21.7.06

சூரியன் 111

‘சார் ஒங்கள பாக்கறதுக்கு கொச்சியிலருந்து நந்தக்குமாரும் அவரோட ஒய்ஃப் மிசஸ் நளினியும் வந்துக்கிட்டிருக்காங்க. இப்பத்தான் ஒங்க வீட்டுக்கு வழி கேட்டு அவர் ஃபோன் செஞ்சார்.. இன்னும் ஒரு அரை மணி நேரத்துல அங்கருப்பாங்கன்னு நினைக்கேன்..’

மாணிக்க வேல் சுவர் கடிகாரத்தைப் பார்த்தார். முட்கள் பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தன.. ‘ஓக்கே ஜோ.. அவர பார்த்து ரொம்ப நாளாச்சி. வரட்டும்.. தாங்ஸ் ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்..’ என்று இணைப்பைத் துண்டிக்க முயல எதிர் முனையிலிருந்து ஜோ, ‘சார் ஏதாச்சும் ஹெல்ப் வேணுமா சார்?’ என்று கேட்க மாணிக்க வேல், ‘தாங்ஸ் ஜோ.. வி வில் மேனேஜ். நீங்க ஆஃபீஸ் போங்க. வேணும்னா கூப்டறேன்..’ என்று கூறிவிட்டு ‘சந்தோஷ்’ என்றவாறு தன் மனைவியின் அறை வாயிலை அடைந்தார்.

அறைக்குள் அவர் கண்ட காட்சி அவரை சில நிமிடங்கள் திகைக்க வைத்தது.

சந்தோஷ் கட்டிலில் அமர்ந்திருக்க அவனுடைய தோளில் சாய்ந்தவாறு அவருடைய மனைவி கண்ணீர் வடிப்பது தெரிந்தது.

என்ன செய்வதென தெரியாமல் சில நொடிகள் நின்றுவிட்டு தன்னுடைய அறைக்கு திரும்பிய மாணிக்கவேல் கட்டிலருகே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

முந்தைய நாள் இரவு சந்தோஷ¤ம் அவருடைய சகோதரர்களும் ராணியை இறுதியாக ஒருமுறை திருந்தி வாழ வாய்ப்பளிக்கலாம் என்று வற்புறுத்தியபோது மனமில்லாமல், சந்தோஷ¤டைய சந்தோஷத்துக்காக மட்டுமே சம்மதித்தார்.

சற்று முன் அவருடைய தந்தை 'ராணி நல்லவந்தான்டா..' என்றும் காலப்போக்கில் நிச்சயம் அவள் மனம் மாறிவிடுவாள் என்றும் பரிந்துரைத்தபோதுகூட அவருடைய மனம் இளகவில்லை.

ஆனால் சற்று முன் அந்த அறையில் அவர் கண்ட காட்சி அவருடைய மனதில் லேசாக ஒரு மாற்றத்தை, ராணிக்கு ஆதரவாக, உணர்ந்தார்.

கமலியோட திடீர் மரணம் தன்னுடைய மனைவியை அடியோடு மாற்றிவிடாதா என்ற ஏக்கம் அவரையுமறியாமல் அவருடைய அடி மனதில் இருந்திருக்கிறதுபோலும். அதுதான் இப்போது தான் கண்ட காட்சியைப் பற்றி இந்த அளவுக்கு சிந்திக்க தூண்டியிருக்க வேண்டும் என்றும் நினைத்தார்.

சரி.. பார்ப்போம்..

ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்தவர் குளித்து உடை மாற்றி அறையை விட்டு வெளியே வந்தார்.

நடு ஹாலில் நடுநாயகமாக, மேசைமீது கமலியின் புகைப்படத்தையும் அதன் முன்னே இரு மெழுகுதிரிகளையும் ஏற்றி  வைத்திருப்பதையும் அதன் அருகே தரையில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த தன் மனைவியையும் பார்த்தார்.

அவரையுமறியாமல் நேரே சென்று ராணியின் தலைமுடியை ஆதரவாக தடவ திடுக்கிட்டு நிமிர்ந்த ராணி சடாரென்று எழுந்து அவரைக் கட்டி அணைத்துக்கொண்டு அழ அந்த அறையில் அமர்ந்திருந்த மாணிக்கவேலின் சகோதரர்கள் மற்றும் சந்தோஷ் திடுக்கிட்டு அவர்கள் இருவரையும் பார்த்தனர்.

அவருடைய சகோதரர்கள் கேலி புன்னகையுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதை பார்த்த சந்தோஷ் வேதனையுடன் முகத்தை திருப்பிக்கொண்டான்.

நல்ல வேளையாக வாசலில் மணி அடித்தது.

மாணிக்கவேல் தன் மனைவியை விட்டு விலக, ராணி மீண்டும் தன் மகளுடைய புகைப்படம் வைக்கப்பட்டிருந்த மேசைக்கு அருகிலேயே தரையில் அமர்ந்தாள்.

சந்தோஷ் வாசற்கதவைத் திறந்து தனக்கு முன்பின் பரிச்சயமில்லாத இருவர் நிற்பதைப் பார்த்து திகைத்து நிற்க, ‘சந்தோஷ் அவங்கள உள்ள கூட்டிக்கிட்டு வா’ என்ற தன்னுடைய தந்தையின் குரலைக் கேட்டு கதவை விரியத்திறந்து அவர்களை உள்ளே அழைத்தான்.

‘எப்படி இருக்கீங்க சார்? எனக்கு நேத்து ஃபோன்ல கேட்டதும் கஷ்டமாயிருச்சி. இது என் வைஃப் நளினி.’ என்ற மலையாளம் கலந்த தமிழில் நந்தக்குமார் விசாரிக்க மாணிக்கவேல் இருவரையும் அழைத்துச் சென்று சோஃபாவில் அமர்த்தியவாறே தன்னுடைய சகோதரர்களைப் பார்த்தார். அவர்கள் அவருடைய பார்வையின் பொருளை புரிந்துக்கொண்டு எழுந்து மாடியை நோக்கி நகர்ந்தனர்.

நந்தக்குமார் சோஃபாவில் அமர நளினி நகர்ந்து கமலியின் புகைப்படத்தை காண மேசையை நெருங்கினாள். கமலியின் குழந்தை முகமும் உதடுகளில் பூத்திருந்த புன்னகையும் நளினியின் மனதை வெகுவாக பாதிக்க அவளும் அப்படியே தரையில் அமர்ந்து அருகில் தலைகுனிந்து அமர்ந்திருந்த ராணியின் கரங்களை ஆதரவுடன் பற்றினாள்.

ராணி தலைநிமிர்ந்து ததும்பி நின்ற கண்ணீரினூடே அவளைப் பார்த்து விசும்ப செய்வதறியாது திகைத்துப்போனாள் நளினி.

அருகிலேயே நின்றிருந்த சந்தோஷ் தன்னுடைய தாய் திடீரென்று ஏதும் வில்லங்கமாய் பேசிவிடக்கூடாதே என்ற அச்சத்தில் அவர்களிருவரிடையேயும் அமர்ந்து தன் தாயின் தோளின்மீது கையை வைத்து அழுத்தினான்.

‘She is not well aunty. Please excuse her.’ என்று நளினியிடம் கூறிவிட்டு, ‘அம்மா மதரும் சிஸ்டர்சும் பதினோரு மணிக்கு மேலதான் வருவோம்னு சொல்லியிருக்காங்க. ஃபாதர் வந்து இங்கயே பூசை வைக்கறேன்னு சொல்லியிருக்காங்க. நான் அவங்க வர்றதுக்குள்ள எல்லா ஏற்பாடும் செய்யணும். அதனால நீங்க ஒங்க ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுங்கம்மா, ப்ளீஸ்’ என்று கெஞ்சினான்.

ராணி என்ன நினைத்தாளோ நளினியைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்துவிட்டு மறுபதில் பேசாமல் மெள்ள எழுந்து தன் அறையை நோக்கி நகர்ந்தாள்.

நளினியும் எழுந்து கமலியின் புகைப்படத்தை தொட்டு வணங்கிவிட்டு நந்தக்குமார் அமர்ந்திருந்த சோஃபாவில் சென்றமர்ந்தாள். சிறிது நேர விசாரனைக்குப்பிறகு இருவரும் எழுந்து மாணிக்கவேலிடமும் சந்தோஷிடமும் விடைபெற்றுகொண்டு சென்றனர்.

அவர்களை வழியனுப்பிவிட்டு திரும்பிய மாணிக்கவேல் தன் மகனை நெருங்கி அவனுடைய தோள்களைப் பற்றினார். ‘தாங்க்யூடா சந்தோஷ்.. நீ சொன்னா மாதிரி அம்மாவ திருப்பி கூப்டது நல்லதுன்னுதான் தோனுது.. She needs a break. I think she will change for good.’

தன் தந்தையின் மனமாறுதலை முற்றிலும் எதிர்பார்க்காத சந்தோஷ் மகிழ்ச்சியுடன் திரும்பி தன் தந்தையைப் பார்த்தான். ‘Yes Dad. கமலியோட சாவு அம்மாவ நிறையவே பாதிச்சிருக்குப்பா. அவங்க நிச்சயம் மாறிடுவாங்க.’

‘Let us hope so!’

மாணிக்கவேல் தன்னுடைய அறையை நோக்கி நகர அவருடைய சகோதரர்கள் மாடியிலிருந்து இறங்கி வந்தனர்.

சந்தோஷ¤ம் அவர்களுடைய துணையுடன் பாதிரியார் வந்து வழிபாடு நடத்த வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்க துவங்கினான்.

******

‘Sorry Miss. Vandana, You may have to stay in the hospital for a few more days.. I would have discharged you today but for the high B.P.’

வந்தனாவுக்கு இப்போதே இறங்கி வீட்டுக்குச் செல்லவேண்டும் என்ற ஆசைதான். ஆனால் என்ன செய்ய?

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே அதுபோலல்லவா இருக்கிறது இந்த ரத்த கொதிப்பு!

உடம்புக்குள்ள எங்க இருக்கு, இல்ல அது இருக்கா இல்லையான்னு கூட தெரியாத ஒன்னு, மனசு. முளைய கட்டுப்படுத்தி ஒரு காரியத்த வெற்றிகரமா செய்து முடிக்கற நம்மால இந்த பாழாப் போன மனச ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவர முடியலையே.. அது மட்டும் முடிஞ்சா இந்த ரத்தக் கொதிப்பையும் கட்டுப்படுத்திரலாமே..

‘நான் இங்க இன்னும் ரெண்டு நாளைக்கு கூட இருக்கறதுனால பி.பி நார்மல் லெவலுக்கு வரும்னு எனக்கு தோனலை டாக்டர். Please don’t think that I am trying to act smart. ஆனா டாக்டர், நாள் முழுக்க பரபரப்பாருக்கற எனக்கு இந்த ஒரு நாள் படுத்தபடியே இருக்கறதுக்கே கஷ்டமாருக்கு. உடம்பு அசதியாத்தான் இருக்கு டாக்டர், இல்லேங்கலே.. ஆனா மனசு restlessஆ இருக்கே .’

மருத்துவர் அவள் கூறியதன் பொருளை உணர்ந்தவராய், ‘Shall I put you on sedatives? You would be able to sleep well.’ என்றார்.

வந்தனா வேண்டாம் என்று தலையை அசைத்தாள்.

‘As you wish.’ என்றவாறு நகர்ந்தவரை, ‘Doctor one second’ என்று தடுத்து நிறுத்தினாள் வந்தனா.

‘Yes? Tell me!’

வந்தனா தயக்கத்துடன், ‘If you could allow me to go home I promise you I will take the sedatives and take complete rest. I promise.’ என்றாள்.

மருத்துவர் சற்று யோசித்தார். ‘ஆனா ஒங்கள பாத்துக்கறதுக்கு வீட்ல யாரும் இல்லேன்னு ஒங்கள அட்மிட் செய்ய வந்த ஜெண்டில்மேன் சொன்னாரே.. If something happens.. who will take the responsibility?’

வந்தனாவால் பதில் பேசமுடியவில்லை. ஆயாசத்துடன் மீண்டும் கட்டிலில் விழுந்து கண்களை மூட மருத்துவர் அடுத்த கட்டிலை நோக்கி நகர்ந்தார்.

அவர் தன்னுடைய நோயாளிகளின் ஆய்வை முடித்துக்கொண்டு ICU வார்டை விட்டு வெளியேறவும் நந்தக்குமாரும் நளினியும் வரவும் சரியாக இருந்தது. அவர் அவர்களை பொருட்படுத்தாமல் விலகிச் செல்ல நந்தக்குமார் அவரை பின்தொடர்ந்து சென்று, ‘டாக்டர்’ என்றான்.

‘Yes?’ என்று அவர் திரும்பி அவனை பார்த்தார்.

‘Doctor I am Nandakumar, we have come from Kerala to meet Madam Vandana. The nurse is not allowing us to meet her. If you could kindly...’

மருத்துவர் அவனை மேலும் கீழும் பார்த்தார். பிறகு, ‘Come, I will speak to the nurse..’ என்றவாறு அவனுடன் சேர்ந்து வார்டை நோக்கி நடந்தார். ‘Are you her relative?’

‘No doctor. But we know her for a quite a long time.. I work in the same Bank.’

மருத்துவர் வார்டுக்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த நர்சிடம், ‘இவங்க ரெண்டு பேரையும் மிஸ்.வந்தனாவ பார்க்க பெர்மிட் பண்ணுங்க. But for not more than five minutes, OK?’ என்று கூறிவிட்டு நந்தக்குமாரையும் நளினியையும் பார்த்தார். ‘She is OK now but for high BP. It is not much but she needs complete rest. I have to retain her for a few more days as I am told she has no one to take care of her at home.’

நளினி குறுக்கிட்டு, ‘I will take care of her Doctor. We are anyway planning to stay in Chennai for a week.’ என்றாள்.

மருத்துவர் வியப்புடன் அவளைப் பார்த்தார். ‘Is it? Let me see.. Come..’

வந்தனாவின் படுக்கையை நோக்கி மருத்துவர் செல்ல நந்தக்குமாரும் நளினியும் அவரைப் பின்தொடர்ந்தனர்..

தொடரும்..

No comments: