13.11.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 11

காட்சி - 14

பத்மநாபன் & பட்டாபி குடும்பத்தினர்

(அம்புஜமும் பிந்துவும் சேபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க சிந்துவில் சமயலறையில் இருக்கிறாள். விஷால் வேறொரு சோபாவில் அமர்ந்து தன் கையிலிருந்த புத்தகத்தைப் படிப்பதில் தீவிரமாயிருக்கிறான்.)

அம்புஜம்:(குரலை தாழ்த்தி பேசுகிறாள்) ஏய் பிந்து, ஏன்டி விஷால்கிட்ட பேசவே மாட்டேங்குற? அவன் ஊர்லருந்து வந்ததுலேருந்து நீ பேசுவியா, பேசுவியான்னு பாத்துண்டேருக்கான்டி பாவம். எத்தனை நாழிதான் அந்த ஒரே புஸ்தகத்தை படிச்சிண்டிருப்பான்.. போடி, போய் பேசு..

பிந்து: (சலிப்புடன்) அடப் போம்மா.. நேக்கு என்ன பேசறதுன்னு தெரியலை.. எப்பவாச்சும் ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கொருதரம் வந்தா ஆச்சா.. என்னத்த பேசச் சொல்றே?

(வாசலில் அழைப்பு மணி அடிக்கிறது. பிந்து சென்று திறக்கிறாள். பத்மநாப சாஸ்திரிகள், பட்டாபி மற்றும் பங்கஜம் முகமெல்லாம் சிரிப்பாக வருகிறார்கள். அம்புஜம் எழுந்து தன் கணவரின் கைகளிலிருந்த பட்டுப் புடவை, பூ, பழம் இருந்த பைகளைப் வாங்கி டைனிங் டேபிளில் வைக்கிறாள். பங்கஜமும் தன் கையிலிருந்த ஷாப்பிங் பைகளை டேபிளில் வைத்துவிட்டு ‘அப்பாடா’ என்று சோபாவில் அமர்ந்து தன் கால்களை நீவிக்கொள்கிறாள். விஷால் அவர்களை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஒரக் கண்ணால் பிந்துவைப் பார்க்கிறான்.)

பங்கஜம்: ரங்கநாதன் தெருவில ஷாப்பிங் பண்றமாதிரி கஷ்டம் வேறெங்கயும் இருக்காதுடி அம்மா... கால் விட்டுப் போறது.. படுக்கப் போறச்சே கொஞ்சம் சுடுதண்ணியில கால விட்டாத்தான் தூங்க முடியும் போலருக்குது.. அம்மாடி சிந்து.. ஒரு பானை தண்ணிய வேலை முடிஞ்ச கையோட ஸ்டவ்வுல வையேன்.. புண்ணியமா போகும்..

சிந்து: (தனக்குள்)ஆ மாம். இப்ப அதான் முக்கியம். வீட்டுப் பொண்ணு ராணியாட்டமா சோபாவுல உக்காந்திண்டு.. வீட்டுக்கு வந்த பொண்ணு எல்லாருக்கும் எல்லா சவரட்சணையும் செய்யணும்.. (வெளியில் புன்னகையுடன்) சரி மாமி.. அப்படியே செஞ்சிட்டா போச்சி..

அம்பு: (சிரிப்புடன் தன் கணவனைப் பார்க்கிறாள்) என்னண்ணா போன காரியம் பழம்தான்னு நினைக்கிறேன்.. ஜாதகத்த பார்த்துட்டு ஜோஸ்யர் என்ன சொன்னார்?

பத்து: (புன்னகையுடன்) ரெண்டு ஜாதகமும் பேஷா பொருந்தியிருக்கு.. ஜாம் ஜாம்னு கல்யாண வேலைய பாருங்கோன்னுட்டார்..

(பிந்து அதிர்ச்சியுடன் தன் தந்தையைப் பார்ப்பதை விஷால் பார்த்துவிடுகிறான். அவன் முகத்திலும் அதிர்ச்சியின் ரேகை படர்கிறது. பிந்து உடனே எழுந்து மாடியிலுள்ள தன் அறைக்கு செல்கிறாள். பங்கஜமும் ஆச்சரியத்துடன் அவளையே பார்க்கிறாள்)

விஷால்: (தனக்குள்) What is wrong with her? It appears she doesn’t like this arrangements? (தன் முகத்தில் படரும் குழப்பத்தை தன் தாய் காணாவண்ணம் தன் முகத்தை புத்தகத்தில் புதைத்துக் கொள்கிறான்.)

பத்து: (இதை அறியாமல் சந்தோஷத்துடன் தொடர்கிறார்) ஆமாண்டி அம்பு, நாங்க போறதுக்குள்ளாறவே ஜோஸ்யர் ஜாதகத்த பார்த்துட்டு ரெடியாயிருந்தார்.. எங்கள பாத்தவுடனே எழுந்து வந்து என் கையையும் பட்டாபி கையையும் பிடிச்சிண்டார். பிறகு உக்காத்தி வச்சி காப்பியெல்லாம் குடுத்துட்டு முகூர்த்தத்துக்கு நாள் பார்த்துரட்டுமான்னார். பட்டாபிதான் இல்ல மாமா நாங்க வர்ற சம்மர்லதான் சென்னை வர்றதுக்கு தோதுபடும், இப்ப ஒரு வார லீவ்லதான் வந்திருக்கோம் இப்ப நிச்சயம் பண்ணிட்டு போறதா உத்தேசம்னான். அவரும் சரின்னுட்டு ரெண்டு தேதிய குறிச்சி குடுத்துருக்கார். இந்தா நீயும் பாரு, நந்துக்கிட்ட டிஸ்கஸ் பண்ண்ட்டு மேல என்ன செய்யலாம்னுட்டு தீர்மானிக்கலாம்.. நீ என்ன சொல்றே பட்டாபி?

பங்கஜம்: (குறுக்கிட்டு பத்மநாபனிடம்) அண்ணா முதல்ல பிந்துவோட சம்மதத்த கேட்டுருங்க.. அப்புறம் நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிக்கலாம்.

பத்து: (பங்கஜத்தின் குரலில் தொனித்த எரிச்சலைக் கண்டு வியந்து தன் மனைவியைப் பார்க்கிறார். அவள் எனக்கொன்னும் புரியலை என்பதுபோல் பங்கஜத்தைப் பார்க்கிறாள்) என்ன சொல்றே பங்கஜம், எதுக்கு பிந்துவை கேக்கணும்? அவளுக்கு ஏற்கனவே தெரிஞ்சதுதானே.. நீ என்ன சொல்றே அம்பு?

அம்பு: (அவசரமாக) ஆமான்னா. (பங்கஜத்தை பார்த்து) எதுக்கு இப்படி சொல்றேள் மன்னி?

(ஏதோ யோசனையுடன் எழுந்த விஷால் மாடிப்படியேறி தன் அறைக்கு செல்கிறான். அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த பட்டாபி தன் மைத்துனரை பார்க்கிறார்.)

பட்டாபி: எனக்கென்னவோ பங்கஜம் சொல்றதுல அர்த்தம் இருக்குன்னு தோண்றது.. நீங்க பிந்துக்கிட்ட பேசிருங்களேன்..

பத்து: (குழப்பத்துடன்) சரி, சரி. இப்ப வேணாம்.. காலைல நான் பேசிக்கறேன். இப்ப சாப்டுட்டு படுக்கலாம். சமையலறையை எட்டி பார்க்கிறார். சிந்து டிபன் ரெடின்னா எடுத்து வையேன்.. நந்து வந்துட்டானா?

சிந்து: (சமையலறையிலிருந்து வருகிறாள்) டிபன் ரெடி மாமா. கை கால் அலம்பிட்டு வந்தேள்னா சாப்டுரலாம்.. அவர் இன்னம் வர்லை.. லேட்டாகும்னு போறச்சே சொன்னார்..

பத்து: சரிம்மா. பட்டாபி, பங்கஜம், வாங்கோ .. விஷாலையும் கூப்டுங்கோ.. அம்பு பிந்து என்ன செய்யறான்னு பாரு.. சிந்துவுக்கு கூடமாட ஹெல்ப் பண்ண சொல்லு போ..

சிந்து:(தனக்குள்) ஓ! சொன்னதும் அப்படியே ஓடு வந்துரப் போறாளாக்கும்?

(அம்புஜம் மாடியேறி செல்கிறாள். பங்கஜம் சிந்து முகம் போகும் போக்கைப் பார்த்து தனக்குள் சிரித்துக்கொள்கிறாள்.)

காட்சி முடிவு.

காட்சி - 15

(பிந்துவின் அறைக்கதவு மூடியிருப்பதைக் கண்ட அம்புஜம் கதவை தட்ட ஓங்கிய கையை உள்ளிருந்து அவளுடைய குரலைக் கேட்டதும் இறக்கிக்கொண்டு தயங்கி நின்று அவள் பேசுவதை ஒட்டு கேட்க முயல்கிறாள்)

பிந்து: (தொலைப்பேசியில்) வாண்டாம்டா அண்ணா.. என்னாண்ட வாணாம்.. நா இத்தனை சொல்லியும் நீ ப்ராமிஸ் பண்ணத செய்யாம இருந்துட்டல்ல? இருக்கட்டும் பாத்துக்கறேன். வாண்டாம். நீ ஒன்னும் இப்ப சொல்ல வாண்டாம்.. நீ ஆத்துக்கு வா நேர்ல சொல்றேன்.

(அம்புஜத்துக்கு ஒன்றும் புரியாமல் ஒரு கனம் குழம்பி நிற்கிறாள்.)

அம்பு: (தனக்குள்) நந்துகிட்டத்தான் பேசிண்டிருக்காப்லருக்கு.. அவன் என்னத்த ப்ராமிஸ் பண்ணிட்டு செய்யலை? என்னத்த அப்படி ரகசியமா பேசறா கதவை மூடிண்டு? (கதவைத் தட்டுகிறாள்) ஏய் பிந்து.. யாரண்ட பேசிண்டிருக்கே நடுச்சாம நேரத்துல.. வெளிய வாடி.. எல்லாரும் சந்தோஷமா பேசிண்டிருக்கச்சே நீ எதுக்கு இங்க வந்து உக்காந்திண்டிருக்கே?

பிந்து: (கதவை திறவாமல்) நேக்கு பசிக்கலை.. நீ போ. நான் அப்புறமா ஒரு டம்ளர் பால் குடிச்சிட்டு படுத்தக்கறேன்.

அம்பு: (எரிச்சலுடன்) எதுக்குடி இப்படி அழிச்சாட்டியம் பண்றே.. நேத்தைக்கும் ஒரு டம்ளர் பாலோட படுத்திட்ட.. ஏற்கனவே ரொம்ப பலசாலி.. கல்யாணம் பண்ணிண்டு குடுத்தனம் நடத்தப்போறவ பேசற பேச்சாயிது? நீ இப்ப கதவை தெறக்கறெயா இல்ல அப்பாவ கூப்பிடவா?

பிந்து: (கதவைத் திறந்து தன் தாயை கோபத்துடன் முறைக்கிறாள்) என்னம்மா அப்பாவ கூப்பிடுவேன்னு பூச்சாண்டி காட்டறயா? எனக்கு பசிச்சா சாப்டறேன்.. நீ போ.. எனக்கு பசிக்கலை..

(மீண்டும் அறைக்கதவு மூடிக்கொள்ள என்ன செய்வதென்று தெரியாமல் சில நொடிகள் குழம்பி நின்ற அம்புஜம் ‘எல்லாம் சம்பாதிக்கற திமிரு. விஷால் பாவம் இவள கட்டிக்கிட்டு என்னல்லாம் பாடு படப்போறானோ தெரியலையே ஈஸ்வரா’ என்று தனக்குள் முணகியவாறு படியிறங்கி செல்கிறாள்)

காட்சி முடிவு

No comments: