19.4.06

சூரியன் 62

வாசலில் அழைப்பு மணி ஒலிப்பதை முதல் மாடியில் தன்னுடைய அறையிலிருந்து செவியுற்ற பாபு சுரேஷ் கையிலிருந்த துவாலையை கட்டிலில் வீசியெறிந்துவிட்டு பரபரப்புடன் படிகளில் இறங்கி வாசலை நோக்கி ஓடினார்.

ஆனால் ஹாலில் குளித்து உடை மாற்றி அமர்ந்திருந்த சுசீந்தரா அவரை முந்திக்கொண்டு சென்று வாசற்கதவைத் திறந்து தன் எதிரில் நின்றிருந்த புவனா மற்றும் அவளுடைய தந்தை தனபால் சாமியை மட்டும் கண்டு திகைத்துப் போய், ‘எங்கம்மா ரம்யா? அவ வரலையா?’ என்றாள்.

புவனா ஒரு குறும்பு புன்னகையுடன் விலகி நிற்க அவளுக்குப் பின்னால் தலையைக் குனிந்தவாறு நின்றுக்கொண்டிருந்த ரம்யாவை கையைப் பிடித்து இழுத்து அணைத்துக்கொண்டாள்.

பாபு சுரேஷ் சுதாரித்துக்கொண்டு ‘வாங்க சார், வாம்மா.’ என்று இருவரையும் அழைத்தார். அவர்கள் உள்ளே நுழைந்ததும் ஹாலில் இருந்த சோபாவிற்கு அழைத்துச் சென்று அவர்கள் அமர்ந்ததும் அவரும் அமர்ந்து தன்னுடைய மகளையும் மனைவியையும் பார்த்தார்.

ரம்யா அப்போதும் தன்னைப் பார்ப்பதைத் தவிர்த்து தன் தாயை அணைத்தவாறே சமையலறையை நோக்கி நகர்வதைப் பார்த்துவிட்டு ஒரு லேசான புன்னகையுடன் திரும்பி தன் முன் அமர்ந்திருந்த புவனாவைப் பார்த்தார்.

‘நான் ஒனக்குத்தாம்மா தாங்ஸ் சொல்லணும். ஒன்ன தேடி வந்தவள வேற எங்கயும் விட்டுராம பிடிச்சி வச்சியே.. அதுக்கு உண்மையிலேயே ஒனக்கு தாங்ஸ்..’

புவனா கூச்சத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘என்ன அங்கிள் நீங்க. இதுக்குப் போயி... ரம்யா வந்து நின்ன மூடுல நானும் அவள வந்த வழியே திருப்பிப் போடின்னு சொல்லியிருந்தா.. அத நினைச்சிக் கூட பாக்க முடியல அங்கிள். நீங்க அப்பா கூட பேசிக்கிட்டிருங்க நான் ஆண்டிக்கிட்ட பேசிட்டு வரேன்.’ என்றவாறு தன் தந்தையைப் பார்த்து தலையை அசைத்துவிட்டு எழுந்து சமையலறையை நோக்கி நடந்தாள்.

அவள் சென்று சில நிமிடங்கள் ஆகியும் சோபாவில் அமர்ந்திருந்த தனபால் சாமியும் பாபு சுரேஷ¤ம் ஒன்றும் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தனர்.

சற்று நேரத்திற்குப் பிறகு தனபால் சாமி, ‘சோ.. எப்படி இருக்கீங்க பாபு?’ என்றார்.

‘ஃபைன் தாங்க்யூ.’ என்று சற்று தயக்கத்துடன் பதிலளித்த பாபு அவர் இத்துடன் எழுந்து போய்விட மாட்டாரா என்று நினைத்தார்.

ஆனால் தனபால் சாமி அவ்வளவு விரைவில் சென்றுவிட தயாராக இல்லை என்பது அவர் சோபாவில் சாய்ந்து அமர்ந்ததிலிருந்தே தெரிந்தது..

காலையில் வந்த ஆளிடம் தன்னுடைய மகளுடைய புகைப்படத்தைக் கொடுத்தனுப்பியதிலிருந்தே பதற்றத்துடன் இருந்த பாபு அதுவிஷயமாக இவர் ஏதாவது ஏடாகூடமாகக் கேட்டால் எப்படி சமாளிப்பதென்று யோசித்தார்.

‘உங்க பேங்க் எப்படி போய்க்கிட்டிருக்கு?’

நல்ல வேளையாய் பேச்சின் திசையை மாற்ற சந்தர்ப்பம் கிடைத்ததே என்று நினைத்து அவ்வருடத்தில் தன்னுடைய வங்கி வணிக சந்தையில் நிகழ்த்திய சாதனைகளை வெகு சிரத்தையாக பட்டியலிட்டதுடன் தன்னுடைய கிளையில் தன்னால் என்னவெல்லாம் சாதிக்க முடிந்தது என்று விலாவாரியாக எடுத்து கூறலானார்.

அவர் கூறிய ஒன்றையும் செவிமடுக்காத தனபால் தன்னுடைய குடும்பத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை மறந்ததுபோல் தன்  எதிரே அமர்ந்து எத்தனை சாதுரியமாக இவரால் பேச முடிகிறது என்ற வியப்புடன் இவர் எதையோ தன்னிடமிருந்து மறைப்பதற்குத்தான் இந்த உத்தியைக் கையாள்கிறார் என்ற சந்தேகமும் அவருடைய மனதில் எழவே சட்டென்று பாபு சுரேஷ் எதிர்பார்க்காத ஒரு கேள்வியை வீசினார். ‘உங்க பேங்க்ல மாதவன்னு யாராச்சும் சீனியர் எக்ஸ்க்யூட்டிவ் இருக்காங்களா மிஸ்டர் பாபு?’

சட்டென்று வந்து விழுந்த கேள்வியில் திகைத்துப்போன பாபு சிறிது நேரம் பதிலளிக்காமல் யோசிப்பதுபோல் பாவனை செய்தார்.

ஆனால் முப்பது வருடங்களாக கள்வர்களையும், கயவர்களையுமே அன்றாடம் சந்தித்துப் பழகிப்போன தனபால் சாமி எஸ்.பியிடம் அவருடைய தந்திரம் செல்லுபடியாகவில்லை.

‘உங்களுக்கு தெரிஞ்சிருக்கணுமே.. அவர் உங்க எச்.ஓவில சீனியர் லெவல்ல இருக்கறவர்னு நினைக்கிறேன்..’ என்றார்.

அவருடைய குரலில் சற்றே போலீஸ்தனம் தொனித்ததை கவனித்தார் பாபு சுரேஷ். பதிலளிப்பதைத் தவிர வேறு வழியில்லை  என்பதை உணர்ந்தார். ‘ஆமாம் இருக்கார். எங்க சேர்மன். ஆனா அவர் நாளைக்குத்தான் ஜாய்ன் பண்றார். ஏன் கேக்கறீங்க?’

தனபால் சாமியின் அடர்ந்த புருவங்கள் உயர்ந்தன, ‘என்னது சேர்மனா?’

‘Yes Mr.Dhanapal.. but he is coming to Chennai only today!’

தனபால் சாமியின் புருவங்கள் முடிச்சுடன் சுருங்கி நிமிர்ந்தன. ‘இருக்காதே.. அவர் பெயர நான் இன்னைக்கி காலைல ரெண்டு ரவுடி பசங்க வாய்லருந்து கேட்டனே..’

பாபு சுரேஷ¤க்கு பகீர் என்றது. அந்த சேது மாதவனத்தான் இவரு வெறும் மாதவன்னு சொல்றாரா? இப்ப என்ன பண்றது? நாமளா எதையாச்சும் ஒளறி வைக்காம இருக்கணும்..

‘அப்படியா? தெரியலையே சார்.’

தனபால் சாமியின் போலீஸ் கண்கள் தன்னையே ஊடுருவதை உணர்ந்த பாபு சுரேஷ் சங்கடத்துடன் சமையலறையை பார்த்தார். அங்கே அவருடைய மனைவியும் புவனாவும் படு சீரியசாக பேசிக்கொண்டிருப்பதையும் அருகில் ரம்யா தலைகுனிந்து நிற்பதையும் பார்த்தார்.

‘நீங்க எதையோ எங்கிட்டருந்து மறைக்கறீங்கன்னு நினைக்கறேன். எதுவாருந்தாலும் எங்கிட்ட மறைக்காம சொன்னீங்கன்னா இந்த கேஸ்ல உங்களுக்கு என்னால உதவ முடியும்.’

பாபு சுரேஷ் திடுக்கிட்டு திரும்பி தன் எதிரில் இருந்தவரைப் பார்த்தார். ‘என்ன சார் கேசா? நீங்க என்ன சொல்றீங்க?’

தனபால் சாமி தன்னுடைய சட்டைப் பாக்கெட்டிலிருந்த புகைப்படத்தை எடுத்து அவரிடம் நீட்டினார். ‘இது ரம்யாவோட ஃபோட்டோ.. இத அந்த ரவுடிப்பசங்கக்கிட்டருந்து எங்க டிப்பார்ட்மெண்ட் ஆளுங்க கைப்பற்றினது. இப்ப சொல்லுங்க. இதெப்படி அவன்கக்கிட்ட போச்சின்னு நா தெரிஞ்சிக்கலாமா?’

பாபு சுரேஷ் அதை கையில் வாங்காமல் எழுந்து நின்று சமையலறையைப் பார்த்தார். ‘சூசீ.. காப்பி ரெடியாச்சின்னா கொண்டு வா.. சார் சீக்கிரம் போணுமாம்.’ என்றவர் தனபால் சாமியைப் பார்த்தார். ‘Don’t mistake me. I’ve got some urgent phone call to make. I’ll return in another five minutes.’ என்றவாறு மாடியிலிருந்த தன்னுடைய அறையை நோக்கி விரைந்தார்.

அவர் தனக்கு பதிலளிக்காமல் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த தனபால் சாமி புகைப்படத்தை தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு எழுந்து சமையலறையை நோக்கி சென்றார்.

அவருடைய காலடியோசையைக் கேட்ட புவனா, ரம்யா மற்றும் சுசீந்தரா திரும்பி அவரைப் பார்த்தனர். சுசீந்தரா உடனே முன்னால் வந்து கைகூப்பினாள். ‘நீங்களும் புவனாவும் செஞ்ச உதவிய எங்களால மறக்கவே முடியாது சார். ரம்யா செஞ்ச முட்டாள்தனத்தினால ரெண்டு நாளா நாங்க பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லீங்க. எங்க சம்மந்திங்க வீட்டுக்கு தெரிஞ்சி கல்யாணம் நின்னுறக்கூடாதேன்னு நான் வேண்டாத தெய்வம் இல்லீங்க..’

அவளுடைய கண்கள் கலங்கி குரல் தடுமாறுவதைக் கவனித்த தனபால் சாமி, ‘அப்படியெல்லாம் சொல்லி எங்கள வேத்து மனுஷாளாக்கிராதீங்க. புவனாவ மாதிரித்தான் ரம்யாவும். ஒன்னுத்துக்கும் கவலைப்படாம கல்யாண வேலைய பாருங்க. என்னோட உதவி தேவைப்பட்டா தயங்காம கேளுங்க. எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு. நா போய்ட்டு கார அனுப்பறேன். அதுவரைக்கும் புவனா இங்கயே இருக்கட்டும்.’ என்றவாறு, ‘ஒரு காப்பியாச்சும் குடிச்சிட்டு போங்க அங்கிள்’ என்ற ரம்யாவிடம், ‘அதெல்லாம் முடியாதும்மா.. கல்யாண சாப்பாடு போட்டாத்தான் ஆச்சி..’ என்றார் புன்னகையுடன். பிறகு தன் மகளைப் பார்த்து, ‘அப்பா ஆவடி வரைக்கும் போறேம்மா. ஒரு ஆஃபனவர்ல கார திருப்பி அனுப்பறேன். நீ கார் வந்ததும் வீட்டுல போயி எறங்கிட்டு டிரைவர என்னை வந்து பிக்கப் பண்ணச் சொல்லு.’ என்று கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தார்.

********

தன் மனைவியுடன் தொலைப்பேசியில் பேசி முடித்தவுடன் மாடியிலிருந்த தன்னுடைய அறைக்குத்திரும்பி தன்னுடைய பிர்த்தியேகக் குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினார் சேது மாதவன்.

அடுத்த அரை மணியில் சவரம் செய்து, குளித்து முடித்து இடுப்பில் மணக்கும் துவாலையுடன் வெளியே வந்தவர் கட்டிலில் கிடந்த செல் ஃபோனின் ஒலியைக் கேட்டு எடுக்காமலே யாரென குனிந்து திரைய¨ப் பார்த்தார்.

வேண்டா வெறுப்பாக எடுத்து, ‘இப்ப என்ன? ஒங்களுக்கு ஒதவ போயி நம்மாளுங்க மாட்டிக்கிட்டாங்க தெரியுமில்லே.’ என்றார் எரிச்சலுடன்.

எதிர்முனையிலிருந்து ‘அதுக்காகத்தான் சார் கூப்டேன்.’ என்று பதில் வந்ததும் மீண்டும் கோபத்துடன் ‘அதான் என்னன்னு கேட்டேனே?’ என்றார்.

எதிர் முனையிலிருந்து அடுத்து வந்த செய்தி அவரை திகைப்பில் ஆழ்த்தியது. ‘என்ன பேரு சொன்னீங்க?’ என்றார்.

‘தனபால் சாமி சார். அவர் ரொம்பவும் கண்டிப்பான எஸ்.பி. இதுக்கு முன்னால கூட மதுரையில சுப்பிரமணி சாமி எம்.பிக்கூட பப்ளிக் ப்ளேஸ்ல ஆர்க்யூமெண்ட்ல எறங்கி பிரபலமானவர். அவர் என்  டாட்டர் ரம்யாவோட காலேஜ்மேட்டோட அப்பா. அவர் வீட்லதான் என் டாட்டர் ரெண்டு நாளா இருந்திருக்கா!’

சேது மாதவனுக்கு வெறுப்பாய் இருந்தது. ‘ஏன் மிஸ்டர், உங்க டாட்டரப் பத்தி சரியா விசாரிக்காம எங்கிட்ட வந்து.. நான் ஒங்களுக்கு ஒதவ போயி.. இவ்வளவு வயசாச்சே தவிர ஒங்களுக்கு ஒரு... சரி.. சொல்லிட்டீங்கல்லே வைங்க..’ என்றவர் மீண்டும். ‘But let me tell you one thing Mr.Suresh. No one should know about what S.P. told you.’ என்றார் கண்டிப்புடன்.

‘Yes Sir.’ என்று எதிர் முனையிலிருந்து பதில் வந்ததும் சட்டென்று இணைப்பைத் துண்டித்துவிட்டு ஹாலின் குறுக்கும் நெடுக்கும் வேக வேகமாக சில நிமிடங்கள் நடந்தார்.

பிறகு சமையலறையிலிருந்து தன்னையே கவனித்துக்கொண்டிருந்த திருவை அழைத்தார்.

‘எடோ தான் போயி மோள்லயுள்ள  கறுத்த புக்குல Finance Ministerனு பறஞ்சி ஒரு நம்பர் எழுதி வச்சிட்டுண்டாவும். அவ்விடருந்தென்னே டயல் செய்து கொடுக்கு. ஞான் இவ்விட எடுத்தோளாம்.’

திரு தடதடவென்று மாடிப்படிகளில் ஏறி ஓட அவர் என்ன சொல்ல வேண்டும் எப்படி சொல்ல வேண்டும் என்பதை மனதுக்குள் ஒத்திகைப் பார்த்தார்.








2 comments:

G.Ragavan said...

ஆகா பிள்ள திரும்ப வீட்டுக்கு வந்துருச்சி...அதுவும் நல்லதுதான்....பிள்ளையக் காணோம்னா அந்தா இந்தான்னுதான் தேடுவாங்க...அதப் போலீஸ் பெருசு படுத்தலாமோ.........

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

என்னடா சூரியன் 62ல ஒரு பின்னூட்டமான்னு முதல்ல பார்த்தேன்.

அதப் போலீஸ் பெருசு படுத்தலாமோ......... //

போலீஸ் புத்திதானே. சொந்தமானாலும் நட்பானாலும் போலீஸ் புத்தி எப்பவும் சந்தேகத்தோடதான பாக்கும்?