12.7.06

சூரியன் 107

‘சார், ஆடிட் கமிட்டி மெம்பர்ஸ் ரெடியாம்.. ஒங்கள போர்ட் ரூமுக்கு வரச்சொல்றார் செக்கரட்டரி.’ என்ற தன்னுடைய காரியதரிசியின் குரல் இண்டர்காம் வழியாக ஒலித்ததும் எழுந்து தன்னுடைய கோப்புகளை எடுத்துக்கொண்டு பத்தாவது மாடியிலிருந்த இயக்குனர்கள் கூட்டம் நடைபெறும் அறைக்கு விரைந்தார் பிலிப் சுந்தரம்.

அவர் அறைக்குள் நுழைந்தபோது யாருமில்லாததால் கமிட்டி உறுப்பினர்களுடைய இருக்கைகளின் அமைப்பு மற்றும் அவரவர்களுடைய பெயர்பலகை அவரவர் இருக்கைக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் சரிபார்க்க முடிந்தது.

அவரையடுத்து வங்கியின் உயர் அதிகாரிகளான நிர்வாக இயக்குனர் சேதுமாதவன், முதன்மை பொது மேலாளர் சுந்தரலிங்கம், அவருக்கு கீழ் ஆய்வு (இன்ஸ்பெக்ஷன்) இலாக்காவில் பணி புரியும் அதிகாரிகள் அவர்களுக்கு பிறகு இயக்குனர்கள் ராஜகோபாலன் நாயர், சோமசுந்தரம், நாடார், ரிசர்வ் வங்கி இயக்குனர் சாம்பசிவம் ஆகியோர் அனைவரும் நுழைய ஆடிட் கமிட்டி கூட்டம் சாம்பசிவம் தலைமையில் துவங்கியது.

முந்தைய கூட்டத்தின் அறிக்கையை ஆய்வு இலாக்கா அதிகாரி ஒருவர் வாசிக்க அந்த கூட்டத்தில் கூறியிருந்த கட்டளைகளை செயல்படுத்திய விவரத்தை இலாக்கா தலைவர் நாராயணன் எடுத்துரைத்தார்..

‘சரிய்யா.. நாங்க சொன்னத அப்படியே பிராஞ்சுகளுக்கு சர்க்குலரா விட்டுட்டேன்னு சொல்றீங்க.. ஆனா அதும்படி நம்ம பிராஞ்சுங்க செஞ்சிருக்காங்களாங்கறத சொல்லலையே.. என்ன நாயர்?’ என்று அன்றைய விவாதத்தை துவக்கி வைத்தார் நாடார்..

‘அதானே.. எந்தா சேது மாதவன்? இது நிங்கள்ட டியூட்டியல்லே?’ என்றார் நாயர்.

இந்த டிபார்ட்மெண்ட் ஃபிலிப் சுந்தரத்தோட நேரடி பார்வையில வருது. இது தெரியாம சேம் சைட் கோல் போடறயேய்யா என்று நினைத்தார் சேதுமாதவன். அவர் சேம் சைட் கோல் என்றது அவரும் நாயரும் மலையாளிகள் என்ற கோணத்தில்.

ஆகவே கடுப்பாகிப் போன சேதுமாதவன், ‘What is this Mr.Philip.. why are you silent? Are you not in charge of the Inspection department as the CGM concerned?’ என்று எரிந்து விழுந்தார்.

சேதுமாதவன் நமட்டு சிரிப்புடன் நாடாரை பார்த்தார். நாடார் அதை கவனிக்க தவறவில்லை.

‘அய்யா எம்.டி.. ஒங்கக் கிட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க.. பிலிப் கிட்ட கேக்கற கேள்விக்கு அவர் பதில் சொல்வார்.. அவருக்கும் இருக்கு இன்னைக்கி.. சொல்லுங்க.. இதுக்கு நீங்க என்ன ஸ்டெப் எடுத்துருக்கீங்க?’

சேதுமாதவனுக்கு தர்மசங்கடமாகிப் போனது.. பத்துக்கு மேல நம்பர சொன்னா விரல் விட்டு எண்ற பய நம்மள பாத்துக்கு கேக்கறான் பார் என்று உள்ளுக்குள் கறுவியவர் வேண்டுமென்றே ஆங்கிலத்தில் பதிலுரைத்தார்.

‘ஏய்யா எம்.டி. எனக்கு எளவு இங்க்லீஷ் அவ்வளவா தெரியாதுன்னு ஒமக்கு தெரியும்லே.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால என்னடான்னா சேர்மன் ரூம்ல நம்ம டாக்டர், நம்ம பிலிப் ஐயா எல்லாருமா சேர்மன் முன்னால வச்சி இங்க்லீஷ்லயே என்னென்னவோ புளுத்தி தள்ளிட்டாங்க.. ஒரெளவும் புரியலைன்னாலும் லேசா புரிஞ்சிது.. ஏம்யா பிலிப்பு.. அந்த பாபு சுரேஷ வந்தனாவுக்கு பதிலா எச்.ஆர்ல போட்டுருக்கு.. சரிதானே..’ என்றவாறு சந்தடி சாக்கில் சோமசுந்தரத்தை வம்புக்கிழுத்தார் நாடார்.

பிலிப் சுந்தரம் சங்கடத்துடன் நாடாரைப் பார்த்தார். நீங்க சொல்றது சரிதான் என்பதுபோல் தலையை அசைத்தார். ரிசர்வ் வங்கி இயக்குனர் சாம்பசிவம் விஷயம் புரியாமல் மூவரையும் பார்த்து விழித்தார். நாயரும் அப்படியே..

சுந்தரலிங்கத்துக்கும், சேதுமாதவனுக்கும் விஷயம் ஒருவாறு விளங்க இருவரும் பிலிப் சுந்தரத்தைப் பார்த்தனர். சுந்தரலிங்கத்தின் பார்வையில் வியப்பு மட்டுமே.. சேதுமாதவன் பார்வையிலோ க்ரோதமும் சேர்ந்து.. நமக்கு தெரியாமல் இப்படியொரு டெவலப்மெண்டா என்று..

இன்னைக்கி நம்ம கதி அதோகதிதான் என்று பிலிப் சுந்தரம் நொந்துபோக இந்த கீழ்த்தரமான அரசியல் போராட்டத்தை காண நேர்ந்த மகிழ்ச்சியில் இளநிலை அதிகாரிகள்.. இன்னும் அரை மணியில் வங்கியின் சகல கிளைகளுக்கும் பரத்தியடிச்சிரமாட்டோம் என்பதுபோல் தங்களுக்குள் பார்த்துக்கொள்கின்றனர்..

சேதுமாதவன் சமாளித்துக்கொண்டு தலைமையலுவலகத்திலிருந்து முந்தைய கூட்ட முடிவுகளை செயல்படுத்த எடுத்த செயல்பாடுகளை ஒருவாரியாக யாருக்கும் விளங்காத விதத்தில் தமிழும் ஆங்கிலமும் கலந்த பாஷஇயில் எடுத்துரைக்க எல்லாம் விளங்கியதுபோல் நாடார் தலையை ஆட்டி விவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அடுத்தது ரவி பிராபாக்கரின் விசாரணை..

சேதுமாதவன் சுறுசுறுப்பானார். கடந்த ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி ரவி பிரபாக்கரைக் குறித்து காவல்துறையில் புகாரளிக்க தான் வற்புறுத்தியும் ஃபிலிப் சுந்தரம் அதை இதுவரை செயல்படுத்தவில்லை என்று கூற சாம்பசிவம்  கோபத்துடன் பிலிப் சுந்தரத்தை பார்த்தார்.

‘What is this Mr.Philip? Is it true?’

ஃபிலிப் சுந்தரம் பதற்றமடையாமல் தான் அவ்வாறு எடுத்த முடிவெடுக்க என்ன காரணம் என்பதை நாடாருக்கும் விளங்கும் வகையில் எடுத்துரைத்தார். அவருடைய பேச்சின் முடிவில் அவருடைய விளக்கத்தில் திருப்தியடையாமல் ‘எனக்கு ஒங்க விளக்கம் திருப்தியளிக்கவில்லை.’ என்றார் சாம்பசிவம் கண்டிப்புடன்.

நாடார் குறுக்கிட்டு, ‘ஐயா.. அந்த பையன எனக்கு நல்லாவே தெரியும்.. அவன் கொஞ்சம் அவசரக்குடுக்கை.. அம்புடுதேன்.. மத்தபடி தில்லுமுல்லு பண்றவன் இல்லை.. அதுக்கு இந்த ரூம்புக்குள்ளவே சில பேர் இருக்கான்வ.. அவன் மேலதான் விசாரணை போட்டுருக்கோம்லே? அத முடிப்போம்.. அதுக்கப்புறம் போலீசுக்கு போறதப்பத்தி யோசிப்போம். என்ன டாக்டரய்யா?’ என்றவாறு சோமசுந்தரத்தைப் பார்த்தார்.

அவர் ஃப்ராடு என்றது தன்னையும் சேர்த்துத்தான் என்பதை புரிந்துக்கொண்ட சோமசுந்தரம் அவருடன் தர்க்கிக்க இதுவல்ல நேரம் என்பதை உணர்ந்து, ‘நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் நாடார்..’ என்றவாறு கூட்டத் தலைவரைப் பார்த்து, ‘நாம என்க்வயரிய நடத்தி முடிச்சிட்டு இதப்பத்தி யோசிப்போம் சார்.’ என்றார்.

சோமசுந்தரமும் நாடாரும் இணைந்து ஒரு முடிவுக்கு வருவதே அபூர்வம் என்பதை அறிந்திருந்த சாம்பசிவம் ‘Ok.. As you wish’ என்றவாறு agendaவில் அடுத்ததாய் இருந்த ரவி பிரபாகருக்கு எதிராக நடக்கவிருந்த விசாரணை அதிகாரியை நியமிக்க இலாக்கா பரிந்துரைத்திருந்த பெயர்களைப் படித்தார்.

‘இதுல யார செலக்ட் பண்றதுன்னு சொல்லுங்க..’ என்றவாறு கமிட்டி உறுப்பினர்களான இயக்குனர்களைப் பார்த்தார்.

நாயர் முந்திக்கொண்டு, ‘இதுலருக்கற எல்லாருமே டி.ஜி.எம் லெவல்ல இருக்காங்களே..  ஏன்? ரவி பிரபாக்கர் வெறும் சி.எம் தானே.. அவருக்கு ஒரு லெவல் மேல  ஏ.ஜி.எம் லெவல்லருக்கற ஆளுங்களே போறுமே’ என்றார்.

அதுவும் சரிதான் என்பதுபோல் மற்ற இரு இயக்குனர்களும் பிலிப் சுந்தரத்தை பார்த்தனர். அவர் இந்த பெயர்களை பரிந்துரைத்த சேது மாதவனைப் பார்த்தார்.

சேதுமாதவன், ‘சார்.. இப்பருக்கற ஏ.ஜி.எம் லெவல்லருக்கறவங்கள்ல நிறைய பேர் மிஸ்டர் ரவியோட பேட்ச் மேட்ஸ்.. ரவிக்கு எதிரா இந்த விசாரணை இருக்கறதுனாலதான் அவருக்கு போன தடவை ப்ரொமோஷன் கிடைக்காம போயிருச்சி. அதனால..’

சுந்தரலிங்கம் குறுக்கிட்டு, ‘சார்.. மிஸ்டர் ரவிய இண்டர்வ்யூ பேனல் ஏற்கனவே ஏ.ஜி.எம் போஸ்ட்டுக்கு செலக்ட் செஞ்சிருக்கு.. இந்த இன்க்வயரி முடியறவரைக்கும் அவரோட ப்ரொமோஷன வித்ஹெல்ட் செஞ்சிருக்கு. அதையும் சொல்லுங்க..’ என சேதுமாதவன் அவருடைய குறுக்கீடை விரும்பாமல் கோபத்துடன்..

‘மிஸ்டர் சி.ஜி.எம். I know that.. Please don’t interrupt me when I am making a presentation to the committee members.’ என்று எரிந்துவிழ கமிட்டி உறுப்பினர்களும் கூட்டத் தலைவரும் திடுக்கிட்டு அவரை பார்த்தனர்.

நாடார், ‘எய்யா, ஒங்க அதிகாரிங்க சண்டையெ வெளிய வச்சுக்குங்க.. எங்க முன்னால வேணாம்.. அதுவுமில்லாம சுந்தரம் ஐயா சொல்றது நியாயயந்தானேய்யா.. அதுக்கு எதுக்கு இம்புட்டு கோவம் வருது ஒமக்கு..?’ என்றவாறு கூட்டத்தலைவரைப் பார்த்தார். ‘ஐயா இந்த விசாரணை யார் பண்ணா என்னங்க? யாரையாச்சும் போட்டு நடத்துங்கன்னு அதிகாரிங்கக் கிட்ட விட்டுருவோம்.. அதுக்குத்தானய்யா அவங்க ஒவ்வொருத்தரும் அம்பது, அருவதுன்னு சம்பளத்த வாங்கிட்டு ஒக்காந்திருக்காங்க.. என்ன நா சொல்றது..?’ என்றார்.

கூட்டத் தலைவர் மற்ற உறுப்பினர்களைப் பார்க்க அவர்களும் சரி என்று தலையை அசைத்தனர். பிலிப் சுந்தரம் நிம்மதி பெருமூச்சுடன் சுந்தரலிங்கத்தை பார்த்தார். அவர் உடனே அதிகாரிகளின் சார்பில், ‘Yes Sir.. We will nominate a person..’ பதிலளித்தார்.

சேதுமாதவன் மனதுக்குள் நாடாரைக் கறுவிக்கொண்டே தன் முன்னிருந்த கோப்பை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

கூட்டத் தலைவர் அடுத்த agenda ஐட்டத்தை பார்த்தார். CGM’s recent visit to RBI.. Report என்று இருந்ததைப் பார்த்ததும் அதன் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கையை வேகமாக ஒருமுறை வாசித்தார். பிறகு நிமிர்ந்து பிலிப் சுந்தரத்தைப் பார்த்தார்.

‘Yes Mr.Philip, is there anything else to add to your report?’

நாடார் விளங்காமல் அவரைப் பார்க்க அவர் உடனே தன்னுடைய கேள்வியை தமிழில் கூறினார்.

‘என்னய்யா அப்படி கேட்டுட்டீங்க? இதுல எழுதியிருக்கறது யாருக்கு வேணும்?’ என்றவாறு பிலிப் சுந்தரத்தைப் பார்த்தார்.

‘சொல்லுங்கய்யா.. நீங்க இதுல சொல்லியிருக்கறத நம்ம பொண்ணு இன்னைக்கி காலைல வீட்ல வச்சி படிச்சி சொல்லிருச்சி. அது இருக்கட்டும்.. இப்ப நா கேக்கேன்.. நீங்க அங்கன போயி யார பாத்தீங்க.. அவுக என்னத்த கேட்டாக, அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க.. விலாவாரியா ஒன்னு விடாம சொல்லுங்க?’

கூட்டத் தலைவரான சாம்பசிவத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை.. ‘என்ன நாடார் சொல்றீங்க? அதான் இதுல எல்லாத்தையும் சொல்லியிருக்காரே..?’

நாடார் சிரித்தார்.. ‘அய்யா.. அது ஒங்க பார்வைக்கு.. நா கேக்கறதுக்கு வேற.. சொல்லுங்க பிலிப்..’

ஃபிலிப் சுந்தரம் சங்கடத்துடன் தன் நண்பர் சுந்தரலிங்கத்தைப் பார்த்தார். அவர் நமக்கேன் வம்பு என்பதுபோல் தலையை கவிழ்த்துக்கொள்ள சேதுமாதவன் வேண்டுமென்றே, ‘என்ன மிஸ்டர் ஃபிலிப் நீங்க ரிசர்வ் பேங்குக்கு போனதுக்கு வேற ஏதாச்சும் காரணம் இருக்கா?’ என்றார்.

அவருக்கும் பிலிப் ரிசர்வ் வங்கியுடைய அழைப்பின் உண்மைக் காரணத்தை தன்னிடமிருந்து மறைத்திருக்கிறார் என்ற ஐயம் இருந்தது..

பிலிப் சுந்தரம் என்ன சார் நீங்களே என்னைய மாட்டி விடறீங்களே என்பதுபோல் நாடாரைப் பார்த்தார். அதை கவனித்த சோமசுந்தரம் குறுக்கிட்டு, ‘நாடார்.. கொஞ்சம்  வாங்களேன்.’ என்றவாறு அவரை அழைத்துக்கொண்டு ante room எனப்படும் கூட்ட அறையையொட்டி இதற்கெனவே இருந்த அறைக்குள் அவரை அழைத்துச் சென்று, ‘நாடார், நாம இதைப் பத்தி ஏற்கனவே பேசியிருக்கோம்.. அதுவுமல்லாம ஆர்.பி.ஐ டைரக்டர் முன்னால ஆர்.பி.ஐ விசிட்ல நடந்தத பத்தி பேசறது அவ்வளவு சரியில்லை.. அத்தோட மாதவன் வேற வந்து சார்ஜ் எடுத்துட்டார். இந்த நேரத்துல இத கிளறி அவர் காதுல விழுந்துட்டா நல்லாருக்காது. அதனால இத இத்தோட விட்டுருங்க.’ என்றார்.

நாடாரும் வேறு வழியில்லாமல், ‘சரிய்யா டாக்டரே.. நீரு சொல்றதும் சரிதான்.. ஆனாலும் அந்த பயல கொஞ்ச நேரம் வறுத்தெடுக்கலாம்னு பார்த்தேன்..’ என இருவரும் கூட்ட அறைக்குள் நுழைந்தனர். சேதுமாதவன் கூட்டத் தலைவரிடம், ‘Sir, shall we proceed to the next item?’ என்றார்.

அவரும் புரிந்துக்கொண்டு அடுத்த ஐட்டத்தை பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்த ISO Audit ஆய்வறிக்கை.. உற்சாகத்துடன் வேகமாக ஒரு நோட்டம் விட்டார். பிலிப் சுந்தரம் ஏற்கனவே தயாராக இருந்ததால் அவர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதிலை தயாராக வைத்திருந்தார்.

‘நீங்க சொல்றத பார்த்தா.. இந்த அறிக்கையில சொல்லியிருக்கற எல்லாமே தப்புங்கறா மாதிரி இருக்கு.. How is it possible Mr.Philip..?’

நாடார் எழுந்து நின்றார்.. ‘அய்யா இத எல்லாம் நீங்களே பாத்துக்குங்க.. நான் வெரசா நம்ம ஆஃபீஸ் வரைக்கும் போய்ட்டு எம்.சி (Management committee) க்கு டைம் ஆவும்போது வந்துடறேன்.. என்ன டாக்டரய்யா.. ஒரு மணிக்கு வச்சிக்கலாமா?’

அவரும் தன்னுடைய வாட்ச்சைப் பார்த்துவிட்டு சரியென்று தலையை அசைக்க நாடார் அவசர, அவசரமாக வெளியேறினார்..

தொடரும்..

4 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

நல்லாஇருக்கு நல்லாஇருக்கு பெரிய இடத்து மோதல்கள்...ஆனா நாடார் எழுந்து போறதுக்கு விசேஷ காரணம்
உண்டானு தெரியல்லே.....
பெர்னாந்துக்கு நல்ல திருப்பம் கிடைக்கும்னு நினைச்சேன்....
ரவி பிரபாகர் பிரச்சனையை என்கொயரி செய்யவோ அல்லது வந்தனாவை விடுவிப்பது என்பது
நிச்சயமானால்(முடியுமா என்பதுதெரியவில்லை)அந்த இடத்திற்கோ அவர் பெயர் பரிசீலிக்கப்
படுமோ? ஸாரி அவர்கள் ரேங்கிங்
எனக்கு சரியாகத் தெரியவில்லை

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

நல்லாஇருக்கு நல்லாஇருக்கு பெரிய இடத்து மோதல்கள்//

இதயும் விட கேவலமாருக்கும் சில நேரங்கள்ல..

நாடார் எழுந்து போறதுக்கு விசேஷ காரணம்
உண்டானு தெரியல்லே.....//

சாதாரணமாவே இயக்குனர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் முடிஞ்சதும் கூட்டத்துலருந்து போயிருவாங்க.. அதுக்கப்புறமும் கூட்டம் தொடரும்..

ரவி பிரபாகர் பிரச்சனையை என்கொயரி செய்யவோ அல்லது வந்தனாவை விடுவிப்பது என்பது
நிச்சயமானால்(முடியுமா என்பதுதெரியவில்லை)அந்த இடத்திற்கோ அவர் பெயர் பரிசீலிக்கப்
படுமோ?//

யாருக்கு தெரியும்.. சொல்லப் போனா எனக்கே தெரியாது:)

வந்தனா மேடம் ஜி.எம். பெர்னாந்து டி.ஜி.எம்..

siva gnanamji(#18100882083107547329) said...

சூரியன் 106 மீண்டும் படித்தேன்....
பாபு சுரேஷ் டாக்டரின் சாய்ஸ். சேதுமாதவனுக்கு தெரியாது...
நாடாருக்குப் பிடிக்காது...
(எஸ்.பி என்ன செய்வார் என்பது வேறு இருக்கு)....வேடிக்கைதான்

டிபிஆர்.ஜோசப் said...

பாபு சுரேஷ் டாக்டரின் சாய்ஸ். சேதுமாதவனுக்கு தெரியாது...
நாடாருக்குப் பிடிக்காது...
(எஸ்.பி என்ன செய்வார் என்பது வேறு இருக்கு)....வேடிக்கைதான்//

இப்படி மேல் மட்டத்துலருக்கறவங்க ஒவ்வொருத்தரும் அடிச்சிக்கிட்டு நின்னா நிறுவனம் எப்படி உருப்படும்.. இப்படித்தான் நிறைய நிறுவனங்கள்ல நடக்குது..