2.3.07

சூரியன் 181

எஸ்.பி தனபால்சாமி கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டம் முடிந்ததும் கூட்டம் நடந்த அறையை விட்டு வெளியே வந்து வராந்தாவில் நின்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தவாறு யோசைனையுடன் நின்றிருந்தார் சிறிது நேரம்.

'சார்..' என்ற குரல் கேட்டு திரும்பினார். எதிரே வாசலில் நின்றிருந்த காவலர்.


'என்ன சண்முகம், எப்படியிருக்கே. கையில என்ன?'

சண்முகம் தன் கையில் சற்று முன் ஜோ விட்டுச் சென்றிருந்த அடையாள அட்டையை நீட்டினார். 'சார் இது ஒங்க விசிட்டிங் கார்டுதான். ஆனா அத கொண்டுக்கிட்டு ------------ பாங்க்லருந்து ஜோன்னு ஒருத்தர் ஒங்கள பாக்க வந்திருந்தார். கூட்டம் முடியறதுக்கு அஞ்சி மணிக்கு மேல ஆவும்னு சொன்னேன். காத்துக்கிட்டிருக்க முடியாத சூழ்நிலை இத குடுத்துட்டு நா வந்து போன விஷயத்த சார்கிட்ட சொல்லிருங்கன்னு போய்ட்டார்.'

'----------------- பேங்லருந்தா?' என்றவாறு காவலரிடமிருந்து அட்டையை வாங்கி திருப்பி பின்புறம் பார்த்தார். 'The bearer is my junior officer. He is urgently in need of your help.' என்று எழுதியிருந்தது. அதற்குக் கீழே ஃபிலிப் சுந்தரம் சிஜிஎம் என்ற வார்த்தைகள். நேத்து நம்ம போய் சேர்மன பார்த்த விஷயமா ஏதாச்சும் சொல்ல வந்திருப்பாரோ.. 'என்ன விஷயம்னு ஏதாச்சும் சொன்னாங்களா சண்முகம்?'

'ஆமா சார். அந்த ஜோவுங்கறவரோட சார இன்னைக்கி காலைல அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம். நம்ம -------------- ஸ்டேஷன்ல வச்சிருக்காங்களாம். அது விஷயமாத்தான்...'

'அரெஸ்ட் பண்ணியா?' என்ற வியப்புடன் அவரைப் பார்த்த தனபால்சாமி, 'அங்க யார்யா எஸ்.ஐ?' என்றார்.

'தெரியலய்யா.. கேட்டு சொல்லட்டுங்களா?'

தனபால்சாமி யோசனையுடன் தன் கையிலிருந்த அட்டையையும் தன் முன் நின்ற காவலரையும் பார்த்தார். 'சரி.. இத நா பாத்துக்கறேன். நீ ஒன் வேலைய பாரு.' என்றவாறு கையிலிருந்த சிகரெட்டை அணைத்து எறிந்துவிட்டு கமிஷனர் அறையை நோக்கி விரைந்தார்.

கமிஷனர் அறைக்கு வெளியில் அவரும் டிஜிபியும் நின்று பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் பவ்யத்துடன் வராந்தாவின் ஓரத்தில் ஒதுங்கி நின்றார். சற்று நேரத்தில் டிஜிபி புறப்பட்டுச் செல்ல கமிஷனர் மேடம் திரும்பி புன்னகையுடன் 'என்ன சாமி.. என்ன இன்னும் நிக்கிறீங்க? ஒங்களுக்கு அலாட்டான ஏரியாவுக்கு போயிருப்பீங்கன்னுல்ல நினைச்சேன்..' என்றார்.

தனபால் சாமிக்கு கமிஷனர் மேடத்தின் குணம் நன்றாக தெரிந்திருந்தது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிப் பழகிப் போனவருக்கு கமிஷனர் பதவி ஒரு முள் முடியாகவே தெரிந்ததை அவர் மட்டுமல்லாமல் அவருடைய சக அதிகாரிகளுள் பலரும் உணர்ந்துதானிருந்தனர்.

'சொல்லுங்க சாமி.. என்னெ பாக்கறதுக்காகத்தான் நிக்கிறீங்கன்னா உள்ள வாங்க.. ஏதாச்சும் முக்கியமான விஷயமா? இன்னைக்கி நடந்ததவிட?' கமிஷனர் திரும்பி தன் அறைக்குள் நுழைந்து தன்னுடைய இருக்கையை நோக்கி செல்ல தனபால்சாமி அவரைப் பின் தொடர்ந்தார். 'எங்கயோ வெடிக்குது எங்கல்லாம் எதிரொலிக்கிது பாருங்க. நமக்கு இருக்கற டென்ஷன் போறாதுன்னு இது வேற.. வெறும் பேனிக் ரியாக்ஷன்னு நமக்கு தெரியுது ஆனா முதல்வருக்கு தெரியலையே.. அவர் சும்மாருந்தாலும் பக்கத்துலருக்கறவங்க சும்மா இருக்க விடமாட்டாங்க. இப்ப பாருங்க.. பட்ரோல் ட்யூட்டியிலருக்கறவங்களையெல்லாம் புடிச்சி இதுல இழுத்துப் போட்டு.. ச்சை.. What a waste of time and energy.. leave alone the cost..'

கமிஷனரின் மனநிலை அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது. இருப்பினும் தன்னிடமிருந்து எந்த பதிலையும் கமிஷனர் எதிர்பார்க்கவில்லையென்பதை உணர்ந்திருந்ததால் மவுனமாக அமர்ந்திருந்தார். தான் சொல்ல வந்ததை பதறாமல் சொல்லிவிட்டு கிளம்பிச் செல்ல வேண்டும் என்று நினைத்தார்.

அவர் நினைத்தது போலவே தன் போக்கில் பேசிக்கொண்டிருந்த கமிஷனர், 'சொல்லுங்க சாமி.. என்ன விஷயம்?'

தனபால் சாமி முந்தைய ஞாயிற்றுக்கிழமை காலையில் எக்மோர் ரயில் நிலைய வாசலில் இருந்து ஒரு பெண்ணை இரு ரவுடிகளிடமிருந்து மீட்கப்பட்டதிலிருந்து, சேதுமாதவனின் பெயர் அதில் சம்பந்தப்பட்டிருந்தது, அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து வர முயற்சித்தது, பிறகு மேலிடத்து தலையீட்டால் அது முடியாமற் போனது, முந்தைய தினம் -------------- வங்கி சேர்மன் அலுவலகத்திற்குச் சென்று வந்தது வரை கடகடவென கூறி முடித்தார். 'மேடம் இந்த வார துவக்கத்துல சுப்ரீம் கோர்ட் கூட வேறொரு பாங்க் விஷயத்துல ரவுடிகள ஏவிவிட்டு லோன்ச வசூலிக்கறத கடுமையா கண்டிச்சி குடுத்த ஜட்ஜ்மெண்ட்ட பத்தி பேப்பர்ல வந்திருக்கு. நீங்க கூட பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். இந்த சேதுமாதவங்கறவர் மேல இது மாதிரி நிறைய புகார் இருக்கு. சமீபத்துல ஒரு பொள்ளாச்சி இண்டஸ்ட்ரியலிஸ்ட இவர் சொன்னார்னு கடத்திக்கிட்டுப் போயி டார்ச்சர் பண்ணி நிறைய ப்ளாங்க் பேப்பர்ஸ்ல கையெழுத்துவாங்கியிருக்கறதா அவர் புகார் குடுத்திருக்கார். அத்தோட இந்த பொண்ணோட கிட்நாப் அட்டெம்ப்ட் வேற..'

கமிஷனர் போறும் என்பதுபோல் கையை உயர்த்திக் காட்டினார். அவருடைய முகம் பாறையென இறுகிப்போயிருந்ததைக் கவனித்த தனபால்சாமி சட்டென்று நிறுத்திக்கொண்டு, 'எஸ் மேடம்?' என்றார்.

'இப்ப நா என்ன செய்யணும் அத மட்டும் சொல்லுங்க.'

கமிஷனரின் குரலிலிருந்த தொனியின் பொருள் விளங்காமல் அவரைப் பார்த்தார் தனபால்சாமி. 'மேடம் அந்த பேங்க்ல அவர் சேர்மனுக்கு அடுத்த பொசிஷன்ல இருக்கார்னு கேள்வி. அதுமட்டுமில்லாமல் ---------------- அமைச்சரோட தொகுதி லீட் பேங்க் வேறயாம். அதனால அவர்கிட்ட நெருக்கமானவர்னும் கேள்விப்பட்டேன். அந்த கிட்நாப் ரவுடிங்க ரெண்டு பேரையும் நான் -----------------ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்க அவங்க பேர்ல கம்ப்ளெய்ண்ட் ரிஜிஸ்தர் பண்ணாமயே விடுவிக்கற அளவுக்கு அவரால முடிஞ்சிருக்கு மேடம். அதனால..'

'அதனால? அவர அப்படியே விட்டுற முடியுமா? மிஸ்டர் சாமி சுத்தி வளைக்காம சொல்லுங்க.. ஒங்களுக்கு இப்ப என்ன வேணும்.. அந்த.. பேங்க் ஆசாமிய விசாரிக்கணும். அவ்வளவுதானே..?'

'ஆமாம் மேடம்.' என்று உடனே தலையை ஆட்டினார் தனபால்சாமி.

'Then go ahead and do it. If he cooperates with you, good. If he tries to act smart, obtain a search warrant and search his house, office whatever.. Or if you want to arrest him, take him.. Don't worry about the consequences.. If you feel that you have sufficient evidence to nail him.. go ahead and do it Swamy.. I will interfere when it is absolutely needed.. Right?'

சம்பாஷனை முடிவுக்கு வந்ததை உணர்த்தும் விதமாக கமிஷனர் மேடம் எழுந்து நின்று கையை நீட்ட தனபால்சாமி எழுந்து குலுக்கிவிட்டு வெளியேறி தன்னுடைய வாகனத்தை நோக்கி செல்கையிலேயே தன்னுடைய உதவி அதிகாரியை அழைத்து மளமளவென உத்தரவுகளைப் பிறப்பித்தார். 'இங்க பார்யா.. விஷயம் ஒனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். அப்படி யே இருக்கணும். புரிஞ்சிதா. அப்புறம் நம்ம ------------ ஸ்டேஷன் எஸ்.ஐ. யாருன்னு தெரிஞ்சி வை. இதோ வந்துக்கிட்டே இருக்கேன்.'

**********

விமான நிலையத்திலிருந்து மாதவனுடைய குடியிருப்பை வந்து சேரவே ஒரு மணி நேரத்திற்கும் மேலானது. வரும் வழியெல்லாம் காவல்துறை அதிகாரிகளின் கெடுபிடி. நல்ல வேளையாக மாதவன் சென்னையிலிருந்து வந்த விமான சீட்டை கையிலேயே வைத்திருந்தார். ஒவ்வொரு சோதனை தடுப்புகளிலும் அதைக் காட்டி விடுபட அது மிகவும் உதவியாயிருந்தது. 'என்னங்க இது அநியாயமாருக்கு. நாமளும் எத்தன வருசமா இங்க இருந்திருக்கோம். சென்னையிலருந்துன்னதுமே இப்படி பாக்கறானுங்க.. அடிச்சது எவனோ அவனுங்கள புடிக்கறதுக்கு துப்பில்ல.. வந்துட்டானுங்க..' என்று முனுமுனுத்தாள் சரோஜா.

'விடும்மா.. இன்னும் பத்து பதினஞ்சி நிமிஷத்துல வந்துரப் போவுது. இனி ஒன்னும் இன்ஸ்பெக்ஷன் இருக்காது பாரேன்.' என்றாள் வத்ஸ்லா.

'என்னமோ போடி.. அங்க சீனிய என்னவெல்லாம் போட்டு படுத்தறானுங்களொ தெரியலையே.. படுபாவிப் பசங்க. இந்த மராத்திப் பயலுங்களுக்கு மதறாஸின்னாலே புடிக்காது. இதுல இவன் வேற ஐயர் பையன் மாதிரி இருப்பான். அடிதாங்கற ஒடலாடி அது. அடிச்சி கிடிச்சி போட்டானுங்களோ என்னவோ தெரியலையே.. புள்ளையாரப்பா ஒன்னெ வந்து சேவிச்சிட்டுத்தானப்பா போனேன்.. போயி முழுசா ஒரு வாரம் ஆவறதுக்குள்ளவே கைய விட்டுட்டியேப்பா.. நா அப்பவே சொன்னேன் அவன இங்க தனியா விடவேணாம்னு.. நான் சொன்னா யார் கேக்கா.. படுபாவிப் பசங்க.. கையில கிடைச்சவனையே நாந்தான் பண்ணேன்னு ஒத்துக்க வச்சிருவானுங்களே..' என்றவள் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த மாதவனுடைய தோளைப் பற்றி திருப்பினாள் கோபத்துடன். 'அப்படி ஏதாச்சும் ஆச்சி.. வச்சிக்கறேன்.. ஒங்க சங்காத்தமே வேணாம்னுட்டு போறேன்..'

சரோஜாவின் திடீர் கோபத்தை எதிர்பாராத வாகன ஓட்டுனர் திடுக்கிட்டு திரும்பி அவளைப் பார்த்தான். 'க்யா ஹோகயா மேடம்? அபி காலி தஸ் பந்த்ரா மினிட் ஹை.. பாக்கி..' என்றான் விவரம் புரியாமல்.

மாதவன் அமைதியுடன் சரோஜாவின் கரங்களைப் பற்றினார். 'சரோ கலாட்டா பண்ணாம சும்மா இரு.. சீனிக்கு ஒன்னுமில்லை. அவனெ ரிலீஸ் பண்ணியாச்சின்னு நம்ம சேர்மன் ஏர்போர்ட்லருந்து ஃபோன் பண்ணப்போ சொன்னார். வீட்லதான் இருக்கானாம். போனதும் பார். அவனுக்கு ஏதோ கால்ல சின்ன ஃப்ராக்சராம். அதான் ஒங்கிட்ட சொல்லாம மறைச்சேன்.'

மாதவனின் தோள்களில் இருந்த கரத்தை சரேலென விலக்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் சரோஜா. 'என்னங்க சொல்றீங்க.. கால்ல ஃப்ராக்சரா?'

மாதவனுக்கு எரிச்சல் வந்தது. இருப்பினும் அமைதியாக, 'அந்த கால் ஃப்ராக்ச்சர்தான் அவனெ இந்த கேஸ்லருந்து விடுவிச்சிருக்கு. இல்லன்னா போலீஸ்க்கு இவன் மேல வந்த சந்தேகம் அவ்வளவு ஈசியா போயிருக்காது. அதனால அதுவும் நல்லதுக்குத்தான். கொஞ்ச நேரம் பேசாம இரு. இன்னும் பத்து நிமிசத்துல வீடு வந்துரும். அங்கயும் வந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத. அங்க இருக்கற எல்லாருமே நமக்கு தெரிஞ்சவங்க. நிறைய பேருக்கு நம்மள புடிக்கவே புடிக்காதுங்கறதையும் மறந்துராத. அப்புறம் காது, மூக்குன்னு வச்சி பேசி.. அதனால நடந்தது நடந்துருச்சின்னு நினைச்சிக்கிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சீனிய கூப்டுக்கிட்டு சென்னை போயிரணும். அதான் முக்கியம் இப்போ.' என்றார்.

அவர் பேசி முடிக்கும் முன்னரே அவர்களுடைய வாகனம் அவருடைய குடியிருப்பை அடைந்து, 'ஆயீயே சாப்.. ஆயியே மேடம்.' என்ற குர்க்காவின் வரவேற்புடன் போர்ட்டிகோவில் ஏறி நிற்க பரபரப்புடன் இறங்கி லிஃப்ட்டை நோக்கி ஓடினாள் சரோஜா எதிர்கொள்ளவிருக்கும் அதிர்ச்சியை உணராதவளாய்..

தொடரும்..

6 comments:

krishjapan said...

ஆ...மீண்டும் அதிர்ச்சியா...ஓ, வெள்ளிக்கிழமையில்ல....

உங்கள.....

Meenapriya said...

ஏன் சார் இப்படி அதிர்ச்சி மேல அதிர்ச்சி குடுக்குரீங்க அதுவும் வெள்ளி கிழமை... seril மாதிரி அயிடிச்சு உங்க பதிவும்...

siva gnanamji(#18100882083107547329) said...

ஜோ ஏன் வந்தார் என்பது தெரியாமல்
சாமி, சேது பக்கம் திரும்பிவிட்டார்...
இதுவும் நல்லதிற்கே.......

சிவஞானம்ஜி

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா,

ரெண்டு நாளா ஊர்ல இல்லை. அதான் பதில் போட லேட்..

வெள்ளிக்கிழமைன்னால கை தானா ஒரு சஸ்பென்ச வச்சிருது..

என்ன பண்ண சொல்றீங்க:(

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க மீனா,

வாழ்க்கையிலயும் அப்படித்தானேங்க.. நாம நெனக்கிறதா நடக்குது?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!


ஜோ ஏன் வந்தார் என்பது தெரியாமல்
சாமி, சேது பக்கம் திரும்பிவிட்டார்...
இதுவும் நல்லதிற்கே.......//

ஆமாம்.. நீங்க சொல்றது சரிதான்..

மாணிக்கவேல் விஷயம் முடிந்துபோனது.. ஆனால் தனபாலுக்கு அது தெரியாதே..