10.11.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 8

காட்சி 10

நந்து, பிந்து.

(பார்க்கிலிருந்து திரும்பி வரும் நந்து அலுவலக வாசலில் பிந்து நிற்பதைப் பார்க்கிறான்.)

நந்து: (தனக்குள்) இவ எங்க இங்க வந்தா? விட மாட்டா போலருக்குதே. (பிந்துவிடம்) ஏய் நீ இங்க என்ன பண்றே?

பிந்து: (தனக்குள்) ஒன்னும் தெரியாத மாதிரி கேக்கறான் பார்.. டேய் அண்ணா பயங்கரமான கில்லாடிடா நீ.. (நந்துவிடம்) என்னண்ணா தரகர்கிட்ட சொல்லிட்டியா?

நந்து: (வியப்புடன்) ஏய்.. உனக்கு உடம்பெல்லாம் கண்.. இப்பல்லாம் நான் என்ன செய்யறேன்னு பாக்கறதுதான் உனக்கு வேலை போல..

பிந்து: (தனக்குள்) பின்னே? அதவிட எனக்கு வேறென்ன வேலை? (நந்துவிடம்) அதில்லண்ணா இந்த வழியா வந்தேன். அப்படியே உன்னை பாத்துட்டு போலாம்னு...

நந்து: (கேலியுடன்) ஏய்.. சும்மா டூப் விடாத.. நீ இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கேன்னா கண்டிப்பா ஏதாவது முக்கியமான காரணம் இருக்கும்.. என்ன சொல்லு.. (காவலாளியிடம்) ஏழுமல.. ஜி.எம். திரும்பி வந்துட்டாரா?

காவலாளி: இல்ல சார்.. வர்ற நேரம்தான்..

பிந்து: (கேலியுடன்) தரகர் மாமாகிட்ட நா சொன்ன விஷயத்த சொல்லிட்டயா?

நந்து: ஆமா, ஆமா.. முதல்ல அவர் ஒத்துக்க மாட்டேன்னார். அப்புறமா நான் உங்களுக்கு வேண்டியத செய்துடறேன்னு சொன்னதும் ஒத்துக்கிட்டார்.. சரி நீ ஆத்துக்கு போ.. ராத்திரி பேசிக்கலாம்..

பிந்து: (அவசரமாக) அண்ணா.. இன்னொரு விஷயம்..

நந்து: (கேலியுடன்) என்ன?.. அந்த பாஸ்கர் உன்னை வேண்டாம்னுட்டானா? நல்லதா போச்சு..

பிந்து: (கோபத்துடன்) வேண்டாம்ணா.. விளையாடாத.. நான் சொல்ல வந்தது ..

நந்து: சொல்லு.. என்ன புதுசா?

பிந்து: (தன் கைப்பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுக்கிறாள்) அண்ணா.. நான் பாஸ்கரை இன்னைக்கி பாத்து அவரோட ஜாதக காப்பி ஒன்னை வாங்கினேன்.. இந்தா, இதையும் தரகர்கிட்டே குடுத்து எனக்கும் பாஸ்கருக்கும் பொருத்தம் இருக்கான்னு.. பாத்துறச் சொல்லு.. என்னத்த பாக்குறது? எல்லாம் பொருந்தியிருக்குன்னு அப்பாட்ட சொல்ல சொல்லணும்.. என்ன சொல்றே?

நந்து: (எரிச்சலுடன்) இங்க பார் பிந்து, நீ ஓவரா போற.. இதெல்லாம் எங்க கொண்டு போய் விடப்போகுதோ தெரியல..

பிந்து: (கேலியுடன்) எங்க போய் விடப்போகுது.. எல்லாம் மன்னியோட ஜாதகம் உன்னை எங்க கொண்டு விடப்போகுதோ அங்கதான்..

நந்து: (எரிச்சலுடன் பிந்துவை பார்க்கிறான்.. ஜி.எம் மின் கார் தூரத்தில் வருவதைப் பார்த்துவிட்டு பிந்து கொடுத்ததை மடித்து சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறான்) சரி, சரி.. நான் வீட்டுக்கு வரச்சே அப்படியே போய் தரகர்கிட்டு கொடுத்துடறேன்.. ஜி.எம் கார் வருது.. இந்த நேரத்துல நான் இங்க நின்னுக்கிட்டிருந்தேன்னா அவ்வளவுதான்.. தொலைஞ்சேன்.. நீ வீட்டுக்கு போ.. பை..

(அலுவலகத்திற்குள் ஓட்டமும் நடையுமாய் நுழையும் நந்துவைப் பார்த்தவாறு சிறிது நேரம் நின்ற பிந்து திரும்பி தன்னை நோக்கி வரும் ஜி.எம் மின் வண்டியை பார்த்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறாள். கார் உள்ளே சென்றதும் சாலையின் குறுக்கே கடந்து பஸ் நிறுத்தத்தை அடைகிறாள்)

காட்சி முடிவு.

No comments: