7.3.07

சூரியன் 182

பாபு சுரேஷ் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து கண்களை எடுக்க முடியாமல் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

'என்னங்க இது? ஒங்க பேங்க்ல வேல பாக்கற எல்லாருக்கும் ஏதாச்சும் பிரச்சினை போலருக்கே.' என்ற தன் மனைவியை திரும்பி பார்த்தார். 'ஏன் அப்படி சொல்றே.. நமக்கு என்ன பிரச்சினை இப்போ?'

சுசீந்தரா வியப்புடன் தன் கணவனைப் பார்த்தாள். 'என்னங்க ரொம்ப கூலா சொல்றீங்க.. போன ரெண்டு நாளா ரம்யாவ காணாம நாம பட்ட பாட்டை மறந்துட்டீங்களா?'

ரம்யா சிரித்தாள். 'அதான் இப்ப தீர்ந்துருச்சேம்மா? இன்னும் என்ன?'

'என்னமோ போ.. அத நெனச்சிப் பாக்கவே பயமாருக்கு.. நம்மள மாதிரிதானே இப்ப இந்த பையனோட அப்பாவுக்கும் இருக்கும்? பாவம் இப்பத்தான் பேங்க்ல ஜாய்ன் பண்ணியிருக்காரு.. அதுக்குள்ள இப்படி?' என்ற சூசீந்தரா தன் கணவனைப் பார்த்தாள். 'இப்ப என்ன ஆவுங்க?'

பாபு சுரேஷ் பதிலளிக்காமல் தொலைக்காட்சியில் மாதவனின் மகன் விடுவிக்கப்பட்டதாகவும் ஆயினும் அவர் மும்பையிலிருந்து செல்லலாகாது என காவல்துறை அதிகாரிகள் பணித்திருப்பதாகவும் கூறுவதை கேட்டுவிட்டு தன் மனைவி மற்றும் மகளைப் பார்த்தார். 'என்னன்னு தெரியலையே.. இன்னைக்கி ஆஃபீசுக்கு போகாததுனால அங்க என்ன நடக்குதுன்னே தெரியலை. மாதவன் சார் ஒருவேளை புறப்பட்டு போயிருப்பார். இவங்க சொல்றத பார்த்தா அவர் அவ்வளவு சீக்கிரம் திரும்பி வர வாய்ப்பில்லை.. இதுக்கிடையில என் பாடும் திண்டாட்டம்தான் போலருக்கு.'

'ஏம்ப்பா அப்படி சொல்றீங்க? இதுல ஒங்களுக்கு என்ன ரோல்?' என்றாள் ரம்யா.

'இருக்கும்மா' என்றவர் முந்தைய நாள் தன்னை தலைமையகத்துக்கு மாற்ற டாக்டர் சோமசுந்தரம் பரிந்துரைத்ததை விவரித்தார். 'ஆனா அந்த இன்னொரு டைரக்டர் நாடாருக்கு டாக்டரோட சஜ்ஜஷன் புடிக்கலைன்னு நினைக்கேன். அதுவுமில்லாம டாக்டரும் நேத்தைக்கே போர்டலருந்து ரிசைன் பண்ணிட்டார். இப்போ சேர்மனுக்கும் பிரச்சினை.. அதனாலதான் யோசனையாருக்கு.. இதுக்கிடையில இந்த கல்யாண வேலை..'

ரம்யா , 'இத சாக்கா வச்சிக்கிட்டு கல்யாணத்த கொஞ்சம் தள்ளிப் போட்டா என்னப்பா?' என்றாள் ஒரு விஷம புன்னகையுடன்..

சுசீந்தரா எரிச்சலுடன் தன் மகளைப் பார்த்தாள். 'பார்த்தீங்களா இவ பேசறத?'

பாபு சுரேஷ் புன்னகையுடன் தன் மனைவியைப் பார்த்தார். 'ச்சே.. அவ சும்மா கேலிக்கி சொல்றா. நீ வேற புலம்ப ஆரம்பிச்சிராத.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. கல்யாணத்துக்கு இன்னும் மூனு வாரம் இருக்குல்லே.. அதுக்குள்ள எல்லாம் சரியாயிரும்..' என்றவர் எழுந்து தொலைக்காட்சியை அணைத்தார். 'சரி.. போய் படுங்க.. நாளைக்கி இன்னும் கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்குல்லே..'

சுசீந்தரா எழுந்திருக்க முடியாமல் எழுந்து நிற்க ரம்யா புன்னகையுடன் போய் அவளை அணைத்துக்கொண்டாள். 'ஏம்மா நீ கொஞ்சம் வெய்ட்ட குறைக்கலாம் இல்லே...?'

'ஆமாடி.. சொல்ல மாட்டே.. நானே நேத்து ரெண்டு நாளா சரியா சாப்பிடாத களைப்புல இருக்கேன்.. நீ வேற.. இது கள்ளம் கபடில்லாத ஒடம்பு.. அப்படித்தான் இருக்கும். நீ ஒங்கப்பாவுக்கு சொல்லு...'

ரம்யா சிரித்தாள். 'பாத்தீங்களாப்பா அம்மா சாடையா சொல்றத?'

'அம்மா சொல்றதும் சரிதானம்மா.. எங்க பழைய சேர்மனும் ஒருதரம் சொல்லியிருக்கார்.. வெய்ட்ட குறைங்க பாபுன்னு... ஒன் கல்யாணம் முடிஞ்சதும் டெய்லி காலையில வாக் போயி குறைச்சிரப்போறேன்..'

ரம்யா கலகலவென சிரித்தாள். 'அப்பா இதுவரைக்கும் நீங்க பலதரம் இத சொல்லியாச்சி..'

பாபு சுரேஷ் சிரித்தவாறு தன் அறையை நோக்கி நடக்க ரம்யா ஹால் விளக்குகளை அணைத்துவிட்டு தன் தாயுடன் மாடிப்படியேறினாள், 'குட் நைட்பா' என்றவாறு..

*****

'யார்ங்க போன்ல?' என்றாள் கனகா தன் கணவரைப் பார்த்து.

சுந்தரலிங்கம் சலிப்புடன் செல்ஃபோனை சோபாவில் எறிந்துவிட்டு எழுந்து நின்று இரண்டு கண்களையும் அழுந்த தேய்த்துக் கொடுத்தார். 'எதுக்கு கனகா.. விடு.. இன்னைக்கி யார் மொகத்துல முளிச்சனோ பிரச்சினைக்கு மேல பிரச்சினை.. இன்னைக்கி படுத்தாலும் தூக்கம் வராது போலருக்கு.. நீ போய் படு..'

கனகா குழப்பத்துடன் தன் கணவரைப் பார்த்தாள். 'என்னங்க.. நா ஒன்னு கேட்டா நீங்க ஒன்னு சொல்றீங்க? ஃபோன்ல யாருன்னு தான கேட்டேன்?'

சுந்தரலிங்கம் திரும்பி தன் மனைவியைப் பார்த்தாள். 'எல்லாம் அந்த சேதுதான். நல்லா குடிச்சிருக்கார் போலருக்கு.. அவர் பேசறத புரிஞ்சிக்கிறதுக்கே கஷ்டமாயிருந்துதுன்னா அவர் சொன்ன விஷயம் அதுக்கு மேல.. குழம்புன குட்டையில மீன் பிடிக்கறவன்னு சொல்வாங்களே அது இவருக்குத்தான் ரொம்ப பொருந்தும்.. இந்தாள் பேச்ச கேட்டு இன்னைக்கி நம்ம ஃபிலிப்புவ வேற இக்னோர் பண்ணிட்டேன்.. சில நாள்ல நமக்கு தெரியாமயே நிறைய முட்டாள்தனம் செஞ்சிருவோம் போலருக்கு..'

'என்னங்க சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலை.. ஃபிலிப்ப இக்னோர் பண்ணீங்களா? எதுக்கு?'

சுந்தரலிங்கம் அன்றைய தினம் காலையிலிருந்து மாலை பத்திரிகை நிருபர் கூட்டம் நடந்தது வரை சுருக்கமாக கூறினார். 'இப்ப சொல்லு... நா பண்ணது முட்டாத்தனம்தானே.. அந்த ஃபிலிப் என்னெ பத்தி என்ன நினைச்சிருப்பார்?'

கனகா எரிச்சலுடன் தன் கணவனைப் பார்த்தாள். 'பின்னே.. ஏங்க நா தெரியாமத்தான் கேக்கேன்.. அந்த சேதுவப்பத்தித்தான் ஒங்களுக்கு தெரியுமில்ல.. அவர் எங்க.. நம்ம ஃபிலிப் எங்க? அதுவுமில்லாம ஃபிலிப் பாவங்க.. அவருக்குன்னு யார் இருக்கா? இப்படிப் போய் பண்ணிட்டு வந்து நிக்கீங்க? சரி.. இப்ப அந்த சேதுவுக்கு என்ன வேணுமாம்?'

'ஆமா இப்ப அத தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ணப் போற?' என்றார் சுந்தரலிங்கம் சலிப்புடன், 'விட்டுத்தள்ளு.. குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு..'

'அட! அப்படி என்னத்தத்தாங்க சொன்னாரு? மனசுல வச்சிக்கிட்டு உழலாம சொல்லுங்க..'

'அவருக்கு இப்ப சேர்மனாவணுமாம்.. அதுக்கு நானும் ரெக்கமெண்ட் பண்ணணுமாம்!'

'ஏன்.. மாதவன் திரும்பி வராம அப்படியே போயிருவாராம்மா?'

சுந்தரலிங்கம் கனகாவின் குரலிலிருந்த கேலியை உணர்ந்து சிரித்தார். 'ஒனக்கு தெரியுது.. அவருக்கு தெரியலையே.. அந்த பையனுக்கு பாம்பேய விட்டு போக்கூடாதுன்னு போலீஸ் கண்டிஷன் போட்டுருக்காம். அதனால மாதவனும் இப்போதைக்கு வரமாட்டார்னு இவரா கற்பனை பண்ணிக்கிட்டு இப்படியொரு ஐடியாவ எடுத்து விடறார். டாக்டர் சோமசுந்தரத்துக்கிட்டயும் சொல்லிட்டாராம்.. இப்ப நா அவர கூப்ட்டு இவரையே போட்டுரணும்னு சொல்லணுமாம். அதான் இந்த குடிபோதையிலயும் போன் போட்டு சொல்றார்.'

'அந்தாளுக்கு இருந்தாலும் ரொம்ப தைரியம்தாங்க.. போனதடவ சேர்மன் இல்லாதப்போ ஆக்டிங்கா இருந்த ஒங்களையே கூப்ட்டு இப்படி கேக்கறார்னா..' என்று நொடித்த கனகா, 'நீங்க ஒன்னும் சரின்னு சொல்லலையே?' என்றாள்.

'அதான் நீ கேட்டுக்கிட்டு இருந்தியே.. நா பாட்டுக்கு கேட்டுக்கிட்டுருந்துட்டு கட் பண்ணிட்டனே.. சரி.. அதப் பத்தி பேச ஆரம்பிச்சா தூக்கம் போயிரும்.. நீ ரூமுக்கு போ.. நா பால காய்ச்சி கொண்டாரேன்.. மறக்காம ஆஸ்த்மா கேப்சூல எடுத்து வை.. அப்புறம் நேத்தைக்கி மாதிரி மூச்சு வாங்க போவுது..' என்றவாறு சுந்தரலிங்கம் சமையலறையை நோக்கி நடக்க கனகா சிரமப்பட்டு சோபாவிலிருந்து எழுந்து தன் அறையை நோக்கி நடந்தாள்..

*****

லிஃப்ட் தன்னுடைய தளத்தை அடைந்ததும் பரபரப்புடன் கதவுகளை திறந்தவாறு குடியிருப்பு கதவை தட்டினாள் சரோஜா..

சமையலறையில் வேலையாயிருந்த சிவகாமி கைகளை சேலைத் தலைப்பில் துடைத்தவாறு, 'வந்துண்டேயிருக்கேன்.' என்ற குரலுடன் வாசற் கதவுகளை திறக்க அவளைத் தள்ளிக்கொண்டு நுழைந்த சரோஜா சீனிவாசனை ஹாலில் காணாமல், 'எங்க சிவகாமி சீனி? விட்டுட்டாங்கன்னு சொன்னாரே?' என்றாள் பதற்றத்துடன்..

'இருக்கான்.. பதட்டப்படாதே.. இன்னிக்கி சாயந்தரத்துலருந்து ரூம்லதான் அடைஞ்சி கிடக்கான்.. நீங்கல்லாம் வரேள்னும் சொல்லிப் பார்த்துட்டேன்.. இப்ப வரைக்கும் வெளிய வராம உள்ளயே கெடக்கான்.. நீயே கதவ தட்டி கூப்பிடு.. வரானான்னு பாப்பம்..'

அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே சீனியின் அறைக்கதவை நெருங்கிய சரோஜா, 'டேய்.. சீனி.. அம்மா வந்துருக்கேண்டா.. கதவ தொற..' என்றாள் அழுகுரலுடன்..

அதற்குள் மாதவனும், வத்ஸலவும் வந்துவிட, 'ஏய்.. சரோ.. ப்ளீஸ் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத.. நடுராத்திரி ஆவப் போவுது.. அவன் ஒருவேள கால் வலியில தூங்கியிருப்பான்.. விடு வீட்ல இருக்கறத கன்ஃபர்ம் பண்ணியாச்சில்லே போய் பேசாம படு.. காலையில பேசிக்கலாம்..' என்றார் மாதவன்.

'என்ன சொன்னீங்க.. போய் படுக்கறதா? ஒங்களுக்கு புத்தி பிசகிப் போச்சிதா.. நா எப்படா எம்புள்ளைய பார்த்து பேசுவோம்னு வந்தா?..' சரோஜாவின் கோபத்தை சற்றும் எதிர்பாராத மாதவன் திடுக்கிட்டு தன்னை நோக்கி கோபத்துடன் வந்தவளைக் கண்டு மிரண்டுப் போனார்.

வத்ஸ்லா சுதாரித்துக்கொண்டு தன் தாயை இடைமறித்து கட்டிப் பிடித்தாள். 'அம்மா.. ப்ளீஸ்.. கண்ட்ரோல் யுவர்செல்ஃப்.. சீனி ஒருவேளை பாத்ரூம்ல இருக்கானோ என்னவோ.. இரு நா கூப்பிடறேன்..'

அவளும் கதவைத் தட்டிப் பார்த்தும் அறைக்குள்ளிருந்து எந்த பதிலும் வராமல் போகவே சரோஜா குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.. ;ஐயோ என் புள்ளைக்கு என்னமோ ஆயிருச்சி.. என்னங்க பாத்துக்கிட்டு நிக்கீங்க? கதவ ஒடச்சி தொறங்களேன்..'

மாதவன் செய்வதறியாது திகைத்து நிற்க வத்ஸ்லா சட்டென்று நினைவுக்கு வந்தவளாய் தன் அறையை நோக்கி ஓடினாள். சீனியின் அறைக்கு அவளுடைய அறையிலிருந்து ஒரு வழியிருந்தது!

நல்லவேளையாக அது தாளிடாமல் இருக்கவே அதை திறந்துக்கொண்டு இருட்டாயிருந்த சீனியின் அறைக்குள் நுழைந்து விளக்குகளைப் போட்டாள்.. சீனியை அறையில் காணவில்லை.. அதிர்ச்சியடைந்த வத்ஸ்லா அறையெங்கும் கண்களை அலையவிட பாத்ரூமிலிருந்து சீனி முனகும் குரல் கேட்டது..

'அங்க என்னடா பண்றே?' என்றவாறு ஒருக்களித்து மூடப்பட்டிருந்த குளியலறையை திறந்த வத்ஸ்லா , 'அம்மா இங்க வாயேன்..' என்று வீறிட அவளுடைய குரல் கேட்டு அந்த குடியிருப்பு முழுவதும் விளக்குகள் படபடவென எரிந்தன..

தொடரும்..

9 comments:

அருண்மொழி said...

சார், சீரியல் எடுக்க practice செய்கின்றீர்களா? மூன்று கதை. வழக்கம்போல முக்கிய இடத்தில் தொடரும். ம்ம்ம் அடுத்த எபிசோடு எப்போ உதிக்கும்?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அருண்மொழி,


அடுத்த எபிசோடு எப்போ உதிக்கும்?//

வெள்ளிக்கிழமை..

நாளை சில கமிட்டிக் கூட்டங்கள் இருக்கின்றன.. சூரியனில் அல்ல.. என்னுடைய வங்கியில்:)

siva gnanamji(#18100882083107547329) said...

சாரி இன்னிக்கு ஓவர்டோஸ்...சீனி விவகாரத்தில்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

சாரி இன்னிக்கு ஓவர்டோஸ்...சீனி விவகாரத்தில் //

வேற வழியில்லீங்க.. எல்லாமே விதிப்படித்தான நடக்குது..

dondu(#11168674346665545885) said...

Slashing the wrists with a razor? I expected him to try some hanging. :(((

Regards,
Dondu N.Raghavan

இலவசக்கொத்தனார் said...

//சுசீந்தரா எழுந்திருக்க முடியாமல் எழுந்து நிற்க//

//கனகா சிரமப்பட்டு சோபாவிலிருந்து எழுந்து//

//சரோஜா குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்..//

என்னங்க எல்லாரும் உடலாலோ மனத்தாலோ ரொம்ப தளர்ந்து போய் இருக்காங்க? எல்லா பெண்களையும் இப்படிச் சித்தரிக்கறீங்கன்னு பெண் ஈயம் காய்ச்சி ஊத்திடப் போறாங்க ஜாக்கிரதை. ;-D

krishjapan said...

என்னாங்க சாரே, கதைய குளோஸ் பண்ணனுன்றதுக்காக, நிறைய ஆளுங்கள, குளோஸ் பண்ணிட்டே இருக்கீங்க...(இது எத்தனாவது ஆளுன்னு கணக்காவது இருக்கா...)

சமீபத்தில, சுஜாதா, குமுதத்தில, தான் முன்னாடி, ப்ரியா(பின்னர் படமா எடுக்கப்பட்டது)கதைய எழுதிட்டிருக்கும்போது, ஒரு அத்தியாயத்தில், கதாநாயகி ப்ரியா இறந்துவிட்டதாக எழுதி விட்டதாகவும், அதனை எஸ்.ஏ.பி. ஏற்காமல், மாற்றச் சொன்னதாகவும், அச்சில் வந்தபின் எப்படி மாற்றுவது என மலைத்தபோது, அதற்கு இரண்டெ வார்த்தைகளில் தீர்வு சொன்னதாகவும் எழுதியிருந்தார்.

அப்படி, உங்களுக்கு ஒரு சவால்..சீனிய சாகடிக்காம இதை தொடருங்க பார்க்கலாம்....வேணுன்னா, தொடருக்கு வெள்ளிக்கிழமை லீவு விட்டுருங்க, யோசிக்க அடுத்த புதன் வரை நேரம் இருக்குமுல்ல...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கொத்தனார்,

என்னங்க எல்லாரும் உடலாலோ மனத்தாலோ ரொம்ப தளர்ந்து போய் இருக்காங்க? எல்லா பெண்களையும் இப்படிச் சித்தரிக்கறீங்கன்னு பெண் ஈயம் காய்ச்சி ஊத்திடப் போறாங்க ஜாக்கிரதை. //

எங்க குடியிருப்புல சுமார் 60 flats இருக்கு. அதுல சுமார் 15 flatsல நா சொன்ன கதாபாத்திரங்கள மாதிரி பெண்கள். 50 - 55 வயசுல.. எல்லாருக்குமே எழுந்தா ஒக்கார முடியாது ஒக்காந்தா எழுந்திருக்க முடியாது.. ஏன்னு சொல்லணுமா எல்லாம் over weight ப்ராப்ளம்தான்.. ஆனா அவங்க கணவர்க எல்லாம் ஸ்மார்ட்டா ஒல்லியா இருக்கற உயர் மட்ட அதிகாரிகள்.. நம்ம சூரியன்ல வர்ற ஆண்கள் மாதிரி முக்கியமா சுந்தரலிங்கம், ஃபிலிப் மாதிரி..

அந்த பாதிப்புதான் கதையிலயும் வருது.. மத்தபடி பெண்களை கொஞ்சம் ஜாஸ்தியாவே (!)மதிப்பவன் நான்;)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா,

அப்படி, உங்களுக்கு ஒரு சவால்..சீனிய சாகடிக்காம இதை தொடருங்க பார்க்கலாம்....வேணுன்னா, தொடருக்கு வெள்ளிக்கிழமை லீவு விட்டுருங்க, யோசிக்க அடுத்த புதன் வரை நேரம் இருக்குமுல்ல//

அதுக்கெதுக்கு சவாலெல்லாம்.. பொறுமையா இருங்க.. கத தன் போக்குல போவும்.. கதைக்கு தேவையிருந்தாத்தான் சாவாங்க..

அப்புறம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன் சூரியன் முடியாது.. ஒரு தாற்காலிக இடைவெளி மட்டுந்தான் இருக்கும்..

ஏன்னா இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கே..