ரத்தினவேலுவுக்கு சுருக்கென்றது... படுபாவிப்பய நாம ரகஸ்யமா செஞ்சது இவனுக்கெப்படி தெரிஞ்சது? இல்ல சும்மாட்டியும் நூல் விட்டு பாக்கறானா? இருக்கும்.. இருக்கும்.. ரத்தினவேலுவா கொக்கா.. அவனாவே கேக்கட்டும்.. அதுவரைக்கும் மூச்சு விடப்படாது..
மாணிக்க நாடார் வரவேற்பறைக்குள் நுழைந்து சுற்றிலும் பார்த்தார். எலேய் ரத்திணம்.. பரவால்லை.. ஒனக்கும் டேஸ்ட் இருக்கு. மெட்றாஸ்லருந்து ஆளுங்கள கொன்னாந்து டெக்கரேஷனெல்லாம் பண்ணிருக்கே போலருக்கு.. ஹ¥ம்.. இது எல்லாத்துக்கும் காரணமாயிருந்த எனக்கு நீ வேட்டு வைக்கற அளவுக்கு வந்துட்டே.. யார் செயிக்கறான்னு பொறுத்திருந்து பாருலே.... என்றார் மனதுக்குள்.
வெகு சாக்கிரதையாக இவனையும் இவனுடைய புத்திரனையும் கையாளவேண்டும். மயிரிழைத் தப்பினாலும் மறுபடியும் துளுத்துக்குவான். அடிக்கற அடி யார் அடிச்சான்னு தெரியாத்த மாதிரி பின்மண்டையில அடிக்கணும். அம்மா அய்யோன்னு அலர்ற சத்தம்கூட யார் காதுலயும் விழப்படாது.. அடிக்கறேண்டா.. அடிக்கறேன்.. அடிக்கற அடியில அப்பனும் புள்ளயும் அப்படியே அமுங்கிப்போயிரணும்..
‘சொல்லுய்யா, எப்படி இருக்கே.. மாப்பிள்ள பட்டணத்துல எப்படி இருக்கார்? முந்தா நாளு மெட்றாசுக்கு போறேன்னு சொன்னப்போ ராசம்மா அவரப்பார்த்து பேசிட்டு வாங்கப்பான்னு சொன்னா.. ஆனா பாரு, நம்ம பேங்க் சேர்மன் விஷயமா அவ சொன்னத அப்படியே மறந்துபோய்ட்டேன் எளவு.. வீட்டுக்கு வந்ததும் ஆத்தாளும் பொண்ணும் ஒரே புலம்பல்.. அதான் உன்ன பார்த்துட்டு விஷயம் தெரிஞ்சிக்கிட்டு போலாம்னு வந்த காலோட ஓடி வந்துருக்கேன். சொல்லுய்யா.. என்ன பண்ணலாம்னு இருக்கார் மாப்பிள்ளை..?’
ரத்திணவேலு சந்தேகத்துடன் நாடாரை ஓரக்கண்ணால் பார்த்தார். என்ன சொல்ல வாரான்? உண்மையிலேயே பொண்ணோட விஷயத்த பேச வந்துருக்கானா இல்லா ராசேந்திரன் ரெண்டு நாளைக்கு முன்னால நம்மக்கிட்ட பேசுன விஷயத்தை தெரிஞ்சி வச்சிக்கிட்டு நூல்விட்டு பாக்கறானா.. பூடகமாவே பேசறானே.. நாமளும் அப்படியே பேசுனா?
‘அவனுக்கென்ன சம்மந்தி, அப்பன் சம்பாதிச்சி வச்ச சொத்து ரெண்டு தலைமுறைக்கு போறும்லே.. அத எப்படி அளிக்கறதுன்னு ப்ளான் பண்ணிக்கிட்டு எவ பின்னாலயாவது சுத்திக்கிட்டிருப்பான். வேற என்னத்த புதுச்சா செஞ்சி கிளிச்சிரப்போறான்? அவனோட சில்லறைத்தனம் தெரிஞ்சும் நீங்க போய் பொண்ண கொடுத்தீங்க பாருங்க.. உங்கள சொல்லணும்.. பேசாம நம்ம செல்வத்துக்கே கொடுத்திருக்கலாம்..’
நாடார் வியப்புடன் தன்னுடைய சம்மந்தியைத் திரும்பிப் பார்த்தார். அட பார்றா! கரண்டிய புடிச்சி சமையல்காரனா வந்து நின்னவன பார்ட்னராக்கி இந்தா புடிறான்னு நா போட்ட பிச்சை.. இவன் ரெண்டு தலைமுறைக்கு சொத்து சேர்த்துட்டானாம்லே.. எலேய் ரத்தினம்.. அந்த ரெண்டு தலைமுறைன்னு சொன்னீயே அதயே இல்லாம ஆக்கிட்டா.. அப்புறம் எவன் வந்து உன் சொத்த அனுபவிக்கறது? நாதாரிப்பயலே.. ஒன்ன திருப்பி அந்த கரண்டி புடிக்கற வேலைக்கே அனுப்பறேண்டா.. பார்த்துக்கிட்டே இரு..
‘என்னங்க சம்மந்தி நா சொல்றது சரிதானே.. இப்ப எதுக்கு அந்த எளவெடுத்தவன பத்தி பேச்சு? நா சொல்றத கேளுங்க.. பேசாம ராசம்மாவ விட்டு ஒரு விவாகரத்து நோட்டீஸ் குடுங்க.. பயல கைகழுவிட்டுட்டீங்கன்னாத்தான் மவளுக்கு விடிவுகாலம் பொறக்கும்.. என்னடா பெத்த அப்பனே இப்படி சொல்றானேன்னு நினைக்காதீங்க. என்னால ஆனமட்டும் சொல்லிப்பாத்துட்டேன்.. அவன் கேக்கறாப்பல தெரியலே..’
நாடார் அவருடைய முகத்தைப் பார்த்தால் உள்ளே குமுறிக்கொண்டிருக்கிற தன்னுடைய உணர்வுகள் தன்னுடைய முகத்தில் தெரிந்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்து நேரெதிரே சுவரில் மாட்டப்பட்டிருந்த விலையுயர்ந்த ஓவியத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். படுபாவிப்பய. கொறஞ்சது ரெண்டு மூனு லகரத்த கொட்டி வாங்கியிருப்பான் போல..! காசோட அருமை ஒம்பையனுக்குத்தான் தெரியலன்னு நெனச்சேன்.. ஒம் பரம்பரைக்கு இந்த அலங்காரம் தேவையாடா...?
‘சரிய்யா. ராசம்மாக்கிட்ட சொல்லிப் பாக்கறேன். அப்புறம் அவ என்ன நினைக்கிறாளோ அதும்படி செய்வோம். அதிருக்கட்டும். நான் பட்டணத்துலருக்கறப்போ நம்ம வக்கீல் ஒரு விஷயம் சொன்னாரு. அதப்பத்தி பேசுவமா?’
ரத்தினவேலுவுக்கு சுருக்கென்றது. அது சரி.. நீ விஷயத்த தெரிஞ்சிக்கிட்டுத்தான் வந்திருக்கே. இனி என்ன, வாண வேடிக்கைதான். பயலே ராசேந்திரா.. நீ என்னமோ ரகச்சியமா வச்சிருக்கேம்ப்பா மாமாவுக்கு வைச்சிருக்கற வேட்டு வெடிக்கறப்பத்தான் அவருக்கே தெரியும்னே... அது சரி, நீ எத சரிய்யா செஞ்சிருக்கே, இத செய்யறதுக்கு?
‘என்ன சம்மந்தி சொல்றீக? ஒன்னும் புரியலையே..? என்னத்த கேள்விப்பட்டீக?’
நாடார் திரும்பி தன்னுடைய பவர்ஃபுல் கண்களால் ரத்தினவேலுவைப் பார்த்தார். ரத்தினவேலு அவருடைய பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் குனிந்துக்கொண்டார்.
‘அதான்யா நம்ம பேங்குல நீயும் ஒம் பையனும் ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தீங்களே... அத வித்ட்றா பண்ணிக்கறோம்னு நோட்டீஸ் குடுத்திருக்கீங்களாமேய்யா.. அதுல ஒன்னோட கையெழுத்தும் இருக்குன்னு வக்கீல் நேர்ல பார்த்துட்டு வந்து சொல்றாரு.. நீ என்னடான்னா ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கே..?’
ரத்தினவேலு அதிர்ச்சியில் உறைந்துபோய் நாடாரையே பார்த்தார். அடப்பாவி மவனே.. அந்த நோட்டிஸ் கெடச்சதும் இவன்கிட்ட சொல்லாமயே பேங்க்காரங்க ஓவர்டிராப்ட் கணக்க நிறுத்திப் புடுவாங்கப்பான்னு சொன்னியேடா.. இப்படி அவனுங்க இவனுங்கக்கிட்டயே நம்ம நோட்டீச காமிச்சிருவாங்கன்னு சொன்னியாடா..? ஒன்ன நம்பி இதுல எறங்குனேம்பாரு எம்புத்திய..
‘என்ன ரத்தினம்? ஒன்னும் பேச முடியலே இல்லே.. ஒன்னால முடியாது.. சரி.. எப்ப நீ இந்த முடிவுக்கு வந்திட்டியோ.. இனியும் ஒங்கிட்ட ஒக்காந்து பேசிக்கிட்டிருக்கறதுல பிரயோசனம் இல்லே.. நீ நோட்டீஸ் கொடுத்த அந்த டேட்டுக்கு முன் தேதி வச்சி உன்னையும் ஒம்பையனையும் நம்ம கம்பெனியில டைரக்டர் பதவியிலருந்து விலக்கிட்டோம்னு ஒரு நோட்டீஸ் நம்ம வக்கீல் சேர்மன்ங்கற முறையில நா பேங்குக்கு அனுப்ப சொல்லிட்டேன். என்ன நா செஞ்சது சரிதானே..’
ரத்தினவேல் அதிர்ச்சியில் உறைந்துபோய் அமர்ந்திருக்க நாடார் மேலே தொடர்ந்தார்.
‘ரத்தினம்.. நா ஒன்ன எஞ்சொந்த தம்பி மாதிரி நெனச்சிக்கிட்டிருந்தேன். எம்பொண்ணு ஒம்பையனத்தான் கட்டிக்கணும்னு நின்னப்போ நா அவகிட்ட என்ன சொன்னேன் தெரியுமா.. ‘யம்மா அவன எந்தம்பியா நா நெனச்சிக்கிட்டிருக்கேன். நீ எப்படிம்மா அவம்பையன கட்டிக்கறது? ராசேந்திரன் ஒனக்கு அண்ணன் மொறைல்லே வேணும்..?’ அப்படின்னேன்..
கல்யாண பேச்சு எடுத்ததும் நீயும் ஒம்பையனும் கூசாம இத்தக் கொண்டா அத்தக் கொண்டான்னு கேட்டப்பக்கூட யார் கேக்கறா எந்தம்பிதானேன்னு நெனச்சேன்.. எம்பொண்ணு பேர்ல நா எளுதிக் குடுத்த வீட்ட கல்யாணம் நடந்த மறுமாசமே ஒம்பேருக்கு மாத்தி எளுதிக் கொடுக்க கேட்டேன்னு எம்பொண்ணு எங்கிட்ட வந்து நின்னப்பக்கூட யார் பேருக்கும்மா எளுதி குடுக்கப்போறே ரத்தினத்துக்குத்தானேன்னேன்.. அப்புறம் எம்பையனை நம்ம கம்பெனியில மானேஜிங் டைரக்டரா வைக்கணும்னு சொன்னப்பவும் என்ன அவனும் எம்பையந்தானேன்னு சம்மதிச்சேன்.. அந்த பதவியில ஒக்காந்த ஆறே மாசத்துல எம் மருமவன் செல்வத்த கம்பெனிய விட்டே தூக்கணும்னு எம்பொண்ண வச்சே சொல்ல வச்சியே, அப்பவும் நம்ம சம்பந்தியாச்சேன்னு நீ சொன்ன மாதிரியே செஞ்சேன்..
