8.2.06

சூரியன் 21

அதுவரை மிகக் கவனமாக கட்டியெழுப்பிய அவனுடைய அலுவலக வாழ்க்கை என்னும் கற்கோட்டை வெறும் சீட்டுக்கட்டு கோட்டையாக அவன் கண் முன்பே சரிந்து விழுந்தது...

‘ரவி சார்..’ என்ற குரல் கேட்டு தன் நினைவுகளிலிருந்து மீண்ட ரவி தன் எதிரே நின்ற ராஜியைப் பார்த்தான்.

‘என்னங்க, சார் ஃப்ரீயா?’

சி.ஜி.எம். பிலிப் சுந்தரத்தின் காரியதரிசி ராஜி அவனைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள். ‘அதச் சொல்லத்தான் வந்தேன் ரவி சார்.. நீங்க ஏதோ யோசனையில இருந்தீங்க. நான் வந்து நின்னதக் கூட பாக்காம...’

‘ஒன்னுமில்லைங்க.. எல்லாம் என் முட்டாள்தனத்த பத்தித் தான்..’

ராஜி அமைதியுடன் அவனைப் பார்த்தாள். ‘சார் இன்னும் ஃப்ரீயாவலை.. இன்னும் பத்து பதினைஞ்சி நிமிஷம் ஆவும்னு நினைக்கிறேன். நீங்க வேணும்னா உங்க சீட்டுக்கு போங்க சார். நான் சார் ஃப்ரீயானதும் சோமுக் கிட்ட சொல்லியனுப்பறேன்.’

ரவி அவளைப் பார்க்காமல் தலை குனிந்தவாறே, ‘இட் ஈஸ் ஓக்கே ராஜி. நான் இங்கயே வெய்ட் பண்றேன். நீங்க போய் உங்க வேலைய பாருங்க.’ என்றான்.

ஆனால் அவள் போகாமல் அவனெதிரில் இருந்த டீப்பாயில் லேசாக அமர்ந்துக் கொள்வதைப் பார்த்த ரவி நிமிர்ந்து அவளை சோகத்துடன் பார்த்தான்.

‘நான் எப்படி ஏமாந்து நிக்கறேன் பாத்தீங்களா ராஜி?’

‘நானும் கேள்விப்பட்டேன் சார். தற்செயலா நேத்து மேடத்த பாண்டி பஜார்ல பாத்தாப்பவே உங்கள நினைச்சிக்கிட்டேன். கூடவே அந்த பையனும் வந்திருந்தான். என்ன அக்கிரமம் சார்? அந்த பையனுக்கும் மேடத்துக்கும் வயசு வித்தியாசம் நிறைய இருக்கும் போலருக்குதே..’

ரவி திடுக்கிட்டு அவளை நிமிர்ந்துப் பார்த்தான். பிறகு சோகத்துடன் ‘இல்லை’ என்பதுபோல் தலையை அசைத்தான். ‘ நீங்க அத சொல்றீங்களா?’ என்றான். ‘நான் சொல்ல வந்தது வேற.’

‘சே.. ஒரு வேளை இவருக்கு அந்த விஷயமே தெரியாதோ.. நாந்தான் முந்திரிக் கொட்டை மாதிரி உளறிக் கொட்டிட்டேனோ.. ஏற்கனவே வேலை விஷயத்துல தப்பு பண்ணிட்டு முளிச்சிக்கிட்டிருக்கார்... நான் வேற.. என்னத்தையோ சொல்லி..’ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டாள் ராஜி..

‘சாரி சார்... நான் வந்து...’ என்று தடுமாறியவளை ஒரு மெல்லிய சோகப் புன்னகையுடன் பார்த்தான் ரவி.

‘நீங்க மஞ்சுவ பத்தி சொல்ல வந்தீங்களா? அவங்க என்ன ஏமாத்துல ராஜி.. இதுவரைக்கும் காத்திருந்துட்டு இனியும் ஏமாந்துப் போக விருப்பமில்லாமத்தான் அவங்களே ஒரு வாழ்க்கைய தேடிக்கிட்டு போய்ட்டாங்க..’

ராஜி திகைப்புடன் அவனையே பார்த்தாள். எத்தனை நல்ல மனசு இவனுக்கு! இவனுடைய வெளித்தோற்றம்தான் முரடு.. பலாப்பழம் மாதிரி.. இவனை நெருங்கி வந்தால்தான் இவனுடைய அழகான உள் மனம் புரியும் போலருக்குது.. இவனோட சந்தோஷத்தையும் வெற்றியையும் பங்குப் போட்டுக் கொண்டு மகிழ்ந்திருந்தவள் இப்போது இவனுடைய தோல்வியிலும் துக்கத்திலும் எனக்கு பங்கில்லை  என்பதுபோல் இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லையென்பதுபோல் தனக்கென ஒரு வாழ்க்கை, சீ, வாழ்க்கையா அது? தன்னைவிட பத்து வயதுக்கும் கீழ் இருக்கும் ஒரு இளைஞனுடன் ஓடிப் போய்... சே.. கேவலம்!

‘நீங்க எப்படி சார்.. அவங்களோட துரோகத்த.. இவ்வளவு ஈசியா..’

ரவி பதில் சொல்லாமல் எதிரே மாட்டப்பட்டிருந்த அழகான வேலைப்பாடுகள் நிறைந்த மஞ்சள் நிற ஃப்ரேமினுள் இருந்து மர்ம புன்னகையுடன் தன்னைப் பார்த்த மோனோலிசாவையே பார்த்தான்.

எத்தனை அழகான புன்னகை? அதன் பின்னால்தான் எத்தனை மர்மங்கள்? சோகத்திலும் ஒரு தனி இன்பம் இருக்கிறதே.. அதைப் போன்றதொரு புன்னகையா.. இந்த நேரத்திலும் அதைப் பார்க்கும்போது ஒரு இனம் புரியாத நிம்மதி, ஒரு ஆறுதல், லேசா ஒரு சந்தோஷம்.. மனசுல தோனுதே..

‘சார்...’

லேசான, தாற்காலிகமான, சந்தோஷத்தை மனதுக்குள் உணர்ந்துக் கொண்டிருந்தவன் அது கலைந்து.. நிமிர்ந்து, தன் முன் இருந்தவளைப் பார்த்தான்..

‘இத துரோகம்னு பார்த்தா துரோகம்தான்... ஆனா அத நான் அப்படி பார்த்து பயனில்லை ராஜி. அவங்கள நான் கல்யாணம் பண்ணதுலருந்து அவங்கள என்னுடைய ரெண்டாவது மனைவியாத்தான் பார்த்தேன். என்னோட கேரியர்தான் என்னோட முதல் மனைவின்னு அவங்கள கல்யாணம் பண்ண அன்னைக்கே அவங்கக் கிட்ட சொன்னேன். அப்போ அவங்க அத சீரியசா எடுத்துக்கலைன்னு நினைக்கிறேன்.. ஆனா போகப் போக அவங்களுக்கு அது தெளிவா புரிய ஆரம்பிச்சிருக்கு.. போன நாலஞ்சு வருஷமாவே நானும் அவங்களும் வெறும் பேருக்குத்தான் புருஷன் பெஞ்சாதியா வாழ்ந்துக்கிட்டிருக்கோம் ராஜி.. ஜஸ்ட் ஃபார் தி அவுட்சைட் வேர்ல்ட்.. எனக்கு கேரியர்ல ஏற்பட்ட வெற்றிகள்ல, என்னோட சந்தோஷத்துல, அவங்களுக்கு என்னைக்குமே நான் பங்கு கொடுத்ததில்ல.. அதனாலதான் இப்ப உங்களுக்கு ஏற்பட்டிருக்கற தோல்வியில... அதனால ஏற்பட்ட துக்கத்துல மட்டும் எனக்கெதுக்குங்க பங்குன்னு என்ன கேக்கறா மாதிரி போய்ட்டாங்க..’

ராஜி ஒன்றும் பேசாமல் அவனையே பார்த்தாள். சிறிது நேரம் அறையிலிருந்த அலங்கார கடிகாரத்தின் இனிமையான டிக், டிக் ஒலியைத் தவிர அறை நிசப்தமாயிருந்தது..

சிஜிஎம் இருந்த காபினைத் தவிர அத்தளத்தில் வேறு எந்த அறைகளும் இல்லாததால் அவருடைய அழைப்பின்றி யாரும் அத்தளத்தில் பிரவேசிக்கலாகாது என்பது அலுவலக நியதி.

‘ஆனா ஒன்னுங்க. துக்கத்த யார்கிட்டயும் பங்கு போட்டுக்காம தனியா, அமைதியா யாருமே இல்லாத வீட்டுல தரையில உக்காந்துக் கிட்டு கையில ஒரு பெக் விஸ்க்கியோட அசை போடற சந்தோஷம் இருக்கே.. at times I get lost in my own sorrowful world. இப்ப நான் இருக்கற நிலமைக்கு நான் மட்டுந்தான் ராஜி காரணம்..  மஞ்சுவோ இல்ல என்னை ஏமாத்திட்டோம்னு நினைச்சி தன்னையும் ஏமாத்திக்கிட்டிருக்கானே அந்த சேட்டுப் பய அவனோ இல்லே..’

கிர்ர்ர்ர்ர்.. என்ற சி.ஜி.எம் அறையின் அழைப்பு மணி ஒலிக்கவே திடுக்கிட்டு எழுந்து அவருடைய அறையை நோக்கி ஓடினாள் ராஜி..

அறையிலிருந்து வெளியேறிய ஜி.எம் வந்தனா மேடத்திற்கு வழிவிட்டு அறைக்குள் நுழைந்த ராஜி.. ‘ரவி சார் வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கார் சார்.’ என்றாள் பணிவுடன்.

சிறிது நேரம் பதிலொன்றும் கூறாமல் அவளையே பார்த்த பிலிப் சுந்தரம் தன் எதிரே மேசையின் மேல் இருந்த அழகிய சிறு கடிகாரத்தைப் பார்த்தார். ‘வரச் சொல்லுங்க, ராஜி.’ என்றவர் அறைக்கதவை மூட முயன்ற காரியதரிசியை நிறுத்தி, ‘அவர் இங்கருந்து போற வரைக்கும் யார் வந்தாலும் காத்திருக்க சொல்லுங்க.’ என்றார்.

‘யெஸ் சார்.’ என்ற ராஜி முன் அறையிலிருந்து எழுந்து வந்து தன் இருக்கையின் முன் நின்றுக் கொண்டிருந்த ரவியைப் பார்த்து, ‘போங்க சார்.. சார் கூப்டறார்.’ என்றாள்.

‘தாங்க்ஸ் ராஜி..’ என்றான் ரவி..

‘எதுக்கு சார்?’

‘எல்லாத்துக்கும் தான். தயவு செய்து மஞ்சுவைப் பார்த்தத மறந்துருங்க..’

அவளுக்குப் புரிந்தது. ‘கண்டிப்பா சார்.’ என்றவள் அவன் அறைக்குள் சென்று கதவை அடைக்கும் வரை பார்த்துக் கொண்டு நின்றாள்.

பிறகு ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன் இருக்கைக்கு திரும்பினாள்.

கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்த ரவியின் தோற்றத்தைப் பார்த்து பிலிப் சுந்தரம் தன்னையுமறியாமல் வேதனை அடைந்தார்.

ரவி முதன் முதலாக வங்கியில் கடை நிலை அதிகாரியாக பணியில் சேர்ந்தது அவர் மேலாளராக இருந்த கிளையில்தான்.

அதற்குப் பிறகு அவன் பணியில் சேர்ந்த அதே கிளைக்கே முதன்மை மேலாளராக பதவி உயர்வு பெற்றபோது அவர் அக்கிளை அமைந்திருந்த வட்டாரத்திற்கு வட்டார மேலாளராக இருந்தார்.

அவனுடைய வளர்ச்சியைத் தொடர்ந்து கவனித்து வந்த பிலிப் அவனுடைய வளர்ச்சியைக் கண்டு ஒரு வட்டார மேலாளராக, ஒரு பொது மேலாளராக மகிழ்ச்சியடைந்தாலும் அவன் அவ்வெற்றிகளைப் பெற கையாண்ட முறைகளைக் கேள்விப்பட்டபோது வேதனை அடைந்திருக்கிறார். அதற்காகவே அவனை சந்திக்க ஏற்பட்ட சந்தர்பந்தங்களில் எல்லாம் அவனுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். ஆனால் வெற்றியின் போதையில் இருந்த ரவி அவருடைய முகத்திற்கெதிராகவே அவருடைய அறிவுரைகள் தனக்கு தேவையற்றவை என்பதைக் காண்பித்திருக்கிறான்.

அவன் பழக்க தோஷத்தால் குடி போதைக்கு அடிமையாகி காலையில் படுக்கையிலிருந்து எழும்போதே குடி போதையில்தான் எழுந்திருக்கிறான் என்று அவனுடைய மனைவி புகார் கூறுவதற்கெனவே அவரைத் தேடி வந்தபோது, ‘I am sorry Mrs. Manjula, he is beyond redemption. அவராவே இந்த குழப்பத்திலருந்து வெளி வரணும்.. அது ஒன்னுதான் வழி.. என்னால அவருக்காக பிரார்த்திக்கத்தான் முடியும். வேணும்னா ஒன்னு பண்ணலாம். நீங்க அவர எப்படியாவது கம்பெல் பண்ணி எங்க சர்ச்சுலருக்கற Alcohol Anonymousங்கற அமைப்பு கூட்டத்துக்கு கூட்டிக்கிட்டு வாங்க.. they will try to redeem him from this evil என்று கூறியதை இப்போது நினைத்துப் பார்த்தார்.

‘வாங்க ரவி.. உக்காருங்க.’

ரவி அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்து அவரை நிமிர்ந்து பார்க்க துணிவில்லாமல் குனிந்தவாறே இருந்தான்..

‘இப்ப என்ன பண்றதா உத்தேசம், ரவி?’

‘அதான் சஸ்பென்ஷன் ஆர்டர் செர்வ் பண்ணிட்டீங்களே சார்.. இப்ப வேற என்ன நான் பண்ண முடியும்?’ என்று மேலே தொடர முடியாமல் தலை குனிந்தவாறே குலுங்கிக் குலுங்கி அழுதவனை தடை செய்யாமல் அமைதியுடன் அழுது தீர்க்கட்டும் என்று காத்திருந்தார் சுந்தரம்..

அவனுடைய துயரத்திற்கு பின்னணி ஓலி போலிருந்தது  அவருடைய மேசையிலிருந்த கடிகாரத்தின் டிக், டிக் ஒலி..


தொடரும்

No comments: