செல்வி அமைதியாகிப் போன ஒலிவாங்கியையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அதை அதன் இடத்தில் வைத்துவிட்டு தன் தாயைப் பார்த்தாள்.
‘என்னடி.. என்ன அப்படி மலைச்சிப் போயி நிக்கறே.. என்னவாம்?’
‘ஒன்னுமில்லம்மா.. என்னெ கொஞ்சம் யோசிக்க விடுங்க.. அப்புறமா சொல்றேன்.. இப்ப வேலைய பார்ப்போம்..’ என்றவாறு செல்வி சமையலறையை நோக்கி செல்ல ரத்தினம்மாள் என்னாச்சி இவளுக்கு என்று அவளையே பார்த்தாள்..
செல்வி இயந்திரக்கதியில் சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் சற்றுமுன் ராசம்மாள் தொலைப்பேசியில் கூறியது அவளுடைய மனத்தில் ஒரு சிறு கலக்கத்தை ஏற்படுத்தியது..
‘செல்வம் ஒன் அளவு படிக்கல தாயி. ஆனா புத்திசாலி. என்னோட ஹோட்டல் வியாபாரத்துல அவந்தான் எனக்கு வலது கை மாதிரி. அவனும் ஒன்னெ மாதிரியே சின்ன வயசுலயே வறுமையில வாடுனவன். அப்போ அவன் அம்மாதான் அவனுக்கு ஒலகமே. இப்ப அந்த அம்மாவும் இல்ல. நாந்தான் அவனுக்கு எல்லாமே. அவனுக்கு படிப்பில்லங்கற குறைய தவிர பையன் குணத்துல தங்கம். ஒன்னெ நல்லபடியா வச்சி பாத்துக்குவான்.’ என்று சிலுவை மாணிக்கம் கூறியபோது அவள் எந்தவித தயக்கமும் இல்லாமல் சரியென்று சம்மதித்தாள்.
செல்வத்தை திருமணம் முடிப்பதாக நிச்சயம் செய்த கையோடு அவளுக்கு வந்த மொட்டைக் கடுதாசியில் எழுதியிருந்தது இப்போதும் நினைவிலிருந்தது.
‘ஏற்கனவே தன் மாமன் பெண்ணை விரும்பி அவ வேண்டாம்னு ஒதுக்கப்பட்ட ஆளதான் நீ கட்டிக்கப் போறே.. அவன்னா அவனுக்கு பைத்தியமாக்கும். நீ சந்தோஷமா இருந்தாப்பலத்தான்..’ என்பதுபோன்ற தோரனையிலிருந்த அந்தக்கடிதம் அவளை சில நாட்கள் அலைக்கழித்ததென்னவோ உண்மைதான்.
ஆனால் சிறுவயது முதலே வறுமையில் வாடிய தனக்கு விடிவு காலம் செல்வத்தால்தான் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்த செல்வி அதை தன்னுடைய பெற்றோர்களிடமும் காட்டாமல் மறைத்தாள்.
ஆனால் அடுத்த முறை நாடார் வந்திருந்தபோது அந்த கடிதத்தைக் காட்டினாள்.
நாடார் எந்தவித சலனுமில்லாமல் அதைப் படித்துவிட்டு, ‘இதுல போட்டுருக்கறது உண்மைதான் செல்வி.. அவன் எம் பொண்ணுமேல விருப்பமாத்தான் இருந்தான். எனக்கும் அதுல சம்மதந்தான்.. ஆனா நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுலருந்தே ஒன்னா வளந்தவங்க.. அதனால செல்வத்த நான் கூடப் பொறந்த பொறப்பாத்தான் நினைச்சிருக்கேன்னு எம்பொண்ணு சொன்ன பெறவு என்னத்தச் செய்ய? செல்வம் தங்கமான பையன்மா.. எம் பொண்ணுக்கு குடுத்து வைக்கல.. அவ்வளவுதான் சொல்வேன்.. இன்னொரு உண்மையும் சொல்லிப் போடுறேன்.. ஒன்னெ அவன் என்னோட கட்டாயத்தின் பேர்லதான் கட்டுறான்.. ஆனா அவனெ ஒன் பக்கம் இளுத்துக்க வேண்டியது ஒன் பொறுப்பு.. எம் பொண்ணெ அவன் விரும்புனானே தவிர அவ என்னைக்கி இவனெ கல்யாணம் பண்ணிக்க புடிக்கலன்னு சொன்னாளோ அப்பவே அவன் அந்த எண்ணத்தெ விட்டுப்போட்டது எனக்கு தெரியும். அதுக்கப்புறம் அவ விரும்புன பையன எனக்கு அவ்வளவா புடிக்கலன்னாலும் செல்வந்தா முன்னால நின்னு பேசி இந்த சம்பந்தத்த முடிச்சிக் குடுத்தான்.. அந்த அளவுக்கு தங்கம் அவன் மனசு.. அவனெ கட்டிக்கப்போறவ குடுத்து வச்சவன்னு நானே சொல்லிக்கறதுல அர்த்தமில்ல.. நீயே போகப் போக புரிஞ்சுக்குவே.. இவ்வளவுக்கப்புறமும் ஒனக்கு மனசுல ஏதாச்சும் விகல்பம் இருந்தா தாராளமா சொல்லிரும்மா.. இந்த ஏற்பாட்ட விட்டுரலாம்.. நானே ஒனக்கு என் செலவுலயே வேறொரு பையன பார்த்து முடிச்சி வைக்கறேன்..’ என்றபோது செல்வி அவருடைய வார்த்தைகளிலிருந்த உண்மையைப் புரிந்துக்கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தாள்.
அவர் கூறியதுபோலவே இருந்தான் செல்வம். திருமணம் முடிந்த புதிதில் சென்னைக்கு தன்னுடைய மாமனுக்கருகிலேயே இருக்க வேண்டும் என்று முனைப்பாயிருந்தவனை நாடார்தான் அதட்டி, மிரட்டி நெல்லையிலேயே நிர்ந்தரமாக இருக்கச் செய்தார்.
செல்வி கேட்காமலேயே அந்த கடை இருந்த இரண்டு மாடிக் கட்டடத்தையும் அவர்கள் இருவரும் குடியிருந்த வீட்டையும் வாங்கி அவளுடைய பெயரில் பதிவு செய்துக்கொடுத்தார்.
ஆரம்பத்தில் மாதம் ஒருமுறை சென்னைக்கு சென்று வருவதில் பிடிவாதமாக இருந்தவனை அவன் போக்கிலேயே விட்டு நாளடைவில் தன் வழிக்கு கொண்டு வந்தாள் செல்வி.
நாடார் அவளிடம் கூறியிருந்ததுபோலவே வியாபாரத்தில் புலியாயிருந்தான் செல்வம். திருமணம் முடிந்த இரண்டே ண்டுகளில் இனிப்பு வியாபாரம் ஒரு முழுஅளவு உணவகமாக மாறி திருநெல்வேலியிலிருந்த உணவகங்களில் முதல் இடத்தைப் பிடித்தது.
செலிவியும் தான் படித்த படிப்பை வீணடிக்க விரும்பாமல் செல்வத்தின் வர்த்தக கணக்கு வழக்குகளைப் பார்க்க ஆரம்பிக்க அந்த கணவன் மனைவியின் கூட்டு முயற்சி அடுத்த சில ஆண்டுகளில் நல்ல பயனை அளிக்க ஆரம்பித்தது.
இந்த சூழ்நிலையில்தான் ராசம்மாள், ராசேந்திரனின் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் எழ ஆரம்பித்தது. ஏற்கனவே இந்த திருமணத்தில் கொஞ்சமும் விருப்பமில்லாமல் இருந்த நாடார் ராசேந்திரன் அவருடைய நிறுவனத்தில் கையாடல் செய்யும் விவரமும் தெரியவர தன்னுடைய மனக்குறையை செல்வத்திடம் கொட்ட அதனுடைய பாதிப்பு அவனுடைய போக்கையே மாற்றியதை உணர்ந்தாள் செல்வி.
ஆனால் அவள் நினைத்திருந்தபடி செல்வம் அடியோடு மாறிவிடவில்லை. அடிக்கடி சென்னைக்கு சென்று வந்தாலும் தன்னுடயை வர்த்தகத்திலும் சரி செல்விக்கு செய்ய வேண்டிய கடமைகளிலும் சரி குறை வைக்கவில்லை.
சென்னைக்கு சென்று வருவதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாததற்கு வேறொரு காரணம் சிலுவை மாணிக்கம் நாடார் அவள் மீது வைத்திருந்த பாசம்.
‘நீயும் எனக்கும் ராசம்மா மாதிரி ஒரு மகளபோலதாம்மா. அதனால ஒன்னோட வாழ்க்கையில நானோ இல்ல என் மகளோ என்னைக்கிம் இடைஞ்சலா இருக்க மாட்டோம். எம் மகள செல்வத்துக்கு கட்டி வைக்க நெனச்சதென்னவோ உண்மைதான். ஆனா எப்ப எம்பொண்ணு அந்த நினைப்பு எனக்கு இல்லப்பான்னு சொல்லிட்டாளோ அப்பவே அவனுக்கு ஒரு நல்ல பொண்ணெ பாத்து கட்டிவைக்கறதோட அவனுக்குன்னு ஒரு பிசினஸ் வச்சி வெளியூர்ல குடி வச்சிரணும்னு நினைச்சித்தான் இந்த ஏற்பாட செஞ்சேன்.. இருந்தாலும் செல்வத்த கலக்காம என் பிசினஸ்ல நா எதையுமே செஞ்சதுல்லங்கறதாலதான் அவனெ அடிக்கடி மெட்றாஸ்க்கு கூப்டறேன்.. தப்பா நெனச்சிக்காத..’
ஆனால் இப்போது நிரந்தரமாக சென்னைக்கே சென்று அங்கேயே குடியேறுவதென்பது..
‘ஏய்.. ஏய்.. செல்வி.. சாப்பாடு அடிபுடிச்சி ஹால் வரைக்கும் தீயிற வாசனை அடிக்குது..? பக்கத்துல நிக்கற ஒனக்கு அடிக்கலையா? அப்படி என்ன யோசனை..?’
தன்னுடைய தாயின் குரலைக் கேட்டு பதறியவாறு ஸ்டவ்வை அணைத்துவிட்டு சாப்பாடு பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டு தன் தாயைப் பார்த்தாள்..
அம்மாக்கிட்ட இப்ப சொல்லணுமா? சொன்னா எப்படி ஏத்துக்குவாங்கன்னு தெரியலையே.. செல்வம் அடிக்கடி மெட்றாசுக்கு போய்வர்றதே அம்மாவுக்கு பிடிக்காது. அப்பாவுக்கு இது பிடிக்கலைன்னாலும் வெளியில சொன்னதில்லை...இதுல நிரந்தரமா அங்கயே போயி இருக்கப் போறேன்னு சொன்னா..
‘என்னடி என்னெ அப்படி பாக்கே.. கொஞ்ச நேரம் முன்னால வரைக்கும் நல்லாத்தானே இருந்தே.. அந்த ஃபோன் வந்ததுலருந்து பாக்கேன்.. ஏன் அப்படி என்ன சொன்னா ராசம்மா? ஏதும் பிரச்சினையாமா? மாப்பிள்ளை எப்ப வராறாம்..?’
செல்வி பதிலளிக்காமல் தன் தாயையே பார்த்தாள்..
‘என்னடி.. என்ன? கேக்கேன்லே.. சொல்லு.. அப்படி என்னதான் சொன்னா, நீ இப்படி நிக்கே..?’
செல்வி ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தாள். செல்வம் வரட்டும்.. அவரிடம் பேசிவிட்டு அம்மாக்கிட்ட சொல்லலாம்.. இல்லன்னா அவர் வந்ததும் வராததுமா அம்மா எதையாவது பேசப் போக பிரச்சினை பெரிதாகிவிடக் கூடும்..
தன்னுடைய வாழ்க்கை இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதற்குக் காரணமே சிலுவை மாணிக்கம் அங்கிள்தான்.. அவங்க எனக்கு எந்தவித தீங்கையும் நினைக்க மாட்டாங்க.. ராசம்மா சொன்னது அவங்களுக்கு தெரியாம இருக்க சான்ஸ் இல்ல..
சென்னைக்கு வரமுடியாதுன்னு சொல்றதுக்கு ஒரு நிமிசம் போறும்.. ஆனா அதுக்கப்புறம்? செல்வமே ஒருவேளை தன்னை எதிர்த்துக்கொண்டு போய்விட்டால்? அப்புறம் இந்த சொத்தையும் ஓட்டலையும் வைத்துக்கொண்டு தன்னால் என்ன செய்யமுடியும்? அப்பாவ மட்டும் நம்பி இத நடத்த முடியுமா?
‘இந்த நேரத்துல நீயும் செல்வமும் எங்கூடவே இருந்தா நல்லதுன்னு நினைக்கேன்.. ராசேந்திரன் இருந்த இடத்துல செல்வம் இருக்கணும்னு அப்பாவுக்கும் நினைக்கார்.’
ராசேந்திரன் இருந்த எடத்துல.. என்ன சொல்ல வருகிறாள் ராசம்மாள்? ச்சீச்சீ.. அப்படி இருக்காது.. ராசேந்திரன் பிசினஸ்ல இருந்த எடத்துலன்னு மீன் பண்ணிருப்பாங்க..
எதுக்கும் செல்வம் வரட்டும்.. என்ன ஏதுன்னு கேட்டு தெரிஞ்சிக்குவம்..
‘என்னடி.. நா பாட்டுக்கு கேட்டுக்கிட்டே இருக்கேன்.. நீ சித்தப்பிரம பிடிச்சவ மாதிரி இருக்கே?’
செல்வி அமைதியாக தன் தாயைப் பார்த்தாள். ‘ஒன்னுமில்லம்மா.. ராசம்மாவுக்கு அங்க ஏதோ புதுசா பிரச்சினையாம்.. கொஞ்சம் சிக்கலான பிரச்சினையாருக்கும் போலருக்கு.. அதான் எங்கிட்ட பேசினா மனசுக்கு றுதலாருக்குமேன்னு ஃபோன்ல கூப்ட்டாங்களாம்..’
தன் தாய்க்கு தன்னுடைய பதிலில் நம்பிக்கை ஏற்படவில்லையென்பது அவளுடைய முகத்தைப் பார்த்து புரிந்துக்கொண்ட செல்வி, ‘நீங்களா ஏதாச்சும் கற்பன பண்ணிக்காதீங்க.. இந்த பிரச்சினை முடியறவரைக்கும் நீ எங்கூட வந்து இருக்கியான்னு கேட்டாங்க. அதான் இந்த பிசினச விட்டுட்டு எப்படி போறதுன்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்.. வேறொன்னுமில்லை.. அந்த யோசனையிலதான் சாப்பாடு தீஞ்சிப் போறத கூட கவனிக்காம.. இனி சமையல் பண்ண முடியாது.. நா நம்ம கடைக்கு ஃபோன் செஞ்சி சாப்பாட கொண்டு வரச் சொல்றேன்..ஒங்களுக்கு ஏதாச்சும் ஸ்பெஷலா வேணுமாப்பா’ என்று தன்னுடைய தந்தையைப் பார்த்தவாறு தொலைப்பேசியை நோக்கி நடந்த செல்வியைக் குழப்பத்துடன் பார்த்தாள் ரத்தினம்மாள்..
இவ என்னத்தையோ நம்மக் கிட்டருந்து மறைக்கிறா.. என்று முனுமுனுத்தாள்.. கூடத்தில் அதுவரை எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த செல்வியின் தந்தை, ‘ஏய்.. நீ பாட்டுக்கு எதையாச்சும் அவள கேட்டுக்கிட்டே இருக்காத.. அவளுக்கா சொல்லணும்னா சொல்வா.. மாப்பிள்ளை வந்தா என்னன்னு தெரிஞ்சிரப்போவுது..’ என்றாலும் அவருக்கும் தன்னுடைய மகள் தங்களிடமிருந்து எதையோ மறைப்பது தெரிந்தது.
தொடரும்..
5 comments:
என்ன சார் எப்பவும் இரண்டு பகுதிகள் வரும். இன்று செல்வி புராணமாகவே இருக்கின்றதே :-)
வாங்க அருண்மொழி,
செல்வமும் செல்வியும் சென்னைக் குடிபெயர்வது கதையில் ஒரு முக்கிமான அம்சம். ஆகவேதான் அவளுடைய மனதில் ஏற்பட்ட குழப்பத்தைப் பற்றி எழுதி முடிக்கவே இன்றைய கோட்டா தீர்ந்துபோனது..
நாளை முதல் பழைய பாணி தொடரும்..
செல்வி புத்திசாலி...ராஜியும் புத்திசாலி..
அனாவசியப் பிரச்சினைகள் எழுவதற்கு
வாய்ப்பில்லை.
(ஆனா விறுவிறுப்பு கருதி நீங்க ஏதாவது திணித்தால்தான் உண்டு)
அருண்மொழிக்கான பதிலில்,
நாளை?....
அப்ப செவ்வாய் சூரியன் 142 ஆ?
வாங்க ஜி,
ஆனா விறுவிறுப்பு கருதி நீங்க ஏதாவது திணித்தால்தான் உண்டு//
நிச்சயமா மாட்டேன்..
அப்ப செவ்வாய் சூரியன் 142 ஆ? //
போட்டுட்டா போச்சி:)
Post a Comment