17.11.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 13

காட்சி 17

நந்து, பிந்து.

(பிந்து தன் அலுவலகத்தில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறாள். கைத்தொலைபேசி அடிக்கிறது. நந்துவின் பெயரைப் பார்த்துவிட்டு இணைப்பை துண்டித்துவிடலாமா என்று யோசிக்கிறாள். ஒரு சில நொடிகளில் மனம் மாறி பேசுகிறாள்.)

பிந்து: (கோபத்துடன்) என்ன?

நந்து: பிந்து, நான் உன்னோட ஆஃபீஸ் வெளியில நிக்கறேன். கொஞ்சம் வெளியில வாயேன்.

பிந்து: எதுக்கு?

நந்து: வா பிந்து. ஒரு அஞ்சு நிமிஷம் நான் சொல்றத கேட்டாத்தான் நோக்கு என் சங்கடம் புரியும். வாயேன், ப்ளீஸ்.

பிந்து: சரி வரேன்.

(பிந்து தன் இலாகா தலைவரிடம் கூறிவிட்டு வெளியே வருகிறாள். இருவரும் அலுவலக விருந்தினர் அறையில் சென்று அமர்கின்றனர்.)

பிந்து: சொல்லு. என்ன நடந்தது?

(நந்து தரகர் தன்னிடம் கூறியதை சுருக்கமாக கூறுகிறான். பிந்து அவன் பேசி முடித்த பிறகும் சில நிமிடங்கள் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருக்கிறாள்)

நந்து: என்ன பிந்து, ஒன்னும் பேசாம இருக்க?

பிந்து: இப்ப என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டிருக்கேன். நீயே சொல்லுண்ணா இப்ப நா என்ன பண்ணட்டும்?

நந்து: பேசாம விஷால கட்டிக்கிட்டு டில்லியில போய் செட்டிலாயிடு.

பிந்து: (கோபத்துடன்) அது மட்டும் என்னால முடியாது.. அப்ப பாஸ்கரோட கதி?

நந்து: என்ன பிந்து நீ? பாஸ்கர் என்ன பொம்பளையா? நீ இல்லன்னு ஆயிட்டதும் கொஞ்ச நாளைக்கி ஒருவேளை உன்னையே நினைச்சிண்டிருப்பான். அப்புறம் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கப் போறான். வாழ்நாள் முழுசும் உன்னையே நினைச்சிண்டா இருக்கப் போறான்?

(பிந்து ஒன்றும் மறுபடி பேசாமல் இருக்கிறாள்)

நந்து: என்ன யோசிக்கறே பிந்து?

பிந்து: பாஸ்கர நான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கப் போறேன்.

நந்து: (திடுக்கிட்டு அவளை பார்க்கிறான்) என்ன பிந்து, நோக்கென்ன பைத்தியமா? அப்பாவால இத தாங்கிக்க முடியுமா? அதுமட்டுமில்லாம பாஸ்கர் ஜாதகத்துல தோஷம் இருக்குன்னு தெரிஞ்சதுக்கப்புறம் எந்த தைரியத்துல அவன கல்யாணம் பண்ணிக்கறதுன்னு அடம் பிடிக்கற?

பிந்து: (கேலியுடன் நந்துவை பார்க்கிறாள்) ஏண்ணா நோக்கு ஒரு நியாயம் நேக்கு ஒரு நியாயமா?

நந்து: என்ன சொல்றே?

பிந்து: நீ மட்டும் மன்னியோட ஜாதகத்துல செவ்வா தோஷம் இருக்குன்னு தெரிஞ்சதுக்கப்புறமும் மறைச்சி கல்யாணம் பண்ணிக்கலையா? நீ எந்த தைரியத்துல அப்படி பண்ணியோ அதே தைரியத்துல நான் பாஸ்கர பண்ணிக்கறேன்.

நந்து: (தனக்குள்) இவ சொல்றதும் நியாயம்தான். நான் இப்ப என்ன சொன்னாலும் இவளுக்கு புரிய போறதில்ல.. விட்டுத்தான் பிடிக்கணும்! இல்லன்னா அந்த பாஸ்கர்கிட்ட சொல்லி புரியவைக்கணும்.

பிந்து: என்னண்ணா சத்தத்தையே காணோம்?

நந்து: (எழுந்து நிற்கிறான்) சரி பிந்து. நீ சொல்றதிலும் நியாயம் இருக்கு. அதுக்கு முன்னால நாம ரெண்டு பேரும் பாஸ்கர பார்த்து இதப்பத்தி பேசினா என்ன?

பிந்து: (தனக்குள்) அண்ணா எதுக்கு பாஸ்கர பார்க்கறதுக்கு வரேன்கிறான்? (நந்துவிடம்) நீ எதுக்கு? நானே சொல்லிக்கறேன். நீ போ. நான் அவரை சாயந்தரமா மீட் பண்ணிட்டு உன் கிட்ட சொல்றேன்.. (தன் அலுவலகத்திற்கு செல்ல முயல்கிறாள்)

நந்து: (அவளுடைய கையைப் பிடித்து நிறுத்துகிறான்) ஏய் நில்லு. ஒரு நிமிஷம்.

பிந்து: (திரும்பி பார்க்கிறாள்) என்ன சொல்லு.

நந்து: நானும் உன்கூட வரேன்.

பிந்து: நீ எதுக்கு?

நந்து: சும்மாத்தான். ரெஜிஸ்டர் மாரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்னேல்ல?

பிந்து: ஆமாம்.

நந்து: அது விஷயமா பேசத்தான்.

பிந்து: நீ என்ன பேசப்போறே?

நந்து: இங்க பார், பிந்து. ரெஜிஸ்டர் மேரேஜ்ங்கிறது நீ நினக்கிறா மாதிரி இல்ல ஈசியான விஷயம் இல்ல.. அதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலயே நோட்டீஸ் குடுக்கணும். அவா, நீங்க ரெண்டு பேரும் மாரேஜ் பண்ணிக்கற விஷயத்தை ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ் நோட்டிஸ் போர்ட்ல ஒட்டுவா.. யார் வேணும்னாலும் படிச்சிட்டு உங்க மாரேஜ் ப்ரொப்பசல்ல ஏதாவது பிரச்சினை இருந்தா ரிஜிஸ்ட்ரார்கிட்ட கம்ப்ளெய்ன் பண்றதுக்கு குடுக்கற டைம் அது.. அந்த மாதிரி நிறைய ஃபார்மாலிட்டீஸ்லாம் இருக்கு.. அப்பா என்னடான்னா இந்த வாரத்துலய நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம்னு நினைக்கிறார்.

பிந்து: அதுக்கும் நீ பாஸ்கர வந்து பாக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?

நந்து: எனக்கும் நீ கல்யாணம் பண்ணிக்க போற ஆளு யாரு, எப்படி பட்டவருன்னு தெரிஞ்சிக்க ஆசையாயிருக்காதா பிந்து? அத ஏன் நீ சந்தேக கண்ணோட பாக்கறே?

பிந்து: (கோபத்துடன்) அப்போ நீ அவர ஸ்பை பண்ணத்தான் என் கூட வர இல்ல? இங்க பார் நந்து, உனக்கு வேணும்னா அவரோட ஆஃபீஸ் அட்ரஸ் தரேன்.. நீ தனியா போய் பாத்துக்கோ. எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல.. அதுக்கு என் கூட வரணும்னு இல்ல..
என்ன சொல்றே?

நந்து: சரி. நீ சொல்றதும் நல்ல ஐடியாதான்.. ஆனா ஒன்னு.

பிந்து: என்ன?

நந்து: நீ இன்னைக்கி போய் பாஸ்கர பாக்க வேணாம். நான் மட்டும் போய் பாத்துட்டு வரேன். அதுக்கப்புறம் நீ போ. என்ன சொல்றே?

பிந்து: சரி. ஆனா ஒன்னு. நீ எதையாவது சொல்லி அவர் மனசை மாத்த முயற்சி பண்ணேன்னு தெரிஞ்சிது.. அண்ணன் கூட பாக்க மாட்டேன். மன்னி விஷயத்த எல்லார் முன்னாலயும் போட்டு உடைச்சிருவேன். சொல்லிட்டேன். அவரோட ஃபோன் நம்பர் சொல்றேன், குறிச்சிக்கோ. அவர்கிட்டயே அவரோட ஆஃபீஸ் அட்ரசோ இல்ல அவர் வீட்டு அட்ரசோ கேட்டுக்க. நீ எங்க போய் யார் கிட்ட பேசினாலும் சரி.. என்னோட முடிவுல மாத்தமே இல்ல..

(தன் கைத்தொலைப் பேசியிலிருந்த பாஸ்கருடைய தொலைப்பேசி எண்ணை படிக்கிறாள், நந்து குறித்துக்கொள்கிறான்.)

நந்து: ஓகே.. பிந்து. நான் அவர கூப்டு பேசிட்டு மேல்கொண்டு என்ன செய்யறதுன்னு முடிவு பண்றேன். நீ ஒன்னும் டென்ஷனாகாம போய் வேலைய பார். பை..

(பிந்து, நந்து வெளியேறி செல்வதையே ஒரு நிமிடம் யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தன் அலுவலக அறைக்கு திரும்புகிறாள். தன் இருக்கையில் சென்றமர்ந்ததும் பாஸ்கரை கைத்தொலைப்பேசியில் அழைக்கிறாள்.)

பிந்து: (ரகசிய குரலில்) பாஸ்கர் நான் பிந்து பேசறேன்.

பாஸ்கர்: அத சொல்லவா கூப்பிட்டே. அதான் உன் நம்பர என் ஃபோன்லயே தெரியறதே.

பிந்து: (எரிச்சலுடன்) உங்களுக்கு எப்பவும் விளையாட்டுத்தான். விளையாடாம விஷயத்த கேளுங்கோ.

பாஸ்கர்: (கேலியுடன்) கல்யாணத்துக்கு முன்னாலதான விளையாட முடியும். அதுக்கப்புறம் அம்மா வச்சதுதான சட்டம்.

பிந்து: (கோபத்துடன்) பாஸ்கர்.. ப்ளீஸ்.. பி சீரியஸ்.

பாஸ்கர்: ஓகே, ஓகே.. சொல்லு..

பிந்து: என் அண்ணா இன்னும் கொஞ்சம் நேரத்துல உங்களுக்கு ஃபோன் பண்ணுவான்..

பாஸ்கர்: (இடைமறித்து) பண்ணுவான் இல்லை.. பண்றார்..

பிந்து: (குழப்பத்துடன்) என்ன சொல்றேள்?

பாஸ்கர்: உங்க அண்ணா கால் வெய்ட்டிங்ல இருக்கு.. என்ன பண்ணட்டும் உன்னை கட் பண்ணிட்டு அவர்கிட்ட பேசவா?

பிந்து: அத்தனை அவசரமா அவனுக்கு? கொஞ்ச நேரம் நிக்கட்டும். நான் சொல்றத கேளுங்கோ.

பாஸ்கர்: (கேலியுடன்) சொல்லுங்க மேடம். I am at your disposal.

பிந்து: (அவனுடைய கேலியை பொருட்படுத்தாமல்) அவன் உங்கள வந்து பாக்கணும்னு கேப்பான்..

பாஸ்கர்: ஏன் என்னவாம்? நான் பாக்க எப்படி இருக்கேன்னு தெரிஞ்சிக்கறதுக்கா? பாத்துட்டு பிந்துவுக்கு இப்படியொரு அதிர்ஷ்டமான்னு நினைக்க போறார்.

பிந்து: (கேலியுடன்) ஐயே.. ரொம்பத்தான் பீத்திக்காதேள். நான் சொல்ல வந்தத சொல்ல விடுங்கோ.. குறுக்க, குறுக்க பேசிண்டு..

பாஸ்கர்: சொல்லு. என்ன விஷயமா பாக்க வர்றார்.

பிந்து: பாஸ்கர், நம்ம ரெண்டு பேரோட ஜாதகமும் பொருந்தலையாம். ஜோஸ்யர் சொன்னார்னு அண்ணா சொல்றான்.

பாஸ்கர்: (திடுக்கிட்டு) ஐயையோ அப்புறம்?

பிந்து: (கேலியுடன்) என்ன அப்புறம்! பாஸ்கர விட்டுட்டு அப்பா சொல்ற விஷால கல்யாணம் பண்ணிக்கிட்டு டெல்லி போன்னு சொல்றான்.

பாஸ்கர்: அப்ப என் கதி?

பிந்து: அதத்தான் நான் கேட்டேன்.. அது போட்டும். நான் என்ன ப்ளான் பண்ணியிருக்கேன்னு கேளுங்கோ..

பாஸ்கர்: அந்த ஜோஸ்யர தீர்த்து கட்டிரலாம்னு ப்ளான் பண்ணியிருக்கியா? அதுக்கு என்ன கூட்டாளியா சேத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டே.. இல்ல?

பிந்து: (கோபத்துடன்) ஐயோ.. உங்க ஜோக்குக்கு இதுவா நேரம்..

பாஸ்கர்: சரி, சரி.. சாரி. நீ சொல்லு. என்ன உன்னோட ப்ளான்?

பிந்து: நம்ம ரெண்டு ரிஜிஸ்டர் மாரேஜ் பண்ணிக்கனும். என்ன சொல்றீங்க?

பாஸ்கர்: (மவுனம்)

பிந்து: என்ன ஒன்னும் பேச மாட்டேங்கறேள்?

பாஸ்கர்: எனக்கு சட்டுன்னு என்ன சொல்றதுன்னு தெரியல பிந்து.. நாம நிதானமா டிஸ்கஸ் முடிவு பண்ண வேண்டிய விஷயம். இப்பிடி எடுத்தேன் கவுத்தேன்னு ஃபோன்ல பேசி டிசைட் பண்ற விஷயமா இது?

பிந்து: நான் எடுக்கவும் இல்ல, கவுக்கவும் இல்ல.. அப்பா என்னோட நிச்சயதார்த்ததுக்கு நாள் குறிச்சிட்டு வந்து நிக்கறார். என்னை என்ன பண்ண சொல்றேள்?

பாஸ்கர்: (சிறிது நேர மவுனத்திற்கு பிறகு) ஐ ஸீ.. விஷயம் அவ்வளவு சீரியசா? சரி.. உன் அண்ணா வந்தா நான் என்ன சொல்லணும்?

பிந்து: அண்ணா இன்னும் ஃபோன்ல வெய்ட்டிங்கா?

பாஸ்கர்: இல்லை டிஸ்கனெக்ட் பண்ணிட்டார்.

பிந்து: சரி.. நான் சொல்றபடி நீங்க செய்யணும்.

பாஸ்கர்: சொல்லு.

பிந்து: அண்ணா வந்தா நாம ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சின்னு சொல்லணும்.

பாஸ்கர்: (மவுனம்)

பிந்து: என்ன பதிலையே காணோம்..

பாஸ்கர்: நாம ரெண்டு பேரும் சந்திச்சி பேசினதுக்கப்புறம் போறாதா?

பிந்து: (கோபத்துடன்) போதாது.. என் சஜ்ஜஷனுக்கு நீங்க சம்மதிக்கலனா உங்க கூட நான் பேசறது இதுதான் கடைசி தடவையா இருக்கும்.. என்ன சொல்றேள்?

பாஸ்கர்: (பதட்டத்துடன்) ஏய் பிந்து.. என்ன உளர்றே.. சரி, சரி. நீ சொல்றபடியே செய்யறேன்.. நீ டென்ஷனாகாம ஃபோனை வை.. நான் உன் அண்ணாகிட்ட பேசிட்டு திருப்பி கூப்பிடறேன்..

பிந்து: இன்னொரு விஷயம். அண்ணாகிட்ட உங்க வீட்டு விலாசத்தை இப்போதைக்கு குடுக்க வேணாம்..

பாஸ்கர்: சரி.. உங்கண்ணா மறுபடியும் கூப்பிடறார்.. வச்சிர்றேன்.

காட்சி முடிவு.

4 comments:

ஏஜண்ட் NJ said...

//பிந்து: அதத்தான் நான் கேட்டேன்.. அது போட்டும். நான் என்ன ப்ளான் பண்ணியிருக்கேன்னு கேளுங்கோ..

பாஸ்கர்: அந்த ஜோஸ்யர தீர்த்து கட்டிரலாம்னு ப்ளான் பண்ணியிருக்கியா? அதுக்கு என்ன கூட்டாளியா சேத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டே.. இல்ல?//



Super Joke!!

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி முகமூடி,

இனியும் நிறைய ஜோக்குகளை சேர்த்திருக்கலாம் ஆனால் கதையின் கரு சிதைந்திடுமோ என்ற அச்சத்தில் குறைத்துக்கொண்டேன்.

ஏஜண்ட் NJ said...

//நன்றி முகமூடி,//

???????

ஞானபீடம்!

டிபிஆர்.ஜோசப் said...

I am sorry ஞானபீடம்..

உங்க Pictureஐ பாத்துட்டு பதில் போட்டதுதான் தப்பு.

பின்னூட்டமிட்டதற்கு நன்றி..