20.7.06

சூரியன் 110

ராசம்மாவும் செல்வமும் அவர்களுடைய சட்ட ஆலோசகரும் நண்பருமான  வழக்கறிஞர் மோகனுடைய வீட்டையடைந்தபோது அவர் தன்னுடைய உதவியாளர்களுடன் ஆலோசனையிலிருக்கவே இருவரும் அவருடைய வரவேற்பறையில் அமர்ந்தனர்.

செல்வம் தன் கையோடு கொண்டு வந்திருந்த கோப்பில் ஆழ்ந்துபோக சற்று நேரம்வரை பொறுமையுடன் அமர்ந்திருந்த ராசம்மா தன்னருகில் அமர்ந்திருந்த செல்வத்தை தொட்டாள்.

திடுக்கிட்டு திரும்பிய செல்வம் என்ன என்பதுபோல் புருவத்தை உயர்த்தினான்.

‘மொதல்ல ஒரு பர்சனல் விஷயம் அங்கிள்கிட்ட கேக்கலாம்னு பாக்கேன்.’

‘பர்சனல் விஷயமா? என்ன கேக்கப் போற? விவாகரத்து விஷயமா?’

இல்லை என்பதுபோல் தலையை அசைத்தாள் ராசம்மா. ‘அதுவுந்தான் பேசணும்.. ஆனா அதுக்கு முன்னால இந்த பட்டிக்காட்டு பேர மாத்த என்ன செய்யணும்னு கேக்கணும்.’

செல்வம் வியப்புடன் அவளைப் பார்த்தான். ‘பேர மாத்தணுமா? அப்படின்னா?’

ராசம்மா புன்னகைத்தாள். ‘அதான் செல்வம். ராசம்மாங்கற பேர மாத்தி ராஜி இல்லன்னா ராசின்னு மாத்திக்கலாம்னு பாக்கேன்.’

செல்வம் இது இப்ப தேவைதானா என்பதுபோல் அவளைப் பார்த்தான்.

புரிந்துக்கொண்டு ‘தேவைதான்’ என்றாள் ராசம்மா சீரியசாக. ‘பேர் செலக்ஷன் எப்படியிருக்கு. அத மட்டும் சொல்லு.’

செல்வம் பதில் கூறுவதற்குமுன் தன்னுடைய அறையிலிருந்த புன்னகையுடன் வெளியே வந்த மோகன் அவர்களைப் பார்த்ததும், ‘சாரிம்மா.. இன்னைக்கி முக்கியமான கேஸ் ஒன்னு கோர்ட்டுக்கு வருது. அதான் டிஸ்கஷன்..’ என்றார். ‘எப்படிம்மா இருக்கே? என்ன செல்வம். ஒன்ன பாத்து ரொம்ப நாளாச்சே.. உள்ள வாங்க..’

செல்வமும் ராசம்மாளும் பிந்தொடர தன் அறைக்கு திரும்பிய மோகன் தன் இருக்கையிலமர்ந்து அவர்கள் இருவரும் அவரவர் இருக்கையில் அமரும்வரை காத்திருந்தார்.

‘சொல்லுங்க.’ என்றவாறு ராசம்மாளைப் பார்த்தார். ‘நாடார் கூப்ட்டு நீங்க ரெண்டுபேரும் வரீங்கன்னு சொன்னதும் எனக்கு ஒன்னும் புரியல.. என்ன விஷயம்?’

ராசம்மா செல்வத்தைப் பார்த்தாள். அவன் நீயே சொல்லு என்பதுபோல் சைகை செய்ய, ‘அங்கிள் நான் வந்துருக்கற விஷயம் கொஞ்சம் சீரியசான விஷயம். கொஞ்ச விளக்கமா சொல்ல வேண்டியிருக்கும்னு நினைக்கேன். Are you free uncle?’ என்றாள் செல்லம்மா.

மோகன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். பிறகு தன்னுடைய இண்டர்காமில் தன்னுடைய உதவியாளரை அழைத்தார். ‘சுந்தர் நீங்க ஒங்க அசிஸ்டெண்ட்சோட கோர்ட்டுக்கு போயிருங்க. எனக்கு வெய்ட் பண்ண வேணாம். நம்ம செட்டியார் கேஸ்ல அட்ஜர்ன்மெண்ட் கேட்டு பாருங்க. கிடைக்கலன்னா இன்னைக்கி கடைசி செஷன்க்கு டிஃபர் பண்ண சொல்லிட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க..’ என்றார்.

பிறகு தனக்கு முன்னாலிருந்த கேஸ் கட்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இருவரையும் பார்த்தார். ‘சொல்லுங்க.’

செல்வம் ராசம்மாள் அன்று காலையில் தன்னிடம் கூறியவற்றை சுருக்கமாக கூறிமுடித்தான். ‘இனியும் ராசேந்திரனோட வாழறதுல அர்த்தமில்லன்னு ராசம்மா நினைக்கறா. அதான் மாமாவும் அத்தையும் எவ்வளவு சொல்லியும் ராசேந்திரன்கிட்டருந்து விவாகரத்து வேணுங்கறதுல பிடிவாதமா இருக்கா.’

ராசம்மாள் குறுக்கிட்டு, ‘அது பிடிவாதம் இல்ல செல்வம். உறுதியான, நியாயமான முடிவு. அவர் எனக்கு இந்த ஒரு வருசமா செஞ்சிக்கிட்டிருக்கற துரோகத்துக்கு ஏத்த முடிவு.’ என மோகன் வியப்புடன் அவளைப் பார்த்தார்.

அவளுக்கும் ராசேந்திரனுக்கு திருமணம் என்ற பேச்சு வந்ததுமே மோகன் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று பிடிவாதமாக நின்றவர் அவர். நாடாரிடமும் செல்வத்திடமும் பலமுறை வேண்டிக் கேட்டார். ‘இது சரியா வரவே வராது நாடார். எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி செஞ்சா எப்படி? அவன பத்தி நா இதுவரைக்கும் கேட்டது எதுவுமே சரியில்லை. வீட்ல தங்க கம்பியாட்டம் செல்வம் இருக்கும்போது எதுக்கு இந்த விஷப்பரீட்சை?’ என்றார்.

‘என்ன மோகன் நீங்க? எனக்கு தெரியாததா? இவ தான் சின்ன பிள்ளையாட்டமா பிடிவாதம் பிடிக்கான்னா.. இவ அம்மாவும் சேந்துக்கிட்டில்ல நிக்கா? எவ்வளவோ சொல்லி பாத்தாச்சி. அந்த பய தொலி நிறத்துலல்ல சொக்கிப்போய் நிக்காக ஆத்தாளும் பொண்ணும்? எப்படியோ போங்க.. பட்டாத்தான் தெரியும்னு விட்டுப்போட்டேன். நீங்களும் இத மறந்துருங்க. நீங்க இப்படி பேசினீங்கன்னு அந்த பய காதுல விழுந்துதுன்னா ஒங்களுக்கு எதிரா நம்ம ராசம்மாவையே திருப்பிவிட்டாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. என்ன நடந்தாலும் ஒங்கள நா இழக்க தயாராயில்ல மோகன்.’ என்ற நாடாரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அன்று வாயை மூடிக்கொண்டவர்தான் மோகன்.

இந்த முடிவுக்கு ராசம்மாள் வருவாள் என்பது அவருக்கு தெரிந்திருந்ததுதான். ஆனால் அதற்கு இத்தனைக் காலம் பிடித்ததே என்றுதான் நினைத்தார்.

‘எந்த க்ரவுண்ட்ல டிவோர்ஸ் கேக்கலாம்னு இருக்கேம்மா?’

‘Adultery, Desertion and Cruelty, Domestic violence ன்னு எல்லா அவய்லபிள் க்ரவுண்ட்லயும் கேக்கலாம்னு இருக்கேன் அங்கிள்.’

மோகனும் செல்வமும் வியப்புடன் அவளையே பார்த்தனர்.

பிறகு மோகனின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது. ‘ரொம்ப தயாராத்தான் வந்துருக்க போலருக்கு. சரி. இதுக்கெல்லாம் எவிடென்ஸ் கேப்பாங்களேம்மா..’

ராசம்மாள் தலையை அசைத்தாள் தெரியும் என்றவாறு.

‘இருக்கு அங்கிள். ராசேந்திரன் இதுவரைக்கும் எத்தன பொம்பளைங்களோட extra marital relationship வச்சிருந்தார்ங்கற டீட்டெய்ல்ஸ் எல்லாம் எங்கிட்ட இருக்கு. அவங்கள்ல எத்தனை பேருக்கு, எவ்வளவு பணத்த நம்ம கம்பெனியிலருந்து செக் மூலமா குடுத்துருக்கார்ங்கற டீட்டெய்ல்ஸ் எல்லாம் செல்வம் இன்னும் ரெண்டு நாளைக்குள்ள கண்டுபிடிச்சி குடுப்பார். Cruelty I mean Domestic violenceஐ நிரூபிக்கறதுக்கு என் பெர்சனல் டாக்டரே சாட்சி. நான் அவர்கிட்ட அப்பப்போ ட்ரீட்மெண்ட்  எடுத்திருக்கற விஷயத்த அப்பாக்கிட்ட கூட இதுவரைக்கும் சொன்னதில்ல. தேவைப்பட்டா அதையும் கோர்ட்ல சொல்றதுக்கு நான் தயார் அங்கிள். அப்புறம் போன ரெண்டு மாசமா நா பலதடவை முயற்சி செஞ்சும் என்னையோ என் மகனையோ வந்து பாக்காதது desertion இல்லாம வேறென்ன இருக்கமுடியும் அங்கிள்?’

மோகன் புன்னகையுடன் அவளைப் பார்த்தார். ‘நீ சொன்ன Adultery groundஐ ப்ரூஃப் செஞ்சாலே போறும்மா.. ராசேந்திரன் ஒன்னையும் குழந்தையையும் ரெண்டு மாசம் பாக்க வராம இருந்தத வச்சி Desertionனு சொல்ல முடியாது. அதுக்கு கொறஞ்சது மூனு வருசமாவது ஆயிருக்கணும். ஆனா இதெல்லாம் ராசேந்திரன் ஒன் டிவோர்ஸ் பெட்டிஷன அப்போஸ் செஞ்சாத்தான். அவர் இத எதுக்கலன்னா ம்யூச்சுவல் கன்செண்ட் க்ரவுண்ட்ல டிவோர்ஸ் வாங்கிரலாம். நான் அவர்கிட்ட சமாதானமா பேசி பாக்கேன். ஒத்துவரலைன்னா மிரட்டி பணிய வச்சிரலாம். அவர் ஒங்க கம்பெனி கணக்குலருந்து அளவுக்கும் மீறி கையாடல் செஞ்சிருக்கற விஷயம் நம்ம ஆடிட்டர் வழியா எனக்கு நல்லாவே தெரியும்.’

‘அது போறும் அங்கிள்.’ என்ற ராசம்மாள் தயக்கத்துடன் செல்வத்தைப் பார்த்தாள் நீ சொல்லேன் என்பதுபோல்.

செல்வம் புன்னகையுடன், ‘சார்.. ராசம்மாவுக்கு இப்பருக்கற பேர் பிடிக்கலையாம்..’
மோகன் வியப்புடன் அவளைப் பார்த்தார். ‘அதனால?’

‘ஆமா அங்கிள்.. இந்த பேர மாத்தி ராசி இல்லன்னா ராஜின்னு வச்சிக்கலாம்னு பாக்கேன்.’ என்றாள் ராசம்மாள்.

மோகன் புன்னகையுடன், ‘புரியுதுமா. செஞ்சிரலாம். பெரிய ஃபார்மாலிட்டீஸ்னு ஒன்னுமில்லை. ஆனா அத டிவோர்ஸ் கிடைச்சதும் செஞ்சிக்கலாம். தேவையில்லாத கன்ஃப்யூஷன் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு.’ என்றவாறு இருவரையும் பார்த்தார். ‘இவ்வளவுதானா இன்னும் வேற ஏதாவது இருக்கா? என்ன செல்வம்?’

‘இருக்கு அங்கிள்.’ என்றாள் ராசம்மாள்.

‘என்ன’ என்பதுபோல் அவளைப் பார்த்தார் மோகன்.

‘ராசேந்திரனும் மாமாவும் வித்த அவ்வளவு ஷேரையும் நான் வாங்கணும்னு இருக்கேன். அதுக்கு ஒங்க ஹெல்ப் வேணும்.’

மோகன் அதிர்ச்சியுடன் அவளையே பார்த்தார். ‘என்னம்மா சொல்ற? நீ வாங்க போறியா?’

‘ஆமா அங்கிள். அதுக்கு தேவையான பணத்த  அப்பாகிட்டருந்துதான்  இப்போதைக்கு வாங்கப் போறேன்னாலும் அத கடனாத்தான் வாங்கப் போறேன். சோ, அதுக்கு தேவையான டாக்குமெண்ட்சையும் நீங்கதான் ப்ரிப்பேர் பண்ணணும். இந்த மாசத்துலருந்து எனக்கு கிடைக்கப்போற சம்பளத்துலருந்து அப்பாக்கிட்ட வாங்கன கடன அடைச்சிருவேன்.’

மோகன் வியப்புடன் பார்த்தார். ‘என்னம்மா இது புதிர் மேல புதிரா போடறே?’

'ஆமா அங்கிள். நாந்தான் இன்னையிலருந்து நம்ம கம்பெனியோட எம்.டி. மாசா மாசம் ஒரு லட்சம் சம்பளம்கற கண்டிசனோட..’ என்றவள் செல்வத்தைப் பார்க்க அவனோ, ‘என்னது ஒரு லட்சம் சம்பளமா?’ என்று போலியான அதிரிச்சியில் பார்க்க ராசம்மாளும் மோகனும் ஒரு சேர சிரித்தனர்.

தொடரும்..



4 comments:

dondu(#11168674346665545885) said...

சாது மிரண்டா காடு கொள்ளாதுங்கறது சரிதானே ஜோசஃப் அவர்களே.

எப்படியோ ப்ளாக்ஸ்பாட் பதிவுகள் பார்க்க முடிவதில் மகிழ்ச்சியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க டோண்டு சார்,

சாது மிரண்டா காடு கொள்ளாதுங்கறது சரிதானே //

உண்மைதான் சார்.

எப்படியோ ப்ளாக்ஸ்பாட் பதிவுகள் பார்க்க முடிவதில் மகிழ்ச்சியே. //

ஒரு மூனு நாள் பாக்க முடியலேன்னதும் தாங்கமுடியல இல்ல சார்?

இந்த முடிவால யாருக்கு என்ன நண்மையோ தெரியலை.

siva gnanamji(#18100882083107547329) said...

அடிபட்ட வேங்கை எதிர்த் தாக்குதலுக்குத் தயாராகிவிட்டது.
"ஆர்த்தெழுந்த பெண்மை"என்பது
இதுதானோ?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

அடிபட்ட வேங்கை எதிர்த் தாக்குதலுக்குத் தயாராகிவிட்டது.//

ஆமாம்.. ராசேந்திரனும் சும்மாவா இருப்பான்?