6.11.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம்)..6

காட்சி - 8

பாத்திரங்கள்:

பத்மநாபனின் குடும்பத்தினர்
பட்டாபி குடும்பத்தினர்

(பிந்து வீட்டுக்குள் நுழைந்து ஹாலில் யாருமில்லாதிருக்கவே நிம்மதி பெருமூச்சு விடுகிறாள். கையிலிருந்த கைப்பையை சோபாவில் போட்டுவிட்டு அமர்ந்து சிறிது நேரம் யோசிக்கிறாள். நந்து உள்ளே வருகிறான். பிந்துவைப் பார்த்துவிட்டு அவளருகில் சென்று அமர்ந்து அவளையே சிறிது நேரம் பார்க்கிறான். ‘பயங்கரமான ஆளுடி நீ! எத்தன நாளா இந்த திருட்டு வேலை.’ என்று தனக்குள் பேசிக்கொள்கிறான். யோசனையிலிருந்த பிந்து சட்டென்று நிமிர்ந்து அருகில் அமர்ந்திருக்கும் நந்துவைப் பார்த்து அதிர்ந்துபோய் எழுந்து நிற்கிறாள்.)

பிந்து: ஏய் அண்ணா. நீ ஏதாவது சொன்னியா?

நந்து: (ஏளனத்துடன்) இல்லையே. உன் மனசாட்சிதான் ஏதாவது சொல்லியிருக்கும்.

பிந்து: (குழப்பத்துடன்) மனசாட்சியா? என்ன சொல்றே?

நந்து: ‘ஏன்டி இப்படி வீட்டுக்குத் தெரியாம திருட்டுத்தனம் பண்ணிட்டு இப்ப முழிக்கறே?’ன்னு கேட்டிருக்குமே.

பிந்து: (குழப்பத்துடன்) திருட்டுத்தனமா? நானா? என்ன உளர்றே?

நந்து: (ஏளனத்துடன்) ஆஹா! என்னமா நடிக்கறே? அது சரி, இப்ப எங்கருந்து வரே?

பிந்து: (அதிர்ச்சியுடன் அவனை ஒரு நொடி பார்த்துவிட்டு யோசிக்கிறாள்) (‘அந்த தரகர் என்னையும் பாஸ்கரையும் பார்த்துட்டு நந்துக்கிட்ட போட்டு குடுத்துட்டான் போலருக்கு. சரி, வேற வழியில்லை. திருப்பி அண்ணாவை மடக்கினாத்தான் அடங்குவான்.’ என்று தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறாள்).

நந்து: என்ன யோசனை பிந்து? கையும் களவுமா மாட்டிக்கிட்டோமேன்னு பாக்கறியா? உன் விஷயத்தையெல்லாம் தரகர் மாமா புட்டு புட்டு வச்சிட்டார். நல்லவேளை இத அப்பா கேட்டிருந்தார்னா அவ்வளவுதான். ஏற்கனவே அவர் ஹார்ட் பேஷன்ட்.

பிந்து: (கோபத்துடன்) ஏன் நீ பண்ணியிருக்கற பித்தலாட்டத்த அப்பா கேட்டா சந்தோஷப்படுவாரா?

நந்து: (திடுக்கிட்டு பிந்துவைப் பார்க்கிறான்) ஏய் என்ன உளர்றே?

பிந்து: (உள்ளூர மகிழ்கிறாள். ‘படவா, மாட்டிக்கிட்டயா?’ மாடியையும் ஹாலையும் சுற்றிலும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தி) மன்னியோட செவ்வாய் தோஷத்த சொல்றேன்.

(நந்து உண்மையான அதிர்ச்சியுடன் பேந்த, பேந்த விழிப்பதை பார்த்து ரசிக்கிறாள்.)

பிந்து: (கேலியுடன்) நீயும் தரகர் மாமாவும் தெருக்கோடியில பேசிக்கிட்டிருந்ததை கேட்டுட்டுதான் வரேன். என்ன இத கேட்டா அப்பா எப்படி ரியாக்ட் பண்றாருன்னு பாக்கலாமா?

(நந்து நெருங்கி வந்து பிந்துவின் கைகளைப் பிடித்துக்கொள்கிறான்)

நந்து: (கெஞ்சுகிறான்) ஏய் பிந்து. நம்ம ரெண்டு பேரும் ஒரு அண்டர்ஸ்டான்டிங்குக்கு வந்துரலாம். நீ சிந்துவோட செவ்வா தோஷத்த மறந்துரு. நான் உன் காதல் விவகாரத்த மறந்துடறேன். என்ன சொல்றே?

பிந்து: (தனக்குள்) மவனே அப்படி வா வழிக்கு. (நந்துவிடம்) ஆனா அதுமட்டும் போறாது.

நந்து: (சுற்றிலும் பார்த்துவிட்டு) வேற என்ன பண்ணனும்?

பிந்து: தரகர் மாமாகிட்ட சொல்லி என்னுடைய ஜாதகமும், விஷால் ஜாதகமும் பொருந்தலைன்னு ஜோசியர் வழியா சொல்ல வைக்கணும். என்ன சொல்றே?

நந்து: (அதிர்ச்சியுடன்) அடிப் பாவி. நீ என்ன சொல்றே?

பிந்து:(பிடிவாதத்துடன்) ஆமா. எனக்கும் விஷாலுக்கும் கல்யாணம் நடக்கக்கூடாது. நான் பாஸ்கர்னு ஒருத்தரை விரும்புறேன். அவரும் ஐயர்தான். நேத்தைக்கி உன்னை இடிச்சிக்கிட்டு போனானே.. நீ கூட லூசான்னு கேட்டியே ,அந்த மாதுவோட அண்ணன்தான். என்ன சொல்றே?

(நந்து யோசனையுடன் சிறிதுநேரம் பேசாமல் அமர்ந்திருக்கிறான்)

பிந்து: ஏய் அண்ணா. என்ன யோசிக்கறே? மன்னியும் மத்தவங்களும் வரதுக்குள்ளே ஏதாச்சும் டிசைட் பண்ணு.

நந்து: சரி. தரகர் மாமாகிட்ட பேசறேன். ஆனா அவர் அப்பாக்கிட்ட போய் வத்தி வச்சிட்டார்னா?

பிந்து: அதுக்கு நீதான் பொறுப்பு. மன்னி விஷயத்துல மட்டும் அவரை சொல்லவிடாம மேனேஜ் பண்ண முடிஞ்சதில்ல? அப்புறம் என்ன?

நந்து: அவர் பணத்துக்கு பேயா அலையற மனுஷனாச்சே பிந்து, அதான் யோசிக்கறேன்.

பிந்து: பணத்துக்கு நானாச்சி. ஆனா ரீசனபிளா இருக்கணும். நீ கேட்டுட்டு சொல்லு. அதுவரைக்கும் நான் மன்னியோட ஜாதக விஷயத்தை பேச மாட்டேன் நீயும் என் விஷயத்த பத்தி பேசப்படாது. இதோ மாமி மாடியிலேருந்து வரா. (எழுந்து முகத்தில் புன்னகையுடன்) வாங்கோ மாமி. சாரி மாமி, என் ஃபிரென்ட் ஒருத்தி அவ டியூட்டியை என் தலையில கட்டிட்டு போயிட்டா. கால் சென்டர் வேலையில் சண்டே, சாட்டர்டேன்னு ஓய்வே கிடைக்காது மாமி. எப்படியிருக்கேள்? விஷால், மாமால்லாம் தூங்கறாளா?

நந்து: (படபடவென்று பொரிந்து தள்ளும் பிந்துவை பார்த்துவிட்டு தனக்குள்) ‘அடிப் பாவி இவ்வளவு விஷயத்தை மனசுல வச்சிக்கிட்டு இவளால எப்படி சட்டுன்னு நார்மலா யிட முடியறது? பயங்கரமான ஆளு. நாம ஜாக்கிரதயா இல்லன்னா நம்மள எந்த நிமிஷமும் போட்டு குடுத்துறுவா.. அந்த தரகர் மாமா என்ன பிகு பண்ணுவாரோன்னு தெரியலையே. இந்த சிந்துவோட அழகில ஒரு நிமிஷம் மயங்குனதுக்கே இன்னும் அவஸ்தைப்பட வேண்டியிருக்கு. இதுல பிந்து விஷயம் வேற. எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலையே..’

பங்கஜம்: (நந்து யோசனையில் இருப்பதை பார்த்தவாறு தனக்குள் பேசிக்கொள்கிறாள்) நாம கீழ இறங்கி வர்றப்போ என்னத்தையோ அண்ணனும் தங்கையுமா ரகசியமா பேசிக்கிட்டிருந்துட்டு நம்மள பாத்ததும் இந்த பிந்து சட்டுன்னு எழுந்து விசாரிக்கறாளே.. என்னவாயிருக்கும்? கண்டுபிடிக்கணும்.. இவ உண்மையிலேயே ஆபீசுக்குத்தான் போயிட்டு வராளா இல்ல.. இப்பத்தானே வந்திருக்கோம். ரெண்டு நாளைக்குள்ள கண்டு பிடிச்சிர மாட்டேன். அம்புஜமா, கொக்கா?

பிந்து: என்ன மாமி? நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம என்னத்தையோ யோசிச்சிக்கிட்டு இருக்கேள்? நந்துக்கிட்ட ஏதாச்சும் கேக்கணுமா? (சோபாவில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருக்கும் நந்துவை பார்க்கிறாள். ‘அடப்பாவி. அண்ணா என்ன அப்படியே உக்காந்திட்டிருக்கான். இந்த பங்கஜம் மாமி சரியான சஸ்பிஷன் காரக்டராச்சே..’) ஏய் அண்ணா, என்ன யோசனை? அம்புஜம் மாமி உன் கிட்ட என்னமோ கேக்கணும்னு வர்றா பாரு.

(நந்து நினைவுகள் கலைந்து திடுக்கிட்டு திரும்பி பிந்துவை பார்க்கிறான்)

நந்து: என்ன கேட்டே?

பிந்து: நான் ஒன்னும் கேக்கலை.. மாமிதான் ஏதோ கேக்கப்போறான்னு நினைக்கறேன். என்ன மாமி?

பங்கஜம்: எனக்கொன்னும் கேக்க வேணாமே.. என்ன பிந்து ரெண்டு மாசமா சாப்பிடாத மாதிரி தேஞ்சி துரும்பா போயிருக்கே?

(சிந்து மாடியிலிருந்து வருகிறாள். நந்துவின் முகத்திலிருந்த கலவரத்தைப் பார்த்துவிட்டு ‘என்ன’ என்பதுபோல் புருவங்களை உயர்த்துகிறாள். நந்து ‘ஒன்னுமில்லை’ என்பதுபோல் தலையை அசைக்கிறான். இருவரையும் பார்த்து விஷமத்துடன் உதட்டை சுழிக்கிறாள் பிந்து. இதையெல்லாம் பார்க்கும் பங்கஜம் ‘இங்க என்னவோ நடக்குது சைலன்டா’ என்று தனக்குள்ளே குழம்புகிறாள்)

பத்து: (மாடியிலிருந்து இறங்கிக்கொண்டே ஒன்றும் பேசாமல் திசைக்கு ஒருவராய் நிற்கும் நந்து, பிந்து, சிந்து மற்றும் பங்கஜத்தைப் பார்க்கிறார்.) என்னப்பா திசைக்கு ஒருத்தரா நிக்கறேள்? என்ன பங்கஜம் என் பொண்ணுக்கிட்ட என்ன சொன்னே, முகத்துல பேஸ்து அடிச்சா மாதிரி நிக்கறா?

பிந்து: (முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு) மாமி நான் ரொம்ப வீக்கா இருக்கேன்னு சொல்றாப்பா.

பத்த்: (உரக்க சிரிக்கிறார்) பங்கஜம் உங்கிட்டயும் ஆரம்பிச்சிட்டாளா? வந்தவுடனே சிந்துவை ஒல்லிக்குச்சின்னு சொன்னா? இப்ப உங்கிட்டயுமா? விட்டுத்தள்ளு. (இறங்கி பங்கஜத்துக்கு அருகில் சென்று) பங்கஜம் கவலைப்படாதே.. விஷால் என்ன சொல்றான்னு பாப்பம். குண்டாவறது ஈசி.. ஒல்லியாவறதுதான் கஷ்டம். என்ன சிந்து?

சிந்து: (முகத்தை சுளிக்கிறாள்) பிந்து வேணும்னா குண்டாயிக்கட்டும். எங்காத்துக்காரர் இதுவே போறும்னுட்டார். (நந்துவைப் பார்த்து புன்னகைக்கிறாள்) என்னன்னா?

நந்து: (ஏதோ கவனத்தில்) நானா? நான் எப்போ சொன்னேன்?

சிந்து: (திடுக்கிட்டு அவனைப் பார்க்கிறாள். கண்கள் கலங்கி விசும்பலுடன்) என்னன்னா நீங்கதானே காலைல சொன்னேள். மாமிக்கு வேற வேலை கிடையாது. நீ இப்ப இருக்கற தடியே போறும்னு சொன்னேளே..

பிந்து: (கேலியுடன்) மன்னி. நீங்க கவலைப்படாதேள். நந்து நீங்க சொன்னத கேக்காம வேற ஏதோ யோசனையில சொல்லிட்டான். என்னண்ணா அப்படித்தானே.

நந்து: (குழப்பத்துடன் சிந்து, பிந்து இருவரையும் மாறி மாறி பார்க்கிறான். மீண்டும் ஏதோ நினைவில்) ஆமா, ஆமாம்.

(ஹாலில் இருக்கும் யாரையும் கவனிக்காமல் மாடியேறி போகிறான். எல்லோரும் அவனையே குழப்பத்துடன் பார்க்கிறார்கள்.)

காட்சி முடிவு

No comments: