21.2.06

சூரியன் 27

சிலுவை மாணிக்கம் நாடாரின் சொகுசுக் கார் மதுரை எல்லைக்குள்  நுழைந்தபோதுதான் பின் இருக்கையின் குறுக்கே படுத்து உறங்கிக்கொண்டிருந்த நாடார் கண் விழித்து, ‘என்னடா மந்திரச் சாமி, ஊர் வந்துருச்சா?’ என்றார்.

முதலாளி கோபத்துலருக்கறப்பத்தான் நம்ம பேருக்கிடையில  ‘ச்’ சேர்த்து மந்திரச்சாமிம்பார். இப்ப என்ன கோவமோ தெரியலையே என்று நினைத்தான் மந்திர சாமி. ‘ஆமாங்கய்யா.. வர்ற வழியில மேலூர்ல ஒரு வேனும் காரும் மோதி ஆக்சிடெண்ட்டாயிருச்சி போலருக்குய்யா. அதான் டிராஃபிக் கொஞ்சம் ஜாஸ்தியாயிருச்சி.’ என்றான் தயக்கத்துடன்.

‘ஆம்மா.. இல்லன்னா அஞ்சு மணி நேரத்துல கொண்டு வந்திருவியளாக்கும். சரி.. சரி.. வீட்டுக்கு போன் போட்டு வென்னி போட்டு வைக்க சொன்னியளா?’ என்று நக்கலுடன் பதிலளித்த முதலாளியை ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தான் மந்திரம்.

‘இல்லய்யா.. தோ இப்ப சொல்லிடறேன்.’

‘ஆமா.’ என்றார் சலித்துக்கொண்டார் நாடார். ‘எல்லாத்துக்கும் ஒரு இல்லய்யா சொல்லிரு..’

பதற்றத்தில் அவன் ஸ்டீயரிங்கில் இருந்து ஒரு கையை எடுத்து முதலாளியின் வீட்டு எண்ணை டயல் செய்ய எரிந்து விழுந்தார் நாடார். ‘எலேய் மடச்சாமி.. ஒனக்கு எத்தனை முறைதாம்லே சொல்றது. போய்க்கிட்டிருக்கறப்ப போன் போடாதேன்னு.. ஓரத்துல நிறுத்திட்டு செஞ்சா ஒரு மணி நேரமாயிரப்போவுது? நீ பாட்டுக்கிட்டு போன்ல பேசறேன்னு எதுத்தாப்பல வர்ற லாரியில விடறதுக்கா.. இன்னும் வாழ்க்கையில ச்சாதிக்கறது நிறைய இருக்குலே.. ஒன்ன மாதிரியா..’

மந்திர சாமியின் பதற்றம் அதிகமாக இடது புற சிக்னல் இடாமல்  சாலையோரம் ஒதுங்கினான்.  பின்னால் வேகத்துடன் வந்துக்கொண்டிருந்த சரக்கு வேன் சிரமத்துடன் நாடாருடைய காரில் மோதிவிடாமலிருக்க வண்டியை விலக்கியோட்டி அவனைக் கடக்கும்போது கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு செல்ல.. ‘எலே மந்திரம், ஒனக்கு இன்னைக்கி முளிச்ச நேரம் சரியில்லப் போலருக்கு.. பாத்துலே, வேற ஏதாச்சும் வம்புல மாட்டிக்கறதுக்குள்ள ஒளுங்கா வீடு போய் ச்சேருவோம். போன் போட்டுட்டு கிளம்பு..’ என்றார் மாணிக்கம் நாடார்.

‘நம்ம எங்க தூங்குனோம்.. முளிக்கறதுக்கு. அப்படியேன்னாலும் இவர் முகத்துலதான முளிச்சிருக்கோம்.. இன்னைக்கி உருப்பட்டாப்பலதான்..’ என்று முனகிக்கொண்டே வீட்டுக்கு ஃபோன் செய்துவிட்டு வண்டியைக் கிளப்பி அடுத்த அரைமணியில் ஞானஒளிப்புறத்திலிருந்த நாடார் வீட்டையடைந்தான்..

***

‘என்னங்க இப்பத்தான் வந்தீக, குளிச்சீக.. ஒரு வா காப்பியமட்டும் குடிச்சிட்டு கிளம்பிட்டீக.. வீட்ல பொண்ணு வந்து நின்னு மாசம் ஒன்னாவுது.. அதப்பத்தி ஒன்னும் கேக்கக் காணோம். வீட்டு நெனப்பு இருக்கா இல்லையா?’

எரிச்சலுடன் தன் மனைவையை திரும்பிப் பார்த்தார் நாடார்.

‘ஏண்டி எனக்கென்ன கண்ணு தெரியாமயா இருக்கு? இப்பம் என்ன பண்ணணும்கற?’

‘மாப்ளை வீட்டுக்கு போய்ட்டு வரேன்னுதான கெளம்புனீக.. வந்ததும் நீங்களாவயே சொல்லுவீகன்னு நா ஒருத்தி நின்னுக்கிட்டிருக்கன்.. நீங்க என்னடான்னா சாவக்காசமா என்ன பண்ணணும்கறங்கறீக.. அங்கிட்டு போனியளா இல்லையா?’

நாடார் என்ன சொல்வதென தெரியாமல் ஒரு நிமிடம் தன் மனைவியையே பார்த்தார். என்னத்த சொல்றது? போவலேன்னு சொல்லிரலாமா? அந்த பொம்பள பொறுக்கிப் பயல ஒரு வேற சாதி பொண்ணோட பாத்தேன்னு சொல்லி.. இவ பொலம்பல ஆரம்பிச்சிட்டான்னா நமக்கிருக்கற  வெளி வேலல்ல கெட்டுப் போயிரும்? தொலி நிறத்தப் பாத்துல்ல கட்டுனீக.. ச்சினிமா கீரோ மாதிரி இருக்கான்.. கட்டுனா இவனத்தான் கட்டுறேன்னு சொல்றா எம்பொண்ணுன்னு நீதானடி பல்ல இளிச்சிக்கிட்டு சொன்னே.. .. அதான் நாளுக்கு ஒருத்தியோட சுத்தறான். என்ன என்னத்தையே பண்ண சொல்றீக? அனுபவிங்க.. இதே எந்தங்கச்சி பயல கட்டியிருந்தீன்னா ராணி மாதிரி கையில ஏந்தியிருப்பான். கருஞ்சட்டிப் பயன்னீக.. இப்ப அவன பாரு.. ராணி மாதிரி ஒரு பொண்ண கட்டிக்கிட்டு ராசா மாதிரி இருக்கான்..

‘என்ன நா ஒருத்தி இங்க கேட்டுக்கிட்டு நிக்கேன் நீங்க மோட்டு வளைய பாத்துக்கிட்டு நிக்கீக?’

நாடார் திரும்பி தன் மனைவியைப் பார்த்தார். அவளுக்கு பின்னால் சமையலறை வாசலில் தன்னுடைய திரண்ட சொத்துக்கு ஒரே வாரிசான மகள் ராசம்மா நிற்பதையும் பார்த்தார். பொண்ண கண்ணுக்குத் தெரியறாப்பல கொடுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க? அப்பன் சொன்ன பேச்ச கேட்டிருந்தா இந்த பொல்லாப்பு வந்துருக்குமாடி மவளே..

