தோன்றவே எழுந்து அவருடைய பிரத்தியேக உணவறைக்குள் நுழைந்து முகத்தைக் கழுவி அழுந்தத் துடைத்துக் கொண்டு சுந்தரலிங்கத்தின் அறையை நோக்கி விரைந்தார்.

*******

கார் கிளம்பி சென்னை அண்ணா சாலையிலிருந்த போக்குவரத்து சற்றே குறையும்வரை காத்திருந்த மஞ்சு திரும்பி வாகனத்தை செலுத்துவதில் கவனமாயிருந்த தன் கணவன் ரவியைப் பார்த்தாள்.

பாவம்.. மனிதர் பாதி ஆளா இளைச்சி.. இந்த ஒரு மாசமா தனியா இருந்தது அவர இந்த அளவுக்கு பாதிச்சிருக்கே.. இது தெரியாம நான் அங்க எவ்வளவு நிம்மதியா இருந்துருக்கேன்..

‘நீ நெனக்கிறா மாதிரி இல்லேடி மஞ்சு.. நேக்கென்னவோ ரவி ஒரு அடம் புடிக்கற குழந்தையாட்டந்தான் தெரியறது. அவருக்கே தனக்கு என்ன வேணுங்கறது தெரியறதான்னு தெரியலை.. நீ விட்டுட்டு போனதும் மனுசன் தவியா தவிச்சி போய்ட்டார் தெரியுமோ.. பாவம்டி சீக்கிரம் வந்து சேந்துரு..’ பக்கத்துவீட்டு மாமி அவளை தேடி வந்து உபதேசித்தபோதுதான் தன்னுடைய தவறு புரிந்தது அவளுக்கு.

‘என்ன மஞ்சு..ஏதோ யோசனையில இருக்கறாப்பலருக்கு.’

மஞ்சு திடுக்கிட்டு திரும்பி ரவியைப் பார்த்தாள். ‘இல்ல ரவி.. ஒங்களப் பத்தித்தான்..’

ரவி புன்னகையுடன் அவளைப் பார்த்தான். ‘என்னடா இந்தாள இனியும் எத்தன நாளைக்கு சகிச்சிக்கிட்டு இருக்கறதுன்னா?’

மஞ்சு அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். ‘என்ன ரவி? ஏன் இப்படி சொல்றீங்க?’

ரவி சிரித்தான். ‘ஏய் Don’t get upset. சும்மா ஒரு விளையாட்டுக்குத்தான் சொன்னேன்..’

மஞ்சு சமாதானமடைந்து சாலையை நோக்கி திரும்பினாள். சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாயிருந்ததால் ரவியும் மேற்கொண்டு பேசாமல் வாகனத்தை செலுத்துவதில் கவனமாயிருந்தான்.

சிறிது நேரம் கழித்து வாகன நெரிசலைக் கடந்ததும் ரவி திரும்பி அவளைப் பார்த்தவாறு பேசினான். ‘இன்னைக்கி ஆஃபீஸ் ஃபைல்ச படிச்சதுல என்னெப் பத்தி ஏதாவது ஒரு ஒப்பீனியன் ஃபார்ம் பண்ணியிருப்பியே?’

‘ஆமாங்க. ஆனா அத வெளிப்படையா சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னா சொல்றேன்.’ என்றாள் மஞ்சு.

‘சொல்லேன். அதுக்காகத்தான ஒன்னைய கூப்பிட்டுக்கிட்டு போனேன்? என் மேல அக்கறையிருக்கறவங்க நான் செஞ்சிருக்கறது இந்த மாதிரியான தண்டனைக்குரியதுதானான்னு தெரிஞ்சிக்கணும்னு நினைச்சித்தான் உன்னையும் அந்த ஃபைல்ச படிக்க வச்சேன். சொல்லு.. மனசுலருக்கறத மறைக்காம சொல்லு..’

மஞ்சு சற்று நேர மவுனத்திற்குப் பிறகு, ‘நீங்க செஞ்சது ஒங்க பேங்கோட ரூல்சுக்கு நிச்சயமா முரணானதுதான் ரவி. இதுவே கவர்ன்மெண்ட் ஆஃபீசாருந்தா நிச்சயம் இதவிட சீரியசான பனிஷ்மெண்ட் கிடைச்சிருக்கும்னு நா ஃபீல் பண்றேன்.’ என்றாள்.

மஞ்சுவின் இத்தகைய பதிலை முற்றிலும் எதிர்பார்க்காத ரவி அதிர்ச்சியுடன் திரும்பி அவளைப் பார்த்தான். ‘ஏன் அப்படி சொல்றே?’

மஞ்சு அவனை பார்க்காமல் சாலையைப் பார்த்தவாறே பதிலளித்தாள். ‘ரவி, நீங்க ஒங்க பார்வையிலருந்து மட்டும் பாக்கறீங்க. ஒங்க நோக்கம் எல்லாம் பிசினச டெவலப் பண்ணணும்.. மேல, மேல க்ரோத் (growth) காமிச்சிக்கிட்டே இருக்கணுங்கறதுதான்..ஆனா ஒங்க நோக்கத்த அச்சீவ் பண்றதுக்காக காலம் காலமா இருந்துக்கிட்டு வர்ற ப்ரொசீஜர்சே (procedures) வயலேட் (violate) பண்றது எந்த அளவுக்கு சரிங்கறத நீங்க யோசிச்சி பாக்கல்லன்னு நினைக்கிறேன். நீங்க செஞ்சிருக்கற ஒவ்வொரு வயலேஷனும் ஒங்க கஸ்டமருக்குத்தான் சாதகமா இருந்துருக்கே ஒழிய பேங்குக்கு இல்லையே.. நீங்க ஒங்க கஸ்டமர்ச நம்பி டெலிவரி லெட்டர்ல ரூல்சுக்கு எதிரா கையெழுத்து போட்டு குடுத்துருக்கீங்க. ஏன்? அவங்க குட்ஸ டெலிவரி எடுத்து வித்து பணத்த கட்டி பேங்க்லருக்கற இன்வர்ட் பில்ச ரீடீம் (redeem) செஞ்சிருவாங்கன்னு நம்பித்தானே? ஆனா ஏறக்குறைய எல்லா கஸ்டமர்சுமே ஒங்கள ஏமாத்தியிருக்காங்களே? அதனால இப்ப யாருக்கு நஷ்டம் ரவி? பேங்குக்கு பணம் நஷ்டம்.. ஒங்களுக்கு? பேர் நஷ்டம்.. ஏறக்குறைய இருபது வருசமா கஷ்டப்பட்டு நீங்க உண்டாக்கி வச்சிருந்த நல்ல பேர், ரெப்யூட்டேஷன்.. எல்லாம் ஒன்னுமில்லாம போயிருச்சி.. சரிதானே ரவி?’

மஞ்சு சொல்வதில் இருந்த நியாயம் புரியவே ரவி மவுனமாக வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தான். இருந்தாலும் அது மஞ்சுவின் தரப்பிலிருந்து வந்ததுதான் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவனாக விரும்பித்தான் இந்த கேள்வியை அவளிடம் கேட்டான்.

கணவன் என்ன செய்திருந்தாலும் அதில் தவறில்லை என்ற கோணத்தில் பார்க்க அவளொன்றும் படிப்பறிவில்லாத பாமரப் பெண் அல்லவே. படித்து பட்டம் பெற்று பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு அலுவலகத்தில் பணியாற்றியவளாயிற்றே..

‘என்ன ரவி.. நா ஏதாச்சும் தப்பா சொல்லிட்டேனா?’

ரவி இல்லையென்றவாறு தலையை அசைத்தான். ‘இல்ல மஞ்சு.. சரியாத்தான் இருக்கு உன் வாதம்.. சரி.. இப்ப சொல்லு.. இதுலருந்து என்னால விடுபட்டு இந்த வேலைய காப்பாத்திக்க முடியும்னு நீ நினைக்கியா?’

மஞ்சு சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு, ‘முடியுங்க. என்க்வயரின்னு வந்துட்டா நாம எந்த தப்பும் செய்யலேங்கற வாதத்ததான முன் வைக்கணும்? நம்ம பக்கத்து வீட்டு மாமா கூட இன்னைக்கி காலையில அதத்தான் சொன்னார். மஞ்சு, ரவி என்ன செஞ்சிருக்காருங்கறது முக்கியமில்ல.. அதுக்கு பின்னாலருக்கற பாசிட்டிவ் மோட்டிவ நாம வெளியில கொண்டுவரணும்.. அவர் செஞ்சதுக்கு தப்பான மோட்டிவ் ஏதும் இல்லங்கறது நாம ப்ரூவ் பண்ணணும்னு சொன்னார். அதத்தான் இப்ப நாம செய்யணும்..’ என்றாள் உறுதியுடன்..

ரவி தன்னையுமறியாமல் அவளை மனதுக்குள் மெச்சிக்கொண்டான். இந்த மாதிரி புத்திசாலி மனைவிய அடையறதுக்கு நா எவ்வளவு குடுத்து வச்சிருக்கணும்? ஆரம்பத்திலருந்தே இவ சொன்ன பேச்ச கேட்டு நடந்திருந்தா எவ்வளவு நல்லாருந்துருக்கும்? கண் கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்.. ஊம்.. ‘தாங்ஸ் மஞ்சு.. I am really grateful to you.. நா என்ன நினைச்சிக்குவேன்னு யோசிக்காம மனசுலருக்கறத வெளிப்படையா சொன்னதுக்கு தாங்ஸ்..’

மஞ்சு பதிலளிக்க முயல்வதற்கு முன் வாகனம் அவர்களுடைய வீட்டையடைய வாசலிலேயே இறங்கிக்கொண்டு ரவி அவர்களுக்கென குறிக்கப்பட்டிருந்த இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு வரும்வரை அவனுக்காக காத்திருந்தாள்..

தொடரும்

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

நோக்கத்தில் தவறில்லை;வழிமுறையில் குறை
உள்ளது-மஞ்சு புத்திசாலிதான்.
ஆனால் போட்டிகள் மிகுந்த அவசரமான உலகத்தில் வெற்றிக்கோட்டை மட்டுமே குறியாகக்
கொண்டு வயிறு வெடிக்க ஓடும்
குதிரைகள் பலவுண்டு. ரவியும் அப்படிப்பட்ட ஒரு குதிரைதான்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ஆனால் போட்டிகள் மிகுந்த அவசரமான உலகத்தில் வெற்றிக்கோட்டை மட்டுமே குறியாகக்
கொண்டு வயிறு வெடிக்க ஓடும்
குதிரைகள் பலவுண்டு. ரவியும் அப்படிப்பட்ட ஒரு குதிரைதான் //

உண்மைதான். ஆனா தடுக்கி விழறப்போ தூக்கிவிட யாருமே இருக்கமாட்டாங்க. அப்பத்தான் தெரியும் நமக்கு இலக்கு மட்டுமே முக்கியமில்லங்கறது..