24.11.05

குன்டக்க மன்டக்க!!

முக்கிய கதாபாத்திரங்கள்:

நபர் 1 – வடிவேலு
நபர் 3 –பார்த்திபன்
நபர் 2 – துணை நடிகர்

(சாலையின் வலப்புறத்திலிருந்து நபர்1 வந்துகொண்டிருக்கிறார். வானத்தைப் பார்த்தவாறு தனக்குள் பேசிக்கொள்கிறார்)

நபர்1: எப்பா சாமி. நா இன்னைக்கி போற காரியத்த நீதாம்பா நல்லபடியா முடிச்சித்தரணும். முடிச்சி தந்தேன்னா, திரப்பி வரப்ப என்னால முடிஞ்சத உங்கோயில் உண்டியல்ல போடறேம்பா..

(எதிரில் வரும் நபர் 2 அவரை கடந்து செல்ல, நபர்1 அவர் காலரைப் பிடித்து தன் பக்கம் இழுத்து அவருடைய கன்னத்தில் அறைகிறார்.)

நபர்2: (கோபத்துடன்) யோவ். உனக்கென்ன பைத்தியமா? ஏன்யா சும்மா போறவன பிடிச்சி அடிக்கறே

நபர்1: டேய் நா யாரு?

நபர்2: யாருன்னா?

நபர்1: நான் யார்ரா? (தன் நெஞ்சில் கைவைத்து) நானு, நானு.

நபர்2: யோவ் சுத்த இவனா இருக்கியே.. பேசாம ரோட்ல போயிட்ருக்கவன இழுத்து பிடிச்சி கன்னத்துல அறஞ்சிட்டு.. நா யாரு, நா யாருன்னு கேக்கற?

நபர்1: (கன்னத்தில் அறைகிறான்) சரியா பாத்து சொல்லு.. நா யாருன்னு தெரியல?

நபர்2: (அழுகிறான்) யோவ் தெரியலையா.. நீதான் யார்னு சொல்லித் தொலையேன்.

நபர்1: உண்மையிலயே நா யாருன்னு தெரியலை?

நபர்2: தெரியலையா..

நபர்1: சரி நீ போ..

நபர்2: (தனக்குள்) யார்ரா இவன்? ரோட்ல போய்க்கிட்டிருந்தவன நிறுத்தி கன்னத்துல அடிக்கிறான். ஏன்டா அடிச்சேன்னு கேட்டா நான் யார்ராங்கறான். தெரியலன்னு சொன்னா சரி போடாங்கறான். சுத்த பைத்தியக்காரனாயிருப்பான் போலருக்குதே.. இவன்கிட்ட நின்னு பேசினதே தப்பு.. போயிருவம்.. (திரும்பி திரும்பி பார்த்தவாறே அடிபட்ட கன்னத்தை தடவிக்கொண்டு செல்கிறான்)

நபர்1: (தனக்குள்) அப்பாடா. இந்த ஊர்ல நம்மளை தெரிஞ்சவன் யாருமில்ல போலருக்குது. தைரியமா நடமாடலாம்.

(காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறான். அலட்சியமாக சாலையில் போவோர் வருவோரை பார்க்கிறான். கால்களை அகல வைத்து தெனாவட்டாக சாலையின் நடுவில் நடக்கிறான். ஏற்கனவே அவன் ஒருவனை அடித்ததை பார்த்தவர்கள் அவனை விட்டு சற்று தள்ளியே செல்கின்றனர். அதைப் பார்த்த நபர்1 ‘அது.. அந்த பயம் இருக்கணும்..’ என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறான். திடீரென்று பின்னாலிருந்து சைக்கிளில் வந்த ஒருவர் அவன்மேல் இடிக்க முகம் குப்புற விழுகிறான். அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டை, வெள்ளை முழுவதுமாக அழுக்கடைகிறது. கீழே விழுந்தவன் கோபத்துடன் எழுந்து தன்னை இடித்துவிட்டு நிற்பவனை ஓரக்கண்ணால் பார்க்கிறான். அடுத்த நொடியில் அவன் முகம் இருளடைகிறது. தனக்குள் பேசிக்கொள்கிறான்) ஐயோ, இவனா? நம்ம எங்க போனாலும் மோப்பம் பிடிச்சிக்கிட்டு வந்திற்ரானடா சாமி. இன்னைக்கி என்னல்லாம் குன்டக்க மன்டக்கன்னு பேசப் போறானோ தெரியலையே. திறக்கப்படாது.. அவன் என்ன பேசுனாலும் நம்ம வாயவே தெறக்கப்படாது..

நபர்3: (சைக்கிளில் அமர்ந்தவாறே) டேய்.. என்ன ரோடு உனக்காகத் தான் போட்ருக்குன்னு நெனப்பா உனக்கு? நடு ரோட்ல பெரிய இவன் மாதிரி.. யார்ரா நீ?

நபர்1: (அவனுக்கு முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறான்) அட ஒன்னுமில்லப்பா.. நான் ஊருக்கு புதுசு.. நீ போ.. (அந்த இடத்தைவிட்டு வேகமாக செல்ல முயல்கிறான்)

நபர்3: டேய் நில்றா? நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்கே?

நபர்1: (அப்படியே நிற்கிறான். திரும்பாமலே பதில் சொல்கிறான்) நீ என்ன கேட்டே, நான் யாருன்னுதானே? அதான் நான் ஊருக்கு புதுசுன்னு சொல்லிட்டேன்லயா.. பிறவென்ன? (தனக்குள்) விடமாட்டான் போலருக்குதே சாமி..

நபர்3: ஏன், முகத்த பாத்து பேசமாட்டீங்களோ?

நபர்1: என் முகத்த பாத்து என்னய்யா செய்யப் போறே?

நபர்3: அத நான் பாத்துக்கறேன். நீ முதல்ல திரும்பி என்ன பாத்து பேசுடா.

நபர்1: (திரும்பி முழுவதுமாக சுற்றிக்கொண்டு மீண்டும் முதுகையே காண்பிக்கிறான்) போதுமா? பாத்துட்டேல்ல? நான் போட்டா? அர்ஜண்டா ஒரு சோலிக்கி போயிட்டிருக்கேன்யா? என்ன உட்டுறேன் (அழுகிறான்).

நபர்3: டேய்.. முகத்த காட்றான்னா மறுபடியும் முதுகையே காட்றே? என்ன நக்கலா? அதுவும் ஏன்கிட்டயே?

நபர்1: இப்ப என்னய்யா பண்ணணும்கற?

நபர்3: ஸ்லோ மோஷன்ல திரும்பு.

(நபர்1 ஸ்லோ மோஷன்ல மீண்டும் முழு வட்டமடித்து திரும்ப முயல.. நபர் 3 அவனுடைய தோளைப் பிடித்து நிறுத்துகிறான். நபர்1 தன் இரு கண்களையும் ஒன்றரை கண்ணுள்ளவன்போல் மாற்றிக்கொண்டு நிற்கிறான்.)

நபர்3: (ஆச்சரியத்துடன்) டேய் நீயா?

நபர்1: நீயான்னா? நீ நெனக்கற ஆள் நானில்லையா? என்ன உட்டுறு.

நபர்3: டேய்.. நான் நீ யாருன்னு நெனச்சேன்னு உனக்கெப்படி தெரியும்? நீ நான் நீன்னு நெனச்ச ஆள்தான நீ?

நபர்1: (தனக்குள்) மறுபடியும் ஆரம்பிச்சிட்டான்யா. இப்படி குண்டக்க மண்டக்கன்னு பேசி எத்தனை நாளைக்கித்தான் இவன் என் கழுத்த அறுக்க போறான்னே தெரியலையே (நபர் 3ஐ பார்க்கிறான்) என்னய்யா சொல்ற? ஒரெழவும் விளங்க மாட்டேங்குதே..

நபர்3: சரி மெதுவா உன் மர மண்டைக்கு விளங்கமாதிரி சொல்றேன். நீ நான் நீன்னு நெனச்ச ஆள்தானே நீ?

நபர்1: நீ.. நீன்னு.. எளவு வரமாட்டேங்குதே.. சரி ஏதோ ஒன்னு.. வேணாம். என்ன விட்டுரு..

நபர்3: என்ன வேணாம்?

நபர்1: என்ன வேணாம்னா?

நபர்3: இல்ல.. இப்ப ஏதோ வேணாம்னியே?

நபர்1: நானா? எப்ப?

நபர்3: டேய்.. என்ன விளையாடறியா? இப்ப நீதானடா வேணாம் என்ன விட்டுருன்னே? அதான் கேக்கறேன். சொல்லு, என்ன வேணாம்?

நபர்1: (அழுகிறான்) யோவ், ஏதோ ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா?

நபர்3: பேச்சுக்கா? அதென்ன பேச்சுக்கு? நாங்க மட்டும் பேசாமயா சொன்னோம்? சொல்றா?

நபர்1: (தனக்குள்) என்னடா இவன்.. முன்னால போன முட்டுறான்.. பின்னால போன ஒதைக்கிறான்.. இன்னைக்கி விடிஞ்சாப்பலதான்.. இப்ப என்ன கேக்க வராங்கறத மறந்து போயிருச்சே..

நபர்3: (நபர்1ன் தலையில் தட்டுகிறான்) டேய் என்ன சத்தத்தையே காணோம். சரி, அத விடு.. நீ நான் நெனச்ச ஆளா இல்லையா அத சொல்லு..

நபர்1: முதல்ல நான் யாருன்னு நீ நினச்சு பேசிக்கிட்டிருக்க.. அதச் சொல்லு..

நபர்3: டேய், என்னையே மடக்கறியா? மவனே.. அப்ப எதுக்கு நீ நெனச்ச ஆள் நான் இல்லன்னு சொன்னே?

நபர்1: நான் ஒரு குத்து மதிப்பா கேக்கறியாக்கும்னு சொன்னேன்.

நபர்3: குத்து மதிப்பா? அதென்னா குத்து, மதிப்பு?

நபர்1: யோவ் ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா..

நபர்3: டேய் சொன்ன டையலாக்கையே சொன்னே.. கொன்னுருவேன். சரி அதையும் விடு.. நான் சொல்றேன். நீ அந்த துபாய் கக்கூஸ் பார்ட்டிதானே..

நபர்1: (தனக்குள்) ஹா.. மாட்டிக்கிட்டம்யா.. எமகாதகானாயிருப்பான் போலருக்குதே.. (நபர்3ஐ பார்க்கிறான்) துபாயா? கக்கூசா? நீ என்னய்யா சொல்றே? நான் மெட்றாசே பாத்ததுல்ல.. இதுல துபாயில போயி.. நீ நெனக்கற ஆளு நான் இல்லையா.. உலகத்துல ஒருத்தன மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு நீ கேட்டதில்ல அதுல ஒருத்தன் நான்னு வச்சிக்கயேன்..

நபர்3: சரி வச்சிக்கறேன்.. அதுக்குன்னு அவன் மேல அடிச்ச அதே கக்கூஸ் நாத்தமுமா ஏழுபேர் மேலயும் அடிக்கும்?

நபர்1: (தன் மேல் முகர்ந்து பார்க்கிறான். எனக்கு அடிக்காத நாத்தம் இவனுக்கு மட்டும் எப்படி அடிக்குதுன்னே தெரியலையே)

நபர்3: என்ன அடிக்குதா?

நபர்1: எது?

நபர்3: அதான்டா.. மோந்து பாத்தியே.. அது..

நபர்1: (விறைப்புடன் திரும்பி பார்க்கிறான்) ஆமாய்யா நீ நெனக்கற ஆளு நான்தான்.. இப்ப என்னாங்கற?

நபர்3: (வியப்புடன்) தோ பார்றா, கோபங்கூட வருமா உனக்கு?

நபர்1: பின்னே.. நான் என்ன ஒன்னுக்கும் பெறாத ஆளுன்னு நினைச்சியா.. வேணாம். சொல்லிட்டேன்.

நபர்3: ஒன்னுக்கு போவாத ஆளா? அது வேறயா? தள்ளி நில்றா!

நபர்1: (தனக்குள்) ஐயோ.. நானே வாய் குடுத்துட்டு, குடுத்துட்டு மாட்டிக்கறனே.. (கன்னத்தில் அடித்துக்கொள்கிறான்) சும்மா வாய வச்சிக்கிட்டு இரேன்டா..

நபர்3: டேய் யார சொல்றே?

நபர்1: என்னது நானா?

நபர்3: இப்ப ஏதோ வாய்க்குள்ளயே சொன்னியே?

நபர்1: (வாயை மூடிக்கொள்கிறான்) 'இல்லை' என்று தலையை அசைக்கிறான்.

நபர்3: (நபர்1ன் பின்னந்தலையில் அடிக்கிறான்) வாயை தொறந்து சொல்றா?

நபர்1: (கோபத்துடன் முறைக்கிறான்) யோவ். பேசிக்கிட்டிருக்கப்பவே.. கையை நீட்டுற.. வேணாம்.. சொல்லிட்டேன்.

நபர்3: என்ன வேணாம்? என்ன சொல்லிட்டே? அடிக்கடி இதே டயலாக்க சொல்றே? என்ன வேணாம்? நான் இந்தான்னு எதையோ குடுத்தா மாதிரி!

நபர்1: (கைகளை தலைக்குமேலே உயர்த்தி கும்பிட்டவாறு தரையில் விழுகிறான்) ஐயோ சாமி.. தெரியாம சொல்லிட்டேன்.. ஆள விடுய்யா..

நபர்3: (வலது கரத்தை உயர்த்தி சீர்வதிக்கிறான்) தீர்க்காயுசு பவ.. நீ சாவாம நூறு வருஷம் இரு.. (தனக்குள்) அப்பத்தான அடிக்கடி எங்கிட்ட மாட்டுவே..

நபர்1: (எழுந்து முற்றிலும் அழுக்காகிப்போன தன் உடைகளைப் பார்க்கிறான்) இப்ப திருப்தியா?

நபர்3: (நபர் 1ஐ மேலும் கீழும் பார்க்கிறான்) இப்பத்தான் சரியான கக்கூஸ் பார்ட்டி மாதிரி இருக்கே.. இப்படியோ போ..

(நபர் 1 தலையை குனிந்தவாறே சாலையின் ஓரத்துக்கு சென்று ஓரக்கண்ணால் நபர்3 ஐ பார்க்கிறான்)

நபர்3: டேய் என்ன பாக்கறே?

நபர்1: ஒன்னுமில்லயா.. இதோ போய்கிட்டேயிருக்கேன்.. (செல்கிறான்)

(நபர்3 ஒரு விஷம புன்னகையுடன் சைக்கிளை திருப்பிக்கொண்டு வந்த வழியே திரும்புகிறான்)

முடிவு

19 comments:

Anonymous said...

நேத்தைக்கி மாதிரியே சூப்பர் சார். கைவசம் நிறைய ஸ்க்ரிப்ட் வச்சிருக்கீங்க போலருக்கு. டெய்லி ஒன்னு போடுங்க.

வாழ்த்துக்கள்

Anonymous said...

எனக்கு முன்னலருக்கறவர் சொன்னா மாதிரி இந்த பதிவும் நன்னாருக்கு.

அப்படியே பார்த்திபனையும் வடிவேலுவையும் கண் முன்னால கொண்டுவந்துட்டீங்க..
எங்க ஆபீஸ்ல எல்லாரும் படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சோம்.

தாங்க்ஸ்.

டிபிஆர்.ஜோசப் said...

டெய்லி ஒன்னு போடுங்க./

டெய்லியா?

நகைச்சுவையாய் டெய்லி எழுதறது கஷ்டம்.

ட்ரை பண்றேன்.

நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி பாபு சங்கர்.

ஏதோ என்னாலா முடிஞ்சது.

Anonymous said...

:-))))))))
:-))))))))
:-))))))))

Anonymous said...

It is fantastic. If you write one more comedy scene tomorrow you would score a hatrick. Can we expect one tomorrow?

ilavanji said...

நல்லா இருக்குங்க! :)

Anonymous said...

நல்ல காமெடி ஜோசப்.

நேற்று நீங்கள் எழுதியதைவிட இது நன்றாயிருக்கிறது. Keep it up. We really enjoyed it.

டிபிஆர்.ஜோசப் said...

Can we expect one tomorrow? //

I don't know. let me see. கைவசம் ஒன்றுமில்லை.. ராத்திரி இருந்து மண்டைய குடையணும்..

ட்ரை பண்றேன்.

டிபிஆர்.ஜோசப் said...

நேற்று நீங்கள் எழுதியதைவிட இது நன்றாயிருக்கிறது//

நன்றி ஷண்முகம் :-))

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி இளவஞ்சி.

kirukan said...

super

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி கிறுக்கன்!!

Sundar Padmanaban said...

அட்டகாசமா இருக்கு ஸார். தொடருங்கள்.

சுந்தர்.

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி சுந்தர்,

தினமும் எழுதுவது கஷ்டம்.

முடிந்தவரை முயல்கிறேன்.

அன்பு said...

சூப்பர். கலக்கீட்டீங்க.

ஒரு வேண்டுகோள்... நபர்1 நபர்3 ன்னு போடறதூக்கு பதில் வடிவேல், பார்த்திபன் அல்லட்து முதல் எழுத்தும்மட்டூம் பயன்படுத்தியிருக்கலாம். அப்பப்ப குழப்பிடுச்சு!

டிபிஆர்.ஜோசப் said...

இருக்கலாம் அன்பு. சாரி. இனி எழுதும்போது குழப்பம் வராம பாத்துக்கறேன்.

சொன்னதுக்கு நன்றி.

ஜோ/Joe said...

கச்சிதமா இருக்கு சார்!

குமரன் (Kumaran) said...

சூப்பர் சிரிப்பு சார். Wonderful!!!