காட்சி - 19
(ஒரு பூங்காவின் முன்னால் பாஸ்கர் காத்திருக்கிறான். பிந்து ஓட்டமும் நடையுமாய் வருவதை பார்த்துவிட்டு அவளை நோக்கி செல்கிறான்.)
பிந்து: (மூச்சு வாங்குகிறது) சாரி பாஸ்கர். என் வண்டி ரிப்பேராயிருச்சி.. வொர்க் ஷாப்பில குடுத்துட்டு பஸ் பிடிச்சி வர்றதுக்குள்ள.. நீங்க வந்து ரொம்ப நேரமாச்சா?
பாஸ்கர்: (கேலியுடன்) நீ என்னைக்கி சொன்ன நேரத்துக்கு வந்திருக்கே.. மகாராணியோட தரிசனத்துக்கு காத்திருக்கறதுதானே இந்த மகாராஜா, சாரி, கூஜாவுக்கு வேலை?
பிந்து: (போலி கோபத்துடன் பாஸ்கரை அடிக்க கை ஓங்குகிறாள்) உங்களுக்கு எப்ப பாத்தாலும் கேலியும் கிண்டலும்தான்.. உங்கள கட்டிக்கிட்டு என்ன பாடுபட போறனோ தெரியல.. சரி, அது இருக்கட்டும்.. நந்து அண்ணா என்ன சொன்னான்? அத சொல்லுங்க முதல்ல..
பாஸ்கர்: அது பெரிய கதை.. வா, பார்க் உள்ள போய் உக்கார்ந்து பேசலாம். (இருவரும் பூங்காவினுள் நுழைந்து காலியாயிருந்த ஒரு மர பெஞ்சில் அமர்கிறார்கள்.)
பிந்து: சொல்லுங்க. அண்ணா ஏதாவது எசகு பிசகா பேசினானா?
பாஸ்கர்: (கேலியுடன்) உன் அண்ணாவாச்சே, வேற எப்படி பேசுவான்? நான் கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதே உங்காத்துல எல்லாருமே இப்படிதானா.. இல்ல ..
பிந்து: உங்க கேலி போறும் பாஸ்கர்.. உங்காத்து மாதுவ மறந்துட்டு பேசாதேள்.
பாஸ்கர்: சரி, சரி. விஷயத்துக்கு வரேன்.
பிந்து: அதத்தான் நானும் சொல்றேன். அண்ணா என்ன சொன்னான். ஒன்னுவிடாம சொல்லுங்கோ.
பாஸ்கர்: உங்கண்ணா வந்தாரா.. வந்து ஹலோ பாஸ்கர்னு கையை குடுத்தார். அப்பாடா. அந்த இறுக்க்க்க்கமான பிடியிலயே அவர் என்ன சொல்ல வரார்னு புரிஞ்சிட்டது...
பிந்து: (எரிச்சலுடன்) இதையெல்லாம் யார் கேட்டா..
பாஸ்கர்: (கேலியுடன்) நீதானே ஒன்னுவிடாம சொல்லுங்கோன்னே..
பிந்து: ஐயோ பாஸ்கர், நேரம் காலம் தெரியாம விளையாடின்டு.. விஷயத்துக்கு வாங்கோ.. இப்பவே ஆறு மணியாயிடுத்து.. நான் ஆத்துல ஏழு மணிக்குள்ள இருக்கலனா எங்க பங்கஜம் மாமிக்கு மூக்குல வேத்துரும்.. ப்ளீஸ் விளையாடம விஷயத்துக்கு வாங்கோ..
பாஸ்கர்: எதுக்கு விளையாடாம? விளையாடின்டே வரேனே.. விஷயத்துக்கு..
பிந்து: (கோபத்துடன்) நீங்க ஒன்னும் சொல்லவேணாம்.. நான் போறேன். (எழுந்து நிற்கிறாள்)
பாஸ்கர்: (அவளுடைய கையைப் பிடித்து அமர்த்துகிறான்) இடுக்கண் வருங்கால் நகுகன்னு அவ்வையார் சொல்லியிருக்கார் தெரியுமோல்லியோ.. அதான் நகுறேன்.
பிந்து: (தலையிலடித்துக்கொள்கிறாள்) ஐயோ அது அவ்வையார் இல்ல.. வள்ளுவர்..
பாஸ்கர்: யாரோ ஒர்த்தர்.. சொன்னாரா இல்லையா?
பிந்து: அதுக்கும் நீங்க சொல்லப் போற விஷயத்துக்கும் என்ன பாஸ்கர் சம்மந்தம்?
பாஸ்கர்: இருக்கே.. உங்க அண்ணா ஒரு இடுக்கண் தானே.. அதான் அவர் வந்தப்போ நகுன்னு சொல்லிட்டு நகுவுறேன்..
பிந்து: (ஒன்றும் பேசாமல் பாஸ்கரை பார்த்து முறைக்கிறாள்) நான் என்னவோ ஏதோன்னு இருக்கற வேலையையெல்லாம் அப்படியே போட்டுட்டு ஓடி வரேன்.. நீங்க என்னடான்னா நகு, கிகுன்னு வெறுப்பேத்தறேள்.. நா இப்ப இருக்கறதா போறதா?
பாஸ்கர்: ஓகே, ஓகே.. சொல்றேன்.
பிந்து: சீக்கிரம் சொல்லுங்கோ..
பாஸ்கர்: சுருக்கமாவா.. விலாவாரியாவா..
பிந்து: எப்படியோ ஒன்னு.. என் பொறுமையை சோதிக்காம சொல்லுங்கோ..
பாஸ்கர்: சரி, ஒரே வரியில சொல்றேன்.. நான் உன்னை மறந்திரணுமாம்.
பிந்து: (திடுக்கிட்டு) அப்படியா சொன்னான் அண்ணா?
பாஸ்கர்: அப்படீன்னு வெளிப்படையா சொல்லலை..
பிந்து: பின்னே?
பாஸ்கர்: பூடகமா சொன்னார்.
பிந்து: என்ன பாஸ்கர் சொல்றேள்? பூடகமான்னா?
பாஸ்கர்: பூடகமான்னா, பூடகமாத்தான். இத எப்படி டிரான்ஸ்லேட் பண்றதுன்னு நேக்கு தெரியலை..
பிந்து: ஐயோ நான் அத கேக்கலை..
பாஸ்கர்: பின்னே.. வேற எத கேக்கறே? உங்கண்ணா என்கிட்ட சொன்னதத்தானே கேக்கறே? அதத்தான் நானும் சொல்லிக்கிட்டிருக்கேன்..
பிந்து: (கோபத்துடன்) அதில்ல பாஸ்கர்..
பாஸ்கர்: எது அதில்ல..
பிந்து: ஏன் பாஸ்கர் என்ன இப்படி சித்ரவதை பண்றேள்.(முகத்தை மூடிக்கொண்டு விசும்புகிறாள்)
பாஸ்கர்: (பதறிப்போய் அவளுடைய கைகளை விலக்கி முகத்தை துடைத்து விடுகிறான்) பிந்து.. ஐ ம் சாரி.. உன்னை கொஞ்சம் சீண்டி பாக்கலாம்னுட்டுதான்...
பிந்து: உங்களுடைய இந்த கிண்டல் பேச்சுத்தான் உங்க கிட்ட எனக்கு பிடித்தமான ஒன்னு, ஒத்துக்கறேன். ஆனா, அதுக்கு இதுவா நேரம்? விளையாடாம விஷயத்துக்கு வாங்க பாஸ்கர்.
பாஸ்கர்: சரி, சொல்றேன். உங்கண்ணா ரொம்ப நேரம் ஒன்னும் பேசலை.. நீ ·போன்ல சொன்னா மாதிரி நோக்கும் விஷாலுக்கும் ஜாதக பொருத்தமல்லாம் பாத்து நிச்சயத்துக்கு கூட தேதி பாத்துட்டு இந்த நேரத்துல கல்யாணம் நின்னு போச்சினா.. அப்பாவால தாங்கிக்க முடியாது.. அதனால..
பிந்து: அதனால என்னவாம்?
பாஸ்கர்: நான் உனக்கு அட்வைஸ் பண்ணி இதுக்கு ஒத்துக்க சொல்லணுமாம்..
பிந்து: நீங்க என்ன சொன்னேள்?
பாஸ்கர்: (விஷமத்துடன்) நான் என்ன சொல்லியிருப்பேன்னு நீயே சொல்லேன்?
பிந்து: அதெல்லாம் முடியாது.. நானும் பிந்துவும் ரெண்டு வருஷமா உயிருக்குயிரா காதலிக்கிறோம். அதனால முடியாதுன்னு சொல்லியிருக்கணும்.. ஆனா நீங்க சொல்லலை. அப்படித்தானே?
பாஸ்கர்: (கேலியுடன்) பின்ன? ரெண்டு வருஷமா பழகிட்டு என்ன பத்தி உனக்கு தெரியாதா என்ன?
பிந்து: (கோபத்துடன்) விளையாடாதேள்.. என்ன சொன்னேள்?
பாஸ்கர்: நான் என்ன சொல்லமுடியும்? லெட் மி ட்ரை.. பட் ஐ கான்ட் ப்ராமிஸ் எனிதிங்க்னு சொல்லிட்டு வந்திட்டேன்..
பிந்து: ஓகே.. ஆர் யு கோயிங் டு ட்ரை?
பாஸ்கர்: (குழப்பத்துடன் பிந்துவை பார்க்கிறான்) வாட்?
பிந்து: என்ன ப்ரெய்ன் வாஷ் பண்ண ட்ரை பண்ண போறீங்களான்னேன்?
பாஸ்கர்: உன் மனசை மாத்தறதுக்கா?
பிந்து: ஆமாம்.
பாஸ்கர்: அது சக்சஸ் ஆகுமான்னுதான் யோசிக்கறேன்..
பிந்து: ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.
பாஸ்கர்: (பிந்துவின் முகத்தை உற்று பார்த்துவிட்டு திரும்பிக்கொள்கிறான்) வேண்டாம்ப்பா..
பிந்து: (கோபத்துடன்) என்ன வேண்டாம்.. என் முகமா?
பாஸ்கர்: (கேலியுடன்) உன் முகம் சுமார்தான். இருந்தாலும் நான் அத சொல்லலை..
பிந்து: பின்னே..
பாஸ்கர்: நான் ட்ரை பண்ணலைன்னு சொல்ல வந்தேன்..
பிந்து: அதான பாத்தேன்.. இங்க பாருங்க பாஸ்கர்.. எனக்கு ஜாதகம், தோஷம் இதிலெல்லாம் நம்பிக்கையில்லை.. எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. பண்ணா, உங்களத்தான் பண்ணிக்கணும்கறதுல பிடிவாதமா இருக்கேன்.. நீங்க எப்படி? எனக்கு அதுதான் தெரியணும்.. சொல்லுங்கோ..
பாஸ்கர்: (சிறிது நேரம் பிந்துவையே பார்க்கிறான்) நீ சொல்றது சாத்தியமா பிந்து?
பிந்து: (கோபத்துடன்) ஏன் அப்படி கேக்கறேள்?
பாஸ்கர்: என்னோட நிலமையையும் நீ கொஞ்சம் யோசித்து பாரேன்..
பிந்து: என்ன உங்க நிலைமை?
பாஸ்கர்: என் தங்கையோட கல்யாணம்.. நான்தான் உங்கிட்ட சொல்லியிருக்கேனே..
பிந்து: (கோபத்துடன் எழுந்து நிற்கிறாள்) அப்ப என்னத்தான் சொல்ல வரேள்? என்னை மறந்துருன்னா? சொல்லுங்கோ..
(பாஸ்கரும் எழுந்து அவளை விட்டு சற்று தள்ளி போகிறான். பிந்து அவனருகில் சென்று கையைப் பிடித்து தன் பக்கம் திருப்புகிறாள். அவனுடைய கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்து திடுக்கிடுகிறாள்)
பிந்து: என்ன பாஸ்கர் இது குழந்தையாட்டமா? என்னாச்சி?
பாஸ்கர்: பிந்து.. உங்கண்ணா சொன்னத நான் ரொம்ப நேரம் யோசிச்சேன்.. எனக்கும் ஜாதகத்துல நம்பிக்கையில்லைதான்.. ஜாதகம் பொருந்தி கல்யாணம் பண்றவா மாத்திரம் நல்லாவா வாழ்ந்திண்டிருக்கா? ஏன் என் அண்ணாவோட கல்யாணத்தையே எடுத்துக்கயேன்.. டேஸ்ட்டுல மன்னிக்கும்அண்ணாவுக்கும் எட்டாம் பொருத்தம் ஏழாம் பொருத்தம். கல்யாணம் பண்ணி இத்தனை வருஷத்துல ஒரு நாளாவது அவா ரெண்டு பேருக்கும் நடுவில என்னைக்காவது ஒரு சந்தோஷம்? பொழுது விடிஞ்சா, பொழுதுபோனா.. எந்த விஷயத்துலதான் அவா ஒத்து போயிருக்கா..
பிந்து: அப்புறமென்ன? ஏன் தயங்கறேள்?
பாஸ்கர்: அப்படியில்லை பிந்து.. உங்காத்துல இப்ப இருக்கற சூழ்நிலையில திடீர்னு நீ விஷால வேண்டாம்னு சொல்லிட்டு என்னை பாஸ்கருக்கு கட்டி வையுங்கோன்னு நீ கேக்க போயி உங்கப்பாவுக்கு ஏதாவது ஆயிருச்சினா நம்ம ரெண்டு பேராலயும் சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்க முடியும்னு நீ நினைக்கிறியா பிந்து.. சொல்லு?
(என்ன சொல்வதென்று தெரியாமல் பாஸ்கரையே பார்த்துக்கொண்டு நிற்கிறாள் பிந்து)
பாஸ்கர்: உன்னால பதில் சொல்ல முடியாது பிந்து.. தி சிச்சுவேஷன் இஸ் லைக் தட்.. எனக்கும் என் தங்கையோட கல்யாணமே இழுபறியா நிக்கற நேரத்துல நம்மளோட கல்யாணத்த பத்தி அதுவும் நம்ம ரெண்டு பேர் வீட்டையும் எதுத்துக்கிட்டு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கற சூழ்நிலையில கண்டிப்பா நான் இல்ல பிந்து.. ப்ளீஸ் ட்ரை டு அன்டர்ஸ்டான்ட் மி..
பிந்து: அதுக்கு இப்ப என்னதான் வழி?
பாஸ்கர்: நம்ம ரெண்டு பேர் குடும்பத்தோட நிம்மதிக்காக நம்முடைய நிம்மதியை சாக்ரிஃபைஸ் பண்றதுதான் இந்த சிக்கலுக்கு வழி..
பிந்து: (கோபத்துடன்) என்னால முடியறது இருக்கட்டும். உங்களால அது முடியுமா பாஸ்கர்? எங்க, என் முகத்த பாத்து என்ன மறந்துருன்னு சொல்லுங்க?
பாஸ்கர்: (பிந்துவின் முகத்தை பார்க்காமல் திரும்பிக் கொள்கிறான்) ஐ டோன்ட் நோ.. மே பி ஓவர் அ பீரியட் ஆஃப் டைம்..
பிந்து: (வெறுப்புடன்) எதுக்கு பாஸ்கர்? ஒய் ஷ¤ட் வி சாக்ரிஃபைஸ் அவர் ஹாப்பினஸ் ஃபார் அதர்ஸ்? இது என்ன முட்டாள்தனமான டிசிஷன்? ஐ கான்ட் பி எ பார்ட்டி டு திஸ் ஸ்டுப்பிடிட்டி. என்னோட முடிவுக்கு எங்க வீட்டுல ஒத்துக்காத பட்சத்துல நான் வீட்டை விட்டு வெளியேறவும் தயார்.. விஷாலுக்கு நான் இல்லன்னா வேற ஒருத்தி.. டில்லியில பெண் இல்லாமயா போகபோகுது.. ஐ மைசெல்ஃப் வில் டாக் டு ஹிம். ஹி வில் அன்டர்ஸ்டான்ட்.. நீங்கதான் ஒரு முடிவுக்கு வரணும்.. நம்ம கல்யாணத்தினால உங்க தங்கையோட வாழ்வு பாதிக்கணும்னு இல்ல.. இந்த மாப்பிள்ளையில்லன்னா வேற ஒரு மாப்பிள்ளைய பாப்போம்.. உங்காத்துல நம்மள ஏத்துக்கிட மாட்டாங்கன்னு நீங்க நெனச்சேள்னா.. உங்க தங்கைய நாம நம்மளோட கூட்டிக்கிட்டு போயிரலாம் பாஸ்கர். நான் அவளுக்கு நல்ல மாப்பிள்ளைய பாத்து கட்டி வைக்கறேன்.. வி வில் டூ இட் டுகெதர்..
பாஸ்கர்: (பிந்துவை திருப்பி பார்க்கிறான்) நீ எல்லாத்துக்கும் தயாராத்தான் வந்திருக்கே போலருக்குது..
பிந்து: (தீர்மானமான குரலில்) ஆமாம்.. பாஸ்கர்.. இதுதான் என் முடிவு.. உங்க முடிவும் கூட.. லெட் அஸ் கோ அஹெட்.. கமான் லெட் அஸ் கோ.. மேல மேல பேசிக்கிட்டேயிருந்தா.. கன்ஃப்யூஷன்தான்..
(பாஸ்கர் குழப்பத்துடன் பிந்துவை பார்க்க, பிந்து அவனுடைய கைகளில் தன் கைகளை கோர்த்துக்கொண்டு அழைத்து செல்கிறாள்)
(இருவரும் கைகைளை கோர்த்தவாறு பூங்காவை விட்டு வெளியேறுகின்றனர்)
காட்சி முடிவு
(அடுத்த பதிவில் முடியும்)
No comments:
Post a Comment