10.11.06

சூரியன் 140

தொலைப்பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு மவுனமாக அமர்ந்திருந்த மாணிக்கம் நாடாரையே பார்த்தார் மோகன்.

நாடாரை அவருக்கு சுமார் பதினந்துவருடமாக தெரியும்.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கட்டாய திருமணம் தோல்வியில் முடிந்து வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் சோர்ந்துபோயிருந்த நேரத்தில் நாடாருடைய மருமகன் செல்வத்தை அவனுடைய உணவகத்தில் சந்தித்து அவன் வழியாக நாடாருடைய அறிமுகம் கிடைத்து..

இந்த பதினைந்தாண்டு காலத்தில் நாடாருடைய சட்ட ரீதியான எல்லா அலுவல்களும் மோகன் வசம்தான். துவக்கத்தில் நாடாருடைய அணுகுமுறைகள் மோகனுடைய சிந்தனைகளுக்கு முரணாக இருந்ததைப் பார்த்து அவர் தயங்கியதுண்டு.

அப்போதெல்லாம் செல்வம், ‘சார்.. மாமாவோட எண்ணம் நல்லதுதான். என்ன, அவர் வாழ்க்கையில பட்ட அடிகளோட தாக்கம் சில சமயங்கள்ல அவருடைய நடவடிக்கைகள்ல தெரியும். அவரென்ன சார்.. எனக்கும் அப்படிப்பட்ட வலிகள் நிறையவே இருக்கு. மாமாவா பார்த்து என்னெ கைதூக்கி விட்டிருக்கலன்னா நா இப்ப எங்கயாவது எடுபிடி வேலை செஞ்சி.. மாமாவா யாரையும் போயி அடிக்கறதில்லையே சார்.. அவருக்கு வாழ்க்கையில முன்னுக்கு வர்றதுக்கு உழைப்பு மட்டும் போறாது.. இந்த மாதிரியெல்லாம் செய்யணுங்கற பிடிவாதம்.. எல்லாரையும் நேசிக்கறதுக்கு நாம என்ன கர்த்தராடான்னு கேப்பார்.. ஆனா அதுக்காக அவர் எல்லாரையும் கவுக்கணும்னு நினைக்கறதில்லையே சார்.. யாராச்சும் அவர கவுக்கணும்னு நினைச்சா விடமாட்டார்.. அவ்வளவுதான்..’ என்று பேசி மோகனை சமாதானப்படுத்திவிடுவான்..

அவன் சொல்வதும் உண்மைதான் என்பதை நாளடைவில் மோகன் புரிந்துக்கொண்டாலும் நாடார் எல்லை மீறி செல்கின்ற நேரங்களில் தன்னுடைய எதிர்ப்பை உணர்த்தாமல் இருந்ததில்லை.

‘நாடார்.. நீங்க சொல்றத சொல்லிட்டீங்க.. ஆனா இந்த பிரச்சினையை நான் என் போக்குல சால்வ் பண்ண விடுங்க.. நா தோத்துட்டா நீங்க சொல்றா மாதிரி செய்யலாம்..’ என்று வாதிடுவார்.

நாடாரும், ‘தம்பி.. நீங்களும் செல்வம் மாதிரிதான் எனக்கு.. ஆம்பிளை பிள்ளைங்க இல்லாத குறைய ஒங்க ரெண்டு பேரையும் பார்த்து தீத்துக்குறேன்.. நீங்க சொல்றா மாதிரி முயற்சி பண்ணுங்க.. நான் காத்துக்கிட்டிருகேன்.. நீங்க தோக்கக் கூடாதுன்னு நா வேணும்னா கர்த்தர வேண்டிக்கறேன்.. ஆனா அதுக்கப்புறம் நா சொல்றத நீங்க கேக்கணும்..’ என்று மோகனுடைய போக்கிலேயே விட்டுவிட்டு அவராக போய் தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொள்ளும்வரை காத்திருப்பார்.

மோகனுடைய அணுகுமுறை சில நேரங்களில் வெற்றியைக் கொடுத்திருந்தாலும் நாடாருடைய அணுகுமுறையிலும் தவறில்லை என்பதை பல நேரங்களில் மோகன் உணர்ந்திருக்கிறார்.

அதே சமயம் கரடு முரடான சிந்தனைகளைக் கொண்ட நாடாருடைய மனதிலும் ஈரம் இருப்பதை பல சமயங்களில் மோகன் கவனித்திருக்கிறார்.

ஒருமுறை சென்னையிலுள்ள மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் இல்ல ஆண்டு விழாவன்று தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த சுமார் ஆயிரம் குழந்தைகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினம் மூன்று வேளை உணவு, காப்பி, சிற்றுண்டி என்று தன்னுடைய தலைமை உணவகத்திலிருந்து இலவசமாக எந்தவித சுயவிளம்பரமும் இல்லாமல் அளித்ததை நினைத்து மோகன் பல சமயங்களிலும் பெருமை பாராட்டியிருக்கிறார்.

தன்னுடைய ஒரே மகள் ராசம்மாள் விரும்பிவிட்டாளே என்பதற்காக அவளுக்கு எந்தவிதத்திலும் பொருத்தமில்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ராசேந்திரனை தன்னுடைய விருப்பத்திற்கெதிராக திருமணம் முடித்துவைத்தது, சுமார் ஐம்பது லட்சம் பெருமானமுள்ள பங்களாவை அவனுக்கு திருமண அன்பளிப்பாக அழைத்தது.. அத்துடன் திருப்தியடையாமல் ராசேந்திரன் நாடாருடைய நிறுவனத்திலிருந்து லட்சம், லட்சமாக கொள்ளையடித்ததைக் கண்டும் காணாததுபோல் இருந்தது..

இதோ, இப்போது அவர் இயக்குனராக இருந்த வங்கியில் தன்னையும் ஒரு இயக்குனராக சேர்க்க முயல்வது..

‘என்ன மோகன் தம்பி என்ன அப்படி பாக்கீங்க.. நான் சொன்னதுல தப்பு ஏதும் இருக்கா என்ன?’

இல்லையென்பதா, ஆமாமென்பதா என்ற ஆலோசனையுடன் மோகன் அவரை குழப்பத்துடன் பார்க்க நாடார் உரக்க சிரித்தார்.

‘தம்பி.. இதெல்லாம் ஒரு விளையாட்டு பாத்துக்கிருங்க.. இப்ப பாருங்க.. அந்த சோமசுந்தரம் திடுதிடுப்புன்னு வெளியில போவேண்டியிருக்கும் நீங்க நெனச்சீங்களா இல்ல நா நெனச்சனா? அவனெ மாதிரி நானுந்தானே எங்கெங்கயோ கைமாத்து வாங்கிருக்கேன்.. ஆனா இவன மாதிரி மாட்டிக்கிட்டனா என்ன? கொள்ள அடிச்சாலும் ஒளுங்கா செய்யணுமில்லே.. கிறுக்குப் பய.. சரி அது கெடக்குது களுத.. இப்ப சொல்லுங்க.. நா அந்த சுந்தரம் சார்கிட்ட சொன்னதுல தப்பு இல்லேல்லே?’

மோகன் தயக்கத்துடன் அவரைப் பார்த்தார். ‘இருந்தாலும்...’

நாடார் சிரித்தார். ‘சும்மா சொல்லுங்க.. என்ன தயக்கம்.. அது சரி.. நீங்கல்லாம் படிச்சவங்க.. அதான் இதுக்கு இத்தனெ யோசிக்கீங்க.. அந்த சுந்தரம் சாரும் நம்ம ஆளுதான் தம்பி.. எங்கயும் போய் சொல்லிரமாட்டார்..’

‘அதுக்கில்ல சார்.. இப்ப ஒங்க போர்ட்ல வந்திருக்கற வேக்கன்சி டாக்டரோடது.. நியாயமா அவரோட கேண்டிடேட் ஒருத்தருக்குத்தான் அந்த இடம் போகணும்.. இதுல நாம இடைபட்டு இப்படி யோசிக்கறதே சரியில்லன்னு எனக்கு படுது..’

மோகனின் முகத்தில் தெரிந்த சங்கடம் நாடாரை உரக்கச் சிரிக்க வைத்தது.

‘தம்பி.. நீங்க சொல்றது சரிதான் .. இல்லேங்கல.. ஆனா அந்த டாக்டர் பய இருக்கானே அவன் விஷயத்துல இதயெல்லாம் பாக்கப்படாது.. அவன் ஈர பேனாக்கி பேன பெருமாளாக்குவான்னு சொல்வீங்களே அந்த மாதிரி ஆளு.. இன்னைக்கி பாருங்களேன்.. காலையில திடுதிடுப்புன்னு அவன் சிங்கடி இருக்கானே அந்த பாபு.. அதான்யா அந்த மவுண்ட் ரோட் ப்ராஞ்ச்லருக்கானே.. அவனெ கொண்டு வந்து அந்த ஆஸ்பத்திரிலருக்கற மேடம் சீட்ல ஒக்கார வைக்கலாம்கறான்.. அதுக்கு நம்ம சுந்தரம் சார மெரட்டி ஒத்தூத வச்சிருக்கான்.. பாவம் அந்த மனுசன்.. நா இருக்கறேனேன்னு மெல்லவும் முடியாம விளுங்கவும் முடியாம.. ஏய்யா.. ஆஸ்பத்திரியில சீக்கா கெடக்கற நேரத்துலயுமா இப்படி செய்யணுங்கறதையாவது யோசிச்சிருக்க வேணாம்? இல்லேல்லே.. அப்புறம் எதுக்கு நாம மட்டும்? நீங்க சும்மாருங்க தம்பி.. அவன் ஏளு வருசமா ஆட்டம் போட்டான் இல்லே.. இனி நாமளும் கொஞ்சம் ஆட்டம் போடுவோம்..’

மோகன் என்ன சொல்வதென புரியாமல் அவருடைய முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மாலை மணி ஐந்தைக் கடந்திருந்தது. அன்று இரவு மாற்றலாகிச் செல்லவிருந்த உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதிக்கு பிரிவு உபசார விழா இருந்தது நினைவுக்கு வந்தது. இப்போதே புறப்பட்டுப் போனால்தான் குளித்து முடித்து போய்ச் சேர சரியாயிருக்கும்.

‘என்ன தம்பி.. எங்கயாச்சும் போகணுமா?’

மோகன் திடுக்கிட்டு அவரைப் பார்த்தார். இல்லை என்று தலையை அசைத்தார்.

நாடார் புரிந்துக்கொண்டு சிரித்தார். ‘புரியுது தம்பி.. நான் சொன்னதுல எனக்கு உடன்பாடில்லைங்கறத சூசகமா சொல்றீங்க.. இருக்கட்டும்.. இருக்கட்டும்.. பரவால்லை.. நீங்களும் நம்ம செல்வம் பய மாதிரித்தான் யோசிக்கறீங்க.. அவனும் இப்படித்தான். நான் கொஞ்சம் எல்ல மீறுறா மாதிரி தெரிஞ்சா போறும்.. வேணாம் மாமாம்பான்.. சரிதான் போடான்னுருவேன்.. ஆனா யோசிச்சிப் பார்த்தா அவன் சொல்றதும் சரியாத்தான் இருக்கும்.. பாப்போம்.. ரெண்டு நா ஆறப்போட்டு யோசிப்போம்.. ஆனா ஒன்னு தம்பி..’ அவரை மேற்கொண்டு பேச விடாமல் அவருடைய செல் ஃபோன் சினுங்க எடுத்து யாரென்று பார்க்காமலே, ‘யார்ய்யா இது.. என்ன வேணும்?’ என்றார் எரிச்சலுடன்..

எதிர்முனையில் இருந்தவரின் குரல் கேட்டதும் உரக்க சிரித்தார். ‘டாக்டரே.. ஒமக்கு ஆயுசு கெட்டிய்யா.. இப்பத்தான் ஒம்மப் பத்தி நம்ம வக்கீல் தம்பிக்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்..’

******

‘சொல்லுங்க வந்தனா. இப்ப எப்படியிருக்கு?’ என்றார் ஃபிலிப் சுந்தரம் செல்ஃபோனில்.

எதிர்முனையிலிருந்து வந்த குரல் மிகவும் மென்மையாக இருக்கவே சற்று கூடுதலான இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்த குளிரூட்டும் பெட்டியை அணைத்துவிட்டு, வந்தனா கூறிமுடித்ததை சரிவர கேட்காமலே, ‘அப்படியா.. சரி..’ என்றார்.

‘தாங்க்யூ சார்.. நான் ரெண்டு நாளைக்கப்புறம் பேசறேன்.’ என்றவாறு வந்தனா துண்டிக்க குழப்பத்துடன் சுந்தரம் எதுக்கு ஃபோன் பண்ணங்க.. எதுக்கு தாங்க்யூன்னு சொல்லிட்டு டிஸ்கனெக்ட் செஞ்சாங்க.. என்ன சொன்னாங்கன்னே சரியா கேட்டுக்காம சரின்னு சொல்லிட்டமோ.. என்று நினைத்தார்.

எல்லாம் இந்த ஓட்ட ஏசி மிஷினால.. மொதல்ல நாளைக்கே பிரமிசஸ் டிப்பார்ட்மெண்ட்ல சொல்லி மாத்த சொல்லணும்..

‘என்ன, ரெண்டு மூனு நாள் லீவுன்னு சொல்லியிருப்பாங்க.. ஒடம்பு சரியில்லாத நேரத்துல வேற என்னத்தெ கேட்டுருக்கப் போறாங்க’ என்று தன்னைத்தானே சமாதானம் செய்துக்கொண்டு சேர்மன் அலுவலகத்திலிருந்து புறப்படும் முன் அவரைக் காணவேண்டும் என்ற எண்ணத்துடன் மாதவனுடைய காரியதரிசியை அழைத்தார்.

எதிர் முனையிலிருந்து வந்த செய்தியைக் கேட்டதும் தன்னையுமறியாமல் இரைந்தார்.‘என்ன சொல்றீங்க சுபோத்..? நான் ஒங்கக் கிட்ட என்ன சொல்லியிருந்தேன்..? சேர்மன் புறப்படறதுக்கு முன்னால நான் பாக்கணும்னு சொன்னேனா இல்லையா? Why didn’t you inform me in time?’

பிலிப் சுந்தரம் இத்தனைக் கோபப்பட்டு பார்த்திராத சுபோத் எப்படி பதிலளிப்பதென தெரியாமல் ஒரு நொடி தடுமாறிப் போனான். வங்கியின் முதல்வர் அலுவலை முடித்துக்கொண்டு வெளியேற நம்முடைய அனுமதியை கேட்பாரா என்ன? அவர் கிளம்புவது என முடிவெடுத்த பிறகு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற ரீதியில் ஓடியது அவனுடைய சிந்தனை..

ஆனால் அதை அப்படியே வெளியில் சொல்ல முடியாதே.. ‘Extremely sorry Sir.. Even ED wanted me to inform him as soon as the Police Officer left.. But I could not do it.. Chairman just decided to leave Sir.. That’s why I could not inform you..’ என்றான் மென்று விழுங்கி..

சுபோத் கூறியதிலிருந்த நியாயம் உரைக்க வேறுவழியில்லாமல், ‘It’s OK Subodh..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்..

சேதுமாதவன் சேர்மனை சந்திக்க விரும்பினாரா? எதற்கு? ஒருவேளை பாபு சுரேஷின் நியமனத்தில் தன்னைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று வாதாட நினைத்திருப்பாரோ.. இல்லை.. சோமசுந்தரத்தின் ராஜிநாமா பற்றியா? இல்லை அந்த ஃபேக்ஸ் விஷயமா?

ஃபேக்ஸ் விஷயம் நினைவுக்கு வந்ததும் நாடாருக்கு என்ன பதிலளிப்பதென சிந்திக்கலானார்.

அவரிடம் கூறுவதற்கு முன்பு மாதவனிடம் இதைப் பற்றி கலந்தாலோசிக்க வேண்டும் என்று தான் நினைத்தது நடக்காமல் போய்விட்டதே என்ற கலக்கம் வேறு அவரைப் பிடித்துக்கொள்ள இப்போது என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

பணிக்கு சேர்ந்த முதல் நாளே அலுவலக நேரத்திற்கு பிறகு அவரை செல்ஃபோனில் தொடர்புக் கொண்டு அலுவலக விஷயத்தைக் குறித்து பேசுவது அவ்வளவு நன்றாக இருக்காதே என்றும் அவருடைய சிந்தனை ஓடியது..

ஆனால் அதே சமயம் அவரைக் கலந்தாலோசிக்காமல் நாடாரிடம் தனக்கு கிடைத்த தகவலை தெரிவிப்பதால் பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதும் அவருக்கு தெரியும்..

இதென்னடா தேவையில்லாத சோதனை என்று சோர்வுடன் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார்... நேரம் ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது..

எந்த நேரத்திலும் நாடாருடைய தொலைப்பேசி அழைப்பு வரப்போகிறது என்று அவர் நினைக்கவும் அவருடைய செல்ஃபோன் ஒலிக்கவும் சரியாயிருந்தது..

Think of the devil and there he is..னு சும்மாவா சொன்னாங்க என்ற நினைப்புடன், ‘சார் சொல்லுங்க?’ என்றார் எதிர் முனையிலிருந்த நாடாரிடம்..

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

பிலிப் சுந்தரம், வந்தனா பேசியதை
சரியாகக் கேட்காமல்............
யானைக்கும் அடி சறுக்கும்.......
என்ன புதுக்குழப்பம் ஏற்படுமோ?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

என்ன புதுக்குழப்பம் ஏற்படுமோ?//

வாழ்க்கையில குழப்பங்களும், திருப்பங்களும் இல்லாட்டி சுவாரஸ்யமே இருக்காதே..