மாதவனின் அறையிலிருந்து திரும்பிய ஃபிலிப் சுந்தரம் தன் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த குறிப்பைப் பார்த்தார்.
‘Hon’ble Director Mr.Nadar wanted to talk to you. Raji’
அவருடைய காரியதரிசி ராஜி எழுதி வைத்திருந்த குறிப்பு அவருடைய வயிற்றில் புளியைக் கரைத்தது.
அவரை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்று நினைத்தார். புதிய சேர்மன் மாதவனிடம் இதைப்பற்றி கூறியும் அவர் ரிசர்வ் வங்கியிலிருந்து வந்திருந்த அக்கடிதத்தின் நகலை நாடாரிடம் கொடுப்பதா வேண்டாமா என்பதைப் பற்றி ஒன்றும் முடிவாக கூறாத நிலையில்..
போறாததற்கு இந்த சேதுமாதவன் வேறு அதே கடிதத்தைக் குறிவைத்திருக்கிறார்.. அவர் நேரடியாக மாதவனிடத்தில் அக்கடிதம் தனக்கு வேண்டும் என்று கேட்டாலும் வியப்பில்லை. ஆனால் மாதவன் அவருடைய கோரிக்கைக்கு மசிவாரா என்பது வேறு விஷயம். இந்த விஷயத்தில் மாதவன் எப்படி முடிவெடுப்பார் என்பதும் கேள்விக்குறிதான் என்று நினைத்தார் ஃபிலிப்.
மீண்டும் ஒருமுறை தன் எதிரிலிருந்த குறிப்பைப் பார்த்தார். இனியும் தாமதியாமல் நாடாரை அழைத்து தன்னுடைய இயலாமையைக் கூறிவிடுவதுதான் நல்லது. மீண்டும் அவராக தன்னை அழைப்பதற்கு வாய்ப்பளித்தால் அவருடைய கோபத்தை தன்னால் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தார்.
அவர் அழைப்பதற்கெனவே காத்திருந்ததுபோல் இருந்தது எதிர்முனையில் நாடாரின் குரல். ‘என்ன சார்.. நான் கேட்டது மறந்துட்டீங்க போலருக்கு? அப்படியென்ன சேர்மன் ரூம்ல? தலைபோற விஷயமோ?’
அவருடைய குரலில் கோபத்தைத் தவிர கிண்டலே மேலோங்கியிருந்ததைக் கவனித்த ஃபிலிப் சுந்தரம் தகுந்த விதத்தில் தன்னுடைய இயலாமையை விளக்கிவிட்டால் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்தார். ‘சார்.. அந்த லெட்டர் விஷயமாத்தான் போயிருந்தேன்.’
‘அதுக்கெதுக்குய்யா சேர்மன்கிட்ட போணும்? நம்ம இஞ்பெக்சன் இலாக்காவுல கேக்க வேண்டியதுதான?
‘இல்ல சார்.. இந்த மாதிரியான கான்ஃபிடன்ஷியல் லெட்டர் எல்லாம் சேர்மன் கஸ்டடியிலதான் இருக்கும்.. அதான்..’
‘என்னவோ போங்க..’ நாடாரின் குரலில் சலிப்பு எட்டிப் பார்த்தது. ‘சரி.. அவர்கிட்ட போய் நான் இந்த லெட்டரப்பத்தி கேட்டத சொல்லிட்டீராக்கும். நல்ல பேங்குய்யா இதுன்னு நெனைக்கப் போறார்யா.. வந்து ரெண்டு நா கூட ஆகல!’ தன்னுடைய காரியம் வெற்றிபெறாது என்ற நிராசையிலும் தன்னுடைய கவுரவத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டது வியப்பளித்தது.
இப்ப என்ன சொல்றது? சேர்மன்கிட்ட இதப்பத்தி சொல்லலேன்னு சொல்றதா? அது தேவையற்ற பொய்யாகாதா? மீண்டும் உண்மைக்கும் புறம்பாக பேச வேண்டுமா? சரி அப்படியே பொய் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்தாலும் நாளை ஒருநாள் மாதவனே நாடாரிடம் இதைப்பற்றி நான் கூறியிருந்ததாகக் கூறிவிட்டால்?
‘என்னய்யா சத்தத்தையே காணோம்? ஆக இப்பத்தைக்கு அந்த லெட்டரப்பத்தி யோசிச்சி பலனில்லைங்கறீர் அப்படித்தானே? சரி விட்டுத்தொலையும்..’ என்று எதிர்முனையிலிருந்து பதில் வர அப்பாடா மீண்டும் ஒரு பொய் சொல்லத் தேவையில்லை என்று நிம்மதியடைந்தார் ஃபிலிப். ‘‘ஆனா ஒன்னுய்யா..அந்த லெட்டர இல்லாம ஆக்கறதுக்கு அந்த டாக்டரும் அவனோட கையாள் இருக்கானே.. அதான்யா ஒங்க ஈ.டி.. அவனும் முயற்சி பண்ணுவானுங்க.. அது நடக்கப்படாது.. கேட்டீராய்யா?’ என்று நாடார் தொடர மீண்டும் தொல்லையா என்று நினைத்தார்.
‘சரி சார்.. அது நடக்காது..’
நாடார் கேலியுடன் சிரிப்பது கேட்டது. ‘அதெப்படிய்யா அத்தன நிச்சயமா சொல்றீரு? ஒமக்கு தெரியாம சேர்மன் அவன்கிட்ட தூக்கி குடுத்துட்டா?’
‘அவர் அப்படி செய்யமாட்டார்னு உறுதியா சொல்லலாம் சார்.’ என்றார் ஃபிலிப்.
‘எப்படிய்யா சொல்றீரு? ரெண்டு நாளைக்குள்ளேயே சேர்மனெ பத்தி ஒமக்கு தெரிஞ்சிருச்சாக்கும்.. சரி.. அத விடும்.. அந்த பாபு சுரேஷ் விஷயம் என்னாச்சிது? அவனெ அந்தம்மா இடத்துல போடறதா முடிவாயிருச்சா?’
ஒன்றுபோனால் ஒன்று. விடமாட்டார் போலிருக்கிறதே என்று நினைத்தார் ஃபிலிப். ‘இல்ல சார்.. அதப்பத்தி இன்னும் முடிவாகல.’
‘அதான் வேணும்.. அவர் சொன்னார், இவர் சொன்னார்னு நீர் பாட்டுக்கு தலைய ஆட்டிறப்படாது. அந்தம்மாவுக்கு மட்டுந்தான் ஒங்க ஈ.டிய எதுத்து நிக்கற தைரியம் இருக்கு..நீரும் அந்த லிங்கமும் சரியான தலையாட்டி பொம்மைங்கதானய்யா..’
நாடாருடைய குரலிலிருந்த ஏளனம் அவரை சங்கடப்படுத்தினாலும், ‘நீங்க நினைக்கறா மாதிரி எனக்கு தெரியாம நம்ம சேர்மன் டிசைட் பண்ணமாட்டார்னு நினைக்கறேன் சார்.’ என்றார் நிதானத்துடன். ஆனாலும் அவருடைய கூற்று நியாயமானதுதான் என்றும் நினைத்தார். வந்தனாவுக்கு இருக்கும் தைரியம் யாருக்கும் வராதுதான்.. அவர் எப்போது பணிக்கு திரும்புவாரோ என்று நினைத்தார் ஃபிலிப். அவர் வந்துவிட்டால் நமக்கு இத்தனை பாரம் இருக்காதே..
‘சரிய்யா.. பாத்துக்கிறும்.. சொல்லிட்டேன்..’ என்றவாறு நாடார் இணைப்பைத் துண்டிக்க தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று நிம்மதி பெருமூச்சை விட்டார்.
நாடார் வந்தனாவின் பெயரைக் குறிப்பிட்டதும் அவருடைய நினைவு வர, ‘இப்ப எப்படியிருக்கார்னு தெரியலையே?’ என்று முனுமுனுத்தவாறு அவருடைய எண்ணை டயல் செய்து எதிர்முனையில் பழக்கமில்லாத பெண்ணின் குரல் கேட்க நாம்தான் தவறான எண்ணை டயல் செய்துவிட்டோமோ என்று நினைத்தார்.
அவர் இணைப்பைத் துண்டிக்கலாமா என்று நினைத்துக்கொண்டிருக்க, ‘One second Sir.. I will put you to Madam..’ என்றவாறு ‘மேடம் ஒங்களுக்குத்தான்.. நம்ம ஃபிலிப் சார் பேசறார்.’ தொலைப்பேசியை வந்தனாவிடம் கொடுப்பது கேட்டது.
‘நம்ம ஃபிலிப் சார்’ என்றால் இவரும் நம் வங்கியைச் சார்ந்தவராகத்தான் இருக்க வேண்டும். தமிழில் மலையாள வாடை நன்றாக தெரியவே கேரளத்தைச் சார்ந்தவர்.. யாராக இருக்கும் என்ற சிந்தனையில் ஃபிலிப் மூழ்க, ‘குட்மார்னிங் சார்..’என்ற வந்தனாவின் உற்சாகமான குரல் அவரை மகிழ்ச்சியடைய செய்தது.
‘எப்படி இருக்கீங்க? பரவாயில்லையா?’ என்றார்.
‘ஆமா சார்.. நேத்து ராத்திரி நல்லா தூங்கினே.. தாங்ஸ் டு யூ.’
‘நானா.. என்னாலையா? நா அப்படியென்ன செஞ்சேன்?’
‘என்ன சார் மறந்துட்டீங்களா? நா கேட்டதும் சரின்னு சொல்லிட்டீங்களே.. நான் எதிர்பார்க்கலையே.. சின்ன விஷயம்தான்னாலும்.. நீங்க சரின்னு சொன்னதால ஒருத்தருக்கு நல்லது நடக்கப்போகுதே.. அதுவே ஒரு பெரிய சந்தோஷம்தானே?’
ஃபிலிப்புக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்ன சொல்கிறார் இவர்? நான் என்ன சரின்னு சொன்னேன் அதனால யாருக்கு என்ன நல்லது நடக்கப் போகுது?
‘I am sorry Vandana.. I don’t understand..’ என்றார்.
எதிர்முனையிலிருந்து சற்று தயக்கத்துடன் குரல் வந்தது. ‘என்ன சார்.. நேத்து நம்ம எர்ணாகுளம் சி.எம் விஷயமா பேசினேன்.. நீங்களூம் சரின்னு சொன்னீங்களே?’
எர்ணாகுளம் சி.எம் விஷயமா? இதென்னடா புதுகுழப்பம்? நேத்து இவங்க ஃபோன்ல கேட்ட விஷயமாருக்குமோ? ஏ.சி போட்ட சத்தத்துல நாந்தான் சரியா கேக்காம சரின்னு சொல்லிட்டமோ.. எரிச்சலுடன் அமைதியாகிப் போன குளிரூட்டும் பெட்டியைப் பார்த்தார்.. இத நேத்தே அணைச்சிப் போட்டுருக்கலாம்..
இருப்பினும் நாம் சரியாக கேட்காமலேயே அவருடைய கேள்விக்கு சரி என்று பதில் கூறினோம் என்பது வந்தனாவுக்கு தெரிந்தால் ஒருவேளை அதுவே அவரை மீண்டும் பதற்றமடையச் செய்துவிடுமோ என்று அஞ்சி நாம் சம்மதித்தது சம்மதித்ததாகவே இருக்கட்டும் என்று நினைப்புடன், ‘ஓ அதுவா? நா இங்க இருக்கற கன்ஃப்யூஷன்ல மறந்தே போனேன் வந்தனா. சாரி.. மன்னிச்சிருங்க.. இப்ப ஃபோன எடுத்தது அவுங்கதானா?’ என்று சமாளித்தார்.
எதிர்முனையிலிருந்து கேட்ட கலகலவென்ற சிரிப்பொலி அவர் எடுத்த முடிவு சரிதான் என்பதை உணர்த்தியது. ‘நீங்க இப்படி சிரிச்சி ரொம்ப நாள் ஆனா மாதிரி இருக்கு வந்தனா.. எப்ப ஜாய்ன் பண்ணலாம்னு இருக்கீங்க?’
‘இந்த வீக் எண்ட்தான் டாக்டர் வரச்சொல்லியிருக்கார் சார். எப்படியும் மண்டே ஜாய்ன் பண்ணிருவேன்னு நினைக்கேன். புது சேர்மன் ஏதும் பிரச்சினை பண்றாரா சார்?’
ஃபிலிப் சிரித்தார். ‘புது சேர்மனா? சேச்சே.. நம்ம மூர்த்தி சார் மாதிரி கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருப்பாரோன்னு தோனுது.. ஆனா அவர மாதிரியே நல்ல நாலேட்ஜ் இருக்குது.. ஆனாலும் நியூ ஜெனரேஷன் பேங்க்ல இருக்கறா மாதிரி நம்ம பேங்கையும் மாத்தணும்னு நினைக்கறது நடக்குமான்னு தெரியலை..’
‘அப்படியா? என்னத்த மாத்தணுமாம்?’
‘என்ன வந்தனா விடமாட்டீங்க போலருக்கு?’ என்றார் ஃபிலிப் சிரித்தவாறு. ‘மறுபடியும் பிரஷர ஏத்திக்க போறீங்களா?’
மீண்டும் சிரிப்பொலி அவருடைய காதை நிரப்பியது. வந்தனாவின் சிரிப்பே அலாதியானதுதான்.. எந்த ஒரு சங்கடமான சூழலையும் தன்னுடைய உரத்த சிரிப்பொலியால் அவர் மாற்றிவிடுவதை உயர் மட்டத்திலிருந்த அனைத்து அதிகாரிகளும் உணர்ந்திருந்ததை நினைத்துக்கொண்டார்.
