14.11.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 12

காட்சி - 16

(ஹாலிலிருந்த சுவர் கடிகாரம் ஆறுமுறை அடித்து ஓய்கிறது. அம்புஜம் குளியலறையிலிருந்து வெளியேறி பூஜையறைக்குள் நுழைகிறாள். நந்து அவசர அவசரமாக மாடிப்படி இறங்கி வந்து சமையலறையினுள் நுழைந்து சிந்துவின் காதில் ஏதோ ரகசியமாக பேசுகிறான். அவள் முகம் அதிர்ச்சியால் சிவக்க தன் கணவனை கண்களில் கண்ணீர் மல்க பார்க்கிறாள்)

சிந்து: (பதற்றத்துடன்) என்னன்னா குண்ட தூக்கி போடுறேள்?

நந்து: ஆமாம் சிந்து.. பிந்து எழுந்துக்கறதுக்குள்ள நான் ஏதாச்சும் சாக்கு சொல்லிட்டு போயிடறேன். அவ எழுந்து என்ன பாத்துட்டான்னா அவ்வளவுதான்.. காப்பி மட்டும் குடு போறும். டிபன் போற வழியில பாத்துக்கறேன். (ஹாலுக்கு போக முயல)

சிந்து: (நந்துவின் கையைப் பிடித்து நிறுத்துகிறாள்) உங்க தங்கை இந்த விஷயத்த போட்டு உடைக்கமாட்டான்னு என்னன்னா நிச்சயம்?

நந்து: (சிந்துவின் தோளில் கை வைத்து ஆறுதலாய் அழுத்துகிறான்) எனக்கு பிந்துவை தெரியும். அவ அப்படி செய்யமாட்டா.. சும்மா மிரட்டுவா.. நா அவ ஆஃபீஸ்ல போய் பாத்துக்கறேன். இன்னைக்கி சாயங்காலத்துக்குள்ள இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.. இங்க வீட்லருந்து அவகிட்ட பேச முடியாது.. அப்பா எழுந்துட்டாரா?

சிந்து: (சலிப்புடன்) ஆமாம். வாக் போயிட்டு வந்துடறேன் நந்து எழுந்ததும் ஆபீஸ் போறதுக்குள்ள ஒரு விஷயம் பேசணும்னு சொல்லிட்டு போயிருக்கார்.. அவர் வர்றதுக்குள்ள நீங்க போயிட்டீங்கன்னா என்னத்தான் சந்தேகப்படுவார்.. நீங்க இருந்து என்னன்னு ஒரு வார்த்தைக் கேட்டு போயிருங்கோளேன்..

நந்து: (கோபத்துடன்) அடிப்போடி இவளே. நான் என்ன சொல்றேங்கறது நோக்கு புரியறதா? பிந்து எழுந்துக்குறதுக்குள்ள நா போணுங்கறேன்.. நீ பேசிண்டேயிருக்கே.. சீக்கிரம் காப்பிய தா.. நான் குளிச்சிட்டு ஓடறேன்.. அம்மா எங்கே?

சிந்து: பூஜை ரூம்ல.. நாம இங்க பேசறத எல்லாம் ஒட்டு கேட்டுண்டுருக்காளோ என்னவோ.. யார் கண்டா? இந்தாங்கோ காப்பி.. உலகமே இடிஞ்சி விழுந்தாலும் உங்களுக்கு உங்க காப்பிதான் முக்கியம்.. குடிச்சிட்டு போய் குளிங்கோ.. இட்லி ரெடி, சட்னி மட்டும்தான் அரைக்கணும்..

நந்து: (காப்பியை நின்றவாறே மடக் மடக்கென்று குடித்துவிட்டு டம்ளரை தானே கழுவி கவிழ்க்கிறான்.) அதெல்லாம் ஒன்னும் வேணாம். காக்கா குளி குளிச்சிட்டு ஓடணும்.. அவ எழுந்துட்டான்னா அவ்வளவுதான். நான் தொலைஞ்சேன்.. (ஓடுகிறான். சிந்து அவனையே பார்த்துக்கொண்டு ‘புள்ளையாரப்பா.. இந்த சங்கடத்துலருந்து என்ன காப்பாத்தினா உன் சன்னதியில வந்து நூறு தேங்கா.. இல்ல, இல்ல மன்னிச்சுக்கோ புள்ளையாரப்பா, தேங்கா விக்கற விலையில நூறு முடியாது.. பத்து தேங்காயாவது உடைக்கறேம்பா..’ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு துருவிய தேங்காயையும், பொட்டுக்கடலையும் மிக்சியில் அள்ளி போட்டு ஓடவிட அது கர்ண கடூரமான ஓசை எழுப்புகிறது.. பூஜையறையிலிருந்து வெளியே வரும் அம்புஜம் காதைப் பொத்திக்கொள்கிறாள்)

அம்பு: ஐயோ சிந்து, நோக்கு எத்தன தரம் சொல்லியிருக்கேன் காலங்கார்த்தால அத ஓட விடாதேன்னு.. சாம்பார் வச்சா போறாதா? முதல்ல அத நந்துக்கிட்ட குடுத்து பாக்க சொல்லு..

சிந்து: (தனக்குள்) ஆமாம். எத்தன நாளைக்குத்தான் இட்லி சாம்பார், இட்லி சாம்பார்னு சாப்டறது.. எதுக்கெடுத்தாலும் நந்து, நந்துன்னுட்டு அவரையே போட்டு வாட்டுங்கோ.. மாமா வேலைக்கா போறார்.. அவராண்ட சொல்ல வேண்டியதுதானே..

(உடை மாற்றிக்கொண்டு மாடியிலிருந்து வேகமாய் இறங்கும் நந்து.. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வாயிலை நோக்கி நகர.. அம்புஜம் பார்த்துவிடுகிறாள்)

அம்பு: (ஓடிச்சென்று அவன் கையைப் பிடித்து நிறுத்துகிறாள்) டேய், டேய், எங்க காலைல எழுந்ததும் ஓடறே? நேத்தைக்கிம் எல்லாரும் தூங்குனதுக்கப்புறம்தான் வந்தே.. என்னாச்சி நோக்கு? பிந்துவோட நிச்சயத்துக்கு அப்பா நாள் பாத்துட்டு வந்துருக்கார்றா? உன்னாண்ட பேசணும்னு பாத்துண்டிருக்கார்.. அவர் வந்ததும் சொல்லிட்டு போ..

நந்து: (தன் தாயின் கையை மெல்ல விடுவித்துக்கொண்டு கதவுக்கருகில் வைத்திருந்த தன் ஹெல்மெட்டை எடுத்துக்கொள்கிறான்) அம்மா.. ப்ளீஸ் இன்னைக்கி ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கும்மா.. நாளைக்கி பேசிக்கலாம்.. அப்பாக்கிட்ட சொல்லிரு.. (கதவைத் திறந்துகொண்டு வெளியேற.. மாடியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்த பிந்து பார்த்துவிடுகிறாள்.. அவன் தன்னைத் தவிர்க்கத்தான் ஓடுகிறான் என்பதைப் புரிந்துக்கொண்டுவிடுகிறாள்)

பிந்து: (தனக்குள்) ஓடறியா.. ஓடு, ஓடு! எங்க ஓடிடப்போற? பாத்துக்கறேன். (அம்புஜத்திடம்) எங்கம்மா இத்தன சீக்கிரமா ஓடறான் அண்ணா?

அம்பு: (சலிப்புடன்) என்னமோ மீட்டிங்காம். இவன் போகலனா குடியே முழுகிப்போயிடுமாம். ஓடறான். அதுசரி.. ராத்திரி உனக்கு கலக்கி வச்சிருந்த போர்ன்விடா அப்பிடியே டேபிள்ல இருக்குது, நீ நேத்து எழுந்து வந்து குடிக்காமயே படுத்துண்டுட்டியா?

பிந்து: (தலையை குனிந்து கொள்கிறாள்) சாரிம்மா.. நீ போனதும் படுத்தவதான் அப்படியே தூங்கிபோயிட்டேன்.. சாரிம்மா, கோச்சுக்காதே..

அம்பு: (சலிப்புடன்) என்ன தூக்கமோ நோக்கு.. கட்டிண்டு போற வயசாச்சி.. இன்னமும் குழந்தையாட்டமே இரு.. பங்கஜம் என்ன மாதிரியில்ல, சொல்லிட்டேன். போ குளிச்சிட்டு சிந்துக்கு ஹெல்ப் பண்ணு..

சிந்து: (தனக்குள்) கடன்காரி, என்னென்ன குழப்பமெல்லாம் பண்ணப்போறாளோ. இதோ வந்துண்டேயிருக்காளே.. புள்ளயாரப்பா எனக்கு கோவம் வரக்கூடாதே.. (தன்னை நோக்கி வரும் பிந்துவிடம் வாயெல்லாம் பல்லாக) என்ன பிந்து நீ வருவேன்னுட்ட காப்பி கலந்து வச்சிருக்கேன்.. இந்தா பால கொஞ்சம் ஊத்தட்டா?

பிந்து: (கேலியுடன் ரகசிய குரலில்) என்ன மன்னி காலையிலயே ஐஸ் வக்கிறேள்? அண்ணா எல்லாம் நேக்கு தெரிஞ்சிட்டதுன்னு உங்களாண்ட சொல்லிட்டானா?

சிந்து: (தனக்குள்) உன்னால என்ன பண்ண முடியும்னு நினைச்சுக்கிட்டு இந்த எகிறு எகிர்ற?

பிந்து: என்ன மன்னி சத்தத்தையே காணோம்?

சிந்து: ஒன்னுமில்ல பிந்து ஏதோ யோசனையா இருந்துட்டேன். அவர் ஆஃபீஸ்ல ஏதோ பிரச்சினையாம் காலைலயே எழுந்து போகணும்னு என்னாண்ட கூட சொல்லிக்காமயே ஓடிட்டார்.. அதான்..

பிந்து: (குரோதத்துடன்) போறும் மன்னி சலிச்சுக்காதேள். அண்ணா ஒன்னும் பெரிய ஆஃபீசர் இல்ல.. சாதாரண டெவலப்பர்தான்.. சீனியர் டெவலப்பர்னு வேணும்னா சொல்லிக்கலாம். புராஜக்ட் லீடர் லெவலுக்கு சீன் காட்டறான். (தனக்குள்) இன்னைக்கி அவனை போன்ல வச்சிக்கறேன்.

(காப்பியை குடித்துவிட்டு டம்ளரைக்கூட கழுவாமல் வைத்துவிட்டு செல்லும் அவளை அவளைப் போகவிட்டு பழிப்பு காட்ட அதை எதிர்பார்த்தவள்போல் பிந்து சட்டென்று திரும்பி பார்க்க சிந்து அசடு வழிந்து நிற்க ஆள்காட்டி விரலை உயர்த்தி ‘வேண்டாம் மன்னி, என்னாண்ட வேணாம்.’ என்று ரகசிய குரலில் கூறிவிட்டு வெளியேறுகிறாள் பிந்து)

காட்சி முடிவு

No comments: