21.4.06

சூரியன் 64

பாபு சுரேஷின் வீட்டிலிருந்து வெளியே வந்த தனபால் சாமி எஸ்.பி  செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியை செல் ஃபோனில் அழைத்து தான் ஒரு கேஸ் விஷயமாக ஆவடி காவல் நிலையத்திற்கு செல்வதாகவும் சம்பந்தப்பட்ட ஆய்வாளரிடம் தனக்கு ஒத்துழைப்பு தரவேண்டுமென்று கூறவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

பிறகு புறப்பட்டு நேரே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை சென்றடைந்தார்.

ஆனால் அவர் செய்த தவறு அவர் வருவதை முன்கூட்டியே அறிவிக்காததுதான்.

அவர் காவல் நிலையத்தை அடையவும் அவர் விசாரனை செய்ய நினைத்த இரு கைதிகளும் அவர்களுடைய வழக்கறிஞருடன் வெளியே வந்து அவர்களுக்கென காத்திருந்த வாகனத்தில் ஏறவும் சரியாக இருந்தது.

அவர் அவர்களைப் பார்ப்பதற்கு முன்பே அவர்கள் இருவரும் அவரைப் பார்த்துவிடவே சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு வாகனத்தில் ஏற வாகனம் விருட்டென்று புறப்பட்டுச் சென்றது.

வாகனம் தனபால் சாமியின் வாகனத்தைக் கடந்த போதும் அவர் அதில் இருப்பவர்களைக் கவனிக்கவில்லை.

அவர் காவல்நிலையத்திற்குள் நுழைய காவல்நிலைய ஆய்வாளரின் அறையிலிருந்து வெளியே வந்த உதவி ஆய்வாளர் விறைப்புடன் சல்யூட் அடித்துவிட்டு.  ‘வாங்க சார், ஏதாவது அர்ஜண்ட் விஷயமா?’ என்றார்.

‘என்ன மாலி அப்படி கேட்டுட்டீங்க? முக்கியமான வேலையில்லாம நா இவ்வளவு தூரம் வருவேனா என்ன?’ என்றார்.

‘என்ன ஏதாவது கேஸ் விஷயமா சார்?’

‘ஆமா. நான் ஒங்க எஸ்.பி கிட்ட கூட ஃபோன் பண்ணி சொல்லியிருந்தேனே? ஒங்க இன்ஸ்பெக்டர் இருக்காரா?’

‘இருக்கார் சார். இப்பத்தான் மினிஸ்டரோட பி.ஏ. கிட்ட டோஸ் வாங்குன கடுப்புல  இருக்கார். நீங்க வேணும்னா போய் பாருங்களேன்.’

தனபால் சாமி திகைப்புடன் எதிரே நின்றவரைப் பார்த்தார். ‘என்ன மாலி சொல்றீங்க? டோசா? எதுக்கு?’

உதவி ஆய்வாளர் மகாலிங்கம் அவரருகில் வந்து ரகசியக் குரலில் ‘வாங்க சார் சொல்றேன்’ என்று தன்னுடைய இருக்கைக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் உதவி ஆய்வாளரின் மேசைக்கு எதிரும் புதிருமாய் அமர்ந்ததும், ‘சார் நம்ம எக்மோர் எஸ்.ஐ காலையில ரெண்டு ரவுடிப் பசங்கள ரயில்வே ஸ்டேஷன்ல வச்சி அரெஸ்ட் பண்ணி விசாரிச்சதுல போன மாசம் அந்த மில் ஓனர் கடத்தப்பட்ட கேஸ்ல அந்த பயல்களுக்கு கனெக்ஷன் இருக்கறது தெரிஞ்சி ரெண்டு கான்ஸ்டபிள்களோட இங்க அனுப்பிச்சி வச்சார்.’

தனபால் சாமி இடைமறித்து, ‘அது யாரும் இல்ல மாலி. நாந்தான். காலைல டூர்லருந்து வந்து இறங்குனதும் இவனுங்கள பார்த்தேன். சந்தேகமா இருந்திச்சி. உடனே பீட் போலீஸ்மேன கூப்டு விசாரிக்க வச்சேன். அவன்க பேசுனதுல நம்பிக்கையில்லாம புக் பண்ணி இவன்களுக்கு ஏதாவது பெண்டிங் கேஸ்ல கனெக்ஷன் இருக்கான்னு பார்க்க சொன்னேன். அப்புறம்தான் நீங்க இப்ப சொன்னீங்களே அந்த கேஸ்ல தொடர்பு இருக்குன்னு தெரிஞ்சி இங்க அனுப்ப சொன்னேன். அந்த விஷயமாத்தான் நானும் வந்திருக்கேன். நீங்க அவன்கள விசாரிச்சீங்களா இல்லையா?’ என்றார் படபடப்புடன்.

‘விசாரிச்சோம் சார். அவன்கள விசாரிச்சதுல இதுல -------------- பேங்க் அதிகாரி.. சேது மாதவன்னு ஒருத்தர பேரும் அவரோட ஃபோன் நம்பரும் கிடைச்சது. அவருக்கு ஃபோன் போட்டோம். ஆனா அவர் பயங்கரமா கோபப்பட்டு இவனுங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லேன்னுட்டார்.’

‘அவர் சொன்னா? எங்க அவனுங்க? ரெண்டு போட்டா தானா வெளிய வந்துருது.’

உதவி ஆய்வாளர் சிரிப்பதைப் பார்த்து எரிச்சலுடன், ‘என்ன மாலி நா சீரியசா பேசிக்கிட்டிருக்கேன். நீங்க சிரிக்கறீங்க?’ என்றார்.

மகாலிங்கம் உடனே சீரியசானார். ‘சாரி சார். நான் உங்கள மதிக்காம சிரிக்கலே. அந்த ரெண்டு பயல்க மேலயும் எந்த கேசும் போட வேணாம்னு மேலிடத்துல உத்தரவு வந்து நாங்க அவனுங்கள ரிலீசே பண்ணியாச்சி. அதத்தான் சொல்ல வந்தேன்.’

தனபால் சாமி அதிர்ச்சியுடன் தன் எதிரில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தார். ‘என்ன மாலி சொல்றீங்க? யார் அந்த மேலிடம்?’

மகாலிங்கம் மரியாதையுடன், ‘சார், வாங்க. நான் ஆய்வாளர்கிட்ட கூட்டிக்கிட்டு போறேன். அவரே மீதிய சொல்லுவார்.’ என்றவாறு எழுந்து நிற்க தனபால் சாமியும் எழுந்து அவருடன் ஆய்வாளர் அறையை நோக்கி நடந்தார்.

அவர்  அறைக்குள் நுழைந்ததைக் கூட கவனியாமல் தன்னுடைய டைரியில் எதையோ எழுதிக்கொண்டிருந்த ஆய்வாளர், ‘சார்’ என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து தன் எதிரே நின்றிருந்தவர்களைப் பார்த்தார். சட்டென்று புன்னகையுடன் எழுந்து தன்னுடைய வலக்கரத்தால் விறைப்புடன் சல்யூட் வைத்தார். ‘வாங்க சார். என்ன திடீர்னு? ஒரு ஃபோன் போட்டிருக்கலாமில்லே? மஃப்டில வேற இருக்கீங்க? வேற எங்கயாச்சும் போற வழியில எட்டி பார்த்தீங்களா, இல்ல ஏதாவது பெர்சனல் விஷயமா?’

தனபால் புன்னகையுடன், ‘மெதுவா, மெதுவா. இத்தனை கேள்விங்களையும்  ஒரே நேரத்துல கேக்கறதிலருந்தே நீங்க ரொம்ப டென்ஷன்ல இருக்கீங்கன்னு தெரியுது. நான் வந்து பத்து நிமிஷமாவுது. ஒரு கேஸ் விஷயமாத்தான் இங்க வந்தேன். கொஞ்சம் சென்சிட்டிவான கேஸ். அதான் நானே மஃப்டியில வந்தேன். இவ்வளவு நேரம் உங்க எஸ்.ஐ.கிட்ட பேசிட்டுத்தான் வரேன். சொல்லுங்க, அந்த தடிப் பசங்கள விடச்சொல்லி எந்த மேலிடத்துலருந்து ஃபோன் வந்தது?’

ஆய்வாளர் வியப்புடன் தன்னுடைய உதவி ஆய்வாளரைப் பார்த்தார்.

அவர் மரியாதையுடன், ‘சார், அந்த ரெண்டு பேரும் எஸ்.பி சார் காலையில எக்மோர் ஸ்டேஷன்ல வச்சி புக் பண்ண ஆளுங்களாம்.’ என்றார்.

ஆய்வாளர் உடனே வியப்புடன், ‘அப்படியா? சொல்லவே இல்லையே?’ என்றவர் தொடர்ந்து, ‘ஆமா.. உங்க பேர சொல்லி விஷயம் உங்களுக்கும் பிரச்சினையா வரணுமா என்ன? தொலைஞ்சி போறானுங்க. விட்டுத் தொலைச்சிட்டு இருக்கற வேலைய பார்ப்போம்.’ என்றார் தனபாலைப் பார்ப்பதைத் தவிர்த்தவாறு.

தனபால் சாமி அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார். அவருக்குத் தெரிந்தவரை அந்த ஆய்வாளர் தமிழக காவல்துறையில் இருந்த நேர்மையான, கண்டிப்பான அதிகாரிகளுள் ஒருவர் என்று தெரியும். ஆனால் அவரே இத்தனை விரக்தியுடன் பேசுகிறார் என்றால் ஏதோ சீரியசாக நடந்திருக்க வேண்டும் என்று ஊகித்தார்.

‘என்ன நடந்துச்சி சார் சொல்லுங்க. நான் கமிஷனர மதியானம் பார்த்து பேசினப்போ கூட எங்கிட்ட ஒன்னும் சொல்லலையே?’

ஆய்வாளர் இல்லை என்று தலையை அசைத்தார். ‘அவர் இல்ல சார். இது அதுக்கும் மேலே. நம்ம எஸ்.ஐ சொல்லியிருப்பாரே.. அந்த சேது மாதவனோ யாரோ.. அவர் அந்த பேங்கோட எம்.டியாம். அவங்க பேங்க்தான் நம்ம நிதியமைச்சரோட தொகுதியில லீட் பேங்க்காம். ‘ஏன்யா இந்த மாதிரி அரசாங்க திட்டங்கள்ல கிராமங்கள தத்தெடுத்து சலுகை கடன் வழங்கிக்கிட்டிருக்கற பேங்க்லருந்து கோடி கணக்குல கடன ஒருத்தன் வாங்கிட்டு ஏமாத்துவான். பேங்க் ஆளுங்க கைய கட்டிக்கிட்டு இருக்கணுமான்னு’ நிதியமைச்சர் பி. ஏ கேக்கறார் சார். என்ன பண்ண சொல்றீங்க?’

தனபால் சாமி கோபத்துடன், ‘அப்ப நாம எதுக்கு இருக்கோமாம். --- புடுங்கவான்னு கேக்கறதுதானே?’ என்றார்.

ஆய்வாளர் உரக்க சிரித்தார். ‘பரவாயில்லையே எஸ்.பி சார். நீங்கக் கூட இப்படியெல்லாம் பேசறீங்களே? நானும் அதையே மனசுல நினைச்சிக்கிட்டு கேட்டேனே சார். ஆனா அதுக்கு என்ன பதில் வந்தது தெரியுமா? யோவ் நீங்க என்னத்தையா கிளிச்சிருக்கீங்க? இது சிவில் கேஸ்.. எங்களால ஒன்னும் பண்ண முடியாதுன்னுதான சொல்லிருவீங்க? பேங்க்லருந்த வாங்குன கடன்ல தொழில் பண்றத விட்டுப்புட்டு இவனுங்க குடி, கூத்தின்னு அலைவானுங்க.. கோடி கணக்குல குடுத்துப்புட்டு பேங்க் ஆளுங்க கோர்ட்டு கேசுன்னு அலையணும் இல்லே.. ரெண்டு நாளைக்கு புடிச்சி வச்சதுல கதறிக்கிட்டு நிலுவையிலருந்ததுல பாதிய கட்டிட்டானாம் தெரியுமில்லே.. இத முதல்லயே செஞ்சிருக்க வேண்டியதுதானேன்னு. எப்படி இருக்கு? சொல்லுங்க.’

தனபால் சாமி என்ன பதில் பேசுவதென தெரியாமல் அமர்ந்திருந்தார்.

‘சரிய்யா. அந்தாளோட பொஞ்சாதிதான் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தான்னு சொன்னதுக்காக கேஸ் போடறா மாதிரி போட்டு நாட் ட்ரேசபிள்னு கேச முடிப்பீங்களா யார் எவர்னு தெரியாம பேங்க் எம்.டி வீட்டுக்கெல்லாம் போன் போட்டு மிரட்டுவீங்களாய்யான்னு கேக்கறாங்க. என்ன பண்ணட்டும் சொல்லுங்க? அதான் நமக்கு கேசுக்கா பஞ்சம்னு நினைச்சிக்கிட்டு அந்த கேச க்ளோஸ் பண்ணிட்டு அவனுங்கள விட்டுட்டோம்.’

சிறிது நேரம் பதில் ஒன்றும் கூறமுடியாமல் அமர்ந்திருந்த தனபால் சாமி திடீரென்று, ‘அந்த பேங்க் எம்.டி.யோட பேரு என்னன்னு சொன்னீங்க?’ என்றார்.

மகாலிங்கம் குறுக்கிட்டு, ‘சேது மாதவன், சார்.’ என்றார். ‘அவர் பேசுனதுலருந்து கேரளாக்காரர்னு தோனுது.’

‘அவரோட ஃபோன் நம்பர் நோட் பண்ணீங்களா?’

உதவி ஆய்வாளர்,ஆய்வாளரைப் பார்க்க, அவர், ‘எதுக்கு சார். விட்டுத் தொலைங்க. நிதியமைச்சரோட பி.ஏ அமைச்சருக்கு தெரியாம பேசியிருக்க மாட்டார். பேச்சுக்கு இடையில அவர் நிறுத்தி நிறுத்தி பேசுனதுலருந்தே அமைச்சர் அந்த ரூம்லதான் இருந்திருக்கார்னு தெரிஞ்சது. நீங்க வேற இத கிளறப் போயி.. எதுக்கு சார் வம்பு? இத்தோட விட்டுருங்க.’ என்று எழுந்து நின்று சல்யூட் அடிக்க வேறு வழியில்லாமல் பதிலுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வெளியேறினார் தனபால் சாமி.

தொடரும்..



4 comments:

G.Ragavan said...

அடடா கதை இப்படி திரும்பீருச்சா! கொடுமையோ கொடுமை.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

பின்னே? ஆட்சியாளர்களை கைகளில் போட்டுக்கொள்வது எவ்வளவு சவுகரியம் பாருங்கள்?

siva gnanamji(#18100882083107547329) said...

adavadik karangal pinne oru arasiyalvadhi iruppan enbadhu theriyume!

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

adavadik karangal pinne oru arasiyalvadhi iruppan enbadhu theriyume! //

அனுபவம் பேசுது.. என்ன ஜி!

அதுதானே யதார்த்தம். அ.வாதிகளுக்கு முன்னால எஸ்.பி யாவது ஒன்னாவது. இப்ப சென்னை கமிஷனர் படற பாட்டை பாக்கறீங்க இல்ல?

போன அஞ்சு வருஷத்துலதான் எத்தனை கமிஷனர பார்த்திருச்சி சென்னை மாநகரம்?