23.3.07

சூரியன் 185

சாதாரணமாக காலையில் கண் விழிக்கையில் முந்தைய தினம் நடந்த எந்தவொரு நிகழ்வையும் குறித்து எதிர்மறையான சிந்தனைகள்
எதுவுமில்லாமல் கண்களை மூடி படுக்கையறை ஷெல்ஃபில் வைக்கப்பட்டிருக்கும் கர்த்தரின் படத்திற்கு முன்னால் ஒரு சில நிமிடங்கள் நின்று
பிரார்த்திவிட்டு நாளை துவக்குவார் ஃபிலிப் சுந்தரத்தின்.

ஆனால் அன்று காலையில் கண்விழித்தபோதே தனக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத கலக்கத்தை உணர்ந்தார். முந்தைய தினம் நடந்த நிகழ்வுகள்
இரவு முழுவதும் அயர்ந்து உறங்கவிடாமல் செய்ய காலையில் கண்விழித்தபோது உடல் சோர்வுடன் மனச் சோர்வும் சேர்ந்து அவரை வெகுவாகப்
பாதித்தது.

அவர் தனக்கென்று எதுவும் வேண்டி கர்த்தரின் முன் நின்றதில்லை. அவருடைய மனைவியின் மரணத்திற்குப் பிறகு அவருக்கு தன்னுடைய மகள்,
மருமகன், பேரன் ஆகியோரின் நலனைத் தவிர வேறெதையுமே அவர் விரும்பியதில்லை. விடிகிற ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு நல்லதாகவே
அமையவேண்டும் என்பதே அவருடைய அன்றாட பிரார்த்தனையாக இருந்தது.

ஆனால் அன்றோ வழக்கத்திற்கு மாறாக தனக்கும் அன்றைய தினம் நடப்பவையெல்லாம் நல்லதாகவே இருக்க வேண்டும் என்று எண்ணம்
அவரையுமறியாமல் மனதிற்கு எழ கண்களை மூடி கர்த்தரின் உருவப்படத்தின் முன் நின்றார். 'நமக்கு எது வேணும்னு கர்த்தருக்கு தெரியும்மா.
அப்புறம் எதுக்கு இது வேணும், அது வேணும்னு கேக்கணும்? அவர் சித்தத்தின் படியே ஆகட்டும்னு விட்டுறணும். எல்லாமே நல்லதுக்குத்தான்
நினைக்க ஆரம்பிச்சிட்டா அப்புறம் ஏமாற்றம்கறதே நம்ம வாழ்க்கையில இருக்காது.' இப்படி சொல்லி, சொல்லித்தான் மகளை வளர்த்தார்.

அந்த அறிவுரை வெறும் போலி பிரசங்கமாய் இல்லாமல் அவருடைய உள்ளத்திலிருந்து ஆத்மார்த்தமாய் சொன்ன வார்த்தைகள் என்பது அவரை
முழுவதுமாக உணர்ந்துவைத்திருந்த அவருடைய மனைவிக்கு தெரிந்திருந்தது. அப்படியொரு இறைபக்தியுள்ள குடும்பமாய் திகழ்ந்தது அந்த சிறிய
குடும்பம்.

எந்த ஒரு சூழலிலும் இறைவனை விட்டு பிரிவதில்லை என்பதை தன்னுடைய வாழ்க்கையின் அடிப்படைக் கொள்கையாய் வைத்திருந்தார் அவர்.
அவருடைய மனைவியுந்தான். திருமணமாகி பத்துவருடங்கள் குழந்தைப்பேறு இல்லாதிருந்தபோதும் இறைவன் மீது வைத்திருந்த நம்பிக்கையை
அவர்கள் இருவரும் இழக்கவில்லை. 'நமக்கு எப்ப தரணும்னு கர்த்தருக்கு சித்தமிருக்கோ அப்ப தருவார். நம்பிக்கைய மட்டும் இழந்துராத. பழைய
வேதாகம கதை நினைவிருக்கில்லே? சாராளுக்கு தள்ளாத வயதில் இறை தூதர் காட்சியளிச்சி ஒனக்கு ஒரு குழந்தை பிறக்கும்னு சொன்னப்போ
சாராள் கேலியாக சிரிச்சதை படிச்சிருக்கமே.. ஆனா என்ன ஆச்சி? இறைவனோட சித்தப்படித்தான நடந்துச்சி. புது வேதாகமத்துல யோவான்
அவருடைய பேரண்ட்சுக்கு எந்த வயசுல பிறந்தார்? இறைவனால முடியாதது ஒன்னுமில்லேங்கறதுக்கு இதவிட என்ன ஆதாரம் வேணும்?' இதுதான்
அவருடைய வாதமாக இருந்தது.

அவர் மீது உயிரையே வைத்திருந்த அவருடைய அன்பு மனைவியின் மரணத்திற்குப் பிறகும் அவருடைய மகளும் மருமகனும் வெளிநாட்டில்
குடியேறிய போதும் அவர் அந்த நம்பிக்கையை இழந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த நம்பிக்கைதான் அவருடைய தனிமையிலும்
துணையாயிருந்தது.

கடந்த சில நாட்களாக அவருடைய அலுவலக வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள் அவரை அந்த நம்பிக்கையிலிருந்து பிறழ
செய்துவிடவில்லை என்பதென்னவோ உண்மைதான். ஆனால் மனது கலக்கமடைந்திருந்தது என்பது மட்டும் உண்மை. குறிப்பாக நேற்றைய தினம்
இரவும் சிலுவை மாணிக்கம் நாடாருடன் பேசி முடித்தபிறகு சற்று அதிகமாகவே கலங்கிப் போயிருந்தார்.

கர்த்தரின் உருவப்படத்திற்கு முன்பு கண்களை மூடி நின்றிருந்தாலும் அவருடைய நினைவுகள் ஒரு நிலையில் நில்லாமல் அவரை அலைக்கழித்தன.
அன்றைய தினம் அவருடைய அலுவலக வாழ்க்கையில் ஒரு முக்கிய தினமாக இருக்கப் போகிறது என்பதை உணர்ந்திருந்தாலும் அதனால் ஏற்படப்
போகும் பின்விளைவுகளை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

ஏற்கனவே ஏதோ ஒரு தீய எண்ணத்துடந்தான் சேது மாதவன் அவரை நேற்றைய தினம் நடந்த பத்திரிகை நிரூபர் கூட்டத்தில் பங்குகொள்ள
முடியாமல் செய்தார் என்பதை உணர்ந்திருந்ததால் அவருடைய செயல் அவரை அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆனால் அவருடன் சேர்ந்து
சுந்தரலிங்கமும் தன்னை புறக்கணித்தது அவரை வெகுவாகவே பாதித்திருந்தது.

இந்த சூழலில் இன்று எப்படி அவருடைய முகத்தில் விழிக்கப்போகிறேன்.. அப்படியே அதை நான் பொருட்படுத்தாது அவருடன் அளவளாவ
முயன்றாலும் அவருடைய மனநிலை எப்படி இருக்கப் போகிறது?

இது போதாததுன்னு இன்னைக்கி டாக்டரோட பங்களாவுல கூடப்போற எம்.சி கூட்டத்துல மெம்பர்ஸ் நம்மள ஆக்டிங் சேர்மனா தேர்ந்தெடுக்க
முடிவு செஞ்சிட்டா வேற வெனையே வேணாம்.. இத நம்மாள தடுக்க முடியுமோ இல்லையோ அப்படியொரு சூழ்நிலை ஏற்படாம செய்ய முடியாதா?
என்ற ரீதியில் ஓடியது அவருடைய சிந்தனை.. பேசாம மாதவன் சார கூப்ட்டு நேத்து நாடார் சொன்னத சொல்லிட்டா என்ன? ஆனா அவர்
இப்பருக்கற மனநிலையில இதப்பத்தி சொல்லி மேற்கொண்டு வீணா டென்ஷனாக்கணுமா?

ஷ்ரில்ல்ல்ல்ல்ல்.. என்று ஒலித்த அவருடைய வீட்டு தொலைபேசி அவருடைய சிந்தனைகளை கலைக்க திடுக்கிட்டு திரும்பி பார்த்தார்.
யாராருக்கும்? நாடாராருந்தா என்ன பண்றது? என்னன்னு சொல்றது? சொன்னாலும் மனுசன் புரிஞ்சிக்கற மூட்ல இருக்க மாட்டாரே? என்ன
பண்லாம் கர்த்தரே ஒரு வழி காம்பிங்களேன்.. என்றவாறு தன் முன் என்றும் மாறா இரக்கப் புன்னகையுடன் தோற்றமளித்த கர்த்தருடைய திருவுருவ
படத்தைப் பார்த்தார்.

தொலைப்பேசி தொடர்ந்து ஷ்ரில்லிட வேறு வழியின்றி கர்த்தரே ப்ளீஸ் ஹெல்ப் மீ டு ஃபேஸ் வாட்டெவர் கம்ஸ் பிஃபோர் மி டுடே.. என்றவாறு
எடுத்து தயக்கத்துடன் ஃபிலி ஹியர் என்றார்...

******

'நேத்தைக்கி கொஞ்சம் ஜாஸ்தியாவே சாப்ட்டுட்டீங்க சார்.' என்றான் திரு, 'அதான் டீ போடாம கொஞ்சம் ஸ்ட்ராங்கா காப்பி போட்டு
கொண்டாந்துருக்கேன்.. ஜீனியும் போடல.' படுபாவிப் பய ஒரு நாளப் போல இப்படி குடிக்கான். இவனுக்கு ஒன்னும் ஆவ மாட்டேங்குதே..
என்றான் மனதுக்குள்..

நேற்றைய போதை இன்னும் கலையாத நிலையில் மூடிய கண்களைத் திறக்காமல் தன் முன் நின்றவனைப் பார்த்தார் சேதுமாதவன். இவன் மட்டும்
இல்லன்னா என்னாவறது? தமிழன்மார் தமிழன்மார்தான்.. எத்தற பறஞ்சாலும் இவந்தான் எத்தற ஸ்நேகத்தோட ராவில எழுந்து காப்பி கப்போட..
'மாயா எழுந்தாச்சா?' என்றார் திருநாவுக்கரசு நீட்டிய கோப்பையை வாங்கியவாறு. 'அவ எங்க எழுந்திருக்கப் போறா?' என்றார் அவரே பதிலுக்கு.

திரு லேசாக புன்னகைத்தான். அவனுடைய எஜமானி என்றைக்கி எட்டு மணிக்கி முன்னால எழுந்ததாக சரித்திரமே இல்லையே.. ஆனால் சேது
ராத்திரியில் எத்தனை பெக்குகளை உள்ளே தள்ளினாலும் அலாரம் வைக்காமலே ஆறு மணிக்கு எழுந்துவிடுவது அவனை வியப்புக்குள்ளாமல்
இருந்ததே இல்லை. எப்படி இந்த மனுசனால மட்டும் முடியுது? உள்ளுக்குள்ள எதாவது இருந்தாத்தான? எல்லாம் எரிஞ்சி போயிருக்காது?

'சூப்பர் காப்பியானடா திரு.. இனி இதன்னே மதி.. டெய்லி..' என்றவாறு காப்பியை உறிஞ்சி குடித்த சேதுமாதவன் காலி கோப்பையை குறு
மேசையில் வைத்துவிட்டு எழுந்து நின்று கரங்களை தலைக்கு மேலே உயர்த்தி நெட்டி முறித்தார். 'எடோ இந்நத்த திவசம் வளற
இம்ப்பார்ட்டண்டான.. சிம்பிளாய்ட்டு ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியாக்கியா மதி.. எனிக்கி வேகம் ஆஃபீஸ் செல்லணும்.. டிரைவர் வந்ந வழிக்கி வண்டிய
கழுகி ரெடியாக்கம் பற... ஞான் குளிச்சிட்டு வராம்.' என்றவாறு அவருடைய அல்ட்றா மாடர்ன் குளியலறைக்குள் நுழைய, 'சரி சார்.' என்றவாறு காலி கோப்பைகளை எடுத்துக்கொண்டு படியிறங்கினான் திரு..

இன்னைக்கி மாத்தரம் நா நெனச்சது நடந்துருச்சினா எண்டெ குருவாயூரப்பா ஞான் எந்து வேணங்கிலும் செய்யாம்.. கோல்டு வேணோ.. டைமண்ட் வேணோ.. எந்து வேணுங்கிலும் ச்செய்யாம்.. ஆனால் இன்னைக்கி மாத்தரம் ஞான் நெனச்சது நடக்கலே?...

குருவாயூரப்பன் வேணுமானால் சர்வ வல்லமைப் படைத்த கடவுளாயிருக்கலாம்.. சேதுமாதவனைப் பொறுத்தவரை அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்க வேண்டிய சிப்பந்திதான்....

அவர் நினைத்ததை நிறைவேற்றிவைத்துவிட்டால் ஆயிரம், லட்சம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லையென்பது அந்த குருவாயூரப்பனுக்கே தெரியும்..

ஹாட்.. அண்ட் கோல்ட் என அதிநவீன ஷவரின் துளிகள் ஊசியாய் ஆக்ரோஷத்துடன் அவருடைய உடம்பைக் குத்த அன்றைய தினத்தில் தனக்கு கிடைக்கவிருந்த சேர்மன் பதவியைப் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்துப் போனார் சேதுமாதவன் அடுத்த சில நிமிடங்களில் தன்னை நெருங்கிக் கொண்டிருந்த ஆபத்தை உணராதவராய்...

தொடரும்..

6 comments:

அருண்மொழி said...

call from சுந்தரலிங்கம்? சேதுவை தேடி போலீஸ் வருமா?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அருண்மொழி,

call from சுந்தரலிங்கம்? சேதுவை தேடி போலீஸ் வருமா? //

வர, வர எல்லாருமே ஸ்மார்ட்டாவறீங்க?

இதுவரைக்கும் சீனியர் ராகவனும் ஜி!யும்தான் இப்படியெல்லாம் கேப்பாங்க.

எஸ்னு சொல்லவா நோன்னு சொல்லவா:)

இலவசக்கொத்தனார் said...

சின்ன அத்தியாயமாகிப் போச்சோ? நார்மலா மூணு பேர் கதை வரும். இன்னைக்கு ரெண்டு பேர் கதைதான் அதனாலதான் அப்படித் தோணுதா?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கொத்தனார்,

சின்ன அத்தியாயமாகிப் போச்சோ? நார்மலா மூணு பேர் கதை வரும். //

சாதாரணமா ஃபுல் ஸ்கேப்ல நாலு பேஜ் வீதம் வாரத்துக்கு மூனு எப்பிசோட் போடுவேன்..

இந்த வாரம் புதன் வியாழன் ஊர்ல இல்லை. அதனால இன்னைக்கி ஆறு பேஜ் சைசுக்கு போட்டுருக்கேன். நாளைக்கி ஆறு.. ஆக இந்த வார கோட்டா சரியாயிருச்சி..

நாளைக்கும் ரெண்டு பேர் கதைதான்:)

siva gnanamji(#18100882083107547329) said...

போலீஸ் எப்பவும் கடைசிலே லேட்டாதான் வரும்.....சிலரைப்போல்
சொல்லாம கொள்ளாம மட்டம் போட்றாது...
என்னா சொல்றீங்க ஜோஸப் சார்,
சரிதானே நான் சொல்றது?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

சிலரைப்போல்
சொல்லாம கொள்ளாம மட்டம் போட்றாது...
என்னா சொல்றீங்க ஜோஸப் சார்,
சரிதானே நான் சொல்றது?//

சொல்லாம கொள்ளாம போறதுதானே மட்டம்கறதே என்ன சொல்றீங்க ஜி!

வர்ற ஏப்ரல் 30 வரை இப்படித்தான் இருக்கும். வருசக் கடைசி வேலைகள், இலாக்கா ஆடிட், பிராஞ்ச் விசிட் அப்படீன்னு சொல்லாம கொள்ளாம ஓட வேண்டியிருக்கும்..

என்ன பண்றது? ப்ளாக் எழுதறதே முழு வேலையாருந்தா நல்லாருக்கும்.. பொளப்பையும் பாக்கணுமே..