13.2.06

சூரியன் 23

இடம்: மும்பை பாலி ஹில்ஸ் - ----- வங்கியின் உயர் அதிகாரிகளின் காலனி.

பதினைந்தாவது மாடியில் அமைந்திருந்த நான்கு படுக்கையறைகளைக் கொண்ட குடியிருப்பு.

நாள்: ஞாயிற்றுக்கிழமை..

சாதாரணமாகவே ஞாயிற்றுக் கிழமைகளில் மாதவனின் வீட்டிலிருந்த அனைவருமே, காலை பத்து மணிக்கு முன்பு எழுந்து பழக்கமில்லை..

சனிக்கிழமை இரவுகளில் பார்ட்டி இல்லாத வாரமே இருந்ததில்லையென்பதால் ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டிலுள்ள எல்லோருக்குமே ப்ரஞ்ச் (breakfast + lunch) சமைப்பதுதான் வழக்கம்..

அது வீட்டில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேல் சமையல் வேலை பார்த்து வந்த சிவகாமி மாமிக்கும் நன்றாகத் தெரியும்.

சிவகாமி மாமி அந்த வீட்டிற்கு திருமணம் முடிந்து ஒரே வருடத்தில் பூவையும் பொட்டையும் இழந்து இருபத்து மூன்று வயதில் வந்தவள்.. மாதவனுக்கோ.. அல்லது சரோஜாவுக்கோ எந்த உறவும் இல்லை.. இருந்தாலும் அவள் அந்த வீட்டிலிருந்த எல்லோருக்கும் ‘மாமி’தான்..

சொந்த ஊர் கும்பகோணம்.. பிராம்ணாள் குலம்.. வீட்டிற்கு வந்த புதிதில் அசைவத்தைப் பார்த்தபோது குமட்டிக் கொண்டு வந்தது.. ‘இந்த வீட்ல எப்படிறாப்பா குப்பைய கொட்டப் போறேன்னு’ மலைத்துப் போவாள்.. பிறகு போகப் போக அதுவே பழகிப் போய் இப்போது மாமி வைக்கும் சிக்கன் வறுவல் அந்த காலனியிலேயே மிகவும் பிரபலம்!

அவள் வந்த போது வீட்டிலிருந்த பத்துவயது வத்ஸலாவையும் ஐந்து வயது சீனிவாசனையும் தன் குழந்தைகளைப் போல் வளர்த்தாள்.. ‘சரோஜாம்மா என்னைக்கி வீட்ல இருதிருக்கா.. இந்த பிள்ளைகள பார்த்துக்கறதுக்கு.. ரெண்டுமே என்னத்தான் அம்மான்னு கூப்டும்.. சின்ன வயசுல.. இப்பத்தான் சரோஜாம்மாவுக்கு பயந்துக்கிட்டு மாமின்னு கூப்டுதுங்க..’ என்பாள் தன்னுடைய சக வேலையாட்களிடம்..

தினமும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து குளித்து.. பூஜையறைக்குள் நுழைந்து பொதுவாய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு சமையலறைக்குள் நுழைவாள்..

அடுத்த பத்து நிமிடத்தில் ஆவி பறக்கும் காப்பியுடன் வரவேற்பறையையொட்டி இருந்த மாதவன் அறைக்கதவைத் தட்டுவாள்..

அவளுடைய முதல் தட்டிலேயே கதவு திறந்துக் கொள்ளும்.. அறையிலிருந்த குறு மேசையில் வைத்துவிட்டு மாதவன் குளியலறையிலிருந்து வரும் வரைக் காத்திருக்காமல் வெளியேறிவிடுவாள்..

மாதவன் அடுத்த பதினைந்து நிமிடங்களில் காப்பியைக் குடித்துவிட்டு டீ ஷர்ட், அரை நிஜார் கோலத்தில் கையில் டென்னிஸ் மட்டைகளுடன் கிளம்பினால் சரியாக எட்டு மணிக்கு திரும்பி வந்து குளித்து காலைப் பலகாரத்தை முடித்துக் கொண்டு அலுவலகம் கிளம்பி செல்வார்..

அதற்கப்புறம்தான் வீட்டிலிருந்த மற்றவர்கள் ஒருவர் ஒருவராக அவரவர் படுக்கையறையிலிருந்து இறங்கி கீழே வருவார்கள்..

அதாவது, வார நாட்களில்...

ஞாயிற்றுக் கிழமைகளில் காலைக் காப்பியோ பலகாரமோ யாருக்குமே தேவையிருக்காது..

ஆனாலும் சிவகாமி காப்பி மட்டும் எல்லோருக்கும் தயாரித்து ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்துவிட்டு.. தானும் ஒரு வாய் ஊற்றிக் கொண்டு பகலுணவு வேலையை ஆரம்பித்து காலை பத்து மணிக்கு முன்பே எல்லாவற்றையும் முடித்து உணவு மேசையில் உணவுப் பாத்திரங்களைப் பரப்பி வைத்துவிட்டு கிளம்பிவிடுவாள்..

மாதவனின் குடும்பம் மும்பையில் வசிக்க துவங்கிய கடந்த பத்து வருடங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் அவளுடைய மாத்துங்கா விநாயகர் கோவில் விசிட் மட்டும் என்றும் தவறியதே இல்லை..

அப்படியே அருகில் இருந்த முதியோர் இல்லத்திற்கும் போய்விட்டு மாலை ஐந்து மணிக்குள் வீடு திரும்பிவிடுவாள்..

இன்றும் அப்படித்தான்..

அலாரம் அடிக்காமலே சரியாக ஐந்து மணிக்கு எழுந்து தன்னுடைய வழக்கமான குளியல்.. பூஜை இத்யாதிகளை முடித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தவளை வரவேற்றது ‘கிர்’ என்ற காப்பி மேக்கரின் ஓசை..

பக்கத்தில் மாதவன்..

ஆச்சரியத்துடன் தன்னைப் பார்த்த மாமியைப் பார்த்து புன்னகையுடன் ‘குட் மார்னிங்.. மாமி..’ என்றார்..

‘என்ன தம்பி.. இன்னைக்கி ஞாயிற்றுக் கிழமை தானே..’ என்றவளைப் பார்த்து புன்னகை மாறாமல்.. ‘இன்னைக்கி காப்பி மட்டும்தான் மாமி.. காலை பலகாரம் கூட செய்ய வேணாம்..’ என்றார்.

சிவகாமி மாமி ஒன்றும் புரியாமல் அவரையே நிமிர்ந்து பார்த்தாள். என்ன சொல்றார்? ஒன்னும் புரியலையே.. குடும்பத்தோட வெளிய எங்காச்சும் போறாளோ... ஆனா இவர் மட்டும்னா வந்து நிக்கறார்.. சரோஜா.. பிள்ளைங்க யாரையும் காணோம்?

அவளுடைய சிந்தனைகளைப் புரிந்துக்கொண்டவர்போல், ‘ஆமாம் மாமி.. நீங்க நினைக்கறது சரிதான்..சரோஜாவும்.. பிள்ளைகளுமா சேர்ந்து வெளிய போலாம்னு பாக்கறோம்.. இன்னைக்கித்தானே மும்பையில கடைசிநாள்.. பகலுக்கு மேல சென்னை புறப்பட்டு போறோம் இல்லையா.. அதான்.. கோவிலுக்கு போய்ட்டு அப்படியே ப்ரேக்ஃபாஸ்ட்டையும் முடிச்சிக்கிட்டு வரலாம்னு.. ஒரு ஐடியா.. நீங்களும் எங்க கூடவே வந்துருங்க.. நீங்க போற அதே கோவிலுக்குத்தான் போலாம்னு இருக்கோம்..’

இவருக்கு நான் மனசுல நினைக்கறது எப்படித் தெரிஞ்சது.. இந்த மாயத்தை எப்ப படிச்சார் இவர்.. என்று யோசித்தாள் சிவகாமி..

திகைத்து நின்ற மாமியின் பார்வையைப் பொருட்படுத்தாத மாதவன் ‘நீங்க காப்பிய போட்டு டேபிள்ல கொண்டு வைங்க.. நான் சரோஜாவையும் பிள்ளைங்களையும் எழுப்பி கூட்டிக்கிட்டு வரேன்..’ என்று கூறிவிட்டு வரவேற்பறை கோடியிலிருந்த மாடிப்படிகளில் ஏறினார்..

போகும்போதே சரோஜாவிடமும் பிள்ளைகளிடமும் என்ன சொல்ல வேண்டும், அவர்களுடைய ரியாக்ஷன் நெகட்டிவாக இருக்கும் பட்சத்தில் எப்படி சமாளிக்க வேண்டும் என்று தனக்குள்ளே ஒரு ரிகர்சல் பார்த்துக் கொண்டார்.

முதலில் சரோஜா..

வாரத்தில் எந்த நாளானாலும், இரவு எத்தனை மணிக்கு உறங்க சென்றாலும், காலையில் ஆறு மணிக்குள் எழுந்துவிடுவாள் சரோஜா..

ஆனாலும் மாதவன் அலுவலகத்திற்கு கிளம்பி செல்லும்வரை தன்னுடைய அறையிலிருந்து இறங்கி வர மாட்டாள். அதற்கு காரணம் இருந்தது..

காலை நேரத்தில் மாதவனுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அன்று அலுவலகத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையிலேயே இருப்பார். அந்த நேரத்தில் யாரும் அவருடயை சிந்தனையோட்டத்தைத் தடை செய்துவிடக்கூடாது.கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். அப்புறம் நாள் முழுவதும் டென்ஷன்தான்.

சிவகாமி மாமிக்கு மட்டும் அதிலிருந்து விதி விலக்கு.. அவர் எந்த மனநிலையில் இருந்தாலும் அவள் குறுக்கிட்டு காப்பிய குடிச்சிட்டு வேலைய பாருங்கோ..' அல்லது 'சாப்பிட்டுட்டு ஆபீஸ் போனாப் போறும் என்று என்ன சொன்னாலும் மாதவன் ஒன்றும் மறு பேச்சு பேசாமல் செய்துவிடுவார்.. அவள்மேல் அவர் அத்தனை மரியாதை வைத்திருந்தார்.. தன்னை விட ஐந்தே வயது மூத்திருந்த மாமியை தன் மூத்த சகோதரியைப் போல நடத்துவார். சரோஜாவும் அதைக் கண்டுக்கொள்ள மாட்டாள்.. ஆனால் அவளுக்கு மாமி ஒரு சாதாரண சமையல்காரிதான்.. அது மாமிக்கும் தெரியும்..

மாதவன் சரோஜாவின் படுக்கையறைக் கதவை லேசாகத் தட்டியவுடனே.. ‘யார்..?’ என்றது அதிகாரத்துடன் கூடிய அவளுடையக் குரல்..

‘சரோ நாந்தான்..’ என்ற மாதவனின் குரலைக் கேட்டு வியப்புடன் அடுத்த விநாடியே கதவைத் திறந்தாள் சரோஜா.

தன் எதிரே குளித்து முடித்து வேட்டி சட்டையுடன் நின்ற தன் கணவரை வியப்புடன் பார்த்தாள்..

என்னாச்சி இவருக்கு... நேத்து நடுராத்திரி விஸ்கி பாட்டிலும் கையுமா இருந்தவர் இன்னைக்கி புது வேட்டியும், சட்டையுமா.. நெத்தியில வேற சந்தணப் பொட்டு.. என்னைக்குமில்லாம பூஜையும் பண்ணியிருப்பார் போல..

‘என்ன அப்படி பாக்கறே சரோ.. நானேதான்..’

சரோஜா லேசான புன்னகையுடன்.. ‘தெரியுதுங்க.. ஆனா இந்த கோலம் எதுக்குன்னுதான் தெரியல.. அதான் முளிச்சிக்கிட்டு நிக்கேன்..’ என்றாள்..

மாதவன் அறைக்குள் நுழைந்து.. கட்டிலை விட்டு சற்றுத் தள்ளியிருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தார்.. பிறகு வாயிலருகே நின்றவாறு தன்னையே வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த தன் மனைவையைப் பார்த்தார்.

‘சரோ.. வா, இங்க வந்து ஒரு ரெண்டு நிமிஷம் உக்கார்.. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..’

என்ன பேசப்போறார்.. நேத்தைக்கு ராத்திரி பேசறேன் ஆரம்பிச்சி.. என்று ஓடிய சிந்தனையை ஒதுக்கிவிட்டு சென்று அவரருகில் அமர்ந்தாள் சரோஜா..

அவள் சென்று அமர்ந்ததும் அவளுடைய கரங்களை எடுத்து தன் கரங்களில் பொதிந்துக்கொண்டார் மாதவன்..

வெகு நாட்களுக்குப் பிறகு.. ஏன் பல மாதங்கள் என்று கூடச் சொல்லலாம்.. அவருடைய ஸ்பரிசம் பட்டதும்.. திடுக்கிட்டு அவருடயை முகத்தைப் பார்த்தாள் சரோஜா..

‘நேத்தைக்கி ராத்திரி நீங்கல்லாம் படுக்கப் போனதுக்கப்புறம் தோனுன யோசனை இது.. இன்னைக்கி காலைல நாம எல்லாரும் குடும்பமா மாதுங்கா விநாயகர் கோவிலுக்கு போய்வரலாம்னு.. அதான் காலையிலேயே எழுந்து.. என்ன சரோ.. நீ என்ன சொல்றே..?’

சரோஜாவுக்கு ஒரு புறம் சந்தோஷமாகவும் மறுபுறம் இதுக்கு பின்னால வேற ஏதும் ப்ளான் வச்சிருப்பாரோ என்றும் தோன்றியது..

இருப்பினும் அவரைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்தாள்.. ‘நல்ல யோசனைதான்.. நம்ம ரெண்டு பேரும் சரி.. வத்சுவும்.. சிரீனியும் வேணுமா.. அதுங்க தூங்க போனப்பவே ரெண்டு மணியாயிருச்சி..’

மாதவன் குறுக்கிட்டு.. ‘அத நா பாத்துக்கறேன்.. நீ போய் குளிச்சிட்டு ரெடியாவு.. நா இப்ப வரேன்..’ என்று மகிழ்ச்சியுடன் எழுந்து செல்வதைப் பார்த்தவாறே அமர்ந்திருந்த அவன் பார்வையிலிருந்து மறைந்ததும் எழுந்து அறைக்குள்ளேயே இருந்த குளியலறையை நோக்கிச் சென்றாள்..

அடுத்தது வத்ஸலா..

தொடரும்..




No comments: