2.11.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம்)4

காட்சி 5

பாத்திரங்கள்

பத்மநாபன் குடும்பத்தினர் மற்றும் அம்புஜத்தின் அண்ணா (பட்டாபி), மன்னி (பங்கஜம்), அவர்களுடைய மகன் விஷால்.

(வாசற்கதவைத் திறந்து கொண்டு பத்மநாபனும் நந்துவும் உள்ளே வர அவர்களைத் தொடர்ந்து அம்புஜத்தின் அண்ணா குடும்பத்தினர் வீட்டினுள் நுழைகின்றனர். சுவர் கடிகாரம் ஒன்பது முறையடித்து ஓய்கிறது.)

அம்பு: (சோபாவிலிருந்து பரபரப்புடன் எழுந்து புன்னகையுடன்) வாங்கண்ணா, வாங்க மன்னி, வாப்பா விஷால். வண்டி லேட்டுதானா, வழக்கம்போல.

பத்து: என்ன நீ அப்படி அசால்டா கேட்டுட்டே? நம்ம லாலுவாக்கும் ரயில்வே மினிஸ்டர். ட்ரெயினாவது லேட்டாவறதாவது. சும்மா டாண்ணு வந்துட்டான். நம்ம கால் டாக்சி டிரைவர்தான் எங்கேயோ போய் தொலைஞ்சிட்டான். வண்டி மட்டும் நிக்குது, அவனைக் காணோம். கேட்டா ட்ரெய்ன் லேட்டாவும்னு நெனச்சி நாஷ்தா சாப்பிட போயிட்டேன்றான். என்னத்தைச் சொல்ல. நந்து என்னடா பாத்துண்டிருக்கே, காபி ரெடியான்னா, சிந்துவைக் கொண்டு வரச் சொல்லேன்.

(சிந்து பரபரப்புடன் கையில் காப்பி ட்ரேயுடன் சமையல்கட்டிலிருந்து வருகிறாள்)

சிந்து: சாரி மாமா, நேத்து ·பிரிட்ஜ்ல வச்ச பால் திரிஞ்சிட்டது. அதான்..

பத்து: சரி, சரி. பரவால்லை. எல்லாருக்கும் குடு, பட்டாபி நீ கல்யாணத்துக்குதான் வரலை, மருமகளை நன்னா பாரு, ஜோடிபொருத்தம் எப்படி?

பட்டாபி: (காப்பியை உறிஞ்சியவாறு) நன்னா அம்சமாத்தானிருக்கா. நீ என்ன சொல்றே பங்கஜம்?

பங்கஜம்: (சுரத்தில்லாமல்) நம்ம நந்து ராஜாவாட்டமாயிருக்கான். இவ ரொம்ப ஒல்லிக்குச்சியான்னாயிருக்கா. சரி, எல்லாம் அந்த ஈஸ்வரன் பிராப்தம், நான் என்ன சொல்லி என்ன ஆவ போறது?

(சிந்துவின் முகம் களையிழந்து போவதைக் கவனித்த நந்து அவளைப் பார்த்து ‘கண்டுக்காதே, மாமி அப்படித்தான்’ என்று கண்ணால் சைகைக் காண்பிக்கிறான். பட்டாபி அதைக் கவனித்து விடுகிறார்.)

பட்டாபி: (சிரித்துக்கொண்டே சிந்துவைப் பார்க்கிறார்) நீ ஒண்ணும் கவலைப்படாதே சிந்து. பங்கஜம் குடும்பத்துல எல்லாரும் நல்லா உருண்டு திரண்டு இருப்பா. அதனால ட்ரிம்மா, ஸ்லிம்மா இருந்தா அவ பார்வையில ‘ஒல்லிக்குச்சி’தான். என்ன பங்கஜம்?

பங்கஜம்: (முகத்தை சுளிக்கிறாள்) ஆமா, எங்காத்து மனுஷால குறைச் சொல்லாம இருக்க முடியாதே உங்களால. நான் சொன்னதுல என்ன தப்பு? பொண்ணுங்க சின்ன வயசுல உடல வாளிப்பா வச்சிருக்கணும் அப்பத்தான் ஆம்படையான் அங்க இங்க அலைய மாட்டான்.

விஷால்: (எரிச்சலுடன்) அம்மா, கொஞ்சம் சும்மாயிரும்மா. வந்ததும் வராததுமா குறை சொல்லிண்டு.

பத்து: சொல்லட்டுமே விஷால். நாங்க ஒண்ணும் வேத்தாளில்லையே. சரி, சரி எல்லோரும் போய் குளிங்க. நந்து பாத்ரூம்லருக்கற ஹீட்டர ஆன் பண்ணு. டெல்லி குளிரைப் பாத்தவாளுக்கு சென்னை வாட்டர் கூலாருக்காது. என்ன விஷால்?

விஷால்: எனக்கும் அப்பாவுக்கும் ஹாட் வாட்டர் வேண்டாம். ஆனா அம்மா சம்மர்லயே ஹாட் வாட்டர்தான் வேணும்பா. குளிக்க, குடிக்க ரெண்டுக்கும்.

பங்கஜம்: ஆமா அம்புஜம், பிந்துவை எங்கே காணோம்? இன்னுமா தூங்கறாள்?

அம்பு: இல்லே மன்னி அவ ஆத்துல இல்லை. அவளுக்கு இன்னைக்கி ஸ்பெஷல் டூட்டி. லீவ் கிடைக்காதுன்னு நேத்தே சொல்லிட்டாள். வர எப்படியும் ஆறு மணியாயிடும். நீங்க குளிச்சிட்டு வாங்கோ, டிபன் பண்ணிட்டு ரெஸ்ட் எடுக்கலாம். விஷால் நீ மாடியில நந்து பாத்ரூம்ல ஷவர்ல குளிச்சிட்டு வந்திரு. அண்ணா உனக்கு எப்படி வசதி? கீழேயே குளிச்சிடறியா?

பட்டாபி: ஆட்டும். பங்கஜம் நீ போய் குளி முதல்ல.

(ஹாலில் இருந்த எல்லோரும் கலைந்து செல்கின்றனர்.)

காட்சி முடிவு.


காட்சி 6

பாத்திரங்கள்

பிந்து, பாஸ்கர்

(பாஸ்கர் ஒரு பார்க்கின் முன் நிற்கிறான். தன் கைக்கடிகாரத்தை எரிச்சலுடன் பார்க்கிறான். ‘ஊரிலிருந்து வந்ததும் வராததுமா எதுக்கு என்னை வரச்சொல்லியிருப்பா?’ என்று தனக்குள்ளே பேசிக்கொள்கிறான்.)

(பிந்து அவசர அவசரமாக வருகிறாள்)

பாஸ்கர்: என்ன பிந்து ஞாயிற்றுக்கிழமை அதுவுமா எதுக்கு என்ன வரச் சொன்னே?

பிந்து: சொல்றேன். வீட்ல இன்னைக்கி கெஸ்ட் வந்திருக்காங்க.

பாஸ்கர்: கெஸ்டா? அதுக்கும் என்ன வரச்சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்? உங்க வீட்டுக்கு வந்து சாப்பாடு கீப்பாடு பண்ணனுமா? எனக்கு அதெல்லாம் தெரியாதும்மா. ஆளை விடு.

பிந்து: (கோபித்துக்கொள்கிறாள்) பாஸ்கர், சும்மா கலாட்டா பண்ணாம விஷயத்த கேளுங்க.

பாஸ்கர்: சொல்லு.

பிந்து: பம்பாயிலிருந்து எங்க மாமா, அத்தை, விஷால் எல்லாம் வந்திருக்காங்க.

பாஸ்கர்: இப்ப மும்பை, பம்பாய் இல்ல.

பிந்து: (எரிச்சலுடன்) விளையாடாதீங்க பாஸ்கர்.

பாஸ்கர்: ஓகே, ஓகே! உங்க மாமா, அத்தை சரி. அது யாரு விஷால்? (நெத்தியில் ஆள்காட்டி விரலால் தட்டிக்கொண்டே) ஓ! முறைப்பையனா? அதான் என்னைக் கழட்டி விட்டுறலாம்னு வரச்சொன்னியா?

பிந்து: (கோபத்துடன் அடிக்க கை ஓங்குகிறாள். பாஸ்கர் அவளுடைய ஓங்கிய கையைப் பிடித்து தன் கையில் வைத்துக்கொள்ள முயல, பிந்து வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு அவனை முறைக்கிறாள்) விளையாடாம விஷயத்தை கேளுங்க.

பாஸ்கர்: சொல்லு.

பிந்து: நம்ம விஷயத்தை உங்காத்துல சொன்னீங்களா? இல்ல, இன்னும் தைரியம் வரலையா?

பாஸ்கர்: ( ஒன்றும் பேசாமல் மவுனமாய் யோசிக்கிறான்)

பிந்து: என்ன யோசிக்கறீங்க?

பாஸ்கர்: என் தங்கையோட கல்யாணத்துல ஒரு சின்ன பிரச்சினை.

பிந்து: என்ன பிரச்சினை?

(தொடரும்)

No comments: