13.11.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 10

காட்சி 12

நந்து, தரகர்

(நந்து அலுவலகத்தில் இருக்கிறான். கைத்தொலைபேசி ஒலிக்கவே எடுத்து காதில் வைக்கிறான்)

நந்து: என்ன மாமா என்ன விஷயம்? எதுக்கு கூப்பிடறேள்?

தரகர்: டேய் உங்கிட்ட ஒரு விஷயம் அர்ஜண்டா பேசணும்.

நந்து: (கைக்கடிகாரத்தை பார்க்கிறான். மணி பகல் 1.00) என்ன மாமா அவசரம்? நேத்தைக்கி மாதிரி சாயந்திரம் ஆஃபீசாண்ட வாங்களேன்.

தரகர்: (அவசரத்துடன்) டேய் வச்சிராத.. இது ரொம்ப அர்ஜண்ட்.. எல்லாம் நம்ம பிந்து சமாச்சாரம்.. நான் ஒன்னு பண்றேன்.. உனக்கு லஞ்ச் டைம் எப்போ?

நந்து: ரெண்டு மணிக்கி.. ஆனா அரை மணி நேரம்தான் லஞ்ச் டைம்..

தரகர்: அது போறும்.. நீ ரெண்டு மணிக்கி கரெக்டா வாசல்ல நில்லு. நான் வந்து பேசிக்கறேன். வச்சிடறேன்..

(நந்து இணைப்பு துண்டிக்கப்பட்ட தொலைப்பேசியையே சில விநாடிகள் பார்த்துவிட்டு பிறகு தன் வேலையில் மூழ்கிவிடுகிறான்.)

காட்சி முடிவு


காட்சி 13

நந்து, தரகர்

(நந்து அலுவலக வாசிலில் நிற்கிறான். தரகர் அவசர அவசரமாக வந்து சைக்கிளிலிருந்து இறங்கி அவனை நெருங்குகிறார்)

நந்து: அப்படியென்ன மாமா தலை போற அவசரம்?

தரகர்: (மேல் மூச்சு வாங்க பேச முடியாமல் சிறிது நேரம் திணறுகிறார்) டேய் தலை போகிற அவசர்ம்தாண்டா.. ஜோஸ்யர் ஆத்துலருந்துதான் வரேன்.. முடியாதுன்னுட்டார்..

நந்து: (வியப்புடன்) முடியாதுன்னுட்டாரா.. என்ன மாமா சொல்றேள்?

தரகர்: ஆமாடா.. நேத்து நீ குடுத்த அந்த பாஸ்கரோட ஜாதக காப்பிய ஜோஸ்யராண்ட குடுத்துட்டு நீ சொன்னத சொன்னேன்.. அவர் நாளைக்கி பத்மநாபன் கொண்டு வர ஜாதகத்த பாத்துட்டுதான் சொல்ல முடியும்னு சொன்னார்..

நந்து: (குறுக்கிட்டு) சரிதானே மாமா.. பாத்துட்டு சொல்றப்பவே இல்லாததெல்லாம் சொல்லி குழப்பிருவா.. இப்ப பாக்காமயே சொன்னா என்னாவறது? இதுக்கா ஓடி வந்தேள்? இன்னைக்கி சாயங்காலமா போய் பாத்துட்டா போறது!

தரகர்: (கோபத்துடன்) டேய் அபிஷ்டு, அவசரப்படாதே.. அவரு மூணு பேரோட ஜாதகத்தையும் பாத்துட்டுதாண்டா சித்த முன்னாடி நா போயிருந்தப்போ சொன்னார்.. என்ன நீ சொல்ல விட்டாத்தானே?

நந்து: (ஆச்சரியத்துடன்) அதுக்குள்ள பாத்துட்டாரா? நான் அங்க போறச்சே ஆஃ·பீஸ்ல ஜோஸ்யர் பகலுக்கு மேலதான் வருவார்னு சொன்னாளே?

தரகர்: ஆமாடா.. நாந்தான் பதினோரு மணிக்கு நம்மாத்துக்கு போயிருந்தேன்.. பத்மநாபன் உன்கிட்ட ஜாதகத்த குடுத்துவிட்ட விஷயத்த சொல்லிட்டு சாயந்தரம் மூணு மணிக்கு ஜோஸ்யராண்ட போயி பொருத்தம் பாத்துட்டு வந்துரணும்னு சொன்னார்.. உடனே நான் ஜோஸ்யர் ஆத்துக்கு போய் அவர கையோட அழைச்சிண்டு போய் நிர்பந்திச்சி பாக்க சொன்னேன்.. அவர் சொன்னத கேட்டுட்டு பதறிப் போய் உன்ன கூப்பிட்டேன்.. நீ என்னடான்னா என்ன பேச விடாம க்ராஸ் கேள்வியல்லாம் கேட்டுண்டு நிக்கறே?

நந்து: (குழப்பத்துடன்) சரி சொல்லுங்கோ.. ஜோஸ்யர் என்ன சொன்னார்? ஒன்னுமே சரியில்லேன்னுட்டாரா? அப்பாடா, நான் தப்பிச்சேன்..

தரகர்: (கோபத்துடன்) டேய் விளையாடாதே.. பிந்து-விஷால் ஜாதகம் அமோகமா பொருந்தியிருக்காம்.. அந்த பாஸ்கரோட ஜாதகத்துலதான் பாதகமிருக்காம்.. அதான்டா, தோஷம்! அவா ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கறதுக்கு சான்சே இல்லையாம். அதனால நாம கேட்டா மாதிரி பிந்து-விஷால் ஜாதகங்கள் பொருந்தலேன்னு சொல்ல முடியாதுன்னுட்டார்.. அதான் முன்கூட்டியே உங்கிட்ட விஷயத்த சொல்லிரணும்னு ஓடியாந்தேன்.. என்ன உட்டுரு.. நா வரேன்.. நீயாச்சு, பிந்துவாச்சு..

(நந்து ஸ்தம்பித்து போய் நிற்க அவனுடைய பதிலுக்கு காத்திராமல் தரகர் சைக்கிளிலேறி சென்று விடுகிறார்.)

காட்சி முடிவு

No comments: