காட்சி 6
பாத்திரங்கள்
பிந்து, பாஸ்கர்
(பாஸ்கர் ஒரு பார்க்கின் முன் நிற்கிறான். தன் கைக்கடிகாரத்தை எரிச்சலுடன் பார்க்கிறான். ‘ஊரிலிருந்து வந்ததும் வராததுமா எதுக்கு என்னை வரச்சொல்லியிருப்பா?’ என்று தனக்குள்ளே பேசிக்கொள்கிறான்.)
(பிந்து அவசர அவசரமாக வருகிறாள்)
பாஸ்கர்: என்ன பிந்து ஞாயிற்றுக்கிழமை அதுவுமா எதுக்கு என்ன வரச் சொன்னே?
பிந்து: சொல்றேன். வீட்ல இன்னைக்கி கெஸ்ட் வந்திருக்காங்க.
பாஸ்கர்: கெஸ்டா? அதுக்கும் என்ன வரச்சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்? உங்க வீட்டுக்கு வந்து சாப்பாடு கீப்பாடு பண்ணனுமா? எனக்கு அதெல்லாம் தெரியாதும்மா. ஆளை விடு.
பிந்து: (கோபித்துக்கொள்கிறாள்) பாஸ்கர், சும்மா கலாட்டா பண்ணாம விஷயத்த கேளுங்க.
பாஸ்கர்: சொல்லு.
பிந்து: பம்பாயிலிருந்து எங்க மாமா, அத்தை, விஷால் எல்லாம் வந்திருக்காங்க.
பாஸ்கர்: இப்ப மும்பை, பம்பாய் இல்ல.
பிந்து: (எரிச்சலுடன்) விளையாடாதீங்க பாஸ்கர்.
பாஸ்கர்: ஓகே, ஓகே! உங்க மாமா, அத்தை சரி. அது யாரு விஷால்? (நெத்தியில் ள்காட்டி விரலால் தட்டிக்கொண்டே) ஓ! முறைப்பையனா? அதான் என்னைக் கழட்டி விட்டுறலாம்னு வரச்சொன்னியா?
பிந்து: (கோபத்துடன் அடிக்க கை ஓங்குகிறாள். பாஸ்கர் அவளுடைய ஓங்கிய கையைப் பிடித்து தன் கையில் வைத்துக்கொள்ள முயல, பிந்து வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு அவனை முறைக்கிறாள்) விளையாடாம விஷயத்தை கேளுங்க.
பாஸ்கர்: சொல்லு.
பிந்து: நம்ம விஷயத்தை உங்காத்துல சொன்னீங்களா? இல்ல, இன்னும் தைரியம் வரலையா?
பாஸ்கர்: ( ஒன்றும் பேசாமல் மவுனமாய் யோசிக்கிறான்)
பிந்து: என்ன யோசிக்கறீங்க?
பாஸ்கர்: என் தங்கையோட கல்யாணத்துல ஒரு சின்ன பிரச்சினை.
பிந்து: என்ன பிரச்சினை?
பாஸ்கர்: மாப்பிள்ளையோட ஆத்துல பெண் குடுத்து பெண் எடுக்கலாம்கற முடிவுல குறியாயிருக்காங்க. என் தங்கைய பொண் பார்க்க வந்தப்ப ஒண்ணும் சொல்லாம இப்ப பிரச்சினை பண்றதுனால ஆத்துல பயங்கர டென்ஷன். அதான் நம்ம விஷயத்த சொல்ற சூழ்நிலையில நான் இப்ப இல்ல பிந்து. ஐ ஆம் சாரி.
பிந்து: என்ன பாஸ்கர் இப்படி சொல்லிட்டீங்க?
பாஸ்கர்: அது சரி, இன்னைக்கி சண்டேயாச்சே. ஆத்துல என்னன்னு சொல்லிட்டு வந்தே, அதுவும் கெஸ்ட் வந்திருக்கச்சே.
பிந்து: ஆஃபீஸ்ல ஸ்பெஷல் டியூட்டின்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.
பாஸ்கர்: ஏன்? ஆத்துல ஏதாவது புதுசா பிரச்சினையா? ஓ! உன் கல்யாண விஷயம் பேசறதுக்குத்தான் மும்பையிலிருந்து மாமா குடும்பம் வந்திருக்காங்களா?
பிந்து: (தலை குனிந்தவாறு) அப்படித்தான்னு நினைக்கிறேன் பாஸ்கர்.
பாஸ்கர்: (அதிர்ச்சியுடன் பிந்துவை நெருங்கி அவளுடைய கையைப் பிடிக்கிறான். பிந்து கையை விடுவித்துக்கொண்டு நகர்ந்து கொள்கிறாள்) இப்ப என்ன பண்றது பிந்து?
பிந்து: இங்க பாருங்க பாஸ்கர். இனிமேலும் உங்க வீட்லருந்து நம்ம விஷயத்தை மறைக்கறது சரியில்லேன்னு நினைக்கறேன். என்ன சொல்றீங்க?
பாஸ்கர்: சாரி பிந்து. இப்போதைக்கி அது முடியும்னு நேக்கு தோணலை.. சாரி..
பிந்து: அப்போ இதுக்கு என்ன தான் வழி? (தற்செயலாக நிமிர்ந்தவள் பார்க்குக்கு வெளியே சைக்கிளில் செல்லும் தரகரை பார்க்கிறாள். யோசனையில் ஆழ்கிறாள்.)
பாஸ்கர்: என்ன பிந்து, என்ன யோசனை?
பிந்து: ஒண்ணுமில்லை பாஸ்கர். நீங்க சொன்னத பத்திதான் யோசிச்சிக்கிட்டிருக்கேன். (ஒரு முடிவுக்கு வந்தவளாய்) ஓகே. பாஸ்கர் இந்த ப்ராப்ளத்துக்கு நீங்களும் ஏதாவது ஐடியா கிடைக்குதான்னு பாருங்க. எனக்கு ஒரு ஐடியா ஃபார்மாயிருக்கு.. அத எப்படி implement பண்றதுன்னும் யோசிச்சிட்டிருக்கேன். நீங்க கிளம்புங்க. ஆத்துல என்னை தேட ஆரம்பிக்கறதுக்குள்ள நான் போய் சேர்றேன். பை!
(பிந்து பார்க்கின் வாயிலை நோக்கி நடக்க பாஸ்கர் பின்னால் ஓடி வருகிறான்.)
பாஸ்கர்: பிந்து, பிந்து என்னன்னுதான் சொல்லேன். ஒர்க் அவுட் ஆகுமா புட்டுக்குமான்னு சொல்றேன்.
பிந்து: (நின்று திரும்பி பாஸ்கரைப் பார்த்து முறைக்கிறாள்) உங்க மண்டையிலருந்து ஐடியா வருதோ இல்லையோ இந்த மாதிரி அபசகுணமா பேச்சு மட்டும் நல்லா வருது.. இந்த லட்சணத்துல என் மனசுலருக்கறதையும் சொல்லிட்டேன்னா.. அவ்வளவுதான். எனக்கே அது ஒர்க் அவுட்டாகுமான்னு தெரியலே.. நீங்க வேற ஏதாவது செஞ்சி குட்டைய கலக்கி குழப்பி விட்றாதீங்க.. கிளம்புங்க.. பை, பை! ரெண்டு, மூணு நாளைக்கி நாம சந்திச்சிக்க வேணாம். ( அவன் தடுத்தும் கேளாமல் ஓடிப்போய் தன் வண்டியை ஸ்டார்ட் செய்துக்கொண்டு வேகமாய் புறப்பட்டு செல்ல பாஸ்கர் அவளையே பார்த்துக்கொண்டு நிற்கிறான்.)
காட்சி முடிவு.
காட்சி - 7
பாத்திரங்கள்
பத்மநாபன்
அம்புஜம்
நந்து
சிந்து
பிந்து
பட்டாபி
பங்கஜம்
விஷால்
தரகர்
(பத்மநாபன் மற்றும் பட்டாபி குடும்பத்தினர் ஹாலில் அமர்ந்திருக்க வாசலில் மணி அடிக்கிறது.)
பட்டாபி: பிந்துவாத்தானிருக்கும் நந்து போய் பாரேன்.
(நந்து எழுந்து போகிறான். வாசலில் தரகர் நிற்கிறார். நந்து அதிர்ச்சியுடன் ‘என்ன, இந்த நேரத்துல’ என்பது போல் சாடை செய்கிறான்)
தரகர்: (குரலை இறக்கி) உன் கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்
பாஸ்கர்: (வீட்டுக்குள் திரும்பி) பிந்து இல்லப்பா. என் ஃபிரண்டு. அஞ்சு நிமிஷத்துல வந்திர்றேன். (தரகரிடம்) என்ன மாமா நான்தான் நாளைக்கு ·ஆஃபீசுக்கு வாங்கன்னு சோன்னேனே?
தரகர்: அதில்லடா பாஸ்கர். இது வேற விஷயம். வா சொல்றேன்.
(இருவரும் பேசுவது வெளியே கேட்கக்கூடாது.)
(வீடு திரும்பிக்கொண்டிருந்த பிந்து தெருமுனையிலிருந்து அவர்களிருவரையும் பார்த்துவிட்டு வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு இறங்கி சத்தம்போடாமல் அவர்களை நெருங்குகிறாள்)
நந்து: (அதிர்ச்சியுடன்) அடிப்பாவி பயங்கரமானா ஆளாயிருக்காளே. எங்கிட்ட சொல்லிட்டீங்கல்ல? நான் பார்த்துக்கறேன். என்னையும் சிந்துவையும் பாடா படுத்திட்டிருக்கா. ரொம்ப தாங்க்ஸ் மாமா. அப்ப நாளைக்கி பார்க்கலாம்.
தரகர்: (வீட்டை நோக்கி திரும்பியவனை தோளைப் பிடித்து நிறுத்துகிறார்) டேய் பாஸ்கர். என்ன கிளம்பிட்டே. எவ்வளவு பெரிய விஷயம் சொல்லியிருக்கேன். பேசாம போனா எப்படி?
நந்து: (திரும்பி) இப்ப என்ன பண்ணனும்னுங்கறேள்?
தரகர்: என்னடா அப்படி கேட்டுட்டே? இது அந்த சிந்து ஜாதக விஷயத்த விட பெரிய மேட்டர். அதுக்கு ஐயாயிரம்னா இதுக்கு எவ்வளவு குடுக்கணும்?
(இதை கேட்ட பிந்து அதிர்ச்சியுடன் வாய் பிளக்கிறாள். ‘மன்னி ஜாதகத்துல ஏதோ வில்லங்கம் இருக்கு.’ என்று தனக்குள் கூறிக்கொண்டு இன்னும் சற்று நகர்ந்து அவர்கள் பேசுவதை உன்னிப்பாய் கேட்க முயல்கிறாள்)
நந்து: (எரிச்சலுடன்) என்ன மாமா, விளையாடறேளா? ஏதோ சிந்து ஜாதகத்துலருக்கற செவ்வாய் தோஷத்தை மறைக்கறதுக்குன்னு ஐயாயிரம் பேரம் பேசினேள். சரின்னு ஒத்துக்கிட்டேன். ஏதோ கொஞ்சம் பண முடை. குடுக்கறதுக்கு லேட்டாயிருச்சி. அதான் வட்டியோட நாளைக்கி தந்துடறேன்னு சொன்னேன். நீங்களும் ஒத்துக்கிட்டு இப்ப இந்த விஷயத்த என்கிட்ட சொன்னதுக்கு தனியா கேட்டா நா எங்க போறது. வேணாம் மாமா, தாங்காது.
(‘அடப்பாவி அண்ணா! எவ்வளவு பெரிய விஷயத்த மறைச்சிருக்கான்? இரு, வைக்கிறேன் வேட்டு.’ மனதுக்குள் கூறியவாறே திரும்பி தன் வண்டியை நோக்கி போகிறாள்.)
தரகர்: சரிடா, ஜாஸ்தியா ஒண்ணும் வேணாம். ஒரு ஆயிரத்த போட்டு குடுத்துறு, போறும். என்ன, அதுவும் முடியாதா? பத்மநாபனே தேவல. நீ அவன விட கஞ்சனாயிருக்கியே. நீ முதல்ல பேசுனதயாவது நாளைக்கி மொத்தமா குடுத்துறு. என்ன அதயாவது செய்வியா, இல்ல..
நந்து: (மகிழ்ச்சியுடன்) குடுத்துடறேன் மாமா. வரேன். அப்பா யார்றா அது ஃபிரண்டுன்னு தேடிக்கிட்டு வந்துட்டா உங்களுக்கும் பிரச்சினையாயிடும். நாளைக்கி ஆஃபீசுக்கு வந்தேள்னா, முழுசா கொடுத்தடறேன்.
தரகர்: (நந்துவின் சட்டைப்பைக்குள் கைவிடுகிறார். காலியாய் இருக்கவே, முகத்தை சுளிக்கிறார்) பயங்கரமான ஆளுடா நீ. சரி, நாளைக்கு கரெக்டா பத்து மணிக்கு ·ஆஃபீஸ் பக்கம் வந்துருவேன். சால்ஜாப்பு பண்ணாம குடுத்துரணும் சொல்லிட்டேன்.
நந்து: ஐயோ மாமா. சாயங்காலமா வாங்க. லஞ்ச் டைம்லதான் ஏ.டி.எம்மிலருந்து பணம் எடுக்க முடியும்.
தரகர்: சரி. அஞ்சு மணிக்கு வருவேன். பர்மிஷன் போட்டுட்டு ஓடிராத.
நந்து: (இல்லை என்று தலையசைக்கிறான்) இல்ல மாமா. அஞ்சு மணிக்கு வந்துருங்க ·ஆஃபீஸ் வாசல்லயே நிக்கறேன். (பிந்து அவர்களைக் கடந்து செல்வதை பார்க்கிறான்) பாருங்க, பிந்து வந்துட்டா. இப்ப போங்க.
(தரகர் தலையசைத்தவாறே திரும்பி செல்ல அவர் செல்வதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நின்றவன் திரும்பி வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழையும் பிந்துவைப் பார்த்து பல்லைக் கடிக்கிறான். ‘·ஆஃபீசுக்கு போறேன்னு சொல்லிட்டு லவ்வரை பார்க்க போறியா. இரு வரேன்.’ என்று தனக்குள் கூறியவாறு வீட்டை நோக்கி செல்கிறான்.)
(காட்சி முடிவு)
தொடரும்
No comments:
Post a Comment