'என்னடே இப்ப என்ன செய்யறதா உத்தேசம்?'
ரத்தினவேலுவின் குரலிலிருந்த எகத்தாளம் ராசேந்திரனுக்கு எரிச்சலை அளித்தாலும் அதைக் கவனியாதவன்போல் பதில் பேசாமல் அமர்ந்திருந்தான்.
'துண்ட தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு ஊரப் பாக்க ஓடிற வேண்டியதுதான்.. அதான நினைக்கே?'
விடமாட்டார் போலிருந்தது... எதையாவது சொல்லி தற்போதைக்கு சமாளிக்க வேண்டும். ரெண்டு நாளா தாகத்த தணிக்க முடியாம நா படற பாடு இவருக்கெங்க தெரியப் போவுது. அங்க பயலுக நம்மள காணமேன்னு சோர்ந்துப் போயிருப்பான்க.. ராவா (raw) ரெண்ட உள்ள தள்னாதான் மேக்கொண்டு என்ன செய்யலாம்னு ஐடியா வரும்..
அதுக்கு என்ன வழி?
'என்னடே நா பாட்டுக்கு கேட்டுக்கிட்டே இருக்கேன்.. என்ன யோசன பெருசா.. ஏதோ கோட்டைய புடிக்கறாப்பல.. அதத்தான் கோட்டை விட்டுப்போட்டு வந்து நிக்கமே..'
எதையாவது சொல்லி இவருடைய வாயை அடைக்க வேண்டும். ஆனால் என்ன சொல்வது என்றுதான் விளங்காமல் மவுனம் சாதித்தான் ராசேந்திரன். மோகனுடைய அலுவலகத்திலிருந்து வெளியேறுகையில் ஆடிட்டர் பாலசுந்தரம் தன்னை எச்சரித்தது நினைவுக்கு வர அதுவும் இவருக்கு தெரியவந்தால் வேறு வினையே வேண்டாம். தன் முகத்தின் மீது காறித் துப்பிவிட்டு ஊரை பாக்க போய்விடுவார் என்பதை உணர்ந்திருந்தான் அவன்.
'எடே ஒன்னெத்தான்.. காது செவிடாயிருச்சா. இல்ல இந்த கெளப் பயலுக்கு எதுக்கு பதில் சொல்லணும்னு பாக்கியா?'
இனியும் மவுனமாயிருந்தால் சரிவராது என்பதை உணர்ந்த ராசேந்திரன் எரிச்சலுடன் திரும்பி, 'இப்ப என்ன பண்ணணுங்கறீங்க?' என்றான்.
ரத்தினவேலு எகத்தாளமாக சிரித்தார். 'டே.. இங்க பார்றா.. கோவம் வேற வருதாக்கும் தொரைக்கி? நீ செஞ்சிருக்கற வேலைக்கி.. ஒன்னெ.. என்ன செஞ்சாலும் தகும்லே.. பொன் முட்ட போடற வாத்த கழுத்தறுத்து கொன்னதுமில்லாம.. எலேய்.. நம்ம கிட்ட சம்பளம் வாங்கி கைகட்டி நிக்க வேண்டிய பயலுவதானல்ல அந்த மோகனும்.. அந்த ஆடிட்டரும்.. அவனுங்க முன்னால தலைய குனிய வச்சிட்டு இப்ப என்ன பண்ணணுங்கறீகளாக்கும்?.. சரீஈஈஈ.. அது கெடக்கட்டும் கார்ல வர்றப்பவே கேக்கணும்னு நினைச்சேன்.. டிரைவர்பய இருக்கானேன்னு பேசாம இருந்தேன்.. நா வெளிய வந்ததுக்கப்புறம் அந்த ஆடிட்டர் பய ஒன்கிட்ட ஏதோ சொன்னாப்பலருக்கு? என்ன விசயம்? ஒம் மொகம் அப்படியே பேயறைஞ்சாப்பலாயிருச்சே.. என்னடே.. என்ன விசயம்? வேற ஏதாச்சும் எனக்கு தெரியாம செஞ்சி வச்சிருக்கியா?'
ராசேந்திரன் ஒரு நொடி உண்மையைக் கூறிவிடலாமா என்று யோசித்தான். ஆனால் அடுத்த நொடியே இப்போதிருக்கும் தொல்லையில் இதுவும் சேர்ந்துக்கொண்டால் வேறு வினையே வேண்டாம் என்று நினைத்து இல்லை என தலையை அசைத்தான்.
'அப்படின்னா.. என்னடே.. என்ன சொல்ல வரே? அவன் ஒன்னும் சொல்லலேன்னு சொல்றியா? இல்ல நீ ஒன்னும் செய்யலேங்கறியா?'
பொங்கிவந்த எரிச்சலைக் கட்டுப்படுத்திக்கொண்டு, 'நீங்க நெனக்கறா மாதிரி ஒன்னும் இல்லேன்னு அர்த்தம்.' என்றான்.
'நான் நெனக்கறா மாதிரின்னா? நா என்ன எளவ நெனக்கேங்கறத கண்டுபிடிச்சிட்டீங்களாக்கும்? சரி.. அது போட்டும்.. இப்ப என்ன செய்யலாம். அதச் சொல்லு?'
'அப்படீன்னா? வெளங்கல..'
'எலேய்.. வெளங்கலையா இல்ல வெளங்காத மாதிரி நடிக்கியா?'
என்னடாயிது ரோதனை என்று நொந்துப்போன ராசேந்திரன் இங்கிருந்து போனால்தான் தன் தந்தையிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நோக்கத்துடன் எழுந்து நின்றான். 'நா கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்..'
ரத்தினவேலு கோபத்துடன் எழுந்து வழிமறித்தார். 'எலேய் நா இங்க ஒருத்தன் வேல மெனக்கெட்டு கத்திக்கிட்டிருக்கேன்.. நீ வெளியில கெளம்பறியோ.. எதுக்கு? அந்த வெட்டிப்பயல்வளோட சேர்ந்து குடிக்கத்தான?'
ராசேந்திரன் வெறுப்புடன் அவரைப் பார்த்தான். 'இப்ப நீங்க எத கேட்டாலும் எங்கிட்ட பதிலில்லை... நீங்க சொன்னா மாதிரி என் கூட்டாளி பயல்களோட பேசினாத்தான் எதாச்சும் ஐடியா வரும்.. நீங்க பேசாம எதையாச்சும் வாங்கி வரச் சொல்லி சாப்ட்டுட்டு படுங்க.. காலைல பேசிக்கலாம்..'
அவனுடைய பதிலிலிருந்த ஏளனம் ரத்தினவேலுவை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.. ஆவேசத்தில் உதடுகள் துடிக்க ராசேந்திரனின் சட்டையை ஒரே கொத்தாய் பிடித்து உலுக்கினார். 'என்னலே சொன்னே.. எதையாச்சும் தின்னுட்டு தூங்கவா?.. எலேய்.. சாப்பிடறது.. தூங்கறதுன்னா என்னன்னே தெரியாம வளந்த ஒடம்புடா இது.. குடிகாரப் பய மவனே.. யார பாத்து என்ன பேசறே? நம்மள ரெண்டு வேலைக்கார பய புள்ளங்கக் கிட்ட ஏச்சு வாங்க வச்சவன ஒன்னு தூங்க விடாம பண்ணணும்.. இல்ல நிரந்தரமா தூங்க வச்சிரணும்.. அதுக்கப்புறந்தாண்டா மத்த சோலியெல்லாம்..'
ராசேந்திரனுக்கு அவருடைய நோக்கம் தெளிவாக தெரிந்தாலும்... 'என்ன சொல்றீங்க நீங்க? தெரிஞ்சிதான் பேசறீங்களா?' என்றான் அதிர்ச்சியுடன்.. 'என்னாலெல்லாம் அப்படி நெனச்சிப் பாக்கக் கூட முடியாது.. கொலைங்கறது ஒங்களுக்கு வேணும்னா ஈசியா படலாம்.. ஆனால் எனக்கு அப்படியில்லை. என்னெ விடுங்க.. என்ன செஞ்சாலும் யோசிச்சித்தான் செய்யணும்...'
சட்டையின் மீதிருந்த ரத்தினவேலுவின் கரங்களை விலக்கிவிட்டுவிட்டு வாசலை நோக்கி ராசேந்திரன் நடக்க, 'போடே.. போ.. ஒன்னெ நம்பி நா இல்லடே.. என்ன செய்யணுமோ அத நானே செஞ்சிக்கறேன்.. எப்ப அவன் இந்த அளவுக்கு வந்துட்டானோ ஒன்னு அவன் இருக்கணும்.. இல்ல நானு.. முதுகெலும்பில்லாத பய.. ஒன்னெ நம்பி இருந்தேன் பார்.. என்னெய சொல்லணும்... தொட நடுங்கிப் பய.. போ.. மூக்குபுடிக்க குடிச்சிட்டு எங்கயாச்சும் உருளு...'
கோபத்தில் நடுங்கும் கரங்களுடன் ஹாலிலிருந்த தொலைப்பேசியை எடுத்து டயல் செய்து எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'எலேய்.. நாந்தாம்லே.. இன்னைக்கி ராத்திரி பஸ்சுக்கு கெளம்பி வா.. நம்ம பயலுவள கூட்டிக்கோ.. வீட்டுக்கு வந்து தொலைச்சிராதீங்கலே.. தாம்பரம் வந்ததும் எனக்கு இந்த நம்பருக்கு போன் போடு.. செல்லுல கூப்டாதீங்கலே.. வம்பு.. நீங்க என்ன செய்யணுங்கறத நேர்ல சொல்றேன்.. என்னடே.. எலேய் இங்கருக்கற பயலுகல நம்பமுடியாமத்தானே ஒன்னையெ கூப்டறேன்.. காதும் காதும் வச்சா மாதிரி முடிச்சிப் போட்டுட்டு ஊர பாக்க போயிருங்கலே.. பொறவு நடக்கறத நா பாத்துக்கறேன்.. என்ன சொல்லுதே..?' என்றார் கடகடவென்று..
'....'
'அதெல்லாம் பாத்துக்கலாம்லே.. இதுக்கு முன்னாடி நீ செஞ்சதுக்கெல்லாம் சொன்னா சொன்னபடி குடுத்துருக்கேன்லேல்லே.. பெறவென்ன.. பேசாம பொறப்பட்டு வா.. பேசிக்கிருவோம்.. எலேய்.. உன் கூட்டாளி பயலுகளுக்குக் கூட என்ன வெசயமா மதறாசுக்கு வரோம்னு தெரியப்படாது.. என்ன வெளங்குதா? வச்சிடறேன்..'
பேசி முடித்துவிட்டு வைத்துவிட்டு தொலைப்பேசியையே பார்த்தவாறு நின்றிருந்தார் ரத்தினவேலு.. 'எலேய் சிலுவை.. நாளைக்கின்னேரம்.. மணிய எண்ணிக்கலே... எண்ணிக்க..'
*********
'How are they Doctor?'
'Your Son will survive.. I am more worried about your wife...'
மாதவன் திகைப்புடன் மருத்துவரைப் பார்த்தார், 'என்ன சொல்றீங்க டாக்டர்?'
ஐந்து நட்சத்திர விடுதியின் பிரம்மாண்டத்துடன் அமைந்திருந்த மருத்துவமனையின் தலைவருடைய நேர்த்தியான அறையில் அமர்ந்திருந்த மாதவனுக்கு அறையிலிருந்த குளிர்சாதன பெட்டி முழுவீச்சில் இயங்கியபோதும் பதற்றத்தில் வியர்த்துக்கொட்டியது.
மும்பையின் மிகப் பிரபலமான மருத்துவமனைகளுள் அதுவும் ஒன்று. சீனிவாசன் முயற்சித்தது தற்கொலைதான் என்றாலும் மாதவனுடைய முந்தைய வங்கி முதல்வருக்கு மருத்துவமனையின் இயக்குனர்கள் குழுவிலிருந்த பல இயக்குனர்களும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதுடன் அவருடைய வங்கி மருத்துவமனைக்கு பெருமளவு கடன் வழங்கியிருந்ததால் என்ன ஏது என்று கேட்காமலே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையையும் துவங்க முடிந்தது.
'உங்க மகனுக்கு நிறைய ரத்த இழப்பு ஏற்பட்டிருக்கு மிஸ்டர் மாதவன். இருந்தாலும் அவருடைய வயதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் அவரால் இதிலிருந்து மீள முடியும் என்றுதான் கருதுகிறேன்.. ஆனால் அதற்கு நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.. It might take some time.. He has also aggravated the fracture in his leg.. அதையும் ஒரு சர்ஜரி செஞ்சித்தான் கரெக்ட் பண்ண முடியும்..'
மருத்துவர் அடுத்து சற்று நேரம் தன் முன்னே மிர்ஸ். சரோஜா என்ற பெயர் பொறித்திருந்த கோப்பை ஆராய்ந்தார். 'She is the one who is more critical.. ஏற்கனவே அவங்க ப்ளட் ப்ரஷர் அளவுக்கதிகமா இருந்துருக்கு.. அதான் அவங்களால அதிர்ச்சிய தாங்கிக்க முடியல.. இப்போதைக்கு ஒன்னும் சொல்ல முடியாது மிஸ்டர் மாதவன்.. I am sorry. அவங்களுக்கு வந்துருக்கற Speech loss temporaryயா இருக்கலாம்.. அதுபோலத்தான் paralytic attackகும்.. கோமாவுல போயிருக்க வேண்டியவங்க.. She must be really fortunate... அதுலருந்து தப்பிச்சிட்டாங்க.. அவங்களுக்கு இருக்கற ப்ரஷர் லெவல்ல she could have gone into a coma.. yes.. it was possible .. சோ.. அவங்க கண்டிஷந்தான் ரொம்பவும் க்ரிட்டிக்கல்.. சீனிவாசன் is comparatively better....'
மணிக்கட்டுகளிலிருந்து வழிந்தோடிய ரத்தத்துடன் குளியலறையில் கிடந்த சீனிவாசன் மீதுதான் எல்லோருடைய கவனமும் சென்றிருந்ததே தவிர சோபாவில் மூர்ச்சையாகி விழுந்திருந்த சரோஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதையோ அல்லது அதன் விளைவாக ஒரு பக்க காலும் கையும் செயலற்றுப்போனதையோ வீட்டிலிருந்த யாரும் கவனிக்கவில்லை...
சீனிவாசனுக்கென வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தபோதுதான் மூர்ச்சையாகிக் கிடந்த தன் மனைவியைப் பற்றியே நினைவே வந்தது மாதவனுக்கு. விட்டு, விட்டு வந்துக்கொண்டிருந்த சுவாசத்தைக் கவனித்த வத்ஸ்லா, 'டாடி இங்க பாருங்க.. Mummy is struggling to breath..' என்று அலற அவளையும் அதே ஆம்புலன்சில் அள்ளிப் போட்டுக்கொண்டு விரைந்தனர் இருவரும்..
மருத்துவரின் பதிலைக் கேட்டு தலையைக் கவிழ்த்துக்கொண்டு விசும்பும் வத்ஸலாவை எப்படி தேற்றுவதென விளங்காமல் மாதவன் அமர்ந்திருக்க அவர்களை தனிமையில் விட்டு அறையை விட்டு மெள்ள வெளியேறினார் மருத்துவர்..
தொடரும்..
10 comments:
கத்தி போயி வாலு வந்தது டும் டும் டும். வாலு போயி காலு வந்தது டும் டும் டும்...சீனி செஞ்சது சரோஜாவ தாக்குது டும்டும்டும்..
கதாசிரியர், மாதவன இப்போதைக்கு மும்பய விட்டு வரவிடமாட்டார் போலிருக்கே...
இங்க என்னடான்னா, ஒரு பய கொலவெறியோட இருக்கான்...
பெத்த மனம் பித்து;பிள்ளை மனம் கல்லு
வாங்க கிருஷ்ணா,
மாதவன இப்போதைக்கு மும்பய விட்டு வரவிடமாட்டார் போலிருக்கே...//
அப்படித்தான் நானும் நினைக்கேன்.
இங்க என்னடான்னா, ஒரு பய கொலவெறியோட இருக்கான்... //
ஒருத்தன் மட்டுமா:)
வாங்க ஜி!
பெத்த மனம் பித்து;பிள்ளை மனம் கல்லு //
என்ன பண்றது? இதுதான காலங்காலமா நடந்துக்கிட்டு வருது..
Slashing the wrists with a razor? I expected him to try some hanging. :(((
Regards,
Dondu N.Raghavan (7.3.07)
அதெப்படி சார் கரெக்டா சொல்றீங்க?
அன்னைக்கே ஒங்க பின்னூட்டத்த போட்டுட்டா சஸ்பென்ஸ் போயிருமேன்னுதான் போடலை..
அன்புடன்,
ஜோசஃப்
ஒரு பாவமுமறியாத மாணிக்கவேலு மீது கொலைப்பழி விழுந்தது.....
மாதவன் மும்பயிலேயெ முடங்கிப் போகவேண்டிய நிலை.....
பிலிப் சுந்தரம்,சுந்தரலிங்கத்திற்கு மனஉளைச்சல்......
வில்லங்க ஆசாமிகளுக்கு இதுவரையில்.....? சிவஞானம்ஜி
வாங்க ஜி!
இதுக்கு முன்னால சிவான்னு வந்தது நீங்க இல்லையா?
வில்லங்க ஆசாமிகளுக்கு இதுவரையில்.....? சிவஞானம்ஜி //
என்ன பண்ணலாங்கறீங்க...
அப்படீன்னா இன்னைக்கி நாட்டுல அக்கிரமம் பண்ணிக்கிட்டு அதிகாரத்துல இருக்கறவங்களையெல்லாம் என்ன செய்யலாம்?
அதுவும் நானே;இதுவும் நானே
ப்ளாக்கர் விருப்பப்படி என் பேரைப்போடுது சிவஞானம்ஜி
//'எலேய் சிலுவை.. நாளைக்கின்னேரம்.. மணிய எண்ணிக்கலே... எண்ணிக்க..'//
ஆனா, அங்க என்னாச்சின்னு மாத்திரம் எங்காளு இப்போதைக்கு சொல்ல மாட்டார்....
மறுபடியும் வாங்க கிருஷ்ணா,
ஆனா, அங்க என்னாச்சின்னு மாத்திரம் எங்காளு இப்போதைக்கு சொல்ல மாட்டார்.... //
சொல்றேன், சொல்றேன்.. சொல்லாம எங்கப் போகப் போறேன்..
சூரியனுடைய முதல் பகுதியிலேயே சொல்லிடுவேன்..:)
Post a Comment