10.11.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 9

காட்சி - 11

பத்மநாபன் மற்றும் பட்டாபி குடும்பத்தினர்

(பிந்துவையும் நந்துவையும் தவிர எல்லோரும் ஹாலில் அமர்ந்திருக்கின்றனர்)

பங்கஜம்: (சுவர்க்கடிகாரத்தைப் பார்க்கிறார் திரும்பி அம்புஜத்தை பார்த்து) மணி எட்டாகுது, இன்னும் பிந்துவை காணோம்?

அம்புஜம் (அம்பு): அவ சாதாரணமா ஏழு மணிக்கு வந்துருவா.. இன்னைக்கி என்னாச்சின்னு தெரியலை..

(வீட்டு வாசலில் மணி அடிக்கிறது. அம்புஜம் தன் கணவர் பத்மநாபனை பார்க்கிறார்.. அவர் தன் மருமகள் சிந்துவை பார்க்கிறார்.. சிந்து எழுந்து சென்று கதவை திறக்கிறாள். பிந்து அவசர அவசரமாக உள்ளே நுழைந்து கைப்பையையும் துப்பட்டாவையும் ஹாலிலிருந்த சோபாவில் வீசிவிட்டு தன் தாயிடம் செல்கிறாள்.)

பிந்து: (அம்புஜத்தின் தாடையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறாள்) அம்மா, அம்மா, அர்ஜண்டா ஸ்டராங்கா ஒரு காப்பிமா.. தலையே வெடிச்சுடறா மாதிரியிருக்கு..

அம்புஜம்: (கையை தட்டி விடுகிறாள்) சரி, சரி.. ரொம்பத்தான் கெஞ்சாத.. (எழுந்து சமையற்கட்டை நோக்கி செல்கிறாள்) வயசு 25 ஆறது.. இப்பவும் குழந்தையாட்டமா..

பிந்து: (ஹாலிலிருந்த விஷாலைப் பார்த்து புன்னகையுடன்) சாரி.. விஷால்.. நீ ஊர்லருந்து வந்ததுலருந்து உன்னாண்டை பேசவே முடியலை.. நான் வேலை செய்யற இடம் மகா போர்.. ஓய்வே கிடைக்காது... சனி, ஞாயிறு.. ஏன் போன தீபாவளி அன்னைக்கி கூட வேலைன்னா பாத்துக்கயேன்.. (பங்கஜத்திடம்) என்ன மாமி, மூஞ்சை கோபமா வச்சிண்டிருக்கேள்.. (பட்டாபியிடம்) என்ன மாமா, மாமிய ஏதாச்சும் பேசினேளா..?

பட்டாபி:(கேலியுடன்) என்ன பிந்து உங்க மாமியப்பத்தி ஒன்னும் தெரியாத மாதிரி கேக்கறே.. நான் என்னைக்கி அவ கேக்கற கேள்விக்கு பதில் சொல்றத தவிர அவகிட்ட பேசியிருக்கேன்.. கல்யாணத்தன்னிக்கி வாயை மூடினதுதான் இந்த 28 வருஷத்துல ஒரு வார்த்த.. உங்க மாமி பெர்மிஷனில்லாம பேசியிருப்பனா.. (பங்கஜத்திடம்) என்ன பங்கி.. நிசந்தானே..

பங்கஜம்: (எரிச்சலுடன்) போறுமே, வழியாதேள்.

(பத்மநாபனும் பிந்துவும் வாய் விட்டு சிரிக்க.. சிந்து எப்படி ரியாக்ட் செய்வதென தெரியாமல் விழிக்கிறாள்.. விஷால் லேசாக புன்னகைத்துவிட்டு கையிலிருந்த புத்தகத்தில் மூழ்கிவிடுகிறான்.)

பத்து: (சிரிப்புடன்) சரியா சொன்னே பட்டாபி.. இங்க மட்டும் என்ன வாழுதாம்.. எல்லாம் அம்புதான்.. பேர்லயே இருக்கறா மாதிரி ஒவ்வொரு சொல்லும் அம்பு மாதிரினா பாய்றது? என்ன சிந்து.. நோக்குதானே நன்னா தெரியும், இவாண்ட சொல்லேன்..

சிந்து: (முகத்தை சுழித்துக்கொண்டு) என்ன உங்க வம்புல இழுக்காதேள் மாமா. நான் கிச்சன்ல போய் ராத்திரி டிப்பன் வேலைய பாக்கறேன்..

(சமையற்கட்டிலிருந்து காபியுடன் வெளியே வந்த அம்புஜம் காபி டபராவை பிந்துவிடம் கொடுத்துவிட்டு பங்கஜத்தின் அருகில் அமர்கிறாள்)

அம்புஜம்: (பிந்துவிடம்) இந்தா. குடிச்சிட்டு டம்ளரை அப்படியே வச்சிராம கழுவி வச்சிட்டு மேல போ..

பங்கஜம்: (வியப்புடன்) ஏன், பிந்து ஆத்துல கூடமாட ஒரு வேலயும் செய்ய மாட்டாளா?

பங்கஜம்: அப்படியில்ல மன்னி.. எல்லாம் செய்வாள்..

சிந்து: (தனக்குள்) ஆமாம்.. கிழிச்சாள்.. நீங்கதான் மெச்சிக்கணும்..

பங்கஜம்: (குரலை தாழ்த்தி) பங்கஜம்.. ஜோஸ்யர வரச்சொல்லியிருக்கேளா? இன்னும் ஒரு வாரத்துல பேசி முடிச்சிட்டு நாங்க போனாத்தானே வர்ற தையிலயாவது கல்யாணத்த வச்சிக்க முடியும்? (பட்டாபியிடம்) என்னண்ணா பேசாம இருக்கேள்..

பத்து: நம்ம ஜோஸ்யர் ரொம்ப பிசியானவர்.. அவர் நம்ம ஆத்துக்கு வரணும்னு காத்துக்கிட்டிருந்தா நடக்காது.. அவருக்கு டி.நகர்ல பக்காவா ஒரு ஆபீசே இருக்கு.. நாளைக்கி முதல் வேலையா நானும் பட்டாபியும் ஜோஸ்யர அவரோட ஆபீஸ்லயே பாத்து பேசிரலாம்னு இருக்கேன்.. பிந்துவோட ஜாதக காப்பிய எடுத்து வச்சிருக்கேன் விஷாலோடதையும் ஒரு காப்பி எடுத்து குடுத்திரலாம். உடனே சொல்ல மாட்டார்.. குடுத்திட்டு வந்திட்டம்னா அப்புறமா நந்து போய் கேட்டுட்டு வந்திருவான். என்ன பட்டாபி..?

பட்டாபி: (புன்னகையுடன்) சரி.. அப்படியே செஞ்சிரலாம்.. என்ன பங்கஜம்?

பங்கஜம்:நீங்க சொன்னா சரியாத்தாண்ணா இருக்கும்.. அப்படியே செஞ்சிருங்கோ..

(வாசலில் அழைப்பு மணி ஒலிக்க பிந்து சென்று திறக்கிறாள். நந்து நுழைகிறான். ஹாலில் எல்லோரும் ஒன்றாய் அமர்ந்திருக்க கண்களில் கேள்விக் குறியுடன் பிந்துவை பார்க்கிறான். அவள் அவன் பார்வையைத் தவிர்த்துவிட்டு சமையற்கட்டை நோக்கி செல்கிறாள்.)

பத்து: தோ, நந்துவே வந்துட்டான். (நந்துவிடம்) டேய் நீ நாளைக்கி ஆபீஸ்லருந்து வரச்சே நம்ம ஜோஸ்யரோட ஆபீஸ் டிநகர்ல இருக்கோண்ணா..

நந்து: சொல்லுங்கோ..

பத்து: அங்க போய் நம்ம பிந்து-விஷாலோட ஜாதகத்த பத்தி அவராண்ட கேட்டுட்டு வந்துரு..

நந்து: (திடுக்கிட்டு சமையல்கட்டை பார்க்கிறான்) ஜாதகத்தை எப்ப கொண்டு கொடுத்தேள்? எங்கிட்ட சொல்லவே இல்லையே?

பத்து: அபிஷ்டு. ஜாதகத்தை குடுத்துட்டேன்னு எங்கடா சொன்னேன்? நாளைக்கி காலையில நானும் பட்டாபியுமா போயி குடுக்கலாம்னு இருக்கோம்.. நீ சாயந்திரமா ஆபீஸ்லருந்து வரச்சே போயி வாங்கினு வந்திரு.. என்ன சொல்றே?

நந்து: நீங்க எதுக்குப்பா போவணும்? எங்கிட்ட குடுத்துட்டா நா காலைல ஆபீஸ் போறப்போ குடுத்துட்டு திரும்பி வர்றப்போ வாங்கியாந்துட்டு போறேன். நான் போற பாதையில தான இருக்கு..?

(நந்து சமையற்கட்டிலிருந்து வெளியே வந்து மாடி ஏறிச் செல்லும் பிந்துவை பார்க்க அவள் நந்துவை பார்த்த பார்வையில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாக கற்பனை செய்கிறாள் பங்கஜம்.)

பங்கஜம்: (அவசரத்துடன் தன் கணவனைப்பார்த்து) வேண்டாம்னா.. நந்து வேணும்னா ஜாதக காப்பியை காலைல குடுத்துட்டு போயிரட்டும். நாம போய் சாயந்திரமா ஜோஸ்யர பார்த்து கேட்டுட்டு வந்திரலாம்.. நமக்கும் டி.நகர்ல பர்ச்சேஸ் பண்ண வேண்டியிருக்கே.. (பத்மநாபனைப் பார்த்து) நீங்களும் எங்களோட வந்தேள்னா.. ஆற அமர உக்காந்து பேசிட்டு.. நிச்சயத்துக்கு நாளையும் குறிச்சிட்டு வந்திரலாம்.. என்ன சொல்றேள்? (நந்துவை பார்த்து) என்ன நந்து, நான் சொல்றது நல்ல ஐடியாவா இல்ல?

நந்து: (தனக்குள்) மாமிக்கு ஏதோ நம்ம மேல சந்தேகம் போல இருக்கு.. (பங்கஜத்தை பார்த்து) கரெக்ட் மாமி. அப்படியே செஞ்சிரலாம்.. (சமையற்கட்டை பார்த்து) சிந்து ஒரு ஸ்மால் காப்பி..

அம்புஜம்: டேய் இந்த நேரத்துல காப்பியா.. டிபன் பண்ண வேண்டியதுதானே..

சிந்து: (சமையற்கட்டிலிருந்து கையில் காப்பியுடன் வெளியே வந்து கணவனிடம் கொடுக்கிறாள்) மாமி பிந்துவுக்கு போட்டது.. அவ முழுசும் குடிக்கலை.. அதான்..

(பங்கஜம் விஷமத்துடன் அம்புஜத்தைப் பார்க்க.. அவள் அதை காணாததுபோல் குனிந்துகொள்கிறாள். பங்கஜம் திரும்பி தன் கணவனைப் பார்க்கிறாள். ‘போதும். ஆரம்பிச்சிராதே’ என அவர் கண்ணாலேயே அறிவுறுத்த பத்மநாபன் இதைப் பார்த்து உரக்க சிரிக்கிறார்)

பங்கஜம்: (ஒன்றும் அறியாதவள்போல் பத்மநாபனை பார்க்கிறாள்) என்னண்ணா?

பத்து: ஒன்னுமில்லை.. இந்தாத்துலருக்கறவாளுக்குத்தான் கண்ணாலயே அபிநயம் செய்ற திறமையிருக்குன்னு நினைச்சுண்டிருந்தேன்.. நீயும் பட்டாபியும் சலிச்சவாயில்லைன்னு நிரூபிச்சிட்டேள்.. பேஷ்.. விஷால் எப்படியோ பிந்துவும் சூப்பரா பேசுவாள் கண்ணாலயே... (மீண்டும் சிரிக்கிறார்)

பங்கஜம்: (தனக்குள்) அதான் நேத்து பார்த்தேனே..

(காட்சி முடிவு)

1 comment:

தங்ஸ் said...

Unga rendu pathivukalum nalla irukku..Daily oru visit varren theriyumo?