10.7.06

சூரியன் 105

இரவு முழுவதும் சரியாக உறங்காமல்  கண்கள் திகுதிகுவென எரிய படுக்கையில் படுத்திருந்த சந்தோஷ் கைகள் இரண்டையும் தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு தலைக்கு மேல் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியையே பார்த்துக்கொண்டிருந்தான்.

முந்தைய நாள் இரவில் தன் தாயை அழைத்துவர அவன் சென்றிருந்தபோது அவனுடைய பங்கு குரு கூறியதை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்தான்.

‘எனக்கென்னவோ ஒங்கப்பா ராணியோட சேர்ந்து வாழ்வார்னு தோணலை சந்தோஷ்.’

‘எதுக்கு ஃபாதர் அப்படி சொல்றீங்க?’

‘அவர் எதுக்காக ராணிய கல்யாணம் செஞ்சார்னு ஒனக்கு தெரியுமா சந்தோஷ்?’

சந்தோஷ¤க்கு தாத்தா சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. ‘ஒங்கப்பா அவனுக்காக கல்யாணம் செஞ்சிக்கல சந்தோஷ். எனக்காகவும் ஒன் பாட்டிக்காகவுந்தான். ஆமா சந்தோஷ், ஒங்க பெரியம்மாங்க ரெண்டு பேரும் எங்கள வெறுத்து ஒதுக்கனதுலருந்தே வேலு இந்த மாதிரி பொண்ணுங்கள எனக்கு பாத்து வச்சிராதீங்கப்பான்னு சொல்லிக்கிட்டே இருப்பான். அப்புறந்தான் யாரோ சொன்னாங்கன்னு கிறிஸ்துவ குடும்பங்கள்ல வளர்ந்த பொண்ணுங்க நல்ல குணமா இருப்பாங்கன்னு சொல்லி ராணிய கட்டிக்கிட்டு வந்தான்.’

‘தெரியும் ஃபாதர் தாத்தா சொல்லியிருக்காங்க.’

‘ஆனா ஒங்கப்பா நினைச்சிருந்தது தப்புன்னு ஒங்கம்மா ப்ரூஃப் செஞ்சிட்டாளே..’

கவலைதோய்ந்த கண்களுடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பங்கு தந்தையின் மனதிலிருந்த குற்ற உணர்ச்சியை புரிந்துக்கொள்ள முடிந்தது அவனால்.

அப்பா எவ்வளவு நல்லவரோ அவ்வளவுக்களவு அம்மா மோசம் என்பது அவனுக்கும் கமலிக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. அதுவும் தாத்தாவை அம்மா நடத்தும் விதத்தை அவனே நேரடியாக பலமுறை பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறான்.

‘என்னம்மா நீங்க, மனுஷ தன்மையே இல்லாம நடந்துக்கிறீங்க? தாத்தாவுக்கு எவ்வளவு வயசாவுது? இப்படி ஏதோ வேலைக்காரன நடத்தறதுபோல நடத்தறீங்க?’ என்பான்.

‘டேய்.. சின்ன பையனா லட்சணமா ஒன் படிப்புண்டு, வேலையுண்டுன்னு இரு.. இல்லையா ஏதாவது ஒரு ஹாஸ்டல்ல கொண்டு விட்டுருவேன்.’ என்று எரிந்து விழுவதுடன் கையில் கிடைத்ததை எடுத்து அவன் மேல் எறியவும் தயங்க மாட்டாள். அம்மாவுக்கு மனசுல ஏதோ கோளாறு என்று பலமுறை அவனும் கமலியும் தங்களுக்குள் விவாதித்திருக்கிறார்கள்.

‘என்ன சந்தோஷ் நான் சொல்றது சரிதானே.. ராணி நடந்துக்கிட்ட விதத்துல அவருக்கு இஷ்டம் இருக்கோ இல்லையோ இதுவரைக்கும் பொறுத்துக்கிட்டு இருந்துட்டார். ஆனா இப்போ கமலியோட சாவுக்கே ராணிதான் முக்கிய காரணம்னு நினைக்கற அளவுக்கு அவருக்கு கசந்துபோச்சி சந்தோஷ். அதுல எந்த தப்பும் இல்லேன்னுகூட எனக்கு தோணுது. ராணியோட நடவடிக்கையும் அப்படித்தான் இருந்திருக்கு. நானும் மதரும் சொன்னப்போக் கூட அவ மதிக்கலையே.’

சந்தோஷ¤க்கு அவர் கூறியதிலிருந்த நியாயம் புரிந்தாலும் அவனுக்கு ராணி தாயாயிற்றே.. இத்தனைக்கும் பிறகும் அவளை தன்னால் வெறுக்கமுடியவில்லையே.. அம்மா இனியாவது திருந்த மாட்டாங்களான்னுதான் நினைக்க தோணுதேயொழிய அவங்கள அடியோட வெறுத்து ஒதுக்க முடியலையே.. இதுக்கும் அப்பா எங்கள வளர்த்த விதந்தானே காரணம்.

ஒருமுறை அவன் ராணியை எதிர்த்து பேச அவளோ கோபத்தின் உச்சிக்கே போய் கையில் வைத்திருந்த கிச்சன் கத்தியால் அவனுடைய உள்ளங்கையை திருப்பி குத்திவிட பெருக்கெடுத்து ஓடிய ரத்தத்தை காண சகியாமல் நினைவிழந்து விழுந்தவனை தன்னுடைய கரங்களில் ஏந்திக்கொண்டு சாலையில் ஓடியவர் வேலு..

மருத்துவரின் இல்லத்திலிருந்து திரும்பி வரும் வழியில் அவர் கூறிய அறிவுரை இப்போதும் நினைவிலிருந்தது அவனுக்கு. ‘இங்க பார் சந்தோஷ்.. அப்பாவுக்கும் அம்மாவோட நடவடிக்கையில எந்த விருப்பமும் இல்லைதான். ஆனா அவ ஒனக்கும் கமலிக்கும் வேணும்.. ஏன்னா அவ ஒங்க ரெண்டு பேரையும் பெத்தவ.. அவ எவ்வளவு கெட்டவளாருந்தாலும் அவ ஒங்க அம்மா. ஒங்க ரெண்டு பேருக்காகவுந்தானடா நானே அவள இவ்வளவு வருஷமா பொறுத்துக்கிட்டு போறேன்? நீ எதுக்கு அவள எதுத்துக்கிட்டு நிக்கே? ஒனக்கு இப்ப உன் படிப்புதான் முக்கியம். ஒங்கம்மா கோபத்துல என்ன செய்வா, ஏது செய்வான்னு சொல்ல முடியாது. வேணும்னா சொல்லு ஒன்னெ ஊட்டியிலருக்கற ஸ்கூல்ல கொண்டு சேர்த்திடறேன்.. ஸ்கூல் ஃபைனல் முடிஞ்சதும் என்ன செய்யணும்னு யோசிக்கலாம். என்ன சொல்றே?’

ஆனால் சந்தோஷ் மறுத்து இந்த ஐந்தாண்டு காலமாக ராணியின் குணத்தை சகித்துக்கொண்டு இருந்துவிட்டான். கமலியும் அப்படித்தான். அவள் மாலை நேரங்களில் தன்னுடைய வயலினை எடுத்து வைத்துக்கொண்டு தேவாலய பாடல்களில் எதையாவது வாசித்தால் போதும் ராணிக்கு பொறுக்காது. ஒரு முறை ராணி கூறியதை பொருட்படுத்தாமல் அவள் வாசித்துக்கொண்டிருக்க கோபத்துடன் அவளுடைய அறையில் நுழைந்து வயலினை பிடுங்கி அவளுடைய உச்சந்தலையில் ஓங்கி அடித்ததில் வயலின் இரண்டாக உடைய கமலியோ தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டாள். நல்லவேளையாக மாணிக்க வேல் அன்றும் வீட்டிலிருந்ததால் அவளை அப்படியே அள்ளி காரில் போட்டுக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

கடவுள் புண்ணியத்தில் தலையில் ஏற்பட்ட கிழிசலை ஐந்தாரு தையலுடன் சரி செய்ய முடிந்தது. மண்டையோட்டில் ஏதும் காயம் படவில்லை என்று மருத்துவர் பரிசோதித்து கூறியபோதுதான் நிம்மதியடைந்தார்கள் சந்தோஷ¤ம் மாணிக்க வேலுவும்.

அந்த சம்பவத்தையடுத்து மாணிக்க வேல் முதல் முறையாக ராணியை திருமணம் முடித்துவைத்த கன்னியர் மடத்தலைவியை அவனுடன் சென்று சந்தித்து புகார் செய்ததையும் சந்தோஷ் நினைத்துப் பார்த்தான்.

‘நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஃபாதர்.ஆனா அம்மாவையும் கமலியோட சாவு பாதிச்சிருக்குன்னு நான் உணர்றேன். அம்மா நிச்சயமா மாறிருவாங்க. நேத்தைக்கு நீங்களும் மதரும் வற்புறுத்தி அம்மாவ கூட்டிக்கிட்டு வந்தப்போ கூட எங்கிட்ட இனிமே நான் வாயே தெறக்கமாட்டேன்டா.. அப்பாக்கிட்ட சொல்லுடான்னு கெஞ்சிக்கிட்டேதான் ஒங்க கூட வந்தாங்க.. அதனாலதான் நான் அப்பாக்கிட்ட கெஞ்சி கூத்தாடி அவங்கள கூட்டிக்கிட்டு போக வந்திருக்கேன்.. பிலீவ் மி.. ஃபாதர், ஷி ஹேஸ் சேஞ்ச்ட்..’

பாதிரியார் அவனை அனுதாபத்துடன் பார்த்து புன்னகைத்தார். பிறகு மெள்ள தன் இருக்கையிலிருந்து எழுந்து அவனை நெருங்கி அவனை அணைத்துக்கொண்டார்.

‘நீ ஒங்கப்பா தாத்தா மாதிரிதான் சந்தோஷ். அந்த ரெண்டு சொக்க தங்கங்களையும் சின்ன வயசுலருந்தே பாத்து வளந்தவந்தானே நீ.. வேறெப்படி பேசுவே? அதுதான் உன் இஷ்டமும் கடவுள் சித்தமும்னா அதுக்கு நா எப்படி குறுக்கே நிக்க முடியும்? வா.. மதர்கிட்ட கூட்டிக்கிட்டு போறேன்..’ என்றவாறு ஆலயத்தையொட்டியிருந்த கன்னியர் மடத்துக்கு அழைத்துச்செல்ல அங்கும் சந்தோஷ் ராணி கொண்டு செல்ல நிறைய நேரம் வாதாட வேண்டியிருந்தது.

‘அம்மா உண்மையிலேயே திருந்தி இருப்பாங்களா? இல்ல இதுவும் ஒரு நாடகமா?’ என்று இப்போது நினைத்துப் பார்த்த சந்தோஷ் அந்த எண்ணத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு படுக்கையிலிருந்து எழுந்து கதவைத் திறந்துக்கொண்டு தன் தாயின் படுக்கையறையை நோக்கி நடந்தான்.

ராணி முன்னரே எழுந்துவிட்டிருந்தாலும் அறையை விட்டு வெளியே வருவதா வேண்டாமா என்ற தயக்கத்துடன் கட்டிலில் அமர்ந்து எதிரேயிருந்த சுவற்றையே வெறித்து நோக்கிக்கொண்டிருப்பது தெரிந்தது..

அருகில் ஓசைப்படாமல் சென்று அமர்ந்த சந்தோஷ், ‘என்ன மம்மி யோசிக்கிறீங்க?’ என்றவாறு அவளுடைய கரங்களைப் பற்றினான்.

அவனுடைய ஸ்பரிசம் பட்டதும் சிலிர்த்துக்கொண்டு அவனைப் பார்த்த பார்வையிலிருந்தது வெறியா, சோகமா என்பது விளங்காமல் ஒரு நிமிட நேரம் திகைத்துப்போனான் சந்தோஷ்.

‘என்னம்மா என்னாச்சி.. எதுக்கு அப்படி பாக்கீங்க?’ என்றான்.

அடுத்த சில நிமிடங்களில் சகஜ நிலைக்கு வந்த ராணி அவனுடைய கரங்களைப் பற்றிக்கொண்டு ஓசையெழுப்பாமல் அழ சந்தோஷ் நிலைதடுமாறிப் போனான்..

***********

அடுத்த அறையில் தன் தந்தையுடன் அமர்ந்திருந்த மாணிக்க வேல் தன் மனைவியின் படுக்கையறைக் கதவு திறக்கப்படும் சப்தத்தைக் கேட்டும் எழுந்து சென்று பார்க்க மனமில்லாமல் தன் தந்தையின் படுக்கையருகிலேயே அமர்ந்திருந்தார்.

‘வேல்..’

‘என்னப்பா? சொல்லுங்க.’

‘ராணி வந்ததுக்கப்புறம் நீ போய் பார்த்தியா?’

மாணிக்க வேல் திரும்பி தன் தந்தையைப் பார்த்தார். ‘எதுக்குப்பா? சந்தோஷ் ஆசைப்பட்டானேன்னுதான் அவ வந்துட்டு போட்டும்னு சம்மதிச்சேன். அவன் சந்தோஷமா இருந்தா சரிதான். ஆனா எனக்கும் அவளுக்கும் இடையில இனிமே என்ன இருக்குப்பா? அவள பாக்கும்போதெல்லாம் கமலியோட முகந்தான் எனக்கு ஞாபகம் வருது. அச்சா அசலா ராணியோட முகமேதான் அவளுக்கு.. ஆனா கொணத்துல? அவ சொக்க தங்கம்னா இவ இளிக்கற பித்தளை.. எனக்கு அவ இனிமே மனைவியா இருக்கறதுக்கு வாய்ப்பே இல்லப்பா.. சந்தோஷ¤க்காவது அம்மாவா ஒங்களுக்கு மருமகளா இருக்காளான்னு பார்ப்போம்.’

தன் தந்தையின் கைகள் தன்னை தொடுவதை உணர்ந்த மாணிக்க வேல் திரும்பி அவரைப் பார்த்தார். தந்தையின் கண்கள் நிறைந்திருந்ததைப் பார்த்து பதறிப் போய், ‘என்னப்பா.. நீங்க எதுக்கு உணர்ச்சிவசப்படறீங்க?  அப்புறம் ப்ரஷர் ஏறி நீங்கதான் அவஸ்தைப்படப்போறீங்க.’

‘அப்படியில்லடா.. ராணி நல்லவந்தாண்டா.. என்னா கொஞ்சம் முன்கோபி.. கமலி அவளுக்கும் பொண்ணுதானடா.. எல்லாம் சரியாயிரும். போ.. போய் ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசு.. இன்னைக்கி அவள கல்லறைக்கு கூட்டிக்கிட்டு போய்ட்டு வா..’

தன் தந்தையின் அதரங்களிலிருந்து வந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் சற்று நேரம் அமர்ந்திருந்த மாணிக்க வேல் மெள்ள எழுந்து வாசலை நோக்கி நடந்தார். அவருடைய அறைக்குள் இருந்து அவருடை செல் ஃபோன் ஒலிப்பது கேட்கவே விரைந்து சென்று யாரென பார்த்தார். அவருடைய உதவி மேலாளர் ஜோ!

நேத்தைக்கி மட்டும் அவரோட உதவி இல்லேன்னா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் என்று நினைத்தவாறு, ‘என்ன ஜோ சொல்லுங்க?’ என்றார்.

‘சார், ஒங்கள பாக்கறதுக்கு கொச்சியிலருந்து நந்தக்குமாரும் அவரோட ஒய்ஃப் மிசஸ் நளினியும் வந்துக்கிட்டிருக்காங்க. இப்பத்தான் ஒங்க வீட்டுக்கு வழி கேட்டு அவர் ஃபோன் செஞ்சார்.. இன்னும் ஒரு அரை மணி நேரத்துல அங்கருப்பாங்கன்னு நினைக்கேன்..’

மாணிக்க வேல் சுவர் கடிகாரத்தைப் பார்த்தார். முட்கள் பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தன.. ‘ஓக்கே ஜோ.. அவர பார்த்து ரொம்ப நாளாச்சி. வரட்டும்.. தாங்ஸ் ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்..’ என்று இணைப்பைத் துண்டிக்க முயல எதிர் முனையிலிருந்து ஜோ, ‘சார் ஏதாச்சும் ஹெல்ப் வேணுமா சார்?’ என்று கேட்க மாணிக்க வேல், ‘தாங்ஸ் ஜோ.. வி வில் மேனேஜ். நீங்க ஆஃபீஸ் போங்க. வேணும்னா கூப்டறேன்..’ என்று கூறிவிட்டு ‘சந்தோஷ்’ என்றவாறு தன் மனைவியின் அறை வாயிலை அடைந்தார்.

தொடரும்...

4 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

"நாய் வாலை நிமிர்த்தி வைக்க
ஆன மட்டும் பாடுபடும்" சந்தோஷ் வெற்றி பெற்றால் சந்தோஷமே!தாத்தா, சந்தோஷிற்காக இல்லாவிட்டாலும் வேலுவிற்காக அந்தப்பெண் திருந்தவேண்டும்.
நல்லங்க காயப்படக்கூடாது.

மா சிவகுமார் said...

இவ்வளவு இழப்புகளுக்குப் பிறகாவது ராணி மனம் திரும்பியிருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அப்படி நடக்கப் போவதாகத் தெரியவில்லை. இனி எத்தனை பகுதிகளுக்குப் பிறகு இவர்களைப் பற்றி எழுதுவீர்களோ?

அன்புடன்,

மா சிவகுமார்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

"நாய் வாலை நிமிர்த்தி வைக்க
ஆன மட்டும் பாடுபடும்" சந்தோஷ் வெற்றி பெற்றால் சந்தோஷமே!//

ஆமாம்.. ஆனால் திருந்துவாங்கன்னு நினைக்கறீங்க? பார்ப்போம்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க சிவகுமார்,

ஆனால் அப்படி நடக்கப் போவதாகத் தெரியவில்லை.//

எதுக்கு அப்படி சொல்றீங்க?

இனி எத்தனை பகுதிகளுக்குப் பிறகு இவர்களைப் பற்றி எழுதுவீர்களோ?//

மத்தவங்களைப் பற்றியும் சொல்லணுமில்லே..