16.3.07

சூரியன் 184

'இப்ப என்ன நடக்கும்னு நினைக்கீங்க ரவி?'

தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு தன் எதிரில் அமர்ந்திருந்த வழக்கறிஞர் நாராயணசாமியைப் பார்த்தான் ரவி. அவனருகில் கவலையுடன் மஞ்சு.

'தெரியலையே சார்.. புது சேர்மன் சார்ஜ் எடுத்திருக்கறது எனக்கு நல்லதுதான்னு நினைச்சிக்கிட்டிருந்த நேரத்துல இப்படி.. என்ன சொல்றதுன்னே தெரியல சார். எல்லாம் என் நேரம்னு நொந்துக்கறத தவிர வேற என்ன சொல்றதுன்னு தெரியல..'

'எதுக்கு ரவி நிராசையா பேசறேள்?' என்றார் நாராயணசாமி. 'இப்ப என்ன? ஒங்க சேர்மன் மும்பைக்கு போனா திரும்பி வராமயா போயிருவாரு? ஒங்க என்க்வயரிய ப்ரிப்போன் பண்ண முடியுமான்னு கேட்டுருக்கோம். ஒங்களுக்கு சேர்மன் திருப்பி வந்ததுக்கப்புறம் நடத்தினா போறும்னு தோனிச்சின்னா சொல்லுங்க.. மறுபடியும் ஒரு பெட்டிஷன் போட்டுப் பார்ப்போம். இப்பருக்கற சூழ்நிலையில ஒங்க என்க்வயரி ஆஃபீசரே நம்ம ப்ரீப்போன் பெட்டிஷன ரிஜெக்ட் பண்ணாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல.. டோண்ட் ஒர்றி.' என்றவர் மஞ்சுவைப் பார்த்தார். 'நீ சொல்லும்மா.. ரவிக்கு இப்ப தேவை கான்ஃபிடன்ஸ்.. அத மட்டும் இழந்துறக்கூடாது.'

மஞ்சு தன் அருகில் அமர்ந்திருந்த ரவியின் கரங்களை ஆதரவாய் பற்றினாள். 'ஆமா ரவி. அங்கிள் சொன்னா மாதிரி நம்பிக்கையோட இருங்க. நம்மள மீறி எதுவும் நடக்கப் போறதில்லை.'

ரவி சரியென்று தலையை அசைத்தான். 'நீங்க சொல்றதும் ஒருவகையில பார்த்தா சரியாத்தான் தோனுது சார். ஆனாலும் எங்க சேர்மனுக்கு இப்படியொரு சங்கடம் வந்திருக்க வேணாம்.. அந்த பையன பார்த்தாலும் பாவமாருக்கு.. அவனெ ரிலீஸ் பண்ணிட்டாலும் மும்பையிலருந்து வெளியேறக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டுருக்கறதால சாரால அவ்வளவு சீக்கிரம் அந்த பையன அங்க விட்டுட்டு வருவாரான்னு சந்தேகம்தான்.. சார் இல்லாத நேரத்துல இந்த மாதிரி எச்.ஆர் மேட்டர்ச டீல் பண்ற எச். ஆர். கமிட்டியும் கூடறதுக்கு சான்ஸ் இல்லேன்னுதான் நினைக்கறேன்...'

நாராயணசாமி புன்னகையுடன் எழுந்து நின்றார். 'அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.. So don't worry.. அது எப்ப நடந்தாலும் ஒங்க பக்கம்தான் சாதகமா முடியும்.. என்க்வயரி டேட் நீண்டு போறது நமக்கு நல்லதுதான்.. இன்னும் ஸ்ட்ராங்கா ப்ரெசண்ட் பண்லாமே.. கவலைய விடுங்க.. வேணும்னா ரெண்டு பேரும் எங்கயாச்சும் வெளியூர் போய்ட்டு வாங்க.. என்ன மஞ்சு.. ஏதாச்சும் ஐடியா வேணும்னா மாமிய கேளு.. அவளுக்கு தமிழ்நாட்ல தெரியாத கோயில் குளமே கிடையாது.. டூரிஸ்ட் ஸ்பாட்சும் அவளுக்கு அத்துப்படி.. நாளைக்கி கார்த்தால நா கெளம்பி போனதுக்கப்புறம் ஃப்ரீயாத்தான இருப்பா.. அப்போ டிஸ்கஸ் பண்ணுங்க.. நா வரேம்மா.. நா வரேன் ரவி.. No use in worrying about something which is not under our control.. எல்லாம் பகவான் விட்ட வழின்னு நினைச்சிக்கணும்.. bye..'

நாராயணசாமியை வழியனுப்பிவிட்டு திரும்பிய ரவி யோசனையுடன் தன் அறையை நோக்கிச் சென்றான். அவனைத் தொடர்ந்து சென்ற மஞ்சு சன்னல் வழியாக சாலையைப் பார்த்தவாறு நின்றிருந்தவனை பின்னாலிருந்து கட்டிப் பிடித்தாள். 'அங்கிள் சொன்னா மாதிரி எங்கயாச்சும் போய் வரலாம் ரவி.. பழனிக்கி போலாம்.. அங்கருந்து அப்படியே கொடைக்கானல் போய்ட்டு ஒரு ரெண்டு வாரம் கழிச்சி வரலாம்.. என்ன சொல்றீங்க?'

ரவி சரி என்று தலையை அசைத்தவாறு தன்னை அணைத்திருந்த மஞ்சுவின் கரங்களைப் பற்றினான்.. நேரம் போவதே தெரியாமல் இருவரும் அப்படியே நட்சத்திர குவியலாய் இருந்த நீல வானத்தை பார்த்தவாறு நின்றிருந்தனர்... கீஈஈஈஈழே.. சப்தமில்லாமல் வரிசையாய் வாகனங்கள்...

********
'சார்.. நீங்க சொன்னா மாதிரியே சர்ச் வாரண்ட் தயாரிச்சி வச்சிருக்கேன்.. காலையில முதல் வேலையா....'

தனபால் சாமி பொறுமையிழந்து கத்தினார், 'எதுக்குய்யா நாளைக்கு காலைல வரைக்கும்.. இப்பவே போய் கோழிய அமுக்குறா மாதிரி அமுக்குறத விட்டுட்டு...'

என்ன இது என்னைக்குமில்லாம என்ற குழப்பத்துடன் பார்த்தார் அவருடைய உதவி அதிகாரி. தனபால்சாமி பொறுமைக்கும் நிதானமாக யோசித்து செயல்படுவதற்கு பெயர்போனவர் என்பது அவருக்கு தெரியும்..

ஆகவே ஏன் இந்த விஷயத்தில் மட்டும் இப்படி என சிந்தித்தவர், 'சார்.. இப்பவே எட்டு மணியாயிருச்சி.. இதுக்கு மேல போயி.. நமக்கு ஏற்கனவே இந்த பாம்ப் பளாஸ்ட் ட்யூட்டி வேற இருக்கு சார்... நீங்க வந்ததும் சொல்லிட்டு போலாம்னுதான் நான் வெய்ட் பண்றேன்.. அதுவுமில்லாம அந்த ஏரியா ஸ்டேஷன்ல சொன்னாலே போறுமே சார்.. நாமளே ஏன் நேரடியா...' என்றார் தயக்கத்துடன்.

சட்டென்று பொங்கி வந்த கோபத்தை அடக்கியவாறு தன் எதிரில் நின்றிருந்தவரைப் பார்த்தார் தனபால் சாமி. அவர் கூறியதிலிருந்த நியாயத்தை உணர்ந்து தன் இருக்கையில் ஆயாசத்துடன் அமர்ந்தார். 'நீங்க சொல்றதும் சரிதான்யா.. நீங்க நம்ம ஏரியாவுக்கு போய் கோஆர்டினேட் பண்ணுங்க.. காலையில வாரண்ட ஏரியா எஸ்.ஐக்கு அனுப்பி அந்தாள் வீட்ட சர்ச் பண்ண சொல்லுங்க.. மீறி ஏதாச்சும் பண்ணா நாம இண்டர்ஃபியர் பண்லாம்.. நாமளா நேரடியா போயி பிரச்சினையானா ஒங்களுக்கு இதுல என்னய்யா பர்சனல் இண்ட்ரஸ்ட்டுன்னு டி.ஜி.பி கேட்டா நம்மளால பதில் சொல்ல முடியாது.. மேடத்துக்கிட்ட ஏற்கனவே சொல்லியாச்சின்னும் வெளிப்படையா சொல்ல முடியாது.. ச்சை... நாம செய்யறது சரின்னு நமக்கு தோனுனாலும் இந்த ஃபார்மாலிட்டியையெல்லாம் பாக்கத்தான வேண்டியிருக்கு...'

எஸ்.பி தன்னிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்த உதவி அதிகாரி அவர் பேசி முடிக்கும் வரை மரியாதை நிமித்தம் நின்றிருந்துவிட்டு இறுதியில் விறைப்புடன் வணக்கம் செலுத்திவிட்டு அறையை விட்டு வெளியேற தனபால்சாமி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினார்.

********

சிலுவை மாணிக்கம் நாடாரிடம் பேசி முடித்துவிட்டு இணைப்பைத் துண்டித்த சோமசுந்தரம் தன் எதிரில் அமர்ந்திருந்த தன் மகளைப் பார்த்தார்.

'நாளைக்கு நம்ம ஈ.சி.ஆர் பங்களாவுல மீட்டிங் வைக்கலாம்னு சொல்றார். நீயும் வரியா?'

'என்னப்பா கிண்டலா? நா எதுக்கு?' என்றாள் பூர்ணிமா புன்னகையுடன்..

சோமசுந்தரம் சிரித்தார். 'இல்லம்மா சீரியசாத்தான் சொல்றேன்.. எனக்கப்புறம் நீதான போர்ட்ல இருக்கப் போற?'

'என்னது நானா? என்னப்பா புதுசா? நீங்க நம்ம வேணுகோபால் அங்கிள இல்ல சஜ்ஜஸ்ட் பண்ணுவீங்கன்னு பார்த்தேன்.'

'ஆமாம்மா.. அப்படித்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன்.. ஆனா அவருமில்ல இந்த ஸ்கேண்ட்லல்ல மாட்டிக்கிட்டிருக்கார்? அவர்தான அந்த கம்பெனியில டைரக்டர்? அந்த லோன எப்படியாவது இன்னும் ஒருவாரத்துக்குள்ள க்ளோஸ் பண்ணணும்.. அதுக்கப்புறம் கூட அவர நம்ம போர்ட்ல சேக்கறதுல இப்ப எனக்கு இஷ்டம் இல்ல பூர்ணி.'

'ஏன் எதுக்கு இப்படி சொல்றீங்க? நம்ம கிட்ட விசுவாசமாத்தானப்பா இருந்திருக்கார்?'

'அதுக்கு சொல்லலம்மா.. இந்த விஷயத்த அவர் டீல் பண்ண விதம் சரியில்லேன்னு நினைக்கேன்.. அந்த ரிசர்வ் பேங்க் ஆள் போர்ட்லருந்து விலகாம இவர் பாத்துருக்கணும்.. அத விட்டுட்டு அவர் கோச்சிக்கிட்டு போறவரைக்கும் அங்கயே இருந்தும் இவரால தடுக்க முடியல இல்ல? அப்படியிருக்கறவர நம்பி எப்படி இங்க போடறது? அது சரிவராது.. நமக்கு பேங்க்ல இருக்கற ஸ்டேக்குக்கு நம்ம குடும்பத்துலருந்த ஒருத்தர் போர்ட்ல இருக்கறதுதான் நல்லதுன்னு படுது.. அதுக்கு ஒன்னெ விட்டா வேற யார் இருக்கா?'

பூர்ணிமா யோசனையுடன் எழுந்து சோமசுந்தரத்தின் நீண்ட அறையின் குடுக்கும் நெடுக்கும் நடந்தாள்.. 'சரி டாட்.. நாளைக்கி என்ன திடீர்னு.. என்ன டிசைட் பண்ண போறீங்க?'

'எல்லாம் இந்த சேதுவோட தொல்லைய தாங்க முடியாமத்தான். நீதான் நாடார் கிட்ட நா பேசறத கேட்டியே? மாதவன் வேற திடீர்னு சொல்லாம கொள்ளாம மும்பை கிளம்பிப் போய்ட்டார்.. சேதுவுக்கும் அவருக்கும் நடுவுல ஏற்கனவே பிரச்சினை.. இத சாக்கா வச்சிக்கிட்டு மும்பை போயிருக்கற மாதவன் இப்பத்தைக்கி திரும்பி வர சான்ஸ் இல்லை.. அதனால என்னெ ஆக்டிங் சேரமனா போடுங்கன்னு கேக்கார்.. அதுக்கு நாடார் நிச்சயம் ஒத்துக்கமாட்டார்னு தெரியும். அதான் நான் போர்ட்ல இல்லாத நேரத்துல பிரச்சினை வேணாம்னுட்டு அவர கூப்ட்டேன்.. அவர் நா நெனச்சா மாதிரியே அந்த குடிகார பயல போடறதான்னு எகிர்றார்.. அநேகமா அவர் அந்த ஃபிலிப்ப சொல்வாருன்னு நினைக்கேன்.. அதுவும் ஒருவகையில டேஞ்சரான விஷயம்.. அவர் நேர்மையானவர்தான்னாலும் இந்த நாடார நம்ப முடியாது.. அவர ஆட்டி படைச்சிருவார்.. அதான் இப்பருக்கற எம்.சி மெம்பர்ச கூட்டி நாளைக்கி அன்னஃபிஷியலா பேசிரலாம்னு பாக்கோம்.. நாங்க என்ன டிஸ்கஸ் பண்றோம்னு நீ தெரிஞ்சிருந்தாத்தான அடுத்த போர்ட்ல இந்த டிஸ்கஷன் வர்றப்போ ஒன்னால ப்ராப்பரா டீல் பண்ண முடியும்? அதான் நீயும் வாயேன்னு சொல்றேன்.. என்ன சொல்றே?'

தன்னுடைய நடையை நிறுத்திவிட்டு தன் தந்தை அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரில் சென்று அமர்ந்த பூர்ணிமா, 'Tell me Dad.. Are you really serious in nominating me to the Board.. Do you think I have the right credentials?' என்றாள் சீரியசாக..

அவளுடைய முகபாவனையைக் கண்டு உரக்கச் சிரித்தார் சோமசுந்தரம்.. 'ஏய்... என்ன அதுக்குள்ள பந்தாவா?' பிறகு புன்னகையில்லாத முகத்துடன் தன் மகளைப் பார்த்தார். 'ஆமாம்மா.. I believe that you are the right person to replace me..'

பூர்ணிமா புன்னகையுடன் தன் தந்தையின் கரங்களைப் பற்றி குலுக்கினாள். 'தாங்ஸ்ப்பா... I will do my best.. நாளைக்கி புறப்படறப்போ சொல்லுங்க.. நானும் வரேன்.. குட் நைட்..'

சோமசுந்தரம் புன்னகையுடன் தன் கரங்களைப் பற்றிய தன் மகளின் கரங்களை இறுக அழுத்தி குலுக்கினார். பிறகு வாசல்வரை சென்று அவளை வழியனுப்பிவிட்டு திரும்பி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு விளக்குகளை அணைத்துவிட்டு தன்னுடைய படுக்கையறையை நோக்கி மெள்ள நடந்தார்..

தொடரும்..

4 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

நாளைய பொழுது நல்ல பொழுதாக
விடியட்டும்

Meenapriya said...

அதுக்கு இன்னும் 4 நாள் இருக்கு...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

நாளைய பொழுது நல்ல பொழுதாக
விடியட்டும் //

எல்லாருக்கும் இருக்குமான்னு தெரியலை.. நல்லவங்களுக்கு நல்லதா விடியும்...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க மீனா,

அதுக்கு இன்னும் 4 நாள் இருக்கு... //

ஆமா அடுத்த நாலு நாளைக்கி மப்பும் மந்தாரமுமா இருக்கும் போலருக்கு..

அதனால சூரியன் தெரியாது:)