‘சேச்சே.. ஒரு நாள் முழுசா ICU ல இருந்ததுக்கப்புறம் இனி அப்படியொரு நிலைக்கு ஆளாகக் கூடாதுன்னு தோனுது சார்.. எந்த அதிர்ச்சியையும் தாங்கிக்க பழகிக்கணும்னு தீர்மானிச்சிட்டேன்.’
மாணிக்கவேலின் தந்தை கொலையுண்டதையும் அந்தப்பழி மாணிக்கவேலின் மீதே விழுந்திருப்பதையும் இவர் கேள்விப்பட்டால் அதையும் லேசாக எடுத்துக்கொள்ள முடியுமா இவரால் என்று ஓடியது அவரது சிந்தனை..
வேண்டாம்.. இப்போதைக்கு வேண்டாம்.. ஜோவையும் அழைத்து இதை அவரிடம் இப்போதைக்கு தெரிவிக்க வேண்டாம் என்று கூறிவிட வேண்டும் என்று தீர்மானித்தார்..
‘ஓக்கே வந்தனா.. மொதல்ல நல்லா குணமாகி ஆஃபீஸ் வந்து சேருங்க.. அப்புறம் பாத்துக்கலாம். நீங்க சொன்ன அந்த சி.எம்மெ என்னெ வந்து பாக்கச் சொல்லுங்க.. ஒங்களுக்கு ப்ராமிஸ் பண்ணா மாதிரியே செஞ்சிரலாம்.. பை..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு ஜோவின் எண்ணை தேட எத்தனிக்கவும் அவருடைய பிரத்தியேக தொலைபேசி சிணுங்கவும் சரியாக இருந்தது..
எதிர்முனையில் ஜோ!
‘நானே ஒங்களுக்கு ஃபோன் பண்ணணும்தான் இருந்தேன்.. சொல்லுங்க.. நீங்க போன விஷயம் என்னாச்சி?’
அடுத்த சில நிமிடங்களில் எதிர்முனையிலிருந்து வந்த செய்தி அவரை திணறடித்தது!
தொடரும்..
6 comments:
இந்த எபிசோட் முழுதும் பிலிப் சுந்தரம் மய்யம் கொண்டிருக்கிறார்.
இதுவும் நல்லாதான் இருக்கு!
வாங்க ஜி!
பிலிப் சுந்தரம் மய்யம் கொண்டிருக்கிறார்.//
பாக்கப்போனா இவர்தான் இந்த கதைக்கு கதாநாயகன் போல..
இவர்தான் கதாநாயகர்னு, கதாசிரியருக்கு இப்பத்தான் தெரியும் போல, வாசகர்களாகிய எங்களுக்கு எப்பவோ தெரியுமே...
எல்லாத்தையும் ஜெயிக்கிற சக்தி இருக்கற கதாநாயகர்களையெல்லாம், தமிழ் சினிமால வேணா, வேண்டா வெறுப்பா ஏத்துக்கலாம். கதைகளில் இப்படிப்பட்டவர்கள்தான் சுவாரஸ்யமானவர்கள்..நம்மையே நாம் பார்த்துக்கொள்ளும் நினைப்பை ஏற்படுத்துபவர்கள் இவர்கள்...
அந்த கல்லூரி முதல்வர் என்ன செஞ்சிக்கிட்ட்ருக்கார்னு கொஞ்சம் பார்த்து எழுதக் கூடாதா?
வாங்க ராகவன்,
அந்த கல்லூரி முதல்வர் என்ன செஞ்சிக்கிட்ட்ருக்கார்னு கொஞ்சம் பார்த்து எழுதக் கூடாதா?//
யாரு? ஓ! அவரா?
இந்த மாதிரி ஞாபகசக்தியுள்ள வாசகர்கள் கொஞ்சம் ப்ராப்ளம் ஆளுங்கதான்:)
அட ராமா, விஷ்ணுதான், ராமனாகவும், கிருஷ்ணராகவும் அவதாரம் எடுத்தார்தான். அதுக்காக, கிருஷ்ணாவும், ராகவனும் ஒண்ணாயிட முடியாதே...
வாங்க ராகவன்.. சாரி கிருஷ்ணா,
போச்சிரா.. பேர்லயே குழப்பம் வந்துருச்சா? உருப்பட்டாப்பலதான்.. நல்லவேளை நம்ம ஜி பாக்கலை:)
ஒங்க பேரையே ஞாபகம் வச்சிக்க முடியலை.. இதுல கதாபாத்திரங்கள எங்க ஞாபகம் வச்சி.. ஹூம்..
Post a Comment