22.11.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 16

காட்சி - 22

(இறுதிப் பகுதி)

(இந்நாடகத்தில் வரும் நந்துவும், பிந்துவும் நிஜம்... பெயர்களை மட்டுமே மாற்றியிருக்கிறேன். இது என் நண்பர் ஒருவர் குடும்பத்தில் நடந்தது. ஆனால் அது பிராமண குடும்பம் அல்ல.

என் நண்பரின் மூத்த மகன் தனக்கு தன் பெற்றோர் பார்த்த பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் என்று தெரிந்தும் தன் குடும்பத்திலிருந்து அதை மறைத்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இப்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.. அவருடைய தங்கை இக்கதையில் வரும் பிந்துவைப் போலவே பெற்றோர்களை எதிர்த்துக்கொண்டு ஜாதகத்தில் தோஷம் என்று தன் குடும்ப ஜோஸ்யர் சொன்னவரை திருமணம் செய்து கொண்டாள்.. அவர்கள் இருவரும் சந்தோஷத்துடன் குடும்பம் நடத்துகிறார்கள். ஆனால் குழந்தைப் பேறு இல்லை.

ஜாதகத்தில் நம்பிக்கை வைக்கவேண்டுமா இல்லையா என்பதல்ல என்னுடைய வாதம். இத்தலைமுறையினர் அதை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள், முக்கியம் கொடுக்கிறார்கள் என்பதை இந்த நிஜ வாழ்க்கையில் ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவங்களை வைத்து எழுதினால் என்ன என்று எனக்கு தோன்றியது.. அதன் விளைவுதான் இந்த நாடகம்.)

மேலே படியுங்கள்

பாத்திரங்கள்: விஷால், பிந்து.

(பிந்துவும் விஷாலும் எதிர் எதிரே அமர்ந்திருக்கிறார்கள்)

பிந்து: சொல்லு விஷால். அப்படியென்ன அர்ஜண்டான விஷயம்?

விஷால்: (சில நொடிகள் பிந்துவையே பார்த்துக்கொண்டிருக்கிறான்) எனக்கு உன் கிட்ட ஸ்ட்ரெய்ட்டா ஒன்னு கேக்கணும் பிந்து. அதான்..

பிந்து: கேளேன்.

விஷால்: டு யூ லைக் திஸ் அரேஞ்மெண்ட் ஆர் நாட்?

பிந்து: நம்ம விஷயத்த சொல்றியா விஷால்?

விஷால்: ஆமாம். ஐ நீட் எ ஸ்ட்ரெய்ட், ஹானஸ்ட் ஆன்சர்.

பிந்து: உன்னோட அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு விஷால். நானும் உன்கிட்ட சில விஷயங்கள வெளிப்படையா பேசணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அதனாலதான் நீ கேட்டப்போ ஒத்துக்கிட்டேன்.

விஷால்: ப்ளீஸ் பிந்து. முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்.

பிந்து: இல்ல விஷால். இந்த அரேஞ்ச்மெண்ட்ல எனக்கு விருப்பமில்லை... ஏன்னா...

விஷால்: போறும் பிந்து.. எனக்கு வேறொன்னும் தெரிஞ்சிக்க தேவையில்லை.. அது எதுவாயிருந்தாலும் உன்னோட சொந்த விஷயம்.. ஐ டோன்ட் வான்டு டு கெட் இன்வால்வ்ட் இன் தட்.. ஐ ஆம் சாரி பிந்து.. டோன்ட் மிஸ்டேக் மி. (எழுந்து புறப்பட தயாராகிறான்)

பிந்து: (அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்கிறாள். அவன் கையைப் பிடித்து அமரச் செய்கிறாள்) ஏய் விஷால், வாட் ஈஸ் திஸ்? நீ இப்படி ரியாக்ட் செய்வேன்னு நான் நினைக்கவேயில்லை.. ஐ தாட் யூ வுட் பி மோர் ஸ்போர்ட்டிவ். நீ சொல்ல வேண்டியத சொல்லிட்ட.. என்னையும் பேசவிடேன். என்ன ஒரு குற்ற உணர்வோட விட்டுட்டு போறதால உனக்கு என்ன லாபம் விஷால்? பி ரீசனபிள். என்னோட சைட்லருக்கற ரீசனையும் கேளேன். ப்ளீஸ் லெட் மி ஸ்பீக்.

விஷால்: (புன்னகையுடன்) சாரி.. பிந்து.. ஐ வாஸ் ஸ்டுப்பிட், ஃபர்கிவ் மி. கோ அஹெட்.. உன் மனசுல இருக்கறது யாரு? சொல்லு..

பிந்து: (சந்தோஷத்துடன் மேசையின் குறுக்கே கரங்களை நீட்டி அவன் கரங்களைப் சிநேகத்துடன் பற்றிக்கொள்கிறாள்) தட்ஸ் தி ஸ்பிரிட் விஷால். எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் விஷால். ஆஸ் எ ஃப்ரென்ட்.. நாம ரெண்டு பேரும் சின்ன வயசுல ஓடி பிடிச்சி விளையாடுனதெல்லாம் நான் இப்பவும் நினைச்சி பாத்துக்குவேன். ஆனா நீ எப்பனாச்சும் ஒருதரம் வந்து போனதாலயோ என்னவோ உன்ன ஒரு சின்ன வயசு ஃப்ரெண்டா மட்டுமே என்னால நினைச்சு பாக்க முடிஞ்சிருக்கு.. ஐ அம் இன் லவ் விஷால்.. ஹிஸ் நேம் ஈஸ் பாஸ்கர்..

விஷால்: (வியப்புடன்) ஈஸ் இட்? கன்கிராட்ஸ்.

பிந்து: (சந்தோஷத்துடன்) தாங்க்யூ விஷால். இது நந்துவை தவிர வீட்ல யாருக்கும் தெரியாது.. நந்துகிட்ட கூட ரெண்டு நாளைக்கி முன்னாலதான் சொன்னேன்.. அதுல ஒரு சிக்கல் இருக்கு விஷால். அதனாலத்தான் இன்னும் வீட்ல அப்பாக்கிட்ட சொல்ல முடியலை..

விஷால்: சிக்கலா? அப்படீன்னா?

பிந்து: அண்ணா எங்க ரெண்டு பேரோட ஜாதகத்தையும் நம்ம ஜோஸ்யர்கிட்ட காண்பிச்சப்போ அவர் பொருந்தலைன்னு சொல்லிட்டாராம்.

விஷால்: (சிரிக்கிறான்) வாட் இஸ் திஸ் பிந்து? நீயுமா இந்த ஜாதகத்த நம்பறே? எல்லாம் சுத்த ஹம்பக்.. இஃப் யூ ரியலி லவ் ஹிம் யூ ஷ¤ட் கோ அஹெட் அன்ட் மேர்ரி ஹிம். வீட்ல சம்மதிச்சா வெல்.. இல்லன்னா இருக்கவே இருக்கு ரெஜிஸ்டர் மேரேஜ்..

பிந்து: (சந்தோஷத்துடன்) வாவ்! என் மனசுலருக்கறது அப்படியே சொல்லிட்ட விஷால். ஆனாலும் வேறொரு சிக்கல் இருக்கே.. அத உன் உதவியோடத்தான் தீர்க்க முடியும்.

விஷால்: (தீர்மானத்துடன்) ஐ அண்டர்ஸ்டாண்ட்.. லீவ் இட் டு மீ.. நீ இன்னைக்கி சாயந்திரம் வீட்டுக்கு வரச்சே நான் மட்டுமில்ல.. அப்பாவும் அம்மாவும் கூட இருக்க மாட்டோம்.. போறுமா?

பிந்து: (குழப்பத்துடன்) நீ என்ன சொல்றே விஷால்?

விஷால்: யெஸ்.. இப்ப வீட்ல ஏற்பாடு பண்ணியிருக்கற நிச்சயதார்த்தத்த நிறுத்தணும். அதுக்கு ஒரே வழி நாங்க மூனு பேரும் திரும்பி போறதுதான். ஆனா இந்த கல்யாண ஏற்பாட நிறுத்திட்டதா வீட்டுல யாரும் தெரிஞ்சிக்க கூடாது.. நிச்சய தேதிய மட்டும் ஒரு ரெண்டு மாசத்துக்கு தள்ளி போடறா மாதிரி செஞ்சிடறேன்.. யூ நீட் அட்லீஸ்ட் ஃபார்ட்டிஃபை டேஸ் டு ரெஜிஸ்டர் யுவர் மேரேஜ், ரைட்?

பிந்து: ஏய், அதெப்படி நோக்கு இதெல்லாம் தெரியும்?

விஷால்: நான் என்னோட ஒரு ஃப்ரெண்டோட ரிஜிஸ்டர் மாரேஜ்ல விட்னஸா இருந்திருக்கேன். உனக்கும் ஒரு விட்னஸ் தேவையில்ல? டேட் ஃபைனலைஸ் பண்ணிட்டு எனக்கு சொல்லு, டெல்லியென்ன வேர்ல்ட்ல எங்கருந்தாலும் பறந்து வந்துடறேன். என்ன சொல்ற?

பிந்து: (கண்களில் கண்ணீருடன் அவன் கரங்களை பற்றுகிறாள்) யூ ர் ரியலி க்ரேட் விஷால்.. தாங்க்யூ சோ மச்..

விஷால்: ஹேய், டோண்ட்.. நான் கிளம்பறேன். ஐ வில் ஹேவ் டு கோ டு ஜெட் ஏர்வேஸ் ஆஃபீஸ் அன்ட் புக் தி டிக்கட்ஸ்.. அப்பாதான் ஏன்டா ப்ளைட்டும்பார்.. ப்ளாசிபிளா ஒரு ரீசன கண்டுபிடிக்கணும். தட்ஸ் மை ஜாப்.. ஐ மீன் பொய் சொல்றது.. எதிராளி சந்தேகப்படாத மாதிரி பொய் சொல்றதுதான் நம்ம மார்க்கெட்டிங்க் வேலையோட ஸ்பெஷாலிட்டியே.. ஆல் தி பெஸ்ட் பிந்து.. கன்வே மை ரிகார்ட்ஸ் டு.. அவர் பேர் என்ன சொன்னே?

பிந்து: பாஸ்கர்

விஷால்: யெஸ்.. பாஸ்கர்.. உன்கிட்டருந்து மாரேஜ் டேட்டை எதிர்பார்ப்பேன்.. வரேன்..

(பிந்து பரபரப்புடன் வெளியேறும் விஷாலையே சில விநாடிகள் பார்த்துக்கொண்டிருக்கிறாள். பிறகு கைத்தொலைபேசியை எடுக்கிறாள்)

பிந்து: பாஸ்கர்.. ஒரு ஹாப்பி நியூஸ்..

பாஸ்கர்: (தொலைப் பேசி குரல்) என்னை வேண்டாம்னு சொல்ல போறியா?

பிந்து: (கோபத்துடன்) கொன்னுருவேன். அது உங்களுக்கு ஹாப்பி நியூசா?

பாஸ்கர்: (கேலியுடன்) இல்லையா பின்ன?

பிந்து: சரி. சரி. கேளுங்கோ.. விஷால் இப்பத்தான் இங்கருந்து போறான்.

பாஸ்கர்: இங்கருந்துன்னா?

(பிந்து விஷாலுடனான சந்திப்பை பற்றி சுருக்கமாக கூறுகிறாள்)

பாஸ்கர்: (சிறுது நேர இடைவெளிக்குப் பிறகு) அப்போ உன்னோட டிசிஷன்ல ரொம்ப உறுதியா இருக்கே?

பிந்து: (கோபத்துடன்) அதென்ன உன்னோட டிசிஷன்? நேத்தைக்கு இது நம்ம ரெண்டு பேரோட டிசிஷன்னு சொன்னேன்.. மறந்து போச்சா?

பாஸ்கர்: ஒகே, ஒகே.. டென்ஷனாகாத..

பிந்து: இங்க பாருங்க பாஸ்கர்.. ஆர் யூ, ஆர் யூ நாட் வித் மி இன் திஸ்? தெளிவா சொல்லிருங்கோ..

பாஸ்கர்: (பெருமூச்சுடன்) ஐ ஆம் வித் யூ பிந்து.. ஏன்னா ஐ லவ் யூ சோ மச். என்னால உன்ன மறக்க முடியலடா.. அதனாலத்தான நீ என்ன சொன்னாலும் மறுக்க முடியாம தவிக்கறேன்..

பிந்து: ஹேய்.. என்ன? ரொம்பத்தான் உணர்ச்சி வசப்படாதேள்.. பக்கத்துல யாரும் இல்லையா?

பாஸ்கர்: இல்ல. பிந்து ஒரு விஷயம்.

பிந்து: என்னது?

பாஸ்கர்: நான் வீட்ல அப்பாகிட்ட இதப்பத்தி இன்னைக்கி டிஸ்கஸ் பண்ணலாம்னு இருக்கேன்.. நீ என்ன சொல்றே?

பிந்து: அது உங்க இஷ்டம்.. ஆனா அதுக்கப்புறம் உங்கப்பா இப்படி சொல்றார், அப்படி சொல்றார்னுட்டு அழப்படாது.. சொல்லிட்டேன்.. நாம எடுத்த முடிவுல நாம நெலச்சி நிக்கணும்.. உங்க வீட்ல என்ன சொன்னாலும்.. என்ன சொல்றேள்?

பாஸ்கர்: (சுரத்தில்லாமல்) சரி.

பிந்து: என்ன சுரத்தேயில்லாம சொல்றேள்?

பாஸ்கர்: (உரக்க) யெஸ் மேடம். சரி மேடம்..

பிந்து: (கேலியுடன்) ஹ¥ம்.. அது. வச்சிடறேன். நாளைக்கு கூப்பிடறேன். இனியும் தாமசிக்காம ரிஜிஸ்ட்ரார் ஆஃபீசுக்கு போய் நோட்டீஸ் குடுக்கணும்.

பாஸ்கர்: ஓகே.. நான் வீட்ல இப்ப சொல்லலை..

பிந்து: உங்க இஷ்டம்..

பாஸ்கர்: பை..

பிந்து: பை..

காட்சி முடிவு

காட்சி 23

பத்மநாபம் குடும்பத்தினர்.

(சுவர் கடிகாரம் எட்டு முறை அடித்து ஓய்கிறது. பிந்து வாசற்கதவை திறந்துகொண்டு நுழைகிறாள். ஹாலில் யாருமில்லை..)

பிந்து: (வியப்புடன்) என்ன இது.. வீடு திறந்த மடமாட்டம் இருக்கு! யாரையும் காணோம்? (மாடியை பார்க்கிறாள்) அம்மா வீட்ல இருக்கியா?

(சில விநாடிகள் கழித்து அம்புஜம் இறங்கி வருகிறாள்.)

பிந்து: என்னம்மா.. வீடு திறந்து கிடக்கு? நீ மேல இருந்து வரே.. வீட்ல வேற யாரும் இல்லையா? மன்னி எங்கே? மாமி, மாமா, விஷால் யாரையும் காணோம்!

(அம்புஜம் படியிறங்கி வந்து சோபாவில் அமர்ந்து தன் மகளையே சில நிமிடங்கள் பார்க்கிறாள். பிந்து அருகில் சென்றமர்ந்து கைகளைப் பிடிக்கிறாள். அம்புஜம் கைகளை உதறிவிட்டு சற்று நகர்ந்து அமர்கிறாள்)

பிந்து: என்னம்மா, என்னாச்சி? ஏன் ஒரு மாதிரியா இருக்கே? அப்பா எங்கே?

அம்புஜம்: (கோபத்துடன் மகளை பார்க்கிறாள்) ஏய்.. உண்மையை சொல்லு.. விஷால் திடீர்னு புறப்பட்டு போனதுல உனக்கு பங்கிருக்கா?எங்கே அம்மாவை பாத்து சொல்லு?

பிந்து: (தனக்குள்) தாங்க்யூ விஷால். (அம்புஜத்திடம்) நீ என்னம்மா சொல்றே? விஷால் கிளம்பி போயிட்டானா?

அம்புஜம்: நீ எதையோ மறைக்கிறே.. விஷால் எங்கயோ கிளம்பி போனான். திரும்பி வந்து ஆஃபீஸ்லருந்து அர்ஜண்டா என்னமோ எஸ்.ஓ.எஸ் வந்துது.. உடனே கிளம்பணும்னு ஒத்தகால்ல நின்னு அண்ணாவையும் மன்னியையும் சேர்த்து கூட்டிக்கிட்டு போயிட்டான். அப்ப அப்பா கூட ஆத்துல இல்ல.. அவன் வரச்சேயே ப்ளைட் டிக்கட்டும் எடுத்துக்கிட்டு வந்துட்டதால இவாளாலயும் தட்ட முடியல.. ஊருக்கு போயிட்டு கூப்பிடறோம்னு சொல்லிட்டு அரக்க பரக்க துணிமனியெல்லாத்தையும் பேக் பண்ணிக்கிட்டு கால் டாக்சியை கூப்பிட்டுக்கிட்டு போயிட்டாடி.. (அழுகிறாள்)

பிந்து: (அம்புஜத்தை நெருங்கி அவளை அணைத்துக்கொள்கிறாள்) அம்மா ப்ளீஸ். நீயா எதையாச்சும் கற்பனை பண்ணிக்கிட்டு அழாதே.. ஒன்னுமிருக்காது.. அவால்லாம் எத்தனை மணிக்கு போனா? மன்னி எங்கே?

அம்புஜம்: அவோ நந்துவை ஃபோன் பண்ணி வரச்சொல்லிட்டு அவாளோட கிளம்பி ஏர்போர்ட்டுக்கு போயிருக்கா.. அவா புறப்பட்டுண்டிருக்கச்சே அப்பாவும் வந்தாரா அவரையும் அழைச்சிண்டு போயிட்டா. இன்னமும் வரலை.. நான் ஏதோ ஞாபகத்துல வாசற்கதவகூட மூடாம மாடியில போய் படுத்துட்டேன். நீ வந்ததுகூட நேக்கு தெரியலை.. உன் சத்தத்த கேட்டுட்டுதான் இறங்கி வந்தேன்..

பிந்து: (எழுந்து நிற்கிறாள்.) நீ காப்பி குடிக்கறயாம்மா.. நேக்கு தலைய வலிக்கறது.. இரு கலந்துண்டு வரேன்..

(உள்ளே போகிறாள். வாசலில் மணி அடிக்க.. ஓடிப்போய் திறக்கிறாள். பத்மநாபன், நந்து, சிந்து உள்ளே வருகிறார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் பத்மநாபன் சோபாவில் அமர, நந்து பிந்துவை முறைத்து பார்த்துவிட்டு மாடிக்கு செல்கிறான். சிந்து யார் முகத்தையும் பார்க்காமல் ஒரு மூலையில் அமர்ந்துக்கொள்கிறாள்.)

பிந்து: (பத்மநாபனிடம்) உங்களுக்கு காப்பி வேணுமாப்பா? கலந்துண்டு வரேன்..

பத்மநாபன்: (சலிப்புடன்) நீ ஒன்னும் செய்ய வேணாம்.. நீ செஞ்சதெல்லாம் போறும்.. உனக்கு என்ன விருப்பமோ.. அத நீ செஞ்சுக்கோ.. ஆனா ஒன்னு.. பின்னால ஏதாச்சும் பிரச்சினைன்னு வந்து நின்னா.. நா கண்டுக்கவே மாட்டேன். சொல்லிட்டேன்..

அம்புஜம்: (திடுக்கிட்டு தன் கணவரைப் பார்க்கிறாள்) நீங்க என்னன்னா ஏதேதோ சொல்றேள்?

பத்மநாபன்: (சிலையாய் நிற்கும் தன் மகளை பார்க்கிறாள்) என்ன பிந்து? இந்த முட்டாள் அப்பாவுக்கு எப்படி தெரியும்னு பாக்கறயா? நீயும் நந்துவும் சேந்து செஞ்சிட்டிருக்கற துரோகத்த நம்ம தரகர் புட்டு புட்டு வச்சிட்டார்.. நீங்கள்லாம் என் பிள்ளைங்க.. சொல்லிக்கவே நேக்கு வெக்கமாருக்கு... எப்படியோ போங்க.. (அம்புஜத்தை பார்க்கிறார்) நீ ஒன்னும் கவலைப் படாதேடி.. எல்லாம் அந்த ஈஸ்வரன்கிட்ட விட்டாச்சு.. மகனும், மகளும், மருமகளும், சம்மந்தி வீட்டாரும் நம்ம ரெண்டு பேரையும் பைத்தியக்காரங்களாக்கிட்டாடி.. வீட்ல மூத்ததே சரியில்லை.. இளையத சொல்லி என்ன பண்றது.. (பிந்துவை பார்க்கிறார்) உன் கல்யாணத்துக்காவது எங்கள கூப்பிடுவியா? இல்ல..

பிந்து: (கண்களில் கண்ணீருடன் தன் தந்தையை பார்க்கிறாள்) சாரிப்பா.. நீங்க சம்மதிக்க மாட்டீங்களோன்னு.. (தந்தையின் அருகில் சென்று தரையில் அமர்ந்து அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டு அழுகிறாள்) என்ன மன்னிச்சிருங்கப்பா ப்ளீஸ்.. பாஸ்கர என்னால மறக்க முடியலப்பா.. அதான்..

(பத்மநாபன் தன் மகளின் தலையை கோதிவிட்டவாறே தன் மனைவியை நோக்கி தன் அருகே வரும்படி சாடை செய்கிறார். அம்புஜம் பிரம்மைப் பிடித்தவள்போல் இருந்த இடத்திலேயே இருக்கிறாள்)

பத்து: ஏய் அம்பு, என்ன பித்து பிடிச்சா மாதிரி பாக்கறே. இவா ரெண்டு பேரையும் விட்டா நமக்கு யார்டி இருக்கா? இவா ரெண்டு பேரும் நம்ம குழந்தைங்கடி.. தப்பு செஞ்சிட்டா..இவளாவது பரவால்லை.. இன்னும் பண்ணிக்கலை.. உம் புள்ள நந்து.. கல்யாணம் ஆயி முழுசா ஒரு மாசம் ஆறது.. எவ்வளவு பெரிசா பண்ணிட்டு ஒன்னும் பண்ணாத மாதிரி.. தங்கைக்கு புத்தி சொல்ல வேண்டியவன் அவளோட கூட சேந்துக்கிட்டு நம்ம ரெண்டு பேரையும் ஏமாத்திண்டிருக்கான்டி.. போட்டும் விடு.. நன்னாருந்தா சரிதான். விஷாலோட ஜாதகமும் பிந்துவோட ஜாதகமும் பேஷா பொருந்தியிருக்கு இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்னார்.. என்னாச்சி? அது நின்னு போச்சி.. இப்போ இவளுக்கும் அந்த பிள்ளையாண்டானுக்கும்.. நடக்கும்னு சொல்றது நடக்காதுடி.. தெய்வ சங்கல்ப்பம் இருந்தா நடக்காதுன்னு சொல்றதுகூட நடந்துரும்.. பாப்பம்.. (பிந்துவின் முகத்தை தன் கைகளில் ஏந்திக்கொள்கிறார்) நோக்கு தலைல என்ன எழுதி வச்சிருக்குதோ அதுதாம்மா நடக்கும்.. இந்த அப்பன் என்ன பண்ண முடியும்.. போ.. சந்தோஷமா நீ என்ன செய்யணும்னு நினைக்கறயோ செஞ்சிக்கோ.. ஆனா இந்த அப்பனால முழு மனசோட வாழ்த்தத்தான் முடியும்.. நீ நெனச்சத நடத்தி வைக்க முடியாது.. காலங்காலமா ஜாதகத்துலருக்கற என்னோட நம்பிக்கையை என்னால விட்டுரமுடியாது. என்னால ஆல் தி பெஸ்ட்டுன்னு மட்டும்தான் சொல்ல முடியும். ஆனா அத என் முழு மனசோட சொல்றேன்.. (நா தழுதழுக்க) ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் மேரிட் லைஃப்.. (தன் மனைவியை பார்க்கிறார்) நேக்கு பசிக்கலைடி.. நான் படுத்துக்க போறேன். (எழுந்து மாடிப்படியில் ஏறுகிறார். ஹாலில் இருந்த அனைவரும் அவரையே பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்)

(சுபம்)

4 comments:

Anonymous said...

உங்களுடைய நாடகம் இடையில் சிறு தொய்வு ஏற்பட்டாலும் முடிவு சூப்பராயிருக்கு சார்.

நீங்கள் கூறியதுபோல காதல் திருமணங்கலள் அதிகரித்து வரும் இந்நாட்களில் ஜாதகத்தில் உள்ள நம்பிக்கை இளைய தலைமுறையினரிடம் பொதுவாக இல்லையென்றே கூறலாம்.

Anonymous said...

நல்ல ஒரு குடும்ப கதையை படித்த மனநிறைவு எனக்கு கிடைச்சது.

வாழ்த்துக்கள். இதுபோன்ற சமுதாயத்தை சீர்திருத்தக்கூடிய கருத்துகளை மையமாக வைத்து எழுதுங்கள். என்னைப் போன்ற இளைய தலைமுறையினரிடமிருந்து நிச்சயம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.

டிபிஆர்.ஜோசப் said...

ஒரு சிறிய கருத்தை வைத்து எழுதும்போது தொய்வு ஏற்படுவது இயற்கைதான்.

இனி வரும் பதிவுகளை எத்தனை சுருக்கமாய் எழுது இயலுமோ அத்தனை சுருக்கமாய் எழுது முயல்கிறேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

நல்ல ஒரு குடும்ப கதையை படித்த மனநிறைவு எனக்கு கிடைச்சது.//


நன்றி.