‘எனக்கிருந்த சோலியில இது மறந்தே போச்சிடி.. நம்ம பேங்குல புது ச்சேர்மன் வராகயில்ல? அந்த சோலியில மாப்ள வீட்டுக்கு போணும்கறத மறந்தே போய்ட்டேன். நீ ஒன்னும் கவலப்படாத ராசம்மா.. நான் இன்னைக்கி ராத்திரியே பொறப்பட்டு போலாம்னுதான வந்திருக்கேன். நேத்து ராத்திரிதான் இங்கன ஒரு சோலின்னு ஃபோன் வந்துதேன்னு அங்கனருக்கற வேலைய அப்படியே போட்டத போட்டபடி போட்டுட்டு ப்ளசர எடுத்துக்கிட்டு வந்துட்டேன். அதுக்காகத்தான் இப்ப போறேன்.. வந்து பேசிக்கலாம்.. ஏய் ராசாத்தி, நீ வேற அவள போட்டு கொடஞ்செடுக்காம உன் சோலி களுதைய பாரு.. பேரப்பய தூங்கறானாக்கும்.. தூங்கட்டும்.. தூங்கட்டும். ஒரு ரெண்டு மணி நேரத்துல வந்து.. கொஞ்சம் தலைய சாச்சாத்தான் ராத்திரி மறுபடியும் போமுடியும் போலருக்கு. அந்த பாளாப்போன ப்ளசரு சீட்டுல படுத்தா எளவு தூக்கமா வருது? கார் புதுசாருந்து என்ன பண்றது? ரோடையா போட்றுக்கானுவ.. கல்ல போட்டு ரோட்ட போட்டா ரோடு ரோடா இருக்கும்.. வெறும் களிமண்ண மிதிச்சில்ல போடறானுக.. லட்சம் லட்சமா டாக்சு கட்றவனும் அதுலதான் போறோம்.. டாக்சே கட்டாத களவாணிப் பயலுவளும் அதுலதான் போறானுக..’

மூச்சு விடாமல் அவர் பேசிக்கொண்டே போனதிலும் ஒரு டெக்னிக் இருக்கிறது.. அது அவருடைய மனைவி ராசாத்தியின் புலம்பலிலிருந்து தப்பிக்க அவர் அடிக்கடி உபயோகிக்கும் உக்தி அது..

அவர் பேசி முடித்துவிட்டு வாசலை நோக்கி நடக்க.. ‘மதிய சாப்பாட்டுக்கு வருவியளா?’ என்ற அவருடைய மனைவியின் குரல் தடுத்து நிறுத்தியது.

ஆமா இவ வைக்கிற மூத்திரம் மாதிரி கொளம்ப திங்கறதுக்குத்தான் மெட்றாஸ்லருந்து ப்ளசர போட்டுக்கிட்டு வந்தமாக்கும்.. ‘இல்லம்மா, போற எடத்துல கிடைக்கறத தின்னுக்க வேண்டியதுதான்.. நீ புள்ளைக்கு வேணுங்கறத பொங்கிப் போடு..’ என்றவாறு இனியும் தாமதிப்பது ஆபத்து என்ற நினைப்புடன் வாசலில் நின்ற தன் வாகனத்தை நோக்கி விரைந்தார் நாடார்.

அவர் மதுரையிலிருக்கும்போது உபயோகப்படுத்தும் அம்பாசடர் காரின் டிரைவர் அமிர்தராஜ் அவருக்கு கதவை பணிவுடன் திறந்துக் கொண்டு நின்றான்.

‘என்ன அமிர்தம் எங்க போவணும்னு தெரியுமா?’ என்றவரைப் பார்த்து, ‘தெரியலீங்கய்யா. சொன்னா போயிரலாம்.’ என்றான்.

நாடார் கேலியுடன் அவனைப் பார்த்தார். ‘நல்லா பேச கத்துக்கிட்டீங்கலே.. சரி சரி. வண்டிய எடு.. அப்படியே காரியாப்பட்டி ரூட்ல ஓட்டு.. நம்ம பங்காளி ரத்தினவேல் வீட்டுக்கு ஒரு நட போய்ட்டு வந்துருவோம்.’

அமிர்தராஜ் அவர் வாகனத்தின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்ததும் ஓடிப்போய் டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை முடுக்கினான்..

கார் மதுரை எல்லையைத் தாண்டியதும் கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்து அமர்ந்தவரின் கண்களினுள்ளே தெரிந்தது சென்னை வீதியில் வேறொரு பெண்ணுடன் கைக்கோர்த்துக்கொண்டு சென்ற அவருடைய மாப்பிள்ளையின் முகம்.

அவர் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் மதுரை மேலமாசி வீதியில்  சிறியதாய் ஒரு காப்பி மற்றும் டிபன் க்ளப் திறந்திருந்த நேரத்தில் அவருடைய கடையில் சமையற்காரனாய் வந்து சேர்ந்தவர் ரத்தினவேல். அவருடைய மாப்பிள்ளை ராசேந்திரனின் தந்தை. அவருடைய சம்மந்தி.

அவருடைய கைமணமும் மாணிக்கத்தின் நல்ல நேரமும் அடுத்த ஒரே வருடத்தில் காபி க்ளப் சிற்றுண்டி கடையாக பிரபலமடைந்தது. அடுத்திருந்த காப்பி கடைகள் இரவு பதினோரு மணிக்கு மூடிவிட மாணிக்கத்தின் கடை மட்டும் விடிய விடிய திறந்திருந்ததால் பூ மற்றும் பால் வியாபாரிகளும் அன்றாடம் மதுரையில் வந்து போகும் லாரி டிரைவர்களும் விடியற்காலையில் வந்து தாகசாந்தியை தீர்த்துக் கொள்ளும் புகலிடமாக மாறியது..

மாணிக்கத்திற்கு போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. மதுரை அண்ணா பேருந்து நிலையத்திற்கு நேரெதிரில் பலதரப்பட்ட கடைகளை நடத்திக் கொண்டிருந்தவர்களை அன்றைய ஆளுங்கட்சியின் மதுரை வட்ட செயலாளரின் அடியாட்கள் துணையுடன் பலவந்தமாக காலி செய்ய வைத்து அடிமாட்டு விலையில் கிரயம் செய்து அமைச்சர் ஒருவரின் கையால் மாணிக்கவேல் (மாணிக்கம் + ரத்தினவேல்)  லஞ்ச் ஹோம் என்ற பெயரில்  ஒரு முழுஅளவு உணவகத்தை திறக்க வைத்தது அவருடைய இந்த இது போறும் என்ற திருப்தியடையாத மனநிலைதான்.

அடுத்த இரண்டு வருடங்களில் மதுரை பெரியார் பேருந்து நிலைய வளாகத்திற்கு நேரெதிரில், அரசரடி, ரயிலடி சமீபம் என்று திசைக்கு ஒரு கிளையாக திறந்து மதுரை நகரையே வளைத்துப் போட்டும் திருப்தியடையவில்லை மாணிக்கம். மாணிக்கம், மாணிக்க நாடாராக மற்றவர்களால் பெயர் சூட்டப்பட்டது இந்த காலக்கட்டத்தில்தான்.

மதுரை ரயிலடி கிளை திறக்கப்பட்ட சமயம். அவருடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்ட அவருடைய பழைய காலத்து சகாக்கள் அவருடைய ஊழியர்களை சங்கம் அமைக்க தூண்டுவதை தன்னுடைய அடியாட்கள் வழியாகக் கேள்வியுற்ற நாடார் அவர்களுடைய கோரிக்கைகள் என்னென்னவென்பதை அதே அடியாட்கள் வழியாக கேட்டறிந்தார்.

அவர்கள் கோருவதாய் நினைத்திருந்த கோரிக்கைகளில் முக்கியமானவற்றை பட்டியலிட்டு அதைச் செயல்படுத்த தனக்காகும் செலவு என்ன என்று தனியாய் அமர்ந்து கணக்கிட்டார்.

அடுத்த இரண்டு நாட்களில் தாமாகவே முன்வந்து தன் ஊழியர்களில் வயதில் மூத்தவர் மூவரை அழைத்து தான் செயல்படுத்த நினைத்திருந்த சலுகைகளை அறிவித்தார்.

தொடரும்..







5 comments:

G.Ragavan said...

போதும் என்ற மனம் அமைவது மிகக் கடினம். ஆதிலும் பண விஷ்ச்யத்தில்? வாய்ப்பு மிகக் குறைவு. மாணிக்க நாடாருக்குத் திறமையும் இருந்திருக்கிறது. அரசியல் செல்வாக்கும் இருந்திருக்கிறது..அள்ளி முடித்துக் கொண்டார். ஆனால் பெற்றோர் செஇவது பிள்ளைகல் தலையில் என்று சொல்வார்கல். பாவம்...அவருடைய மகள் கஷ்ட்டப் படுகிறாள். உருவத்தை வைத்து மட்டும் ஆளை எடை போடக் கூடாது என்பதும் முழு உண்மை.

டிபிஆர்.ஜோசப் said...

உருவத்தை வைத்து மட்டும் ஆளை எடை போடக் கூடாது என்பதும் முழு உண்மை.//

ஆமாம் ராகவன். நம்முடைய சில சமயம் பாசிட்டிவ் ஆகவும் இருக்கும் நெகட்டிவ் ஆகவும் இருக்கும்.

என்னுடைய நிஜ வாழ்வில் பண்ணையாரை முதல் முதல் சந்தித்தபோது இவரிடமிருந்து என்ன கிடைக்கப்போகிறதென நினைத்தேன்.ஆனால் என்னுடைய தஞ்சை கிளையின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் ஒருவராய் அவர் இருந்தார். வேறொருவரை மிக நம்பிக்கையானவர் என்று நினைத்தேன். அவர் என்னை சமயம் பார்த்து காலை வாரிவிட்டார். அது மாதிரிதான் இதுவும்..

டிபிஆர்.ஜோசப் said...

ராகவன்,

நம்முடைய 'கணிப்பு' என்று இருக்க வேண்டும்..

டிபிஆர்

பழூர் கார்த்தி said...

வணக்கம் ஜோசப் சார், ரொம்ப நாட்கள் கழித்து உங்கள் பதிவுக்கு வந்தபோது, பிறந்த வீட்டுக்கு வந்த புதுமணப்பெண் போல் குதுகாலமடைந்தேன்.. ஊரிலிருந்து வந்து 10 நாட்களாகி விட்டாலும் உங்கள் பதிவிற்கு உடனே வராததற்கு காரணம் என் பெயரிலேயே
உள்ளது :-))

****

// உருவத்தை வைத்து மட்டும் ஆளை எடை போடக் கூடாது //
இருப்பினும் சில சமயங்களில் உருவம் நமக்கு ஓர் குறிப்பை உணர்த்தும் !!

*****

மாணிக்கம் நாடார் அரசியலில் இருந்தால் இன்னும் பிரபலமாயிருக்கலாம்.. (நான் இன்னும் கடந்த வார பதிவுகளை படிக்க வில்லை)...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க சோ.பையன்,

உங்களுக்கு பெயர்ல மட்டும்தான் சோம்பல் இருக்கு. எனக்கு உடம்பு முழுசும்..

சரி, மெதுவாவே படிங்க..

நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்கன்னு தெரியலை..

நம்ம நாடாரோட மகள் ராசம்மா சோகத்துக்கு ஒரு கவிதை எழுதுங்களேன். ராசேந்திரனின் வெள்ளை நிறத்தைப் பார்த்து ஆசைப்பட்டு திருமணம் செய்துக்கொண்டவள்..

தன் அத்தையின் மகன் செல்வரத்தினம் கறுப்பாக இருக்கிறானே என்பதற்காக மறுத்தவள்..

கறுப்பு நிறத்தவன் வெள்ளை மனதுடனும் வெள்ளை நிறத்தவன் கறுத்த மனதுடனும் இருப்பது ஏமாந்துபோனதும்தான் தெரிகிறது அவளுக்கு..

இப்போது கணவனைப் பிரிந்து வாழ்கிறாள்..

இதுதான் தீம்.. உங்க கற்பனையை தட்டிவிடுங்களேன்.. இன்னும் சுமார் ரெண்டு மூனு பதிவுக்கப்புறம் போடலாம்..