இது என்னுடைய நூறாவது பதிவு!
நேரடியாக பயிற்சி அதிகாரியாக (Trainee Officer) பணியில் சேர்ந்து தலைகால் தெரியாமல் ஆடி சீரழிந்து போன ரவி.
***
ரவி பிரபாகர் தன் மேசையில் திறந்தபடி கிடந்த உரையையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ..
‘சார் உங்கள சி.ஜி.எம் கூப்டறார் .’
கனவிலிருந்து விழித்தவன்போல் தன் முன்னால் நின்றுக் கொண்டிருந்த பியூனைப் பார்த்தான்.
‘என்ன சோமு?’
சோமு பரிதாபத்துடன் அவனையே பார்த்தான். இந்த சாருக்கென்ன தலையெழுத்தா? பாக்கறதுக்கு ராஜா மாதிரி இருந்துக்கிட்டு இந்த பாழாப் போன குடியால சீர்கெட்டு.. வீட்ல என்ன பிரச்சினையோ.. எளவோ..
‘சுந்தரம் சார் உங்கள கூப்டறார் சார்.’
‘யாரு சி.ஜி.எம்மா?’
‘ஆமா சார். ’
‘சரி நீ போ.’ என்றவன் அவன் சென்றதும் தன் மேசையிலிருந்த உறையை எடுத்து இழுப்பில் வைத்து பூட்டினான். எழுந்து அவனிருந்த நான்காம் தளத்தின் கோடியிலிருந்த டாய்லெட்டை நோக்கி ஓடினான். சுவரில் தொங்கிய கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து அடுத்த நொடியே ஒரு மாதமாய் சவரம் செய்யாமலிருந்த தாடியும் மீசையுமாய் இருந்த முகத்தைப் பார்க்க சகிக்காமல் வாஷ்பேசனில் தலையைக் கவிழ்த்து முகத்தைக் கழுவி அருகில் கொழுவியிருந்த பூத்துவாலையில் அழுந்து துடைத்தான்.
அவனையுமறியாமல் துவாலையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு சில நிமிடங்கள் குலுங்கிக் குலுங்கி அழுதான். பிறகு வெளியே யாரோ வரும் காலடியோசைக் கேட்க முகத்தைத் துடைத்துக் கொண்டு தலையைக் கோதிவிட்டுக் கொண்டு சி.ஜி.எம் காபினை நோக்கி நடந்தான்.
அவன் அவருடைய அறையை அடைந்தபோது, ‘உள்ளே விசிட்டர்ஸ் இருக்காங்க ரவி சார். கொஞ்சம் ஃப்ரண்ட் காபின்ல வெய்ட் பண்ணுங்க, நான் கூப்பிடறேன்.’ என்ற அவருடைய காரியதரிசி ராஜி கூற சரி என்று கூறிவிட்டு அங்கிருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து காத்திருந்தான்.
***
ஒரு மேலை நாட்டு நிறுவனத்தில் மிகப் பெரிய பதவியிலிருந்த ரவியின் தந்தையும் அவனுடைய தாயும் அவனுடைய குழந்தைப் பருவத்திலேயே ஒரு வாகன விபத்தில் அகால மரணமடைந்துவிட அவனுடைய திருமணமாகாத சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்தான்.
அவனுடைய தந்தை எடுத்திருந்த காப்பீட்டு தொகையும் அவனுடைய தந்தையின் நிறுவனத்திலிருந்துகிடைத்த தாராளமான நஷ்ட ஈட்டுத் தொகை அவன் வளர்ந்து ஆளாக எந்தவித தடையுமில்லாமல் உதவியது.
சென்னையிலிருந்த மிகப் பிரபலாமான ஆண்கள் கல்லுரியில் பி.காம் (ஹானர்ஸ்) படித்து பட்டம் பெற்றான். அவன் முடித்த வருடத்தின் சென்னைப் பல்கலைக் கழக காமர்ஸ் ராங்க் லிஸ்டில் மூன்றாம் இடத்தைப் பிடித்து கல்லூரி முழுவதிலும் பிரபலமடைந்தான். அதன் பிறகு சி.ஏ. முடித்தான்.
சி.ஏ முடித்த அடுத்த இரண்டு மாதங்களில் செய்தித்தாளில் வந்த வங்கி விளம்பரத்தைப் பார்த்துவிட்டு ‘சும்மா அப்ளைப் பண்ணிப் பாக்கலாமே’ என்று நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பிக்க உடனே அழைப்பு வந்தது.
அவனே எதிர்ப்பாராமல் நுழைவுத் தேர்வில் முதலாவதாக அவன் வந்தான். அதன் பிறகு நேர்முகக் காணல் வெற்றியுடன் முடிந்து அடுத்த இரண்டு மாதத்தில் கணிசமான துவக்க ஊதியத்துடன் பயிற்சி அதிகாரியாக வேலையும் கிடைத்தது.
படித்து முடித்தவுடனே தனக்கு வேலை கிடைத்தது தன்னுடைய படிப்பும், தனக்கிருந்த அபிரிதமான திறமையும்தான் என்று ஆரம்பத்திலிருந்தே நினைத்தான் ரவி.
ஆனாலும் முதல் நான்கைந்து ஆண்டுகள் வரை தன்னுடைய வேலையிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து வங்கி சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் கரைத்துக் குடித்தான். தன்னுடைய வேலையை மட்டுமல்லாமல் தன் சக அதிகாரிகளின் வேலயையும் சில சமயங்களில் தன் கீழ் பணிபுரிந்தவர்களின் வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து தான் இல்லாவிட்டால் தன்னுடைய மேலாளரால் கிளையை இயக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கினான்.
சுபாவத்திலேயே மனத்துணிச்சல் நிறைந்த ரவியால் யாரும் எடுக்க முடியாத முடிவுகளைத் துணிச்சலுடன் மிகவும் எளிதாக எடுக்க முடிந்தது. அத்தகைய முடிவுகளில் அவன் அபார வெற்றியும் அடைந்து உயர் அதிகாரிகளுடைய கவனத்தை ஈர்த்தான்.
அவன் பணிக்கு சேர்ந்த சமயத்தில் வங்கித் துறையில் ஏற்பட்ட பிரமிக்கத்தக்க வளர்ச்சி மிகக் குறுகியக் காலத்திலேயே அவனையும் ஒரு கிளையின் மேலாளர் அந்தஸ்த்திற்கு உயர்த்தியது.
முதல் கிளையில் மூன்றாண்டுகளில் அவன் சாதித்த அபார சாதனை அவனுக்கு யாரும் எதிர்ப்பாராத பாராட்டுகளையும் விருதுகளையும் அள்ளித் தந்ததுடன் வங்கித் தலைவரின் நேரடி பார்வையும் அவன் மேல் விழுந்தது!
ஒரு முறை அவன் மேலாளராக இருந்த கிளைக்கு விஜயம் செய்த வங்கித் தலைவர் அவனுடைய வேலைத்திறன் மற்றும் வாடிக்கையாளர்களைக் கவர அவன் எடுத்திருந்த முடிவுகளை எல்லோரு முன்பிலும் வெகுவாகப் பாராட்டியதுடன் அடுத்த இரண்டு மாதங்களில் அவனை சென்ன¨யிலிருந்த மிக முக்கியமான கிளைக்கு மேலாளராக மாற்றவும் செய்தார்.
அங்கும் அவனுடைய அபிரிதமான திறமை வெளிப்படவே அடுத்து வந்த Fast Track பதவி உயர்வில் கிளை மேலாளர் பதவியிலிருந்து முதன்மை மேலாளர் (Chief Manager) பதவிக்கு அவனுடைய 35வது வயதிலேயே உயர்த்தப்பட்டான்.
இதற்கிடையில் அவனுடைய ஒரே உறவினராகவிருந்த அவனுடைய சிற்றன்னையும் வயதான காலத்தில் மரிக்கவே, அதுவரை திருமணத்தைப் பற்றியே சிந்தித்திராத ரவி தன்னுடைய இடைக்கால கனவு நடந்துவிட்ட திருப்தியில் தன் திருமணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
அதுவரை வேலை, வேலை என்று அலைந்தவன் காதல் என்ற ஒரு வார்த்தயையே அறியாதிருந்தான். எப்போதும் சிடு, சிடுவென்று அதிகார தொணியில் பேசிப் பழகிப் போன அவனுக்கு ஆண், பெண் என்று யாரையும் பிரித்துப் பார்க்கவே தெரிந்ததில்லை.
அவனைப் பார்த்தாலே சிம்மத்தைப் பார்ப்பதைப் போல் உணர்ந்த அவனுக்குக் கீழ் பணி புரிந்தவர்கள் அவன் சிரிக்கவோ அல்லது அன்பு செய்யவோ லாயக்கில்லாதவன் என்று நினைத்தனர்.
அந்தச் சூழ்நிலையில் அவன் அளித்திருந்த பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து அவனுக்கு மனைவியான மஞ்சுளா திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ‘சே, இருந்திருந்து ஒரு மிஷினையா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.’ என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.
‘இங்க பார் மஞ்சு.. என்னோட ஃபர்ஸ்ட வொய்ஃப் என் கேரியர்தான். அப்புறம்தான் நீ.’ என்று அவளைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அவன் தெளிவாகத்தான் கூறினான். ஆனால் அப்போது, ‘இது எல்லா ஆம்பிளைங்களும் சொல்றதுதானே.. ஃபர்ஸ்ட நைட் முடியட்டும். அப்புறம் பாக்கலாம் யார் ஃபர்ஸ்ட் வொய்ஃபுன்னு என்று தான் நினைத்தது எத்தனை முட்டாள்தனம் என்று நொந்துப் போனாள் மஞ்சு..
அவரகளுடைய முதல் இரவிலேயே வெகுத் தெளிவாக தன்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி அவளிடம் கூறினான் ரவி. ‘மஞ்சு இந்த குழந்தை, கிழந்தை சமாச்சாரமெல்லாம் அடுத்த அஞ்சு வருஷத்துக்கு பேசவே கூடாது. நான் ஒரு டி.ஜி.எம் ராங்குக்கு வரணும். ஒரு மூனு பெட் ரூம் ஃப்ளாட் சொந்தமா, அதாவது பேங்குல கடன் ஏதும் போடாம வாங்கணும். அப்புறம் இப்ப இருக்கற மாருதி கார தூக்கியெறிஞ்சிட்டு சூப்பரா ஒரு கார் வாங்கணும். அப்புறம்தான் எல்லாமே.. அதுவரைக்கும் நம்ம ரெண்டு பேரும் வேலை, வேலை, வேலைன்னுதான் யோசிக்கணும்.’
அப்போதும் அவள் சரி, இப்ப இப்படித்தான் பேசுவார்.. போகப் போக எல்லாம் சரியாயிடும், தன் வழிக்கு வந்துவிடுவான் என்றுதான் நினைத்தாள்..
ஆனால் நாளடைவில் அவள்தான் அவனுடைய போக்குக்கு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டி வந்ததே ஒழிய அவன் மாறவே இல்லை..
வேலை, வேலை, வேலை.. பிசினஸ், பிசினஸ், பிசினஸ். இதுதான் இரவும் பகலும் அவனுக்கு சிந்தனையாய் இருந்தது....
அவளுடன் உடலுறவு கொள்வதும் அவனுடைய வேலகளில் ஒன்றாகத்தான் அவன் நினைத்ததைப் பார்த்து நொந்துப் போனாள் மஞ்சுளா. அவளுக்கும் அவனைப் போலவே சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லாததால் யாரிடம் சொல்லி என்ன பயன் என்று அவனை அவன் போக்கிலேயே விட்டுவிட வேண்டியதாயிற்று.
முதன்மை மேலாளராக பதவி உயர்வு பெற்றதிலிருந்தே அவனுடைய வங்கி வர்த்தகத்தைப் பெருக்கும் முறையிலும் பெரிதும் மாறிப் போனான் ரவி. தன்னுடைய அந்தஸ்த்திற்கு மீறிய வாடிக்கையாளர்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தான். அவர்களுடைய நட்பு கிடைக்க வேண்டும், அதன் மூலம் அவர்களுடைய வணிகத் தொடர்பு தன்னுடைய கிளைக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு முக்கிய காரணமாயிருந்தது.
அந்த பாதையில், செல்வந்தர்களாகிய அவர்களுடைய பாதையிலேயே அவனும் செல்ல நேரிட்டது. வரவுக்கு மீறி செலவு செய்து அவர்களை விருந்துபசாரம் செய்ய ஆரம்பித்தான். அவன் ஏற்படுத்திக் கொண்டு பத்து சிநேகத்தில் ஐந்த பேர்களுடைய தொடர்பாவது அவனுடைய வங்கி வணிக முன்னேற்றத்திற்கு உதவவே அதே அபாயகரமான பாதையில் செல்ல ஆரம்பித்தான்.
அப்போதுதான் முதன் முறையாக அவன் முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் அத்தகைய நண்பர் ஒருவரால் ஏமாற்றப்பட்டான்..
அதுவரை மிகக் கவனமாக கட்டியெழுப்பிய அவனுடைய அலுவலக வாழ்க்கை என்னும் கற்கோட்டை வெறும் சீட்டுக்கட்டு கோட்டையாக அவன் கண் முன்பே சரிந்து விழுந்தது...
தொடரும்..
2 comments:
ஐயோ பாவம் ரவி. ரொம்ப சோகமா இருக்கு சார். படிக்கவே கஷ்டமா இருக்கு.
வாங்க ராகவன்,
ரவியைப் போன்று திறமைசாலிகளான இளம் அதிகாரிகள் பல பேர் மோசமான சகவாசத்தால் ஏமாற்றப்பட்டு சீரழிந்து போயிருக்கிறார்கள். இதைப் போன்ற கதாபாத்திரங்கள் ஒன்றிரண்டு பேர் கதையோட்டத்தில் இனியும் வருவார்கள்.
Post a Comment