அந்த நன்றி விசுவாசம் கொஞ்சங்கூட இல்லாம எம்பொண்ணு முன்னாலயே ஒம்பையன் கண்ட சிறுக்கிமவ கூடல்லாம் சுத்தனத ஒங்கிட்ட சொன்னப்ப நீ என்ன சொன்னே? அவன் ஆம்பிளப்பய.. அவன் கொணம் தெரிஞ்சித்தான அவன் அளகுல மயங்கி உங்க பொண்ணு அவனத்தான் கட்டிக்குவேன்னு ஒத்தகால்ல நின்னான்னு சொன்னே.. பொண்ணப் பெத்தவங்க பணிஞ்சிதாங்க போணும்னு எம் பொஞ்சாதி சொன்னதால சரின்னு சும்மாருந்தேன்..
எலேய் ரத்திணம், இப்ப சொல்றேன் கேட்டுக்க. ஒம் பையன் சொன்னத கேட்டுக்கிட்டு எட்டுக் கோடி ரூவா கடனா கொடுத்த பேங்குல போயி உன்னோட ஜாமீன பின்வாங்கிக்கறேன்னு எனக்கு தெரியாம நோட்டீஸ் கொடுத்துருக்கே. எதுக்குலே? ஓவர்டிராஃப்ட் கணக்குலருந்து நா கொடுத்த செக்கெல்லாம் திரும்பி போயி எம்பேரு மார்க்கெட்ல நாறிப்போயிரணும்னுதான? எலேய்.. ஒனக்கு ஒரு விசயம் தெரியுமால்லே.. நீ பின்வாங்குறேன்னு சொன்னாலும் அத ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் பேங்க்காரங்களோட இஸ்டம்னு ஒனக்கு தெரியாதுல்லே.. ஒம் பையந்தான் முட்டாத்தனமா ஒரு யோசனை சொன்னான்னா ஒனக்கு எங்கலே போச்சி புத்தி..? இன்னொன்னும் கேட்டுக்கோ. நம்ம கம்பெனி ஒரு ப்ரைவேட் லிமிட்டெட் கம்பெனி.. இதுல என்ன விட்டா நீ, ஒம்பையன், செல்வம், நம்ம ராசம்மா இவ்வளவு பேர்தான் ஷேர் வச்சிருக்கோம். நம்ம கம்பெனியோட சட்டதிட்டப் பிரகாரம் நீயோ ஒம்பையனோ ஒங்க ஷேர நம்ம குடும்பத்துக்கு வெளிய யாருக்காச்சும் விக்கணும்னா மொதல்ல அத நம்ம குடும்பத்துலருக்கறவங்கக்கிட்ட நீங்க வாங்கிக்கறீங்களான்னு கேக்கணும். அவங்க முடியாதுங்கற பட்சத்துல நா இன்னாருக்கு இந்த வெலைக்கு விக்கப்போறேன்னு கம்பெனிக்கு நோட்டீஸ் குடுக்கணும்.. இந்த விசயம் தற்குறியான ஒனக்கு தெரியாது.. ஆனா ஒம்பையனுக்கு தெரிஞ்சிருக்கணுமே.. ஏண்டா தெரியாமப் போச்சு.. ஏந்தெரியுமா? படிச்சிட்டோங்கற திமிரு. நம்ம மாமனாரும் நம்ம அப்பனப் போல தற்குறிதானே இவனுக்கு எங்க தெரியப்போவுதுங்கற திமிர்..
ஒங்க ஷேர ஒம்பையன் சொல்றான்னு அந்த சேட்டுக்கிட்ட வித்தியே அவனுக்கு ஓட்டலப்பத்தி என்ன தெரியும்னுல்லே வித்தே? இல்லே நம்ம கம்பெனி ஷேர நீயும் ஒம்பையனும் எங்கள கேக்காம விக்க முடியாதுன்னு அவனுக்கு தெரியாதுன்னு நெனச்சியா.. எல்லாத்தையும் தெரிஞ்சே அவன் ஒங்கிட்ட வாங்கிட்டு அத மேல ரெண்டு ரூவா வச்சி எங்கிட்ட விக்க வரான்.. என்னத்த சொல்றது? எங்கம்பெனி ஷேரை எங்கிட்டயே வித்து லாபம் பாக்க பாக்கறான் அந்த சேட்டு.. அவனாச்சும் பரவால்லை.. அவனுக்கு லாபம்தான் முக்கியம்.. ஆனா நீ..?..’
கோபத்தின் உச்சிக்கே சென்று படபடவென்று பொரிந்து தள்ளிய நாடார் மேலே பேசமுடியாமல் நிறுத்திக்கொண்டு வாசலை நோக்கி நடந்தார்.
வாசலையடைந்ததும் திரும்பி ரத்தினவேலுவையும் வீட்டையும் ஒருமுறை பார்த்தார். ‘எலேய்.. இன்னைக்கி எறங்கிப்போற இந்த வீட்ட விட்டு ஒன்ன வெரட்டிவிட்டுட்டுத்தாம்லே மறுபடியும் இந்த படியில கால் குத்துவேன்.. இல்லேன்னா ஏம்லே மாணிக்கம்னு ஒன் கால் செருப்பால அடி.. வரேன்.’
தன்னை நோக்கி வந்த முதலாளியின் முகத்தைப் பார்த்தே அவருடைய மனநிலையைப் புரிந்துக்கொண்ட அமிர்தராஜ் சட்டென்று இறங்கி கார் கதவை திறந்துக்கொண்டு நின்றான்.
நாடார் ஒன்றும் பேசாமல் ஏறி அமர்ந்ததும் ஓடிச்சென்று தன்னுடைய இருக்கையில் அமர்ந்து வாகனத்தை முடுக்கினான். வண்டி சீறிக்கொண்டு புறப்பட்டு செல்வதை உள்ளிருந்தவாறே கேட்டுக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தார் ரத்தினவேல்..
நாடாருடைய ஆவேசப் பேச்சை மூச்சுவிடாமல் உள்ளறைகளில் ஒன்றிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த ரத்தினவேலுவின் மனைவி ‘ஒமக்கும் ஒம்புள்ளைக்கும் இதுவும் இன்னமும் வேணும். அந்த அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கையில நா என்ன சொல்லியும் கேக்காம அப்பனும் புள்ளையுமா வெள்ளாண்டீங்களே சாமிக்கே பொறுக்கல போலருக்கு..’ என்று முனகினார்.
தொடரும்..
2 comments:
ஓகோ..இதெல்லாம் அப்பன் மவன் கூட்டுச் சதியா. பாவிப் பயல்களா....இரத்த அழுத்தமுள்ள ஆளுகளுக்குச் சோத்துல உப்புப் போடுறது நல்லதில்ல. நீங்க அப்பன் மவன் போல நெஞ்சழுத்தக்காரங்களுக்கு உப்புப் போட்டும் நல்லதில்ல......செய்நன்றியை நினைச்சுப் போற்றாமப் போனாலுஞ் சரி...ஆனா இப்பிடி அக்கிரமஞ் செஞ்சிருக்கீகளே....
உங்க பின்னூட்டம் சூப்பரா இருக்கு ராகவன்.
துளசி பின்னூட்டம் ராணின்னா நீங்க பின்னூட்ட இளவரசன்!!
Post a Comment