8.11.05

தகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம்) - 7

காட்சி 9

பாத்திரங்கள்: நந்து, தரகர். காவலாளி..

(தரகர் அவசர அவசரமாக சைக்கிளில் வந்து நந்துவின் அலுவலக வாசலில் இறங்குகிறார். அலுவலக வாயிலில் நின்றுகொண்டிருந்த காவலாளியை நெருங்கி)

தரகர்: நந்து இருக்கானா?

காவலாளி: (தரகரை ஏளனத்துடன் ஏற இறங்க பார்க்கிறார்) யார்யா நீ. நந்தகோபாலன் சார அவன், இவன்கிற?

தரகர்: (கேலியுடன்) யோவ். நோக்கு வேணா நந்து பெரிய சாராயிருக்கலாம். எனக்கு அவன (கால் முட்டிக்கு கீழே கையை இறக்கி காண்பித்து) இத்தன வயசுலருந்து தெரியும். உள்ள இருக்கானா, இல்லையா, அதமட்டும் சொல்லு.

காவலாளி: (வேண்டுமென்றே பொய் கூறுகிறான்) இப்பத்தான் வெளியே போனாரு. என்ன தேடிக்கிட்டு ஒரு ஐயர் வந்தா வீட்டுக்கு போயிட்டேன்னு சொல்லுன்னு சொன்னார். என்ன ஐயரே, போயிட்டு நாளைக்கு வரியா, இல்ல வூட்டான்ட பாத்துக்கறியா? இப்ப ஒத்தி நில்லு, ஜெனரல் மானேஜரு வண்டி வர நேரம்.

தரகர்: (தனக்குள்) படுபாவி பய. பிந்து சொன்னாமாதிரி கவுத்துட்டானே. நேரா போய் பத்மநாபன் கிட்ட போட்டு கொடுத்துடறேன்டா படவா. வரேன். (காவலாளியிடம்) டேய், அவன் வந்தா நான் நேரா அவன் அப்பன்கிட்ட போய் எல்லாத்தையும் உடைச்சிரப்போறேன்னு சொல்லு. வரேன்.

(அந்த சமயம் பார்த்து நந்து அலுவலகத்தை விட்டு வெளியே வர தரகர் பார்த்துவிடுகிறார்.)

நந்து: மாமா, எப்ப வந்தேள்?

தரகர்: (கோபத்துடன்) வாடா, வா. உள்ள இருந்துக்கிட்டே இவன் கிட்ட த்துக்கு போயிட்டேன்னு டூப் விட சொன்னியா? வாண்டாம்டா.. என் கிட்ட வாண்டாம்.

நந்து: (காவலாளியைப் பார்த்து கண்ணடிக்கிறான்.) ஏழுமலை. உன் கிட்ட எத்தனைத் தடவைச் சொன்னேன். தரகர் மாமா வந்தா உடனே உள்ளே கூட்டிக்கிட்டு போய் விசிட்டர்ஸ் ரூம்ல உக்காத்தி வச்சிட்டு என்கிட்ட வந்து சொல்லுன்னு. இவரு எவ்வளவு ஒசத்தியான விசிட்டர்னு உனக்கு தெரியுமா.. ஸ்டுப்பிட்.

காவலாளி: (நந்து வேண்டுமென்றே தன்னை போலியாக கண்டிக்கிறான் என்று புரிந்துகொண்டு போலியான பயத்துடன் தரகரைப் பார்க்கிறான்) சார். மன்னிச்சுக்குங்க சார். சும்மா, வெளையாட்டுக்குதான் சார் வூட்டுக்கு போய்ட்டார்னு சொன்னேன். கோச்சுக்காதீங்க சார்.

தரகர்: (பெருமை முகத்தில் பொங்க) ஓகே, ஓகே. நந்து நான் கேட்டது.. வச்சிருக்கியா இல்ல இன்னைக்கும் ஏதாவது சாக்கு சொல்லப் போறியா?

நந்து: (காவலாளியிடம்) ஏழுமலை, என்ன யாராவது கேட்டா இன்னும் அரைமணியில் வந்துர்றேன்னு சொல்லு என்ன? சார் கிட்ட பேசிட்டு வந்திர்றேன். வாங்க மாமா, பக்கத்துல ஒரு பார்க் இருக்கு. உங்க கிட்ட எனக்கு ஒன்னு ஆவணும். பார்க்குல இப்ப பெரிசா கூட்டம் இருக்காது. உக்காந்தே பேசுவோம்.

தரகர்: (சுரத்தில்லாமல்) சரி, சரி. இன்னைக்கிம் ஏமாத்தறதா முடிவு பண்ணிட்டே. வரேன். என்னதான் சொல்றேன்னு பாக்கறேன்.

காவலாளி: (தரகரிடம்) ஐயரே, உங்க சைக்கிள்.

நந்து: (காவலாளியிடம்) ஏழுமலை, சைக்கிள நம்ம ஸ்டான்டுல நிறுத்திரு. சார் அரை மணியில வந்து எடுத்துக்கிட்டு போயிடுவார், (தரகரிடம்) என்ன மாமா?

தரகர்: (காவலாளியிடம்) அதான் சார் சொல்லிட்டார்ல? மசமசன்னு நிக்காம எடுத்து ஸ்டான்டுல வை. நான் போறச்சே உனக்கேதாச்சும் குடுத்துடறேன். என்னடா முறைக்கிற?

காவலாளி: (தனக்குள்) ஐயரே, உனக்கிருந்தாலும் கொழுப்புதான். வா காத்த இறக்கி வைக்கறேன்.

தரகர்: என்னடா முனகுறே?

காவலாளி: ஒன்னுமில்ல சார். தோ வச்சிடறேன். நீங்க போயிட்டு வாங்க.

நந்து: நீங்க வாங்க மாமா. ஜி.எம் வெளியிலருந்து திரும்பி வர்றதுக்குள்ள நான் திரும்பி வரணும்.

தரகர்: (தன் கைக்கடிகாரத்தை பார்க்கிறார்) ஏன்டா, இப்பவே மணி அஞ்சரையாயிருச்சி. எதுக்கு மறுபடியும் ஆஃபீசுக்கு போணும்கற? ஆ1பீஸ் அஞ்சி மணி வரைக்கும்தானே.

நந்து: (எரிச்சலுடன்) அட நீங்க வேற மாமா. அதெல்லாம் பேருக்குத்தான். தினசரி வீட்டுக்கு போறச்சே பத்து மணியாயிரும். கசக்கி புழியறான்கள். என்ன பண்றது? நீங்க வாங்க. நேத்தைக்கு உங்கள மீட் பண்ணதுலருந்து ஒரு முக்கியமான டெவலப்மென்ட் ஆயிருக்கு. அதுக்கு நீங்கதான் ஒரு சொலுஷன் சொல்லணும்.

தரகர்: (குழப்பத்துடன்) என்னடா சொல்றே? நேக்கொண்ணும் புரியலை.. பணம் இருக்கா, இல்லையா. அத முதல்ல சொல்லு.

நந்து: அதெல்லாம் இருக்கு மாமா. இன்னைக்கி மொத்தமா பைசல் பண்ணிடறேன். அதுக்கு முன்னால ஒரு விஷயமா உங்க கிட்ட பேசணும்.

தரகர்: (கையை நீட்டுகிறார்) அதெல்லாம் அப்புறம். முதல்ல பணத்த கையில வை.

நந்து: (எரிச்சலுடன்) என்ன மாமா நடுரோட்டுல வச்சிக்கிட்டு வம்பு பண்றேள்? இதோ பார்க் வந்தாச்சு. வாங்க உக்காந்து பேசுவோம்.

தரகர்: (வெறுப்புடன்) சரியான விடாக்கண்டன்டா நீ. சரி சொல்லு. என்ன விஷயம், பெரிய புடலங்கா விஷயம்?

(பார்க்கில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இருவரும் மறைவாயிருந்த ஒரு சிமென்ட் இருக்கையில் அமர்கிறார்கள்.)

(நந்து தன் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து தரகரிடம் கொடுக்க அவர் கடகடவென்று பணத்தை சரிபார்த்து தன் கையிலிருந்த மஞ்சள் நிற துணிப்பையில் வைத்து கெட்டியாக பிடித்துக்கொள்கிறார்.)

நந்து: (புன்னகையுடன்) பயங்கரமான ஆளு மாமா நீங்க? பணத்தை பத்திரமா பூட்டி வச்சிட்டீங்க!

தரகர்: (சிரிக்கிறார்) பணத்த மட்டுமாடா பூட்டி வச்சிருக்கேன். சிந்துவோட செவ்வாய் தோஷத்தையும்தான் இத்தன நாளா என் மனசுல பூட்டிவச்சிருக்கேன். உங்கப்பாவ பாக்கும்போதெல்லாம் பாவமா இருக்கும். பத்மநாபனுக்கும் எனக்கும் எத்தன வருஷ பழக்கம்! அவன போய் இத்தன நாளா ஏமாத்திக்கிட்டிருக்கோமேன்னு நினச்சா.. அப்படி என்ன அழகத்தான் சிந்துகிட்ட பாத்தயோ தெரியல.. ஜோஸ்யர் சொன்னா மாதிரி நீ செத்து கித்து போயிட்டனா.. நான் சாவற வரைக்கும் குத்த உணர்ச்சியோட.. கேவலம் இந்த அஞ்சாயிரம் என் மனச ஆத்துமாடா..?

நந்து: (தரகரின் தோளில் கை வைத்து றுதலாய் அழுத்துகிறான்) அட நீங்க ஒன்னு மாமா.. செவ்வா புதன்னுக்கிட்டு.. கிறிஸ்டின்ஸ் எல்லாம் ஜாதகமா பாக்கறாங்க..?

தரகர்: (வாயில் போட்டுக்கொள்கிறார்) அபச்சாரம், அபச்சாரம். வேண்டாம்டா.. அனாச்சாராமா ஒளறாத.. சரி அது போட்டும் என்னமோ பேசணும்னு சொன்னியே என்ன அது? பிந்துவோட விஷயமா?

நந்து: (சுருக்கமாக சொல்கிறான். அவர்கள் பேசுவது கேட்காமல் இருக்கவேண்டும்)

தரகர்: (கேலியுடன்) நல்ல குடும்பம்டா சாமி. டேய் வாண்டாம்டா இந்த விஷ பரீட்சை. உன் விஷயமா நான் பண்ண பித்தலாட்டமே என்ன தூஙக விடமாட்டேங்குது. இதுல பிந்துவோட... நா மாட்டேன். ஆள விடு.. (எழுந்து புறப்பட முயல்கிறார்)

நந்து: (அவசரமாக எழுந்து அவரை தடுக்கிறான்) என்ன மாமா நீங்க?

தரகர்: (எரிச்சலுடன் கையை உதறிவிடுகிறார்) பின்ன என்னடா? சரி அதிருக்கட்டும். எதுக்கு பிந்துவோட ஜாதகமும் உங்க மாமா பிள்ளை ஜாதகமும் பொருந்தலன்னு சொல்ல சொல்றே... ஓ! இப்ப புரியுது நேத்தைக்கி பார்க்ல... அந்த பிள்ளையாண்டான்தான் காரணமா?

நந்து: (வலுடன்) மாமா, நேத்தைக்கே கேக்கணும்னு நினைச்சேன். அந்த பையன் பாக்கறதுக்கு எப்படி இருந்தான்? நம்ம பிந்துவுக்கு ஏத்தமாதிரி இருக்கானா?

தரகர்: (முகத்தை சுளிக்கறார்) இப்ப அதுதான் ரொம்ப முக்கியம். அண்ணனா லட்சணமா பிந்துவ விஷாலுக்கே முடிச்சிவைக்கற வழிய பாருடா. நா வரேன். நாலு வரண பார்த்து கல்யாணத்த முடிச்சி வைக்கற தொழில் என்னோடது.. முறிச்சி விடறதில்ல. ஆளை விடு.. நான் வரேன். (போகிறார்)

நந்து: (அவர் பின்னாலேயே ஓடுகிறான்) மாமா, கோச்சிக்காதீங்க.. இதான் லாஸ்ட்.

தரகர்: என்னடா இது,ஃபர்ஸ்ட்டு, லாஸ்ட்டுன்னு?

நந்து: வேற வழியில்லாமத்தான் மாமா கேக்கறேன்.

தரகர்: (நின்று அவனைத் திரும்பி பார்க்கிறார்) என்னடா சொல்றே?

நந்து: மாம் மாமா. பிந்துவுக்கு சிந்துவோட விஷயம் தெரிஞ்சி போச்சி மாமா.

தரகர்: (திடுக்கிட்டு ) மாபாவி, என்னடா சொல்றே? பத்மநாபனுக்கும் தெரிஞ்சி போச்சா?

நந்து: (அவசரத்துடன் இல்லை என்று தலையை அசைக்கிறான்) இல்ல மாமா. சிந்துவுக்குக்கூட தெரியாது..

தரகர்: (நிம்மதியுடன்) அப்பாடா.. அந்த வரைக்கும் காப்பாத்தினியே..

நந்து: அவ இதை தெரிஞ்சி வச்சிக்கிட்டு இப்ப பளாக்மெய்ல் பண்றா மாமா.

தரகர்: (ஆச்சரியத்துடன்) பார்றா! இத்தனூண்டு இருந்தவொ.. சரி இப்ப நான் என்ன பண்ணனும், அதச் சொல்லு.

நந்து: (நிம்மதி பெருமூச்சுவிடுகிறான்) அதான் சொன்னேனே மாமா.. நாளைக்கி அநேகமா விஷாலோட ஜாதகத்தையும் பிந்துவோட ஜாதகத்தையும் அப்பா எங்க ஜோஸ்யர்கிட்ட எடுத்துண்டு போவார். நீங்க இன்னைக்கே அவர்கிட்ட போய் ரெண்டு ஜாதகம் பொருந்தலன்னு சொல்ல சொல்லிரணும். அவ்வளவுதான். என்ன சொல்றேள்?

தரகர்: (சோர்வுடன்) ஜாதகம்ங்கறது எவ்வளவு பெரிய விஷயம்! பொண்ணு, பிள்ளைன்னு ரெண்டு ஜாதகத்தையும் பொருத்தி பாக்கறது எதுக்குன்னு நீங்கல்லாம் நெனைக்கறேள்? அந்தகாலத்துலருந்து செஞ்சிட்டு வர்ற இதுக்கு எத்தனை அர்த்தம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமாடா?

நந்து: (பொறுமையிழந்து) மாமா, லெக்சர் அடிக்காதேள்.. அப்பா கிட்டயிருந்து இந்த மாதிரி நெறய நேரம் கேட்ருக்கேன். எங்க ஜி.எம் வர்றதுக்குள்ள நா ஆஃபீஸ்லருந்தாகணும். இந்த வேலைக்கு உங்களுக்கும் ஜோஸ்யருக்கும் எவ்வளவு செய்யணும்? அத மட்டும் சொல்லுங்கோ.

தரகர்: (வேதனையுடன்) இந்த காலத்து பசங்க பணத்தால எல்லாத்தையும் வில குடுத்து வாங்கிற முடியும்னு நினைக்கறேள். இல்லையாடா?

நந்து: (அவர் கையை தரவாய் பிடிக்கிறான்) ஐயோ அப்படியில்ல மாமா? நான் அந்த அர்த்தத்துல சொல்லல..

தரகர்: (சலிப்புடன் கையை உதறிவிடுகிறார்) நீ எப்படி சொன்னாலும் அதான் அர்த்தம்.

நந்து: சாரி மாமா.

தரகர்: (முடிவுடன்) சரி. செய்யறேன். எனக்கு பணம் ஒன்னும் வேணாம். ஜோஸ்யர் ஏதாச்சும் கேட்டார்னா சொல்றேன். ஆனா ஒண்ணு.. இதான் கடைசி.. பிந்துவுக்கிட்டயும் சொல்லி வை.. இனியும் அது, இதுன்னு என்கிட்ட வந்து நின்னா.. அப்புறம் நேரா பத்மநாப சாஸ்திரிகள்கிட்டவே போய் நின்னிருவேன்.. சொல்லிட்டேன். நான் புறப்படறேன்.. ஜோஸ்யர் கிட்ட பேசிட்டு சொல்றேன்..

நந்து: தாங்க்ஸ் மாமா.. என் மொபைலுக்கு பண்ணுங்கோ.. வீட்டுக்கு வேணாம்..

தரகர்: (கேலியுடன்) இந்த மாதிரி பித்தலாட்டங்களுக்குதான் இந்த மொபைலையே கொண்டுவந்திருக்கான்கன்னு நினைக்கறேன்.. வரேன்.

(நந்து தரகர் போவதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் கிளம்பி தன் அலுவலகம் நோக்கி நடக்கிறான்)

காட்சி முடிவு.

1 comment:

தங்ஸ் said...

Very Nice! Waiting for the next episode!!